மின்சாரம் கொண்டு வந்த வீராங்கனை!

ஒலிம்பிக்ஸ்  போட்டிகளில்  ஒரு பதக்கமாவது,  பெற வேண்டும் என்பது உலக  நாடுகள் ஒவ்வொன்றின் கனவு.
மின்சாரம் கொண்டு வந்த வீராங்கனை!

ஒலிம்பிக்ஸ்  போட்டிகளில்  ஒரு பதக்கமாவது,  பெற வேண்டும் என்பது உலக  நாடுகள் ஒவ்வொன்றின் கனவு. அதனால்  ஒவ்வொரு  போட்டியாளரும்  
உயிரைக் கொடுத்து  கடுமையான  பயிற்சிகளில்  ஈடுபடுகின்றனர்... அல்லது  ஈடுபடுத்தப்படுகின்றனர்.  ரஷ்யா,  சீனா, ஜெர்மனி,  ஜப்பான்  நாடுகளில்  
உடல்வாகின் அடிப்படையில்  சிறு வயதிலேயே குழந்தைகளைத்  தேர்ந்தெடுத்து  பயிற்சி அளிக்கிறார்கள்.

ஒவ்வொரு  ஒலிம்பிக்ஸ்  பதக்கத்தின் பின்னணியில்,   விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை,  கோச் .. என்று பலரின்  கடுமையான  உழைப்பு.. திட்டமிடல்,  ஒருங்கிணைப்பு   அரசாங்கத்தின் நிதி ... போன்றவை  உள்ளன. 
 ரியோ ஒலிம்பிக்சில்  கென்யா  நாடு,    ஆறு  தங்கம்,  ஆறு  வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்   பதக்கங்களைப்  பெற்றிருந்தது.

ஆப்பிரிக்காவில்  வறுமைத் தாண்டவமாடும் நாடுகளில் கென்யாவும் சேர்த்தியே! கென்யாவில்  இருபது  ஊர்களுக்கு ஒரு பள்ளி அமைவதே அபூர்வம். பல கி.மீ. தூரம் நடந்துதான் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும்.  அதுவும், காடு, மலை, கரடுமுரடான  பாதை, வனவிலங்குகள் இவற்றையெல்லாம் கடந்துதான்  கென்யா  நாட்டின்  சிறுவர் சிறுமியர்  பள்ளிக்குச்  செல்வார்கள்.  இப்படிப்பட்ட   இடர்  சூழ்நிலையில்  வளர்ந்தவர்தான்  ஃபெயித் கிப்யேகன்.

பள்ளிக்குப்    பல கி. மீ.  தூரம்   ஓடி  ஓடிச்    சென்று  படித்து வளர்ந்தவர்.  அதனால்  ஓட்டம்  ஃபெயித்தின் நிழலானது... உயிரிலும் உணர்விலும் கலந்து
விட்டது. ரியோ ஒலிம்பிக்சில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர்  ஃபெயித் கிப்யேகன். இவரது கிராமத்தில் மின்சார வசதி  கிடையாது.  மிகவும் பின்தங்கிய  சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த  ஃபெயித் கிப்யேகன்,  தனது ஓட்டத் திறமையால் ஒலிம்பிக்ஸ்  வரை வந்து விட்டார். 

ரியோவில் ஃபெயித்,  எத்தியோபியா நாட்டைச் சேர்ந்த  டிபாபாவை எதிர்த்து ஓட  வேண்டிய   சவாலான  போட்டா போட்டி. டிபாபா சாதாரணப்   பெண் அல்ல.  சாதனைப் பெண்.  1,500 மீட்டர் தூர ஓட்டத்தை  சுமார்  நான்கு  நிமிடங்களில்  கடந்து உலக சாதனை படைத்தவர். ரியோவிலும் தொடக்கத்தில் இருந்தே  டிபாபா முதலில் வந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

எல்லாருமே  டிபாபாதான் தங்கப் பதக்கத்தை  தட்டிச் செல்வார்  என்று  முடிவு செய்திருந்தனர். ஆனால்,  கடைசிச் சுற்றில்  அம்பாகப்  பாய்ந்து  அதி
வேகத்தில்  பறந்த  ஃபெயித்,  டிபாபாவை   பின்னுக்குத் தள்ளி  தங்கப் பதக்கத்தை  வென்றார். 

இதில் சோகம்  என்னவென்றால்,   ஃபெயித்  தங்கப் பதக்கம் பெற  வெறியுடன்  ஓடிய   சிறுத்தைப் பாய்ச்சலை   அவரது பெற்றோர்  டிவியில் பார்க்க
முடியாத நிலை. காரணம்  கிராமத்திற்கு  மின் வசதி இல்லாததுதான். "இனியாவது,   கிராமத்துக்கு மின்சார வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்'' என்று  
ஃபெயித்தின் தந்தை சாமுவேல் கிப்யேகன்,  கென்ய அதிபருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

பிரேசிலில் இருந்து ஃபெயித் சொந்த ஊருக்கு திரும்புவதற்குள் அவரது கிராமத்திற்கு மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும்  என்று  கென்ய
அதிபர்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கென்யாவின்  ஜனாதிபதி  ஆணையின்படி, மின்னிணைப்பு பணிகள் அதிரடியாக   அசுர  கதியில்  நடந்தன.  ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஃபெயித்தின் சொந்த கிராமத்துக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டது. ஃபெயித்தின் வீட்டுக்கும் மின் வசதி கொடுக்கப்பட்டது.  மகள்  நாட்டிற்காக  தங்கப் பதக்கம்  பெற்றதன் மூலமாக இரவில் இருளில்  மூழ்கிக் கிடந்த  கிராமத்திற்கு    வெளிச்சம்         கிடைத்திருக்கிறது.. "ஒலிம்பிக்ஸ் பதக்கம் தந்த பெருமையைவிட   மின்சாரம்  கிராமத்திற்கு கிடைத்த பெருமைதான்  பெருசு' என்று  ஃபெயித்தின் பெற்றோர் பெருமையில் பூரிக்க.... ஃபெயித்தை  அந்தக்  கிராமமே கொண்டாடுகிறது..! 

- சுதந்திரன்ன
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com