அம்புப் படுக்கை

தாத்தாவுக்கு முதுமையின் அவஸ்தைகள் அவ்வப்போது வந்து நலம் விசாரிக்கும். இதற்கு அப்போதைய சிகிச்சையாக வீட்டில்
அம்புப் படுக்கை

தாத்தாவுக்கு முதுமையின் அவஸ்தைகள் அவ்வப்போது வந்து நலம் விசாரிக்கும். இதற்கு அப்போதைய சிகிச்சையாக வீட்டில் கைப்பக்குவமாக  பாட்டி சில வைத்தியங்கள் செய்து விரட்டியடிப்பாள். சற்று சிரமம் பெரிதாக இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கூட்டிப் போய் டாக்டர் உபதேசப்படி மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து உபத்திரவங்களை அண்டவிடாமல் செய்வாள்.
 மந்திரவாதிக்குப் பயந்து ஓடும் பேய்களாக அப்போதைக்கு நோய்களின் தாக்கங்கள் மறைந்திருந்து வசமான சமயத்தில் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும்போது, ஊசி மூலம் தாற்காலிகமாக தாயத்துக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். பின் ஒருநாள் மந்திர உச்சாடனம் மங்கி ஆவிகள் நோய்களாக ஆட்டம் போடும். "வேறு பரிகாரம் உண்டா எனக் கேட்பதற்குப் பதில் கெஞ்சலாக அடிக்கடி இப்படிப் போட்டுப் பார்க்கிறதே''என தாத்தா கேட்டார்.
 "வயதாகி உறுப்புகள் பழுதடைந்து போனால் இப்படிக் கோளாறுகள் வரத்தான் செய்யும்''
இதற்கு எந்தக் கோளறு பதிகம் பாடுவது?
இப்படித்தான் மாய வேலைகள் பயனற்றுப் போய் படுத்திருந்த தாத்தாவைப் பிடித்தாட்டி - "என்னாலே பொறுக்க முடியலே - என்ன செய்துன்னே சொல்ல முடியலே. ஆஸ்பத்திரிக்குப் போயே தீர வேண்டும்'' பதற்றத்துடன் துடித்தார். ஒருநாளும் அவர் இப்படித் துடித்ததில்லை. இரவு மூன்று மணிக்கு மருத்துவ
மனைக்குக் கொண்டு போன போது, பாட்டி உமையாளும் உடன் வந்தாள்.
 இவருக்கு சர்க்கரை - உயர் ரத்த அழுத்தம் - கெட்ட கொழுப்பு - சரியாகச் சாப்பாடு சாப்பிட முடியாமை - சின்ன விஷயத்தையும் பெரிதாக்கி மன அழுத்தத்திற்கு அல்லல்படுவது இதெல்லாம் உண்டு. இவையெல்லாம் இளமையில் மறைந்திருந்து வயோதிகத்தில் தாக்கும் எதிரிகள். வயதும் 74 ஆகிவிட்டது. இத்துடன் தாங்க முடியாத இதயப் படபடப்பு வேறு. கணவரைக் குழந்தையாகக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு.
 நீரிழிவுக்கு,   தானே இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வாள். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா எனச் சோதித்துக் கொள்வாள். அளவு குறைந்தால் நள்ளிரவு என்றும் பாராமல் மருத்துவமனைக்குப் போய் விடுவாள்.
 "மருத்துவக் கல்லூரியில் படிப்பவர்கள் டாக்டர்
களாகிறார்கள். நீங்கள் ஆஸ்பத்திரிக்குப் போய்ப் போய் அனுபவப்பட்டு டாக்டராகி விட்டீர்கள்!''
 பாட்டி சிரிப்பாள். அநேகம் பேர்களை வென்றவன்தானே அரை வைத்தியராகிறான்!
 இவள் உமையாள் பாட்டியல்ல - சாதுரியமும் அசாத்திய தன்னம்பிக்கையும் கொண்ட உமையவள்!
 "நீங்க வீட்டிலே இருங்க. இரண்டும்கெட்டான் நேரத்திலே - உடம்பு சரியில்லாத நிலையிலே அங்கே வந்து மேலும் அவஸ்தைப்படணும்?''
 ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஈருடல் ஓர் உயிராக வாழ்ந்து - அவரைக் கணமும் பிரியாமல் வாழ்கிறவள்.
மருத்துவமனையில் அவரை வண்டியில் படுக்க வைத்து தள்ளிக் கொண்டு போகையில் கூடவே ஓட்டமும் நடையுமாக வரும் மனைவியைப் பார்த்து -"இவங்க என் அம்மா!' அவஸ்தைகளுக்கிடையிலும் தாத்தாவின் குரல் உயிர் வாஞ்சையாக வருகிறது. எல்லாவற்றையும் மீறி மனைவியின் முகம் அவர் இதழில் வேதனை கலந்த சின்னஞ்சிறு சிரிப்பாக வருகிறது.
பெற்றவர்களைவிடப் பெண்ணை பூரணமாகக் காப்பவன் கணவன்தானே! தள்ளிக்கொண்டு போகும் வண்டியில் நீட்டிக் கொண்டிருக்கும் கணவரின் கையைப் பற்றும் அவளின் கரங்களில்தான் அவர் இதயமும் உயிரும் இருக்கிறதே!
 முக்கிய அறைக்குள் வண்டி போனதும், மருத்துவரும் செவிலியர்களும் நுழைந்து கதவை மூடி விட்டார்கள். பரிசோதனை நடந்தது. கையிலும் உடம்பின் வேறு பகுதியிலும் ரப்பர் குழாய்கள் செருகப்பட்டு - தாள முடியாத வேதனையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
டாக்டரிடமோ செவிலியர்களிடமோ வேதனையைச் சொல்ல முடியவில்லை. ரப்பர்க் குழாய்களை எடுத்துப் போடுகிறார் என்பதற்காக கைகளைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டி விட்டார்கள்.
 மருத்துவருக்கு முன் நோயாளி, சர்வாதிகாரிக்கு முன் தண்டனை விதிக்கப்பட்ட அடிமை. இங்கு தன் துன்பங்களைப் பற்றி பேசினால், "நீங்க உயிர் பிழைக்க எவ்வளவு பிரயாசைப்படுகிறோம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாதா?'' உயிரைப் பணயம் வைக்கும் ஒரு கேள்வியில் அடக்கி விடுகிறார் டாக்டர்.
மருத்துவமனைச் சீருடை அவிழ்ந்து தாத்தாவின் தோள் பகுதி முழுக்கத் தெரிகிறது. கழுத்துச் சதையில் கூர்மையான ஊசியை இறக்கியபோது, தாங்கவும் முடியாமல் சப்தமிடவும் முடியாமல் துடிக்கிறார்.
நோயாளிகளைப் பார்க்கும் சின்ன வட்டமான துவாரத்தில் பார்க்கும் எங்களைக் கவனிக்கும் நிலையில் அவர் இல்லை.
திரவ ஆகாரம் செலுத்துவதற்காக மூக்கில் ஒரு டியூபும், சிறுநீரை வெளியேற்றுவதற்கு மூத்திரப்பை அருகில் கதீட்டரும் - மூச்சுக் குழலில் சேரும் திரவத்தை வடித்தெடுக்க உறிஞ்சு குழாயும் செருகப்பட்டிருக்கின்றன. இத்துடன் நாடித் துடிப்பை கண்காணிக்க ஒன்று - இதயத் துடிப்பைத் தொடர்ந்து அறிய ஒன்று, வேறு சில கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன.
சில வீடுகள் தாண்டியிருக்கும் மருத்துவச்சிப் பாட்டி கைபிடித்துப் பார்த்து நாடித்துடிப்பை சில நிமிடங்களில் சொல்லி விடுவாளே - அது எப்படி?
இருதயத் துடிப்பு - நாடித் துடிப்பு - நுரையீரலில் சேரும் காற்றின் அளவு - உடலின் வெப்பநிலை - ஆக்சிஜன் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பதிவிடப்படுகிறது.
இவருக்கு அப்படி என்னதான் செய்கிறது? கண்களுக்குப் புலப்படாத மூச்சுக்காற்றைக் காப்பாற்ற இத்தனை பிரயத்தனங்கள்.
பாட்டியின் கண்கள் தாரை வார்க்கிறது.

பாட்டி பெரிய  படிப்புப் படித்தவர். வசதியான குடும்பத்தின் ஒரே பெண். அரசாங்கத்தில் உயர்ந்த உத்தியோகம். கனத்த ஊதியம். உவமைக்கு அடங்காத அழகு. யாருக்கும் உதவும் தயாளம். கடை நிலை ஊழியரிலிருந்து பெரிய அதிகாரிகள் வரை பணிவாகவும் அன்பாகவும் நடந்து அனைவரின் மரியாதையையும் உள்ளார்ந்த உவகையும் பெற்றவர்.
கடை நிலை ஊழியர்கள் தேர்வுக் கமிட்டிக்குத் தலைமையாக பாட்டி இருந்தபோது, ஒருவர் தேவைக்கு ஏகப்பட்ட விண்ணப்பங்கள் வந்தன.
 அன்று நேர்காணல்.  பெரிய அதிகாரிகளின் பரிந்துரைகள் - கையூட்டுகளின் சிபாரிசுகள் - சாதி மத 
ஏற்றத்தாழ்வு வரிசைகள் - அரசின் விதிமுறைகள்... ஒவ்வொருவராக வந்து போகின்றனர்.  கடைசியாக வந்த சதாசிவம் -
 "என் அப்பா நிரந்தர நோயாளி. அம்மா ஒரு வீட்டில் வேலை பார்க்கிறார். நான் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க  முடியவில்லை.  அம்மா பார்த்து வேலை கொடுத்தால், பெற்றோருக்கு ஒரே பிள்ளையான நான், அவர்கள் வாழும் காலம் வரை காப்பாற்றுவேன். இதற்காக கல்யாணம் முடித்துக் கொள்வதில்லை என்னும் உறுதியோடு இருக்கிறேன்.''
 பரிதாபமாக நிற்கும் அவன் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தார் அதிகாரி அம்மாள்.
 "பெற்றவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் பொய் சொல்லக் கூடாது என்று வளர்த்திருக்கிறார்கள்.''
"இக்காலத்தில் இது சாத்தியமா?''
"இக்காலத்தில்தானே என் பெற்றோர்கள் வாழ்கிறார்கள்!''
 அதிகாரியின் பார்வை அவர் மீதிருந்து இன்னும் 
அகலவில்லை. ஒருவேளை இந்த வேலை கிடைக்க வேண்டுமென்பதற்காக இப்படியெல்லாம் சொல்கிறேன் எனக் கணிக்கிறாரோ?
 குனிந்து கையிலிருக்கும் பழைய காக்கிப் பையிலிருந்து கனத்த தேவாரப் புத்தகத்தை எடுத்து மேஜை மீது வைத்து, "தினசரி இதிலிருந்து ஒரு பதிகம் மனனம் பண்ணியிருக்கிறேன். ஆனால் நான் சொன்னதெல்லாம் உண்மை என இப்புனித நூல் மீது சத்தியம் செய்யும் சக்தி எனக்கில்லை.  நான் சொல்வதை ஏற்பதும் தவிர்ப்பதும் உங்கள் பொறுப்பு. அப்படியே வேலை கிடைத்தாலும் - எத்தனை துன்பங்கள் வந்தாலும் 1 ரூபாய் கை நீட்டி வாங்க மாட்டேன். என்னை நிரூபிக்க இப்புனித நூலைத் தவிர வேறு ஒன்றுமில்லை'' கண்கள் கலங்க - குரல் தழுதழுக்கச் சொல்லி கைகட்டி நின்றார்.
 "இப்போது என்ன செய்கிறீர்கள்?''
 "ஒரு கம்பெனியில் தாற்காலிகப் பணியிலிருக்கிறேன்.''
"சரி, நீங்கள் போகலாம்''  அதிகாரியம்மாள் முகத்தில் எந்த உணர்ச்சியும் புரியவில்லை.
 தேவாரப் புத்தகத்தை எடுத்து பையில் வைக்கையில் முதுகுப்புறம் சட்டையில் கிழிசல் தெரிகிறது. பணிவாக வணங்கிச் சென்றார் சதாசிவம்.
 பத்து தினங்கள்  நம்பிக்கையின்மையில் கழிந்தது. பதினோராம் நாள் மிக்க மகிழ்வுடன் வேலைக்குச் சேருமாறு கடிதம் வந்தது. அம்மாவிடம் வந்து "இந்த உதவியை மறக்க மாட்டேன்'' கால்களைப் பற்றப் போனவரைத் தடுத்து, "நான் வேலை தரவில்லையே? அரசாங்கம் கொடுத்திருக்கிறது.''
 "உண்மைதான். மூலகாரணம் தாங்கள்தானே!''
 அதிகாலையில் கோயிலுக்கு வரும் அதிகாரியம்மாள் உமையாள், இவர் அங்கு பாடி நிற்பதைக் கண்டும் கேட்டும் நின்றுவிட்டார்.
"யாரொருவர் உருகுவார்
உள்ளத்துள்ளே அவ்வுருவாய்
தோன்றும் தோன்றும்'.
உமையாளுக்கு மெய்சிலிர்த்தது.
இவர் சதாசிவத்தை விரும்பி ஏற்றபோது, வீட்டாரும் மற்றவர்களும் எவ்வளவோ தடுத்தும், ஏளனம் பேசியும் பொருள்படுத்தாமல் இவரை மணம் முடித்துக் கொண்டவர், ஆபீசில் அதிகாரியாகவும், வீட்டில் அவருக்கு வேலைக்காரியாகவும் இருந்தார்.
 "அருங்குணங்கள் வாய்ந்த என் அருமைப் பிள்ளை. இவருக்குத் தொண்டு செய்தது மனைவியாக அல்ல தாய். எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும், இவர் என் மூத்த பிள்ளை.  ஒருமுறை கோயிலில் தெய்வத்திடம் வேண்டுகையில், பொட்டும் பூவுமாக வாழ்வரசியாக நான் போக வேண்டும்''  என்று உள்ளம் உருக வேண்டினாள்.
 "உமையா! இப்படி வேண்டி என்னை அநாதையா விட்டுப் போயிராதே! சக்தியுள்ளவரைதான் ஆண். பலமிழந்து போனால் எடுப்பார் கைப்பிள்ளை. அப்போதுதான் தாய் வேண்டும். பால் நினைந்தூட்டு
பவள் அல்லவா!  உனக்கு முன்னால் நான் போனால் மரியாதை. இல்லையானால்.. இல்லையானால்...''
 "இல்லையென்றால் என்ன? நமக்குப் பிள்ளையில்லாத குறை தீர்க்க இதோ பெயரன் இருக்கானே!''
 தினசரி அவருக்கான எல்லாக் காரியங்களையும் கவனித்து குழந்தையாக வளர்த்தவரின் ஒவ்வொரு காரியத்திலும் பொருளிலும் இவளின் பங்கு முக்கியமாக இருந்தது. இவற்றையெல்லாம் அவர் கேட்டதில்லை. இதைப் பொருள்படுத்தியிருப்பாரா?
இதுபற்றி  அவளுள் சந்தேக விதை விழுந்திருக்குமோ?
 பாவம். அப்பாவி...
 உமையாள் இதுபற்றியெல்லாம் கேட்பதில்லை... தூணில் சாய்ந்தவாறு சிந்தனையிலிருந்தவளை பின்னால் மெதுவாகச் சென்று தோளில் கை வைத்து அருகில் அமர்ந்து, "என்ன பலமான யோசனை?'
 "நீங்கள் இருக்கையில் எது பற்றிக் கவலை?''
மெல்லச் சிரித்தவள் முகத்தில் மலர்ச்சியே இல்லை.
ஹும்... குழந்தையில்லை. இவள் செய்யும் காரியங்களை நான் பாராட்டியதில்லை. ஏமாற்றங்கள் -   ஏமாற்றங்கள்...
 "யாரும் ஏமாற்றவில்லையே?''
 "எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம்.''
 "என்ன சொல்கிறீர்கள்?''
" உன்னைப் பற்றி -  தேக ஆரோக்கியம் பற்றிக் கேட்டிருக்கிறேனா? உனக்கு உதவியிருக்கிறேனா? என் நலம் - சுயநலம். தினம் தினம் எனக்கு என்னவெல்லாம் செய்கிறாய் - இதில் ஒரு பங்காவது செய்திருக்கிறேனா?''
 மனத்துக்குள் போய்விட்டவர்கள், வெளியில் உருத்தெரியாவிட்டாலும், குரல் வந்து பேசுமே! இப்போது அவள் கண்கள் பேசுகின்றன!

 சேலைத் தலைப்பில் முகத்தை மூடிக்கொண்டு பாட்டி விசும்புகிறாள்.
 "யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத தாத்தாவுக்கு ஒன்றும் ஆகாது. இந்தப் புண்ணிய ஆத்மாவை - பரமாத்மா காப்பாற்றுவார்''. தேறுதல் சொல்லி - அவள் முகத்தைத் துடைத்ததும், மாங்கல்யத்தை இரு கையேந்தி கண்களில் ஒற்றிக் கொண்டாள். நான் சற்றுத் தள்ளிப்போய் மறைவான இடத்திலிருந்து பொங்கி வழிந்தேன்.
 இவருடைய ரத்தம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள். இதற்கான ஆய்வுகளை நடத்தும் பரிசோதனைக் கூடத்தின் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் வெவ்வேறு அறிகுறிகளுக்காகச் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். வலுவற்ற அவருடைய இருதயத்தால் தாங்க முடியாது என்னும் அச்சத்தால், வலி மறப்பு மருந்துகளோ - அயர்ந்து நித்திரை கொள்வதற்கான மருந்துகளோ அவருக்குத்  தரவில்லை.
 அவரின் கழுத்தில் செருகப்பட்ட ஊசியின் கடுமையான வலியால், தலையை இடது புறமாகத் திரும்ப 
முடியாமல் தடுத்து - வலது பக்கம் மட்டும் திரும்ப முடிந்தது. ஒரே பக்கமாக இருப்பது என்ன 
அவஸ்தை...
 ஒன்றைத் தொட்டு ஒன்றாக வருகிறதே...
சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதால், டயாலிசிஸ் - ரத்த சுத்திகரிப்பையும் இவற்றோடு சேர்த்துக் கொண்டார்கள். தொடர்ந்து ஐந்து நாள்கள் இரவில் ரத்த சுத்திகரிப்பு நடந்தது. இதைத் தாங்காமல் இரண்டொரு முறை இதயத் தாக்குதல் (மாரடைப்பு) ஏற்பட்டது.
தாத்தா அனுபவிக்கும் கொடுமையைச் சகிக்க முடியாமல், "இதென்ன கடுமையான சிகிச்சைகள்?''  அறையை விட்டு வெளியில் வரும் டாக்டர்களிடம் என் வேதனையைப் புலம்பினேன். "வலியில்லாமலும் அமைதியாகவும் அவரை விடுங்களேன் .''
 முறைத்தவர், "எங்கள் உயிரைக் கொடுத்து, அவர் உயிரைக் காப்பாற்றும் எங்கள் மருத்துவத்தில் நம்பிக்கையில்லையானால், நீங்கள் நம்பும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கள்'' என்றார். என் உச்சித்தலையில் ஓங்கி அடித்ததுபோல் இருந்தது.
 படக்கென்று குனிந்து, "கேட்டது தவறுதான். என் நிலைமை அப்படி. மன்னியுங்கள்'' என் கண்ணீர் அவர் பாதங்களில் சூடாக விழுந்தது.
 "தம்பி எழுந்திருங்க. அவர் மீது எவ்வளவு பாசமும் பற்றும் வைத்திருக்கிறீர்கள்!'' தோள்களைத் தட்டிக் கொடுத்து - "அவருக்குப் பல உறுப்புகள் செயலிழந்துவிட்டன. இத்துடன் அவருக்கு ரத்தத்திலும் சிறுநீரகத்திலும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவருடைய சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன. நிலைமை மோசம்.''
 அவருக்கு எத்தனையோ பணிகள். என் பதிலையோ நிலையையோ பார்க்காமல் விடுவிடுவென்று போய்விட்டார். "எங்கள் பிரயத்தனங்கள் முடிந்துவிட்டன. கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள்''  எனச் சொல்லாமல் போனதில் எனக்குச் சற்று நிம்மதி.
 எங்கே பாட்டியைக் காணோம் எனத் தேடிப் போகையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மன் முன் உருகி நின்றாள்.
 அதிகாலை எழுந்து நீராடியதும் உன் முன் நின்று கண்களை மூடிப் பாடுவாரே -
"உந்தன் ஜோதி அழகினைக்காண
 உனக்கோர் நீர்நிலைக் கண்ணாடி போதும்;
எந்தநீர்நிலை உள்ளும் புகுந்தே
என்ன செய்குவை, சாற்றுதி சாற்றே!''
உமையாள் உவமையாகி நிற்கிறாள்.
எதற்கும் ஆசைப்படாத புண்ணியவானுக்கு உயிர்ப்பிச்சை கேட்கும் புனிதவதியின் கோரிக்கையை அம்பாள் ஏற்றுக்கொண்டாளா? அப்படியே இருக்கிறாள்.
 தேடி வந்த பெயரன் மெய்சிலிர்த்து இன்னொரு அம்மனாக நிற்கும் பாட்டியின் காலடியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தவன், அக்கினியில் கலந்து போன பாஞ்சாலி மீண்டும் வந்திருக்கிறாளோ...
 சற்று நேரத்தில் அறையிலிருந்து வேகமாக வெளியில் சென்ற மருத்துவரை ஓடிச்சென்று எதிரே வழி மறித்து, "ஐயா எப்படி இருக்கிறார் டாக்டர்?''
 "ஓ! நீங்க அவர் பையனா?''
 "இல்லை. பெயரன்''
 "நிலைமை மோசம். எங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறோம்.''
"நிலைமை மோசமென்றால், எதற்காக இந்த வயர்கள் -ஊசிகள் -டியூபுகள் -டயாலிசிஸ் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு அவருக்கு வலியில்லாமல் இருக்க மருந்து கொடுத்து தூங்க வைக்கக் கூடாதா?''
ஆற்றாமை பொங்கியது.
 "எங்களால் சிகிச்சையை நிறுத்த முடியாது. நோயாளி உயிருடனிருக்க எங்களால் இயன்ற அனைத்தையும் செய்தாக வேண்டும்''   அடுத்து என்னைப் பார்க்காமலே சென்று விட்டார்.
 எனக்கு ஒன்றும் புரியவில்லை.
 கொடூரமான வலியைக் கொடுத்து சில நாள்களுக்கு நோயாளியை வாழ வைக்கும் இந்தக் கடும் முயற்சிகளை யாருக்காக மேற்கொள்கிறார்கள்? மனைவி பெயரன் உறவினர்களுக்கா - பணத்திற்கா - மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு இவர் நோயையும், இதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துகளையும் நேரில் சொல்லித் தரவா?
 தாத்தா பாடம் படிக்கும் புத்தகமா?
 இப்படியெல்லாம் கேட்டு அவர்களைச் சினமடையச் செய்ய முடியாவண்ணம் தாத்தாவை அவர்களிடமல்லவா ஒப்படைத்திருக்கிறோம். அவரின் உடலைப் பகுதி பகுதியாகப் பிரித்து அதற்கான சிகிச்சைகளை அளித்துக் கொண்டிருக்கையில், போதும் அவரை வீட்டிற்குக் கூட்டிப் போகிறோம் என்றால், "உங்களால்தான் அவர் முடிந்து போனார். நாங்கள் உயிர் வாழ வைத்திருப்போம்'' 
 வாழ்நாளெல்லாம் இந்தக் குற்ற உணர்வில் சிக்கி அரைபடுவது - தாத்தாவின் உள்ளங்கைகள் உரிய நரம்பு கிடைக்காமல் குத்திக் குத்தி சிவந்து வீங்கிப் புண்ணாகியிருப்பதுபோல், என்னைச் சித்திரவதை செய்யாதீர்கள் என ஈனஸ்வரத்தில் தவிக்கிறதுபோல் என் இதயமும் உணர்வுகளும் எந்நேரமும் கசக்கிக் கொண்டேயிருக்கும். நொடிக்கு நொடி வாழ்நாள்களில் ஆயிரம் முறைகள் இறந்து கொண்டிருப்பேன்.
 இதைவிட பாட்டி சிகிச்சையை நிறுத்த ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்.
 "வலியிலிருந்து அவர் விடுபட நிச்சயம் அதற்கான மருந்து வைத்திருப்பீர்கள். அதைக் கொஞ்சம் அவருக்குக் கொடுங்களேன்''.
 என் மன்றாட்டத்திற்காக "அது ஆபத்தானது. நேற்றிரவு டயாலிசின்போது, அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. ரத்தத்தில் உள்ள நோய்த்தொற்றுக்காக இப்போது அவருக்கு அதிக அளவில் மருந்துகளை உள்ளே செலுத்தியிருக்கிறோம். வலி மறப்பு மருந்து கொடுத்தால் நிலைமை சிக்கலாகிவிடும்.''
 என்னை அனுதாபத்துடன் பார்க்கிறாரா - எரிச்சலைக் கொட்டுகிறாரா?
 மனிதரை நிமிர்ந்து பார்க்க முடியாத மனிதனாக நிற்கிறேன்.
 பல்லாயிரம் ஆண்டுகளாக ஞானியர்கள் கண்டுணர்ந்து சொன்ன காருண்யம் இன்னும் புரிந்துகொள்ளப்படவேயில்லையா?

 பூஜையறையிலிருந்து செந்தூரக் கலர் சேலையும் ரவிக்கையும் தலை நிறைய மல்லிகையும் - நெற்றியில் பரக்கப் பூசிய திருநீற்றின் மத்தியில் பெரிய குங்குமத் திலகத்துடன் சர்வ மங்கள ரூபிணியாய் வருகையில், அம்மனே எழுந்தருளி வருகிறாளோ?
 எதிரே மெய்சிலிர்க்க நிற்கும் கணவர் சதா - சிவம் - சதாசிவம் மெய் விதிர்த்துப் பார்க்கிறார். மென்னகையுடன், "என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?'' அவர் நெற்றியில் திருநீறிட்டு - குங்குமப் பொட்டு வைத்து காலில் பணியப் போனவளைத் தடுத்து - இவள் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டவருக்குப் பேச்சு வரவில்லை.
 இதென்ன... கணவரைத் தூக்கி நெஞ்சு நிறைய அணைத்துக்கொண்டு அன்பு ததும்ப - என்னிடத்தில் நீங்களும் - உங்களிடத்தில் நானுமாகி விட்டோம்!''
 மண்ணுக்குள் போய்விட்ட புண்ணியம் மிக்க பத்தினிகள் வெளியில் உருவோடு வராவிட்டாலும் - குரல் வந்து பேசுமே!
 வாழ்ந்து ருசி தட்டிப் போன கணவரின் உடம்பும் அழகும் - மனைவியைப் பற்றியிழுக்கும், புதுமோகம் கொள்ள வைக்கும் வாலிபம் முதுமையில் காலடி வைப்பதற்குச் சற்று முன்னால், இரண்டுக்கும் நடுவிலான சோபை வந்து விடுகிறது. பழம் பழுப்பதற்கு முன்னால் பளபளவென்று இருக்குமே அப்படி!
 மனைவி அருகில் அமர்ந்ததும் கேட்டார் - "ஆமாம், நான் வயதாகி பற்கள் போய் பொக்கை வாயாய் - தலை நரைத்து முடியெல்லாம் கொட்டி - பழைய நினைவுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக முடிச்சிதறல்கள் இருக்கையில் என்னை எப்படிப் பார்ப்பாய்?'
 கண்டு கண்டு பதிந்துபோன கணவரைக் கூர்ந்து நோக்கினாள்.
 உமையாள் சிரித்தாள். தாய்க்குப் பிள்ளை குழந்தைதானே!
 ஐம்பது வருடங்களுக்கு மேல் குழந்தையாகத்தானே பார்க்கிறாள்!
 "என்னை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? என ஒருமுறை கூடக் கேட்டதில்லையே?'
உமையாள் அல்ல உமையம்மை!
அதோ! அவரைச் சுற்றி வந்து எவ்விதப் பாதிப்புமில்லாமல் கடமைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் செவிலியர்களும் வேறு மருத்துவர்களும். இவர்களுக்கு அவர் பயிற்சிக்களம். அவ்வளவுதான். இப்படி எத்தனையோ பேர்களைப் பார்த்திருப்பார்கள்.
 எனக்கு இவர் ஒரே தாத்தா. அவர்களுக்கு இவரைப் போன்று எத்தனையோ கிழவர்கள்.
 "தாத்தாவுக்கு இப்போ கொஞ்சம் தேவலையா? வீட்டுக்கு எப்போ கூட்டிப் போகலாம்னு டாக்டர் சொல்கிறார்?'' பாட்டி உருக்கமாகக் கேட்கிறார். இருவரின் ஆயுள்காலச் சேமிப்புக் கரைந்துகொண்டு வருவதைப் பற்றிக் கவலையில்லை. கணவர் சுகமாக வீடு வந்து சேர வேண்டும்.
 "இப்போ கொஞ்சம் பரவாயில்லே. இன்னும் இரண்டொரு நாள்களில் சுகமாகி வீட்டுக்குக் கூட்டிப் போகலாம்னு டாக்டர் சொல்றார்.''  பாட்டிக்கு முழுநம்பிக்கையுடன் ஆறுதல் சொல்லிவிட்டு, "வாங்க பக்கத்துக் கடைக்குப் போய் ஏதாவது சாப்பிட்டு வரலாம். உங்க உடம்புக்கு நேரத்துக்குச் சாப்பிடணும். எவ்வளவு நேரம் பசியோட இருப்பீங்க...''
 "நேரம். அவர் வீட்டுக்கு வர்றதுதான் நல்ல நேரம்'
 தனக்குள் சொல்லிக்க கொண்ட பாட்டியம்மா - "எனக்குப் பசியே இல்லே. அவரை வீட்டுக்குக் கூட்டிப்போய் ரெண்டு பேருமா உட்காரும்போதுதான் பசி வரும். நீ சின்னப்பிள்ளை. பசி தாங்க மாட்டே. நீ போய் சாப்பிட்டு வா. நான் தாத்தாவைப் பார்த்துக்கிறேன்.''
 "எனக்கும் பசியில்லே. தாத்தாவை நான் பார்த்துக்கிறேன். உங்க உடல் நிலைக்குச் சிரமப்படக் கூடாது.''
 வயிற்றில் எரிவது பசித்தீயா? நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தும் ஏதும் செய்ய முடியாத கையாலாகாத  சினத்தழலா?
 உள்ளே போய் அங்கிருக்கும் மருத்துவரிடம், "அவருக்கு வலி தெரியாமலிருக்க மருந்து கொடுங்கள். என்னால் சகிக்க முடியவில்லை'' கெஞ்சினேன்.
 "நாளை மூத்த டாக்டரிடம் கேட்டு வருகிறேன். என்னைத் திரும்பிப் பார்க்காமல் அவர் காரியத்தில் இருந்தார்.
 மாலை தீவிர சிகிச்சை அறைக்குச் சென்றபோது, தாத்தா தூங்கிக் கொண்டிருந்தார். நான் மன்றாடிக் கேட்டுக் கொண்ட மருத்துவர், "நீங்க மீண்டும் மீண்டும் கேட்டதால் லேசான வலி மறப்பு மருந்து கொடுத்தோம்.''
(அடுத்த இதழில்)
கர்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com