ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாதரக்தம் எனும் உபாதை!

உணவில் உப்பு, புளிப்பு, காரம் சேர்ந்தவற்றை அதிகம் உண்பதாலும், வினிகர், எண்ணெய் மற்றும் மிகவும் சூடான வீர்யம் கொண்ட ஊறுகாயை அதிக அளவில்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாதரக்தம் எனும் உபாதை!

என்னுடைய முழங்கால் மூட்டில் வீக்கமும் எரிச்சலும் உள்ளது. தொட்டால் சூடாகவும் வலியும் ஏற்படுகிறது. தாங்கி தாங்கித்தான் நடக்க முடிகிறது. இது எதனால்? இதற்கு மருந்து உள்ளதா?
-தங்கமணி, ஓசூர்.

உணவில் உப்பு, புளிப்பு, காரம் சேர்ந்தவற்றை அதிகம் உண்பதாலும், வினிகர், எண்ணெய் மற்றும் மிகவும் சூடான வீர்யம் கொண்ட ஊறுகாயை அதிக அளவில் சாப்பிடுவதாலும், முன் உண்ட உணவு முழுவதும் செரித்திருக்காத நிலையில், அடுத்த உணவை உண்பதாலும், உட்புற நொதநொதப்பை ஏற்படுத்துவதும், மிகவும் வறண்டதுமாகிய நீர்வாழ் பிராணிகள், எள், புண்ணாக்கு, முள்ளங்கி, கொள்ளு,  உளுந்து, பட்டாணி, இலைக்கறிகாய்கள், மாமிசச்சூப்பு, கரும்புச்சாறு கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகள், தயிர், மிகவும் புளித்துப்போன கள், சாராயம், மோர், ஒவ்வாமை உணவுகள், தன் அளவிற்கு மீறிய உணவு, அடிக்கடி கோபம், பகல் தூக்கம், இரவில் கண்விழித்தல், மிக மென்மையான உடல் அமைப்பு, நேரம் தவறி உண்ணுதல், இயற்கையை மீறிய வாழ்க்கை முறை, உடல் பருமன், சுகமான வாழ்க்கை  போன்ற காரணங்களால் நீங்கள் குறிப்பிடும் வாதரக்தம் எனும் உபாதை, மனிதர்களைத் தாக்கக் கூடும் என்று சரகர் என்ற முனிவரும்,  ஸுஸ்ருதர் எனும் முனிவரும் கூறுகின்றனர்.
 மேற்குறிப்பிட்ட உணவு வகைகளால், வயிற்றில் உணவானது புளிப்புடன் கூடிய பதனழிந்த நிலையை அடைந்து, இரத்தத்துடன் அதன் சத்து கலக்கும் போது, இரத்தமும் புளிப்புடன் கூடிய காந்தல் போன்ற நிலையை அடைந்துவிடுகிறது. வாகனங்களில் ஏறி, நின்று கொண்டோ, முட்டியை மடக்கிக் கொண்டோ, வெகுதூரம் பயணம் செய்கையில் இரத்தம் கால் பகுதியில் அதிலும் முக்கியமாக மூட்டுப் பகுதியில் சஞ்சரிக்கும் போது வாயுவுடன் சேர்ந்து, வீக்கம், எரிச்சல், வலி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. 
வியர்வை அல்லது வியர்வையின்மை, கருமையடைந்த தோல்நிறம், தொடு உணர்ச்சியின்மை, சிறிய அடிபட்டாலும் கடுமையான வலி, பூட்டுகள் கலகலத்துவிடுதல், அலுப்பு, சலிப்பு, நீர்க்கொப்புளம், முட்டி, முட்டியின் கீழ் கெண்டை சதை, தொடை, இடுப்பு, கை-முதுகுப்பகுதி இணைப்பு, பாதம், மூட்டுகள் ஆகிய பகுதிகளில் ஊசியால் குத்துவது போன்ற வலி, துடிப்பு, பிளப்பது போன்ற வலி, கனம், மரத்துப்போகுதல், அரிப்பு, பூட்டுகளில் வலி திடீரென்று தோன்றுவதும், மறைவதும், கருப்பு நிறத்தில் உடலில் வட்ட வட்டமான தடிப்புகள் தோன்றுவதும் இந்த உபாதைக்கான முன் அறிகுறிகளாகும்.
இரத்தம் கெட்டுப்போய் ஏற்பட்ட உபாதை என்பதால், உடலில் நெய்ப்பு தரும் சிகிச்சை முறைகளை முதலில் செய்து, பிறகு சிறிது சிறிதாக, கெட்ட ரத்தத்தை அட்டைப் பூச்சி வைத்து கடிக்க வைத்து வெளியேற்றும் சிகிச்சை முறையை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.   வாயுவின் சீற்றம் அதிகரிக்காத வகையில், இந்த சிகிச்சையைக் கையாள வேண்டும்.
தசமூலம் கஷாயம், பிருகத்யாதி கஷாயம், பலாகுடூச்யாதி கஷாயம், கோகிலாக்ஷம் கஷாயம் போன்றவை, இந்த உபாதைக்கு நல்ல பலன்களைத் தரக்கூடிய மருந்துகளாகும்.
ஜடாமயாதி எனும் பற்றுபோடும் மருந்தை, வடித்த கஞ்சியுடன் குழைத்து முட்டியில் பற்றுப் போடுவதால் எரிச்சலும், வீக்கமும் வலியும் பெருமளவு குறையும்.
சதகுப்பையை பாலில் அரைத்து இளஞ்சூடாகப் பற்று இடுவதும் நல்லதே. பிண்ட தைலம், இந்த உபாதைக்கு பயன்படுத்தும் சிறந்த தைலமாகும். வெதுவெதுப்பாக முட்டியில் வைத்து கட்டிக் கொள்வதால், வீக்கம், எரிச்சல், வலி ஆகியவை குறையும்.
நீர்முள்ளியின் இலையைச் சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாதரக்தம் எனும் உபாதையை நாம் வென்று விட முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com