ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: புத்தகச் சுமையால் ஏற்படும் வலி நீங்க...!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: புத்தகச் சுமையால் ஏற்படும் வலி நீங்க...!

உடலில் எந்த ஒரு பகுதியையும், அதிக அளவில் துன்புறுத்தக் கூடாது என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. நிர்பந்தம் காரணமாக இது போன்று செய்ய நேரிடும் போது அந்த உடல்பகுதியானது பலமிழந்து தன் செயல்திறனை இழக்க

வார் வைத்த பையினுள் நிறைய புத்தகங்களை வைத்து தோள் பட்டையில் மாட்டி முதுகில் சுமந்து +1 படிக்கும் என் மகன் எடுத்துச் செல்வதால், தோள் பட்டைவலி, முதுகுத்தண்டுவட வலி ஆகியவற்றால் அவதியுறுகிறான். இந்த வலி குணமாகவும் எலும்புகள் வலுவாக இருக்கவும் வழி என்ன?
-முத்துலட்சுமி, கரூர்.
 உடலில் எந்த ஒரு பகுதியையும், அதிக அளவில் துன்புறுத்தக் கூடாது என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. நிர்பந்தம் காரணமாக இது போன்று செய்ய நேரிடும் போது அந்த உடல்பகுதியானது பலமிழந்து தன் செயல்திறனை இழக்க நேரிடுகிறது. இதற்கு மாற்றாக காலை, மதியம் என பாடப்பிரிவுகள் பள்ளியில் ஒரு அட்டவணையாக தயாரித்துத் தருவதால், காலையிலுள்ள பாடப்புத்தகங்களை ஒரு பையிலும், மதிய பாடப்புத்தகங்களை வேறு ஒரு பையிலுமாகப் பிரித்து, ஒன்றைத் தோள்பட்டையிலும் மற்றதைக் கையிலும் பிடித்து எடுத்துச் சென்றால், புத்தக சுமையானது முதுகுப் பகுதியில் குறைய வாய்ப்பிருக்கிறது. மதிய உணவிற்கான டிபன் பாக்ûஸயும் பையினுள் வைக்க இடமிருக்கும். வரும் காலங்களில், இதன் வடிவமாக புத்தக விஷயங்களை பதிவிறக்கம் செய்து, ஒரு கணிணி மாத்திரம் பிள்ளைகள் எடுத்துச் சென்று பள்ளியில் படிக்க நேர்ந்தால், சுமை என்ற பேச்சிற்கே இடம் இருக்காது. வெளிநாடுகளில் இது போன்ற படிப்பினை சிறு வயதிலேயே பள்ளிகளில் சொல்லித் தருவதாக கேள்விப்படுகிறோம். 
 பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் உடல் ஆரோக்யம் மற்றும் மன ஆரோக்யத்துடன் வாழ, ஆயுர்வேதத்தின்  காலை முதல் இரவு வரை குறிப்பிடப்பட்டுள்ள வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு தினசர்யா என்று பெயர். தினசர்யா என்றால் அன்றாடம் செய்ய வேண்டிய ஆரோக்ய குறிப்புகளும் மகனுடைய பிரச்னைக்குத் தேவையில்லை என்பதால், தேவையான சில பகுதிகளை மட்டும் நாம் இங்கு கவனிக்கலாம்.
 தலை மற்றும் உடல் எலும்புகளை வலுவூட்டவும், உட்புற அழுக்குகளை நெகிழவைத்து வெளியேற்றவும் , எண்ணெய் குளியல் பெரும் பங்கு வகிக்கிறது. நல்லெண்ணெய்யில் சிறிது ஓமம், சித்தரத்தை, மிளகு, சீரகம் சேர்த்து இரும்புக் கடாயில் பொரித்து, எண்ணெய்யை மட்டும் தலை, உடல் ஆகிய பகுதிகளில் வெது வெதுப்பாகத் தேய்த்து, அரை மணி ஊறி, வெந்நீரில் குளித்து, காலை உணவாக, சூடான புழுங்கலரிசி சாதத்துடன் மிளகு, சீரகம், பூண்டு போட்டுத் தயாரித்த, ரசத்தைப் பிசைந்து கறிவேப்பிலைத் துவையல், சுட்ட அப்பளம், புடலங்காய் கூட்டு, மோர் சாதம் என்று வகையில் சாப்பிட, மிகவும் நல்லது. இது எப்படி சாத்தியம்? அவன் காலையில் 7 மணிக்கே கிளம்ப வேண்டுமே என்று நீங்கள் கேட்பதுபுரிகிறது. எண்ணெய்க்குளியலை வாரமிருமுறையாவது செய்ய வேண்டும் என்று அதன் நன்மைகளையும் அவன் புரிந்து கொள்ளும்படி எடுத்துக் கூறவும். ஆனால் ஞாயிற்றுக் கிழமை எண்ணெய் குளியலுக்கு உகந்ததல்ல.
 உணவினுடைய சத்து முழுவதுமாக உடலில் சேர்ந்தால் தான் எலும்பும் தசை வலுவும் மாணவர்,  மாணவிகளுக்குக் கூடும் என்பதால், பசித்தீயுனுடைய செயல்திறனை குன்றச் செய்யும் சாலையோர பணியாரம், பேல்பூரி, பானிபூரி, சமோஸô போன்ற பொருட்களைச் சாப்பிடக் கூடாது. பசியுடன் மாலை நேரத்தில் வீட்டிற்கு வரும் பிள்ளைகள் சாப்பிடக் கேட்டால், கேட்டால் என்ன?  நிச்சயம் கேட்பார்கள், அவர்களுடைய வாய் ருசிக்கும்படி இனிப்பு பலகாரம், தட்டை, முறுக்கு, தேன்குழல், ரிப்பன் பக்கோடா என்ற வகையில் ஏதேனும் சிலவற்றை வீட்டிலேயே தயாரித்து வைத்திருந்தால், அவற்றை ஆசையுடன் சாப்பிடுவார்கள். ஆனால் இவற்றைச் சாப்பிட்டவுடன் பால் சாப்பிடக் கூடாது. உப்புடன் பிசையப்பட்ட பொருட்களைச் சாப்பிட்டு, மேலே பால் சாப்பிடுவது, சாலையோர பணியாரத்தை விடமோசமானது. சுமார் 1 மணி நேரம் கழித்துப் பால் சாப்பிடலாம். குடித்த பால் செரித்து பசிவந்த பிறகே இரவு உணவைச் சாப்பிட வேண்டும். 
மாதம் ஒரு முறையோ இருமாதங்களுக்கு ஒரு முறையோ உடல் வலுவிற்கு எற்றாற் போல், குடலைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். உடற்சூடு அதிகமிருந்தால், த்ரிவிருத் லேஹ்யம் எனும் ஆயுர்வேத மருந்தை ஆண்பிள்ளைகள் சுமார் 20 கிராம் 4 ஸ்பூன் காலையில் குடித்த கஞ்சி செரித்து, பசி எடுத்தவுடன் நக்கிச் சாப்பிட, நீர்ப் பேதியாகும். உட்புற அழுக்குகள் நீங்குவதால், குடலில் செரிமானம் செய்யும் நீர்த்திரவங்கள் நன்கு சுரந்து, உணவை செரிக்கச் செய்து உடல் வலுவைக் கூட்டும். பெண்பிள்ளைகள் 15 கிராம் 3 ஸ்பூன் லேகியம் சாப்பிட்டால் போதுமானது. சூடு அல்லாத குளிர்ச்சியான தேகவாகு உள்ள பிள்ளைகள், பிஞ்சுக் கடுக்காய், சுக்கு, சூரத்தாவரை விதை, ரோஜாமொக்கு ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து, 300 மிலி சூடான தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் கசக்கிப் பிழிந்து, லேசாக சூடாக்கி, வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
 சியவனப்பிராசம் லேகியம், தசமூலாரிஷ்டம், அஷ்ட சூரணம், அஸ்வகந்தாதி லேகியம் போன்றவை பள்ளி மாணவ, மாணவிகள் சாப்பிட வேண்டிய நல்ல ஆயுர்வேத மருந்துகளாகும். 
(தொடரும்) 
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com