நடந்ததை... நடப்பதைக் கூறும் ஓலைச்சுவடிகள்!

நாடி ஜோதிடம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஓலைச் சுவடியைப் படித்து தனிமனிதர்களின் வாழ்க்கையில் நடந்ததை, நடப்பதை  பாட்டனார் காலத்திலிருந்தே
நடந்ததை... நடப்பதைக் கூறும் ஓலைச்சுவடிகள்!

நாடி ஜோதிடம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஓலைச் சுவடியைப் படித்து தனிமனிதர்களின் வாழ்க்கையில் நடந்ததை, நடப்பதை பாட்டனார் காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாகச் சொல்லி வருகிறார்கள் சிங்காரவேலு நாயனார் குடும்பத்தினர். ஜோசியத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? என்று இவரைக் கேட்டால் மடை திறந்த வெள்ளம் போல் இவர் பல விவரங்களைக் கூறுகிறார்.

"என்னுடைய 10 வது வயதில் இருந்தே என் தந்தையாருடன் இந்த நாடி பார்த்து அதன் பலன் சொல்லி பழக ஆரம்பித்தேன். நாடி பார்த்து சொல்வது ஆரம்பத்தில் கொஞ்சம் கடின மாகத்தான் இருந்தது. ஏன் என்றால் நாடியில் உள்ள எழுத்துக்கள் நம் விரும்பும் வண்ணம் தமிழிலோ அல்லது எல்லோருக்கும் புரியும் வண்ணம் கவிதை வடிவிலோ அல்லது உரைநடை வடிவிலோ இருக்காது. காரணம் இதை எழுதியவர்கள் சித்தர்கள். ஜோசியம் என்பது கட்டங்களை பார்த்து மனிதன் பலன் சொல்வது. ஆனால் நாடி என்பது சித்தர்கள் பல நூறு ஆண்டுகள் முன்பு எழுதி வைத்ததைப் புரிந்து கொண்டு அதை படித்து சொல்வது. 

சித்தர்கள் வாக்கு என்றுமே பொய்க்காது என்பதற்கு பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். குழந்தை பிறக்காது என்பவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் சிறப்பாக நடந்தேறி உள்ளது. இவை எல்லாம் நாடியில் வந்த பலன்கள், நடந்தேறி உள்ளன. இதெல்லாம் மனிதர் சொன்னதில்லை. சித்தர்கள் சொன்னது. சித்தர்களின் இந்த ஓலைச் சுவடிகளை நாம் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். பல ஆயிரம் ஆண்டுகளாக பத்திரமாக இருந்த ஓலைச் சுவடிகளை நாம் தினமும் தேடிப் படிக்கும் போது அவற்றைச் சேதமடையாமல் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். 

ஓலைச்சுவடியில் உள்ள எழுத்துக்களை புரிந்து கொள்ள பயிற்சியும், முயற்சியும் தேவை. எனது தந்தையார் விரும்பினார் என்பதோடு மட்டும் அல்லாமல், எனக்கும் இந்த நாடி பார்த்து பலன் சொல்வதில் விருப்பம் இருந்தது. அதனால் நான் முயற்சி எடுத்துக்கொண்டு அவருக்குத் தெரியாமலும் நான் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதனால் தான் இன்று நான் சரியாகப் படிக்கிறேன் என்று கூறலாம். காரணம், இந்த சுவடியில் உள்ளதைப் படிக்க மிகவும் பொறுமை வேண்டும். அப்படியே படித்தாலும் அதைப் புரிந்து கொண்டு, அதைச் சரியாக பிறருக்குப் புரியும் அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும். ஏன் என்றால், ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையை நம் கையில் கொடுத்து விடுகிறார்கள். அதில் நடப்பதை நாம் நல்லவிதமாக மாற்றித் தருவோம் என்றும் நம்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், நாம் நடந்ததை, நடப்பதை மட்டும் தான் கூறுகிறோம். 

நம்மால் மாற்றவோ அல்லது சரி செய்யவோ முடியும் என்றால் சில பரிகாரங்களைச் சொல்கிறோம். பரிகாரங்களும் அந்தச் சுவடியிலேயே சொல்லப்பட்டிருக்கும்'' என்று கூறுகிறார் சிங்காரவேலு நாயனார். இவரது அப்பா, இந்தி நடிகர் தர்மேந்திரா, ஹேமமாலினி, மறைந்த நரசிம்மராவ் உதவியாளர், ஜப்பான் நாட்டின் ஒரு நகர மேயர் என்று பலருக்கும் நாடி படித்துச் சொல்லியுள்ளார்.

நாடி படிக்க சிறந்த நேரம் காலை முதல் மாலை வரை மட்டுமே. இரவு நேரத்தில் இவர் நாடி படிப்பதில்லை. "நாடி ஜோதிட அடிப்படையில் 27 நட்சத்திரங்கள்' என்ற புத்தகத்தையும் இவர் எழுதி உள்ளார். "என்னிடம் உள்ள 700 ஓலைச் சுவடிகளில் இருந்து பல கோடிப் பேர்களின் வாழ்க்கையில் நடப்பதைக் கூற முடியும்'' என்கிறார் சிங்காரவேலு நாயனார்.

- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com