மன்னிப்பு எனும் அருமருந்து!

வி.மகாதேவனுக்கும், விஸ்வநாதனுக்கும் 6 வருடங்களாகப் பேச்சு வார்த்தை இல்லை. மகாதேவன் அப்பா, விஸ்வநாதன் பிள்ளை.
மன்னிப்பு எனும் அருமருந்து!

வி.மகாதேவனுக்கும், விஸ்வநாதனுக்கும் 6 வருடங்களாகப் பேச்சு வார்த்தை இல்லை. மகாதேவன் அப்பா, விஸ்வநாதன் பிள்ளை. தனது அப்பாவின் பெயரையே மகனுக்கும் வைத்திருந்தார் மகாதேவன். ஒருத்தர் முகத்தில் ஒருத்தர் முழிப்பதுகூட இல்லையென ஆகிப்போச்சு. அதன் காரணத்தை யாரும் அறிய முடியவில்லை. தெரிந்தால் சமாதானம் செய்து வைக்கலாமென உறவினர்கள் பலரும் தலைப்பட்டனர்.

"அப்படி என்ன அப்பனுக்கும், பிள்ளைக்கும் ஆகாமப் போச்சு என்கிட்ட சொல்லு, அவனை என்னன்னு கேட்கிறேன்'' என சொன்ன அத்தை சண்முகவடிவிடம் விஸ்வநாதன், "அத்தை, நீங்க வந்த சோலியை மட்டும் பாருங்க'' என்று கடுகடுவெனச் சொல்லி விட்டான். வேலையை என்று சொன்னால் சிறு மரியாதையாவது இருக்கும். சோலி என்றால் வாயை மூடு எனப் பொருள். ஊர் வம்புக்கும் அதிரடிப் பேச்சுக்கும் பேர் போன வடிவத்தைக்கே இதான் கதி என்றறிந்த உறவுகள், எந்தச் சபையிலும் மகாதேவனின் குடும்பப் பிரச்னைகளைப் பேசவேயில்லை  - அதாவது அவர்கள் முன்னிலையில்.

எப்போதும்போல் இப்பவும் இருக்க முடியாதுன்னு மருத்துவமனைக்கு மகாதேவனைப் பார்க்க வந்த உறவினர்கள் முடிவெடுத்தனர். "எப்பொழுது வேண்டுமானாலும்' என்று டாக்டர் சொல்லி விட்டார். "வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகணும்னா போகலாம்'' எனவும் அனுமதி கொடுத்தார். அவர் அப்படிச் சொன்னதில் மகாதேவனுக்கும் பெரும் பங்கு உண்டு. சைவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த பற்றும், ஞானமும் கொண்டிருந்த அவர், "வீடுபேறுக்குத் தான் தயார்'' எனச் சொல்லி விட்டார். "எல்லாம் போதும்'' என்று சொல்லிவிட்டு ஆம்புலன்ஸில்  வீட்டுக்கு வந்து விட்டார். நாள் முழுவதும் உடனிருக்க இரண்டு செவிலியர்களையும் மருத்துவமனையே ஏற்பாடு செய்திருந்தது.

உறவினர்கள் எல்லாம் கூடிப் பேசி விஸ்வநாதனை இராமலிங்கம் போய் சந்திக்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள். இவர் மகாதேவனுக்குச் சகலை. இருவருடைய மனைவிகளும் 20 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் பின் ஒருவராக பிராப்தம் முடிந்தவர்கள். அது மட்டுமே ஒற்றுமை. மனைவி இறந்த மறு வருடமே மறு விவாகம் பண்ணிக் கொண்டார் இராமலிங்கம்.

"எனக்கு அந்தக் குடும்பத்தில எந்த உரிமையுமே இல்லையே'' என்று சொல்லி மறுத்துப் பார்த்தார்.

பலவிதமான வற்புறுத்தலுக்குப் பின் இணங்கினார். உடன் செல்ல அவரது தங்கை கிருஷ்ணாவையும் அனுப்ப ஆலோசனை நடந்தது. "எதுக்குத்தான் எனக்கு ஆம்பிளை பேர் வெச்சங்களோ? நான் போனா கடேசியில சண்டையிலதான் முடியும்'' என்று அவள் சலித்துக் கொண்டாள்.

"கிருஷ்ணன் வேற, கிருஷ்ணா வேற. அதைப் புரிஞ்சுக்கோ. நீ வாயைத் திறக்காம இருந்தாப் போதும்'' என்றார் இராமலிங்கம்.

நேரம், காலம் பார்த்துப் போய் கதவைத் தட்டினார்கள். விஸ்வநாதனே கதவைத் திறந்தான்.

கைகூப்பி, "வாங்க சித்தப்பா, வாங்க அத்தை'' என்றான். சோபாவில் உட்கார்ந்ததும் பாட்டிலில் தண்ணீர் கொடுத்தான். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின்  தாங்கள் விரும்பிய திசைக்குப் பேச்சைத் திருப்ப முடியாததால் இராமலிங்கம் விஸ்வநாதன் முகத்தை வெறுமனே பார்த்தார், அகத்தின் அழகு தெரிகிறதாவென. சோபாவில் கால் மாற்றி உட்கார்ந்து கொண்டவன் போனில் உருட்டிக் கொண்டிருந்தான்.
"பசங்க எங்கே?''
"மேல் ரூமில் படிச்சிட்டிருங்காங்க. வடிவு அத்தை காய் வாங்கப் போயிருங்காங்க. வர்ற நேரம்தான். வந்ததும் டீ போடச் சொல்றேன்.''
 "நாம வந்த விஷயத்தைச் சொல்லுங்க'' என்றாள் கிருஷ்ணா.

"அப்பா நிலைமை ரொம்ப மோசமாயிட்டே இருக்கு'' என்றார் இராமலிங்கம்.
"அதுக்கு?'' என்றான் விசு.

"நீ ஒரு எட்டு வந்து பார்த்துட்டுப் போனா நல்லது.''
"இது சம்பந்தமா மேல எந்தப் பேச்சும் வேண்டாம்.''
"என்ன இருந்தாலும்..?''
ஆசீர்வாதம் போல் உள்ளங்கை உயர்த்தி இடை மறித்தான் விசு. வயதில் மூத்தோரை குறுகச் செய்ய, உடல்மொழி பெரும் ஆயுதம். இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவன் வாசல் கதவைத் திறந்து போர்ட்டிகோ பக்கம் சென்றான். சிகரெட் புகையின் நாற்றம் காற்றில் கலந்து வந்தது. அதே சமயம் உள்ளே வந்த சண்முகவடிவிடம் அவள் பதறப் பதறச் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள்.

"அம்மட்டில் வெளியே போயாவது பத்த வெச்சானே, மரியாதைதான்'' என்றாள் கிருஷ்ணா.

"உள்ளேயே பத்த வச்சிருந்தான்னா... நாம சொல்லாம கொள்ளாம வெளியே வந்திருக்கலாம். அவனுக்கு மூஞ்சியில அடிச்ச மாதிரி. அது பெட்டரா இருந்திருக்கும்.

ஏன்ண்ணே, மகாதேவன் அண்ணன் அவரா வீட்டை விட்டு வந்தாரா, இல்லை விசு அனுப்பிச்சிட்டானா?''
"யாருக்குத் தெரியும்? அண்ணி போனதுக்கப்புறம் பதினைஞ்சு வருஷம் ஒண்ணாத்தானே இருந்தாங்க. விசுவுக்குச் சுசீலா கூட கல்யாணமாகியும் இருபத்தைஞ்சு வருஷம் கூடவேதான் இருந்தாங்க. எல்லார் கண்ணும் பட்டிருக்கும்.''

மகாதேவனின் முக்கிய அவயங்கள் செயல் இழந்து கொண்டிருந்தாலும் அறிவு சார்ந்த புலன்கள் அனைத்தும் கூர்மையாகவே இருந்ததால், அவரை உடனடியாகப் பார்ப்பதைத் தவிர்க்கலாம் என முடிவு செய்தனர். மனுஷன் கேள்வி கேட்டால் தப்பிக்க முடியாது. கட்செவி மூலம் உறவுக்குழுவுக்குச் செய்திகள் அனுப்பிவிட்டு அவரவர் வீடு போய்ச் சேர்ந்தனர்.  

மகாதேவனைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு செவிலியர் அன்று இரவு அலைபேசியில் அழைத்துச் சொன்னாள்.

" ஐயா உங்களை காலையில பத்து மணிக்கு மேல வரச் சொன்னாங்க. பயப்பட ஒன்னுமில்லை, ஏதோ சொல்லனுமாம் உங்ககிட்டே.''
 சரியாகப் பத்து மணிக்கே போய்விட்டார். இவர் வந்திருப்பதை மகாதேவனைத் தொட்டு காதோரம் சொன்னார் செவிலியர். 
"வாங்க தம்பி, உட்காருங்க.''

அவரைவிட இராமலிங்கம் ஐந்து வயது இளையவர் என்றாலும் பெயர் சொல்லிக்கூட ஒருமுறையேனும் கூப்பிட்டதில்லை. எப்பொழுதும் தம்பி, வாங்க எனத்தான் அழைப்பார். அவருக்கென சில மரியாதை வளையங்கள்.

"இன்னைக்கு எப்படி இருக்கீங்க?''
"சரியாக் கேட்டீங்க. இன்னைக்கு.. ம்...ம்...ம்... ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டியிருக்கு.''

இராமலிங்கம், "ஐயையோ, அப்படிச் சொல்லலை அண்ணாச்சி''
"பரவாயில்ல தம்பி. இருக்கட்டும். அந்த பெட்டியைக் கொஞ்சம் எடுங்க'' என்று மேஜையைக் காண்பித்தார். 

"இதை விஸ்வநாதன் கிட்ட சேர்த்திடுங்க. பூட்டியிருக்கு. நம்பர் அவனுக்குத் தெரியும்.''

ஏதோ சொல்ல வாயெடுத்தார் இராமலிங்கம். மகாதேவன் கண்ணை மூடிக் கொள்வதைப் பார்த்து மெளனமானார். மூடியிருந்த இமைகளுக்குள் விழிகள் ஆடுவது தெரிந்தது. அழமாட்டார். மதினி உடல் கிடத்தப் பட்டிருந்த இடத்தில் அழாத கண்கள் அவருடையது மட்டும்தான்.

அங்கிருந்து நேராக விசு வீட்டிற்கே அவன் இருக்க மாட்டானென்பது தெரிந்தே போனார். விவரம் சொல்லி சண்முகவடிவிடம் பெட்டியைக் கொடுத்துவிட்டு நிற்காமல் கிளம்பினார். 

"எல்லாரையும் வீட்டை விட்டு அனுப்பிச்சிட்டு இந்த பிள்ளைகளுக்கு யாருமேயில்லாம ஆக்கிட்டானே இப்படி இந்த விசுவநாதன்?'' என்ற புலம்பல் இராமலிங்கத்தின் காதுகளில் வெகு நேரம் வரை எதிரொலித்துக் கொண்டே இருந்தது. "பிள்ளைகள் ஆளாகும் வரை நீங்கதான் துணையிருக்கணும்''னு தாம் சொல்லியிருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டார் இராமலிங்கம்.

 மாலை வீடு திரும்பியவுடன் பெட்டியைப் பார்த்துவிட்டு கத்தினான் விசு. இராமலிங்கத்திற்கே போன் போட்டுச் சத்தம் போட்டான். 

"ஏதோ கொடுக்கச் சொன்னார், கொடுத்துட்டேன். என்கிட்ட கத்தாதே. என்ன செய்யணுமோ செஞ்சுக்கோ''
 சீக்கிரமே இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு விசு மொட்டை மாடிக்குப் போனான்.

அப்பா இந்த வீட்டை விட்டுப் போன அன்று நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்த்தான். பெரியவனின் மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் நடந்த வருடம். மெரிட்டில் சீட். அவனுடய புத்திசாலித்தனம் மட்டுமல்ல. சுசீலாவின், அப்பாவின் கடுமையான உழைப்பும் கூடச் சேர்ந்ததுதான் வெற்றிக்குக் காரணம்.

அவனுக்கென புதிய லாப்டாப் வாங்கப் போனபோது மகாதேவன் தனக்கு எதுக்கு இனி லாப்டாப் எனவும், தன்னுடையதை எக்சேஞ்ச் ஆபரில் கொடுத்துவிட்டுப் புதியதை வாங்கிக் கொள்ளலாமெனச் சொன்னார்.

பழைய லாப்டாப்பை அலுவலகம் எடுத்துச் சென்று முக்கியமானது ஏதாவது இருந்தால் பென் டிரைவில் காப்பி செய்து கொள்ளலாமென பார்த்தபோதுதான் தனஞ்சயனின் கடிதத்தைப் பார்த்தான்.

"தங்களது பெயரைத்தான் எனது இரண்டாவது மகளுக்கு வைத்திருக்கிறேன். மகாதேவி மூன்று மாதம். தங்கள் அறிவுரைகளினால்தான் திருமதி சுசீலாவும் நானும் மட்டுமில்லாமல் இரண்டு குடும்பங்களும் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. தங்கள் கூற்று சரியென மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. உங்களது ஆசைப்படியே உங்கள் பேரன் கைலாஷ் ஒரு டாக்டராக உருவாவது குறித்து மிக மகிழ்ச்சி. தங்களது தவப்பயன். பெங்களூரு ஒருமுறை வாருங்களேன்' என முடித்து முகவரி இருந்தது.

சுசீலாவும், குடும்பமும் காப்பாற்றப்பட்டனவா யார், என்ன விஷயம் என மிக வேகமாக மனம் அடித்தது. யாரை முதலில் கேட்பது, சந்திப்பது எனச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே பெங்களூருக்கு உடனடியாக விமானம் எத்தனை மணிக்கு என சிஸ்டத்தில் தேடிவிட்டான்.

ஆறு மணிக்கு தனஞ்சயனின் அலுவலகத்தில் இருந்தான். ரிசப்ஷனில் காத்திருந்த அவனைப் பார்த்தவுடன், "எனக்கு உங்களைத் தெரியுமே'' என்றான் தனஞ்சயன். 

"எனக்கு எல்லாமே தெரியும்'' என்றான் விஸ்வநாதன்.

தூண்டிலில் மீன் சிக்கியது. ஆனால் வீசியவனே துடித்துப் போனான். 

தனஞ்சயனுக்கும், சுசீலாவுக்கும் ஏற்பட்ட பழக்கம், எப்படி ஆரம்பித்தது, அந்த இரண்டு வருடங்களில் கடைசி ஆறு மாத காலத்தில் சுசீலா குடும்பத்தை விட்டு விலகி, பின்னர் அவர்கள் தமக்கெனத் தனியாக வாழ்க்கை அமைத்துக் கொள்வதென முடிவெடுத்தது என ஒவ்வொரு விஷயமாகப் பேசிப் பேசி இரவுச் சாப்பாடு வரை சந்திப்பு நீண்டு போனது.

ஒரு கட்டத்தில் மகாதேவனுக்கு எல்லாம் தெரிய வந்ததும் நிதர்சன நிலைமையை அவர்தான் இருவருக்கும் புரிய வைத்தது எனச் சொல்லும்போது தனஞ்சயன் குலுங்கி அழுதான். "இதைப் பெறுவதற்கு எதையெல்லாம் இழப்பீர்கள்?' என்று சொன்னார்.

"குழந்தைகள், கெளரவம், குடும்பம், தன்மானம். அது பெரும் பட்டியல். இருக்கும் போது தெரியாதவை. கையை விட்டுப் போனால்தான் அவற்றின் அருமை தெரியும்' என்றார். பின், எந்தக் கோபமும் இல்லாமல் என் கல்யாணத்திற்கும் வந்து வாழ்த்தினார். சத்திய வாக்கு சார் அவரோடது. இன்னைக்கு, இப்ப நடக்கிறதும் ஒரு நாள் நடக்கும்னு சொன்னார் சார்.

இரவு பஸ்ஸில் திரும்பும் போது வேறு யாரை விடவும் தன் மீதுதான் அதிக ஆத்திரம் வந்தது விசுவிற்கு.  "இவ்வளவு முட்டாளாடா நீ'
"அப்பா, ஏம்ப்பா அப்படிச் செஞ்சீங்க? சுசீலா செய்ததை விடவும் அப்பா செய்தது பெரும் துரோகம். ஒரு நாள்கூட இந்த விவகாரம் குறித்து ஒரு பேச்சுகூட இல்லை. புரமோஷனும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம், ஊருக்கு வந்து குடும்பத்தைக் கவனி என்று ஒரு நாள் சொன்னது இதுக்காகத்தானோ?' 
விடிகாலை வீட்டுக்கு வந்தபோது அந்த வீடு தனது வீடல்ல, அந்த விடியலும் தனக்கல்ல எனத் தோன்றியது. படுக்கையில் கிடந்த இரண்டு மணி நேரமும் கெட்ட கனவுகள். எட்டு மணிக்கே ஆபீஸ் கிளம்பினான். அதிகார இருக்கை அவசியமாகப்பட்டது. தயவு தாட்சண்யமின்றி முடிவெடுக்க வேண்டும்.

12 மணிக்கு மகாதேவனுக்குப் போன் செய்து ஆபீஸுக்கு வரச் சொன்னான். பதறியவரிடம், "ஒன்றும் இல்லை. இங்கே வருவதாகக்கூட யாரிடமும் சொல்ல வேண்டாம்'' என்றான். அவர் வந்தவுடன் சிறுகூட்ட அறைக்கு அழைத்துச் சென்றான். சத்தம் வெளியே கேட்காது.

"தனஞ்சயனைத் தெரியுமா உங்களுக்கு?''
வாக்கியத்தில் அப்பா என்ற சொல் இல்லையென்பதை மகாதேவன் கவனிக்கவே செய்தார்.  வீட்டிலிருந்து வரச் சொல்லிப் பேசும் போதும் அப்பா எனச் சொல்லவில்லை என்பதும் தோன்றியது. என்றோ ஒரு நாள் நடக்க வேண்டியதுதான்.

"ம்ம்.. தெரியும்.''
"ஏன் இப்படிப் பண்ணினீங்க?''
மெளனம். அவன் முகத்தின் மீதே இவர் பார்வை சலனமற்று, உணர்ச்சிகளின்றி இருந்தது. 

பேச வேண்டாமென அவர் யார் முன்னாலாவது அமர்ந்திருக்க நேர்ந்தால் மனதிற்குள் கந்தர் கலிவெண்பா சொல்ல ஆரம்பித்துவிடுவார். 

"பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறறிய பாமேவு தெய்வப் பழமறையும்'
"உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருந்தும் என்கிட்ட இருந்து ஏன் மறைச்சீங்க?''.
"போதமும் காணாத போதமாய் ஆதி நடு அந்தக் கடந்த நித்யானந்த போதமாய்' 
"இது எனக்கும் என் பெண்டாட்டிக்கும் இடையில உள்ள மேட்டர். தலையிடுறதற்கு நீங்க யார்?''
தலை குனிந்தார் மகாதேவன்.

"இன்னைக்கு இராத்திரி எட்டு மணிக்கு நான் வீட்டுக்கு வரும்போது நீங்க அங்கே இருக்கக் கூடாது. இருந்தீங்கன்னா நான் எங்கேயாவது போயிடுவேன்.''
"வேண்டாம்ப்பா. நான் இருக்க மாட்டேன். உன் பிள்ளைகளுக்கு அப்பா வேணும்.

எல்லாருக்கும் நீ வேணும்.''
எழுந்து போகும்போது இரு கைகூப்பி தலை குனிந்து வணங்கினார். திரும்பிப் போனார்.  நிதானம் தவறா நடை.

விசு வீடு வந்தபோது அவர் இல்லை. யாரிடம் என்ன சொன்னாரெனத் தெரியவில்லை. இரண்டு பிள்ளைகளும்கூட எதுவும் அவரைப் பற்றிப் பேசவில்லை. எதுவும் கேட்கவில்லை. எந்தச் சுவடுமின்றி மறைந்து போனார். ஆனால் விடிகாலையிலிருந்து எல்லாரும் அவரவர் வெளியே போகும் வரை ஒவ்வொரு நேரமும் அவர் என்னென்ன சொல்வாரோ அவை  மட்டும் சில நாட்கள் ஒலிப்பதுபோல் இருந்தது. சில நாட்கள் மட்டுமே. அவர் பற்றிய எந்தச் செய்தியும் தன் காது வரை வராமல் பார்த்துக் கொண்டான் விசு.

அவனது பதினாறு வயது மகள் செளந்தர்யா ஒரு நாள் காலையில் பள்ளிக்குப் போகும் அவசரத்தில் பையைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தபோது எதையோ தேடி "தாத்தா' எனச் சத்தமாக அழைத்தாள். அவள் தவற விடும் பள்ளிப் பொருட்களைத் தேடி எடுத்துக் கொடுப்பது எப்பவும் தாத்தாதான். ஒரே நொடியில் நிலை உணர்ந்து தன் அறைக்கு ஓடிவிட்டாள். குழந்தைகளுக்கும் தனியாக மனங்கள் இருக்கின்றன. அது குழந்தை மனதாகத்தான் இருக்க வேண்டியதில்லை. தங்கள் மனதைப் பெரியவர்களோ, பெற்றோர்களோ புரிந்து கொள்ளக்கூடும் என அவர்கள் எதிபார்ப்பதுமில்லை.

மகாதேவன் போனதைவிட மெளனமாக, வலி தராது விலகிப் போனாள் சுசீலா. மணமுறிவு தர முடியாது, எக்காலத்திலும் விசுவின் வாழ்க்கைப் பார்வையில் வருவதில்லை, பிள்ளைகள் அவர்களாக வந்தால் மட்டுமே பார்ப்பது என்று உறுதிமொழியோ, சபதமோ - ஏதோ ஒன்று. வேலையிலும் இடம் மாறுதல் வாங்கி தன்னை மறைத்துக் கொண்டாள். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டும், அவரவர் காலத்திற்குக் காத்துக் கொண்டும் இருந்தனர்- அந்தப் பிள்ளைகளையும்  சேர்த்து.

இன்று, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பெட்டி வந்து பாரமாக உட்கார்ந்திருக்கிறது. அதைத் திறப்பதென முடிவு செய்து விசு நம்பர்களைப் போட்டபோது இரவு மணி 2. அதனுள் முத்திரையிடப்பட்ட இரண்டு உறைகள் இருந்தன. கனமானது ஒன்று, ஒற்றைக் காகிதமாக மற்றொன்று. இரண்டாவதைப் பிரித்தான் விசு.

"என் அன்பு விஸ்வநாதன், என் காலத்திற்கப்புறம்தான்  இக்கடிதம் உன்னிடம் வந்து சேருமென நினைக்கிறேன்.

பதினாறு வருடங்களுக்கு முன் நான் எடுத்த முடிவு சரியா, பிழையாவென எனக்கு அப்பொழுது தெரியாது. காலம்தான் விடை சொல்லும் எனவும் நினைத்தேன்.
ஒரு பெண்ணாக மட்டுமே சுசீலா எடுத்த மணவிலகல் முடிவு மாபெரும் தவறென்றும், அவள் பெண் மட்டுமல்ல, தாயும் கூட என்பதைப்  புரிந்து கொள்ள நானும் உதவினேன். உங்கள் திருமணத்தின் போது அவளைத் தாரை வார்த்து வாங்கியது நானும் உன் அம்மாவும்தான். தந்தை ஸ்தானத்தில் அவளுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமையைவே செய்தேன். சலனங்களும், சபலங்களும் வாழ்க்கையில் அடிக்கடிக் குறுக்கிடத்தான் செய்யும். வரையும் கோலத்தின் வளைவுகளை விட்டு புள்ளிகள் விலகியிருப்பின் அது புள்ளிகளின் குற்றமல்ல. புள்ளிகளை அழித்து மட்டும் விட்டுவிட்டாலோ, இல்லை அப்படியே விட்டுவிட்டாலோ கோலம் கோணலாகவே இருந்து விடும்.

நான் அறிய வந்த விஷயங்களை அப்படியே, அப்பொழுதே உன்னிடம் சொல்லியிருந்தால், நீயும் சுசீலா போலவே உணர்ச்சிப் பிரவாகத்திலேயே, இளமை உத்வேகத்திலேயே ஏதேனும் முடிவுகள் எடுத்திருக்கக்கூடும். அப்புறம் பிள்ளைகள் கதி? அருமார்ந்த இரண்டு செல்வங்கள். எனக்கு எதை விடவும், யாரை விடவும் அவர்கள்தான் முக்கியம். உனக்குத் தெரியும்.

சுசீலாவுக்கும், அவனுக்கும் நற்புத்தி சொன்னேன். அவர்கள் போன வழி தப்பு. திருத்திக் கொண்டார்கள். மாற்ற முடியாத தவறை மன்னிக்கச் சொல்வது, அதுவும் பாதிக்கப்பட்டவரிடமே சொல்வது  அந்தத் துணிவு என்னிடமில்லைதான். உன்னிடம் சொல்லியிருக்கலாமோ? என முதலில் பல நாட்கள் கடந்தன. துரோகங்களை கோபத்தால் வெல்ல நினைத்தவர்கள் தோற்றுத்தான் போனார்கள்.

ஆனால், அன்று நான் எடுத்த முடிவு இப்பொழுது சரியென்றே படுகிறது. இன்று உன் பிள்ளைகள் இருவரும் நல்லபடியாக, பெருமைப்படத்தக்க வகையில் வளர்ந்துள்ளார்கள். புத்திசாலிகள். வாழ்க்கையின் அருமை உணர்ந்தவர்கள். அந்தப் பிள்ளைகளுக்காக, உன் பிள்ளைகளின் வருங்காலத்திற்காக நான் செய்தது சரிதான். காலம் சொல்லி விட்டது. இன்று எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அன்றிருந்த குற்ற உணர்வுகளிலிருந்தும் விடுபட்டுவிட்டேன்.

உன் கோபமும் சரிதான். உன்னிடம் அப்பொழுதே சொல்லியிருந்தால், உன் பிள்ளைகளுக்காக நீயும் ஒரு சரியான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். உனக்கு நான் செய்தது குற்றமே. மன்னித்து விடப்பா அப்பாவை.

மன்னித்தால் கொள்ளி போடவோ, இறுதியாக, ஒருமுறை பார்க்கவோ வா.'

தேதியில்லை. கையெழுத்தும் இல்லை. என்று எழுதினாரோ, எத்தனை நாள் வைத்திருந்தாரோ, எதற்குக் காத்திருந்தாரோ என நினைத்தான் விசு.
வீடே இடிந்து போகும் அளவிற்கு இரவு மூன்று மணிக்கு மகாதேவனின் பிள்ளை விஸ்வநாதன் கதறி அழுதான். வீட்டிற்குள் விளக்குகள் எரிந்தன.                                 
 ரெ. முத்தரசு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com