தமிழில் எழுதிய சர்வதேச எழுத்தாளர்! - சா.கந்தசாமி

என் நாற்பதாண்டு கால இனிய நண்பர் அசோகமித்திரன் என்று அறியப்படும் ஜகதீசன் தியாகராஜன். ஜகதீசன் என்பது அவர் தந்தையின் பெயர். பூர்வீகம் நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை.
தமிழில் எழுதிய சர்வதேச எழுத்தாளர்! - சா.கந்தசாமி

என் நாற்பதாண்டு கால இனிய நண்பர் அசோகமித்திரன் என்று அறியப்படும் ஜகதீசன் தியாகராஜன். ஜகதீசன் என்பது அவர் தந்தையின் பெயர். பூர்வீகம் நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை.

ஜகதீசன் வேலைநிமித்தம் ஆந்திராவில் உள்ள நிஜாம் சமஸ்தானத்திற்குச் சென்றார். ரயில்வேயில் வேலை. செகந்திராபாத்தில் குடியிருப்பு. 1931-ஆம் ஆண்டில் செகந்திராபாத்தில் தியாகராஜன் பிறந்தார். தெலுங்கு, உருது பேசும் குடும்பங்களுக்கிடையில் வாழ்ந்தாலும் ஜகதீசன் தமிழ்ப் பத்திரிகைகளை சந்தா கட்டி வாங்கி தான் படித்ததோடு தன் குடும்பத்தினரையும் படிக்க வைத்துக்கொண்டு இருந்தார். ஆண்டிற்கு ஒருமுறை நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு ரயிலில் சென்னைக்கு வந்து உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்தார். அவருக்கு இலக்கியம், கலைகள் மீது ஆர்வம் இருந்தது. செகந்திராபாத்தில் தமிழ் பேசிக்கொண்டும், தமிழ்க் கதைப் புத்தகங்கள் படித்துக்கொண்டும் இருந்தார்.

நாடு சுதந்திரம் பெற்றதும், ஹைதராபாத் நிஜாம், தன்னுடைய சமஸ்தானத்தைத் தனி நாடாக்கப் போவதாகவும், பாகிஸ்தானோடு சேர்ந்துவிடப் போவதாகவும் அரசை மிரட்டிக் கொண்டிருந்தார். அதனால் அவர் ஆதரவாளர்களான ரஸôக்குகள் கலவரங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபட்டார்கள். சமஸ்தானத்தில் பொது அமைதி குலைந்தது. எனவே நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்து செகந்திராபாத்தில் இருந்தவர்கள் குடிபெயர ஆரம்பித்தார்கள்.

ஜகதீசன் காலமாகிவிட்டார். கல்லூரியில் படித்து வந்த தியாகராஜன் படிப்பு பாதியில் நின்றுவிட்டது. தாயாரோடு சகோதரன், சகோதரிகளோடு குடிபெயர்ந்து சென்னைக்கு வந்தார். வயது இருபத்து மூன்றாகிவிட்டது. கல்லூரியில் சேர்ந்து படிக்கக் குடும்ப நிலை சரியாக இல்லை. எனவே வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவர் தந்தையின் நண்பர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன். கலைகள், எழுத்து மீது ஈடுபாடு கொண்ட தியாகராஜன் சினிமாவிற்கு எழுதலாம் என்று ஒரு வேலை கேட்டு எஸ்.எஸ்.வாசனைச் சென்று பார்த்தார். வாசன் அவருக்கு வேலை கொடுத்தார். எழுதும் கதை வசன இலாக்காவில் வேலை இல்லை. சினிமா விளம்பரத்துறையில்.

ஜெமினி ஸ்டுடியோவில் விளம்பரத்துறையில் வேலைக்குச் சேர்ந்த தியாகராஜனுக்கு கதை, வசன இலாக்கா உள்பட பல இலாக்காவினரோடும் நடிகர்கள், நடிகைகளோடும் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதற்கு அப்பால் சினிமாத்துறையைப் பற்றி நுட்பமான ஞானம் பெற்றார்.

கதைகள் எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. ஆங்கிலத்தில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார். சில பிரசுரமாகின. அகில இந்திய வானொலி தமிழில் ஒரு நாடகப் போட்டி நடத்தியது. அதற்கு ஒரு நாடகம் எழுதி அனுப்பினார். பெயர் "அன்பின் பரிசு'. நாடகத்தை அசோகமித்திரன் என்ற புனைபெயர் வைத்துக்கொண்டு அனுப்பி வைத்தார். அதுவே அவர் பெயராகிவிட்டது. அதோடு இன்னொரு மொழியில் எழுதுவது நாணயமானது இல்லை. தமிழில்தான் எழுதுவது என்று முடிவு செய்து கொண்டார். ஆனால், அசோகமித்திரன் ஆங்கிலம் பழையதாகிப் போனது இல்லை. அது நவீனமானதுதான். அவர் சினிமா சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளை "இல்லஸ்ட்ரேடட் வீக்லி'க்கு எழுதினார். எனவே சில தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டபோது மறுத்துவிட்டார். தன் சிறுகதைகள், நாவல்களைக்கூட அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவில்லை. ஆனால், அவர் படைப்புகள்தான் பிறரால் ஆங்கிலத்தில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

சினிமாவில் ஏற்பட்ட மாறுதல்களால் ஜெமினி ஸ்டுடியோ தயாரிப்புகளை நிறுத்திக் கொண்டது. ஜெமினியில் பணியாற்றிய பலரும் வேலை தேடிக்கொண்டு வெளியில் சென்றார்கள். பதினான்கு ஆண்டுகள் விளம்பரத்துறையில் வேலை பார்த்த அசோகமித்திரன் எழுதுவதற்கு வந்துவிட்டார்.

தமிழ்ப் பத்திரிகைகள் பலவற்றுக்கும் கதைகள் எழுதி அனுப்பினார். ஆனால் சிலவே பிரசுரமாகின. அவருக்குத் திருமணமாகி குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். எனவே சம்பாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அவர் சில சிறிய வேலைகள் பார்த்தார். அதில் ஒன்று விளம்பர சர்வே எடுப்பது. அந்த வேலை செய்துகொண்டே கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார். ஆனால், அவர் கதைகள் தமிழ்ப் பத்திரிகைகள் ஏற்படுத்தி வைத்திருந்த மரபுக்கோ; உலகியலுக்கோ உரியவை இல்லை. சர்வதேச மரபு சார்ந்த கதைகள். அவரின் கதைக் கருவும், சொல்லும் பாணியும், மொழி நடையும் வித்தியாசமானவை. ஆனாலும் படிக்கத் தூண்டும் சுவாரசியம் மிக்கவை.

சுவாரசியம் என்பது இலக்கியப் படைப்புக்கு விரோதமில்லை. படிக்க சுவாரசியமாக எழுத வேண்டும் என்று அவர் எழுதியும், இலக்கியக் கூட்டங்களில் பேசிக்கொண்டும் வந்தார். அவர் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் - எல்லாம் வாழ்க்கையென்னும் யதார்த்தத்தில் இருந்து பெற்றவை. ஆனால் வறட்டுத்தனம், கொள்கைப் பிரகடனம் தவிர்த்தவை. பூரண அழகும், அமைதியும் கொண்டவை. ஒரே நேர்கோட்டில் சொல்லப்பட்டதின் வழியாகச் சொல்லப்படாத வாழ்க்கையைச் சொல்கின்றன. எளிய கதைகள் போல தோன்றும் இவை, உண்மையில் சொல்லப்பட்டு வரும் எளிமை இல்லை. எளிமை என்பதன் வழியாக அசாதாரணமாக வாழ்க்கை முரண்பாடுகளை முரண்பாடு இல்லாமல் சொல்கின்றவை.

அவரின் சிறப்பான நாவல்களில் ஒன்று "கரைந்த நிழல்கள்'. படாடோபமான சினிமா உலகம் பற்றியது என்று சொல்லி விடலாம். ஆனால், நுட்பமான தொனியில் ஆடம்பரமாகிறது என்று அறியப்பட்டிருக்கும் சினிமா உலகத்தின் மறுபக்கத்தை கலைஞனுக்கே உரிய முறையில் சொல்வதாகும். எனவேதான் அவர் நாவல்கள் எது பற்றியும் இல்லை. அது வாழ்க்கையைப் பல இழைகளோடு சொல்கிறது என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அவரின் பொதுத்தன்மையும், தனித்தன்மையும் அதுதான்.

தன் காலத்து சினிமா பற்றி அவர் நிறையவே எழுதி இருக்கிறார். அதில் இருட்டில் இருந்து வெளிச்சம். சினிமா பற்றிச் சாதகமாகவும் எழுத முடியுமா? என்று கேட்டுக்கொண்டு 1997-இல் ஒரு கட்டுரைப் புத்தகம் வெளியிட்டு இருக்கிறார். ஏற்கெனவே பத்திரிகைகளில் வெளிவந்தவைதான். ஆனாலும் அதிகம் அறியப்படாதவை பற்றி பலரும் அறிந்துகொள்ளத்தக்க விதமாக எழுதியிருக்கிறார்.

அசோகமித்திரன் வாழ்க்கையில் மிக முக்கியமான இடம்பெறுவது கஸ்தூரிரங்கன், புதுதில்லியில் இருந்து அரசியல், இலக்கிய இதழான கணையாழி மாதப்பத்திரிகை. அதில் சொற்ப சம்பளம் பெற்றுக்கொண்டு இருபத்தைந்து ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார்.

சாவி தினமணி கதிர் ஆசிரியரானதும், அசோகமித்திரனை ஆசிரியர் குழுவில் சேர்த்துக்கொள்ள அழைப்பு விடுத்தார். அசோகமித்திரன் சாவியைச் சந்தித்தார். வேலை கொடுப்பது அநேகமாக முடிவாகிவிட்டது.

"நான் கணையாழியில் இருபதாண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக இருக்கிறேன். முதலாளி தில்லியில் இருக்கிறார். கணையாழி வேலை என்பது ஒரு வார வேலைதான். எனவே கணையாழியையும் பார்த்துக்கொண்டு தினமணி கதிரில் இருக்கிறேன்'' என்றார் அசோகமித்திரன்.

"ஒரே நேரத்தில் இரண்டு பத்திரிகைகளில் பணியாற்ற முடியாது'' என்று சாவி வழியனுப்பி வைத்தார்.

அசோகமித்திரன் கணையாழியை மட்டும் பார்த்துக் கொண்டார். நவீன தமிழ் இலக்கியத்திற்கு அவர் வழியாக புது அர்த்தம் ஏற்பட்டது. புதிதாக சிறுகதைகள், நாவல்கள் எழுதிய இளம் எழுத்தாளர்கள் எல்லாம் அவரிடம் முன்னுரை பெற்று தங்கள் படைப்புகளை வெளியிட்டார்கள். தமிழில் அதிகமாக முன்னுரை எழுதியவர் என்றால் அது அவர்தான். அவர் நெடுங்காலம் உயிர் வாழ்ந்தார். எனவே எழுத்தாளர்கள், கலைஞர்கள் மரணமுற்றதும் நினைவு அஞ்சலி எழுதினார். அதிலும் அவர்தான் முதல்.

நவீன தமிழ் இலக்கியத்தைச் சர்வதேச இலக்கியமாக்கிய வெகுசிலரில் அசோகமித்திரனுக்கு முக்கியமான இடம் இருக்கிறது. அவர் சமூகத்தின் மீதும், இலக்கிய அமைப்புகள் மீதும் குறை சொல்லாமல் நிறைவாக வாழ்ந்தார். அவரின் படைப்புகள் போலவே - அவரின் வாழ்க்கையும் பல ஆண்டுகளுக்கு நினைவு கூறப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com