முதுமை + தனிமை = ?

அன்று இரவு அவ்வருடத்தின் பெருமழை. மழையைப் பொருட்டு பார்வதியம்மாளின் வனாந்தரத் தனிமை உணர்வின் வீரியம் அதிகமாயிற்று.
முதுமை + தனிமை = ?

தினமணி மற்றும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெறும் கதை

அன்று இரவு அவ்வருடத்தின் பெருமழை. மழையைப் பொருட்டு பார்வதியம்மாளின் வனாந்தரத் தனிமை உணர்வின் வீரியம் அதிகமாயிற்று. பார்வதி, மகனுக்குப் பேச வேண்டி அலைபேசியை எடுத்தாள். பார்வதியின் அலைபேசியில் ஒன்றை அழுத்திப் பேசினாள் மகன் விமலுக்கும்,
இரண்டை அழுத்திப் பேசினால் ஒன்றுவிட்ட தம்பி பன்னீருக்கும், மூன்றை அழுத்திப் பேசினால் மருந்துக் கடை ராஜனுக்கும் என மூன்றே மூன்று பதிவுகள்தான் இருக்கும். அதில் பெரும்பாலும் எண் ஒன்றுதான் அழுத்தப்படும். அவளுக்கான எல்லாமுமாக விமல் மட்டுமே இருந்தான்.
 இப்பொழுதும் எண் ஒன்றை அழுத்தி விமலின் குரலை எதிர்பார்த்து அலைபேசிக்கு காதைக் கொடுத்தாள். பத்து சுழற்சிக்குப் பிறகே தொடர்பில் இணைந்தான் விமல்.
 "ஹலோ... அம்மா... சொல்லும்மா, என்ன இந்த இராத்திரி நேரத்துல போன் பண்ணியிருக்க?''
 "ஆமாம் விமல்... இங்க ஒரே அட மழப்பா. வீடு வேற அங்கங்க ஒழுகுது. ஏதோ மனசே சரியில்ல''. தன் ஆற்றாமையை மகனிடம் கொட்டினாள் பார்வதி.
 "மனசு சரியில்லயா? ஏன் என்னாச்சு? உடம்பு ஏதும் சரியில்லயா? சீக்கிரம் சொல்லுமா. உன் பேரன் வேற என்ன பக்கத்துல வந்து படுக்கச் சொல்லி ஒரே அடம்பிடிச்சுட்டே இருக்கான். அவன் அழற குரல் உனக்குக்கூடக் கேக்குமே...''
  "இதோ... நான் சீக்கிரம் முடிச்சிடுறேன்ப்பா. ஒரு பத்து நாளாவே எனக்கு கொஞ்சம் வொடம்பு முடியல. மயக்கமா ஆள தள்ளுது. பக்கத்துல இருக்குற டாக்டரம்மா கிட்ட காண்பிச்சேன். பிபி, சுகர் சீரா இல்லாம ஏறி இறங்கி ஒரு வழி பண்ணுதுன்னு சில பரிசோதனையெல்லாம் பண்ணிட்டு வரச் சொல்லியிருக்காங்க.''
 "சரி சரி, அவங்க சொன்ன டெஸ்ட்டெல்லாம் எடுத்துட்டு போய் காண்பிக்கறதுதான?''
"விமல்... எனக்கு ஏற்கெனவே இருந்த மயக்கத்தோட இப்ப ரெண்டு நாளா  நடந்தாலே மூச்சு வேற வாங்குது. ஆஸ்பத்திரிக்கு திரியும் போதே பக்கத்து அக்கத்து வீட்டு ஆளுங்கள தான் துணைக்கு கூட்டிட்டு போனேன். இன்னும் எத்தன மொற அவங்களயே கூட்டிட்டு போறது. நீயோ பவானியோ வந்தா நல்லா இருக்கும். பஸ் ஏறி வேலூர் போய் எடுக்கணும்டா.''
 "என்னம்மா நீ புரியாம பேசற. இந்த வருஷம் ஏற்கெனவே நான் நிறைய லீவு போட்டுட்டேன். இப்ப இதுக்காக லீவு போட்டா வேற வேற பிரச்னையெல்லாம் வரும்மா''
 "என்னடா நீ இப்படி சொல்ற?'' குரல் தளர்ந்தது பார்வதிக்கு.
 "அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதும்மா. என் கூட வேல பாக்குற ரமணிங்கறவர்க்கு அடுத்த வாரம் திருப்பதியில கல்யாணம். அதுக்கு எப்படி ரெண்டு நாள் லீவு போடுறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன். போகாட்டா நாளபின்ன அவர் முகத்துல விழிக்கறதுக்கே தர்மசங்கடமா ஆயிரும். அப்படி இருக்கும்மா என் நிலமை.''
 "அப்ப நான் என்ன செய்யட்டும் விமல்?'' அப்பாவியாக கேட்டாள் பார்வதி.
 "நீ வொன்னும் பயப்படாத. நம்ம பன்னீர் மாமாவ கூட்டிட்டு வேலூருக்கு போ. ரிசல்ட்டெல்லாம் வரட்டும். வந்ததும் உன்ன டாக்டர்கிட்ட கூட்டிட்டு போக இந்த ஞாயித்துக்கிழம நான் வரேன்''. நேரத்தை மிச்சம் பிடிப்பவன்போல் "படக்' என இணைப்பைத் துண்டித்தான்.
எதைஎதையோ சொல்ல நினைத்தும் விமல் ஆடிய அவசரக் கூத்தில் அத்தனையும் மறந்துவிட்டாள் பார்வதியம்மாள். எப்போதும் இப்படித்தான். அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டால் "எம்.டி ரவுண்ட்ஸ் வரும் நேரம். ஏம்மா...'' என்பான். வேண்டாம் இந்த தொல்லை என்று காலை, மாலை, இரவு என்று எந்த நேரத்தில் அழைத்தாலும் சுடுநீரை காலில் கொட்டிக் கொண்டதுபோல சீக்கிரம் சீக்கிரம் என பறப்பான்.
பார்வதிக்கோ ஞாபக மறதி அதிகம். தொடர்பை  அணைத்துவிட்ட மேல் அய்யய்யோ... முக்கியமான விஷயங்களை மகனிடம் தெரிவிக்காமலேயே துண்டித்துவிட்டோமே என புலம்புவாள். மகனிடம் பேச வேண்டும் என்றாலே இப்பொழுதெல்லாம் ஒரு காகிதத்தில் இன்ன இன்ன தவகல்களை அவனிடம் சேர்ப்பித்துவிட வேண்டும் என குறித்து வைத்துக் கொள்வாள். அப்பொழுதும் ஒரு சிலது தவறிவிடத்தான் செய்யும்.
பார்வதியம்மா இதுபோன்றே பத்து வருடங்களை தனிமையில் கழித்துவிட்டாள். பெற்றெடுத்தது ஒரே மகனைத்தான். வேறு குழந்தையைப் பெற்றால் அவன் மேல் வைத்திருக்கும் அன்பு பிரிந்து விடுமோ என்று ஒரு குழந்தையுடனே நிறுத்திக் கொண்டவள். விமல் திருமணத்திற்குப் பிறகு சென்னையிலேயே தங்கிவிட்டான். கணவன் ராமசுப்புவின் மறைவுக்குப் பிறகு தனிமரமானாள் பார்வதி. ஆரம்பத்தில் சென்னையிலேயே வந்து தங்கிவிடுமாறு விமல் பணித்தான். அவன் மனைவி பவானியின் இடித்துரைத்தலுக்குப் பிறகு சென்னையில் அவளை தனிக்குடித்தனம்தான் வைக்க இயலும் என்பதை ஒருகட்டத்தில் விமல் போட்டு உடைத்துவிட்டான். அங்கே போய் ஒண்டிக் காக்காயாய் உலவுவதற்குப் பதில் இந்த பூர்வீக வீட்டிலேயே வாழ்ந்து விடுகிறேன் என்று மறுத்தவள்தான். பத்து வருடங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. இதோ முதுமையின் பரிசாய் கிடைத்த உடல் நலக் கோளாறுகளால்தான் சற்றுமுன் விமலுடன் அப்படி  உரையாட நேர்ந்தது.
 இனி மருத்துவர் எழுதிக் கொடுத்த அத்தனையையும் கொண்டு போய் பரிசோதனை செய்ய வேண்டும். காசுபணம் குறித்து கூட பார்வதியம்மாவுக்கு கவலை இல்லை. கணவனின் பென்ஷன் பணம் அவளை சுயமரியாதையுடன் வாழ வைக்கிறது. ஆனால் யாரைக் கூட்டிக்கொண்டு போவது என்பதில்தான் தடுமாற்றம். அக்கம் பக்க வீட்டுக்காரர்கள் ஆபத்துக்கு உதவுபவர்கள்தான். அதற்கும் ஓர் அளவு இருக்கிறதே! இதோடு ஏற்கெனவே 3, 4 நாள்கள் அவர்களை அழைத்து தான் மருத்துவரிடம் உடல் சுகமில்லாதபோது சென்று வந்தாள். இப்பொழுது எழுதிக் கொடுத்திருக்கும் பரிசோதனைகள் முழங்கை நீளம் வருகிறது. எப்படியும் ஒரு நாளை சாய்த்துவிடும். அவர்களும் வயல் நடவு வேலையில் பழியாய் இருக்கிறார்கள்.
 அவன் தொலைபேசியில் கூறியதுபோல் பன்னீர் மாமாவை கூட்டிக்கொண்டு போவது அத்தனை சுலபமில்லை. தற்போதெல்லாம் காலையிலேயே சரக்கு போட்டுக்கொண்டு ஆங்காங்கே விழுந்து கிடக்கிறான். சரி, நாளைக்கு தான் மட்டுமே சென்று வருவது என தீர்மானித்துக் கொண்டாள். முதுமையில் தனிமை எத்தனை தள்ளாட்டத்தை கூடுதலாகக் கொடுத்து விடுகிறது என மனதுக்குள் அதிசயித்தாள். கடந்து போகும் வாழ்க்கை எல்லோருக்குமே சிலவற்றைக் கற்றுக்கொடுத்துவிட்டே செல்கிறது.

 காலை மதியத்துக்கான கட்டுச்சோற்றைக் கட்டிக்கொண்டு வியர்க்க விறுவிறுக்க பரிசோதனை நிலையத்தை அடைந்தாள். காலை உணவின் முன்பும் பின்பும் ரத்தத்தை உறிஞ்சினார்கள். இரண்டாவது முறை எடுக்கும்போது நரம்பு கிடைக்காமல் பெரிய அவதியாகிவிட்டது. இவளது ரத்தத்தை எடுத்த இளம்பெண் நான்கு வேறு குழல் குப்பிகளில் இட்டு அடைத்து வைத்துக் கொண்டாள்.
 அடுத்து அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் எடுப்பதற்கு தண்ணீரை குடி குடி என அப்படி வற்புறுத்தினாள் அந்த பெண். பின் அவசரமாக ஒன்றுக்கு வருகிறது என்றாலோ கொஞ்சம் பொறுங்கள், உங்களுக்கு முன் இரு நபர்கள் இருக்கிறார்கள் என சால்ஜாப்பு கூறினாள்.
 முட்டிக்கொண்டு நிற்கும் தவிப்பு அழுகையைக் கட்டவிழ்த்து விட்டது. எழுந்தால் எங்கே அங்கேயே வந்துவிடப் போகிறது என்ற அச்சம். துணி ஈரமாகிவிட்டால் சுற்றி இருப்பவர்கள் பார்க்கும் பார்வை எத்தனை அவமானம்? தூரமாக இருக்கும் அந்தப் பெண்ணிடம் தன் நிலையை விளக்கக்கூட முடியாத துர்பாக்கிய நிலை. தனிமையில் வந்ததற்கான சரியான சவுக்கடி. மலையைத் தாண்டினாற்போல் ஒருவழியாக அதை முடித்து மதிய உணவை உட்கொண்டாள்.
 ஈ.சி.ஜி. மட்டும் சற்றே சுலபமாய் கடந்துவிட்டது. நுரையீரலுக்கான பரிசோதனை என்று சொல்லி இடையில் துளைகொண்ட  ஒரு பைப்பைக் கொடுத்து ஊதச் சொன்னான் விமல் வயதொத்த இளைஞன். அது அத்தனை படுத்தி எடுத்தது அவளை. நன்றாக... இன்னும் நன்றாக... இன்னும் கொஞ்சம்... ம்.... இன்னும் கொஞ்சம் என அவன் சுருதி கூட்டிக்கொண்டே போனான். பிராணன் போனது பார்வதிக்கு. வராததை எங்கே பிடித்து வரவழைப்பது? என்ன வருதோ அதை எழுதிக் கொடுத்துடுப்பா என சொல்லிவிட்டாள்.
 இன்னும் ஒரு சில வாயில் நுழையாத பரிசோதனைகள். எதற்காக, ஏன் எடுக்கிறார்கள்? என ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. இறுதியாக சி.டி. ஸ்கேன் மட்டுமே எஞ்சி இருந்தது. காத்திருக்குமாறு பணித்ததால் அங்கு போடப்பட்டிருந்த கருப்புநிற இருக்கையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலே காத்திருந்தாள்.
 தான் ஏற்கெனவே சாப்பிடும் மருந்து மாத்திரைகள், கண் கோளாறு ஏற்பட்டபோது கொடுத்த மருந்து புட்டிகள், கால் வீக்கத்தின்போது கொடுக்கப்பட்ட "டைட்-100'  என பையைப் பிரித்தால் அப்படியே மருந்து நெடி. அதனுடன் சமீபத்திய எக்ஸ்-ரே, ரத்தப் பரிசோதனை ஆய்வு முடிவுகள் என அது ஒருபுறம்.  கட்டி வந்த சாப்பாட்டு மூட்டை, தண்ணீர் போத்தல் என இரு கைகளுக்கும் தூக்கு வேலை சரியாக இருந்தது.
ஒருவழியாக பார்வதியின் பெயரைச் சொல்லி அழைத்தாள் 20 வயது மதிக்கத்தக்க சுருள்முடி பெண்.
 "பாட்டி... அந்த ரூம்ல போய் உங்க  ஆடையை 
நீக்கிவிட்டு அங்கிருக்குற கவுனை போட்டுக்குங்க. கழுத்துல இருக்குற செயினை கழட்டிடுங்க. ரெடியாகிட்டு இப்படி வந்து உட்காருங்க. உள்ள கூப்பிடுவாங்க'' சொல்லிவிட்டு அடுத்த நபரிடம் சொல்லக் கிளம்பிவிட்டாள் அந்த சுருள்முடி பெண்.
பார்வதியம்மாவுக்கு பதைபதைப்பு கூடிவிட்டது. ஸ்கேன் எடுக்க வேண்டி உடைகளைக் களைந்து கவுன் போட வேண்டும் என்பது அவளுக்குத் தெரியாது. இதற்குமுன் இருமுறை அவளுக்கு எக்ஸ்ரே எடுத்தபோது கூட அது தலை, கால் பகுதியாக இருந்ததால் எதையும் நீக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மெதுவாக அறைக்குள் போனாள். உடுத்தியிருந்த துணிகளை திருட்டு பயத்தில் தன் பைகளுக்குள்ளேயே திணித்துக் கொண்டாள். அந்த கவுன் வேறு அளவில் பூதாகரமாக இருந்தது. கழுத்துப்பகுதி இறங்கி இருந்ததால் சங்கோஜத்துடன் மேலே தூக்கிவிட்டபடியே வந்தமர்ந்தாள்.
உள்ளே அழைத்தால் பைகளை யார் ஆதரவில் விட்டுச் செல்வது என்ற பெருங்குழப்பம். பக்கத்தில் ஓர் அம்மாளும் இதே கவுன் வேஷம் கட்டியிருந்தாள். ஆனால் அவளைச் சுற்றி இரு பெண்கள் இருந்தனர். ஒரு பெண் வெளியிலிருந்து அந்த அம்மாளுக்கு "டீ'  வாங்கி வந்திருந்தாள். சொந்தம் சூழ வந்திருந்த அவளைப் பார்க்க பொறாமையாக இருந்தது பார்வதிக்கு. அந்த அம்மாள் எந்த பயமுமின்றி அவர்களிடம் ஊர்க்கதைகளைப் பேசிக் கொண்டிருந்தாள்.
 பார்வதியை உள்ளே அழைத்தார்கள். கையில் இரு பைகளுடன் பரிதாபமாக நுழைந்தாள். "இதெல்லாம் ஏன் இங்க கொண்டு வந்தீங்க?'' என்றான் உள்ளிருந்தவன்.
"யாரும் கூட வரல தம்பி. இந்தா மூலைல கிடத்திடுறேன்''  என அவன் பதிலுக்கு காத்திராமல் கிடத்தினாள். அனிச்சையாக அவள் கைகள் கவுனின் கழுத்துப் பகுதியில் படர்ந்தது. படுக்கை போன்ற அமைப்பில் படுத்தாள்.
அறை மிக அதீதமாக குளிரூட்டப்பட்டிருந்ததால் அவளுக்கு உடல் நடுங்கியது. நேரம் கூடக் கூட ஒரு கட்டத்தில் கை கால்கள் உதறத் துவங்கிற்று. ஆயிடுச்சா தம்பி என ஈனஸ்வரத்தில் கேட்டாள். அவன் திரும்பத் திரும்ப நன்கு மூச்சை இழுத்து விடுமாறே கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தான்.
மனுஷாளுக்கு நோய் கூட வந்துடலாம். பரிசோதனைங்குற பேர்ல நடக்குற இம்சை மட்டும் கூடாது எனும் முடிவுக்கு வந்திருந்தாள் வீடு திரும்புகையில். அதனதன் முடிவுகளை வாங்கி வர நாளை மீண்டும் செல்ல வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு குறக்கலி இழுத்தது.
ஞாயிற்றுக்கிழமை மகன் வந்துவிடுவான். இந்த பாடு எல்லாம் நீங்கிவிடும் எனும் நிலை கொண்டார். எண் ஒன்றை அழுத்தி மகனை அழைத்தார். தான் வேலூருக்கு போய் பட்ட பாடுகளை பட்டும் படாமலும் மகனிடம் ஒப்பித்தாள். அவன் குரலில் சற்றும் சுதியில்லை. அவன் எப்போது வருகிறான் என ஆர்வமாகக் கேட்டாள்.
அலுவலகத்தில் ஆடிட்டிங் நடப்பதால் இந்த ஞாயிறு கண்டிப்பாக வர இயலாது என்றான் அவன். "இந்த மயக்கத்தோடயே எத்தன நாள்டா கிடக்கறது?''  என்றாள் பார்வதி.
முன்பு சென்றதைப் போல் பரிசோதனை முடிவுகளை மருத்துவரிடம் காண்பிக்கச் சொல்லியும் தான் அடுத்த வாரம் கண்டிப்பாக வருவதாகச் சொல்லியும் இணைப்பைத் துண்டித்தான் விமல்.
 நினைத்தபோதெல்லாம் தன்னை வந்து பார்க்கும்படி வேண்டும் தாயை என்னவென்று சொல்வது? அதிலும் முன்பு கூட பரவாயில்லை. இப்போது அவளுக்கு உடல் சுகமில்லாது போகவே பயம் கூடி பாதுகாப்பு உணர்வு தேவைப்படுகிறது. சென்னைக்கே வந்து இருக்கும்படி அழைத்தாலும் வந்து சேராத அவள் அழுத்தத்தை நொந்து கொண்டான்.

 இங்கே கண்கள் பனித்தது அவளுக்கு. தவமிருந்து பெற்ற பிள்ளையின் செயல்களை எல்லாம் நல்லவேளை தன் கணவன் இருந்து பார்க்கும் நிலை ஏற்படவில்லை என மனம் புழுங்கினாள்.
 ஸ்கேன், ஈ.சி.ஜி, ரத்த மாதிரி முடிவுகள் என அனைத்தையும் மருத்துவர் முன் காண்பித்து அமைதியாக இருந்தாள். உடலில் ஒருவித மந்த உணர்வு. நினைவின் நரம்புகள் அறும் நிலை. மயக்கத்தில் எதிரே இருந்த மருத்துவர்கூட அவள் கண்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. அந்த மருத்துவப் பெண்மணி எதையோ சொல்வது தெரிகிறது. ஆனால் என்ன சொல்கிறார் என்பது தெளிவாகப் புரிபடவில்லை. காதில் "கொய்ங்' என்றொரு சப்தம்.
 "இந்த மாத்திரையை வாங்கி உடனே போடுங்க. பீபீ அதிகமா இருக்கு. நடந்து கிடந்து போகாம ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போயிடுங்க'' என்ற மருத்துவப் பெண்மணியின் இறுதி வார்த்தைகள்தான் ஓரளவு கேட்டது.
 வந்து படுத்தவள்தான். எழும்பும் திராணியற்று எவ்வளவு நேரம் படுத்திருந்தாளோ தெரியாது. உணர்வு தட்டி எழுந்தாள். இடது கால் அசைவேனா என்றது. நொண்டிக்கொண்டும் தேக்கியபடியும் புறவாசலுக்கு வந்து வாய் கொப்பளித்தாள். தண்ணீர் முழுதும் வாயின் இடப்புறம் நோக்கி ஒழுகியது. உதட்டை முழுவதுமாக மூட இயலவில்லை. உள்நடைப்பக்கம் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தாள். இடப்புற முகம் ஈஷிக்கொண்டு போனது போல் இருந்தது. இடது கண் அனிச்சையாக மூடி மூடி திறந்தது. அவ்வப்போது துடித்தது. பக்கவாதம் தன் ஒரு பக்கத்தை காவு வாங்கிவிட்டிருப்பதை இப்பொழுதுதான் முழுமையாக உணர்ந்தாள் பார்வதி. சிதிலமடைந்த மனதுடன் வெடித்து அழுதாள்.

பார்வதியம்மாளின் மொபைலிலிருந்து வேறு ஒரு பெண்ணின் குரலைக் கேட்டதும் கொஞ்சம் ஸ்தம்பித்து போனான் விமல்.
 "விமல் தம்பி... நான் தான் உங்க வீட்டு பக்கத்துல இருக்குற மேகலா பேசறேன்.''
 "சொல்லுங்கக்கா''
 "உங்கம்மாக்கு லக்குவான் அடிச்சிருக்கு தம்பி. ஒரு பக்கம் கையும் காலும் வரல. டாக்டர்கிட்ட கூட்டினு போய் காண்பிச்சோம். அதிகமான இரத்தக் கொதிப்பும் குளிர்ச்சியும் சேர்ந்து இப்படி ஆயிருக்குங்குறாரு டாக்டரு. முன்னாடியே பாத்துருந்தா தவிர்த்திருக்கலாம்னு எங்கள திட்டுனாருப்பா. அது பாவம் ஒண்டியா ஆக்கி சாப்ட்டுனு இருந்துச்சு. இதுக்கப்புறம் தனியா இருக்குறது கஷ்டம்ப்பா. நீ உன்கூடவே வெச்சி பாத்துக்க தம்பி. ரொம்ப பயந்து போய் கெடக்கு.''
 விமல் மிடறு விழுங்கினான்.
 "இந்தாப்பா... உங்கம்மா உங்கிட்ட ஏதோ பேசணும்னு சொல்லுது. குடுக்குறேன்.''
 ம்... கொடுங்க என்றானே தவிர அவனுக்கு பேச நா எழவில்லை. இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என்ற யோசனை அவன் மூளையைச் சென்று குடையத் தொடங்கியது.
 பார்வதி குரல் தெளிவின்றி குழறியபடி இப்படி பேசினாள்:
 "விமல்... நான் ஒன்னு சொல்றேன். கேப்பியா?'' என மூச்சுவாங்கியபடியே பேசினாள்.
 அங்கே விமலின் நெற்றியில் சுருக்கங்கள் சேர்ந்தது.
 "எ... என்னம்மா?''
"தயவுசெஞ்சு நீ அந்த ஒத்த பிள்ளையோட நிறுத்திக்காத. அடுத்து ஒரு பையனோ பெண்ணோ பொறக்கட்டும். வயசான காலத்துல ஒருத்தர் இல்லனா ஒருத்தருக்காவது உன்ன பாத்துக்கவோ பேசவோ நேரம் கிடைக்கும். என் நெலம உனக்கோ உன் பொண்டாட்டிக்கோ வர வேணாம்.''
 விமலின் கண்களிலிருந்து சரசரவென கண்ணீர் இறங்கி கன்னங்களை நனைத்தது.

பவித்ரா நந்தகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com