திரைக் கதிர்

சதுரங்க வேட்டை' வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்துள்ள படம் "தீரன் அதிகாரம் ஒன்று'.
திரைக் கதிர்

• சதுரங்க வேட்டை' வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்துள்ள படம் "தீரன் அதிகாரம் ஒன்று'. ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட், அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் மேக்கிங் குறித்து விமர்சன ரீதியாகவும் பரவலான பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை விளம்பரப்படுத்தும் போது, "குற்றப்பரம்பரை' என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. படத்திலும் திருட்டு தொழில் குறித்த வரலாற்றுப் பதிவில், "குற்றப்பரம்பரை' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சொல் உபயோகப்படுத்தப்பட்டதால் சர்ச்சை உருவாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்க கடிதத்தில் கூறப்பட்டிருப்பது... "இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளைச் சம்பவங்களை வைத்து மட்டுமே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக சித்திரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத் தொழிலாக கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பு இப்படத்தில் காட்டப்படவில்லை. இருப்பினும் மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாகக் கருதுவதால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதோடு, வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பு ஆகியவற்றிலிருந்து "குற்றப்பரம்பரை' என்ற சொல் நீக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

• சினிமாவில் ஒரே கூட்டணி அடுத்தடுத்த படங்களில் இணைந்து பணியாற்றுவது சகஜம். அந்த வரிசையில் அஜித் - சிவா கூட்டணி தொடர்ந்து 4-ஆவது முறையாக இணைந்து பணியாற்றவுள்ளது. "வீரம்', "வேதாளம்', "விவேகம்' படங்களை இயக்கிய சிவா 4-ஆவது முறையாக அஜித்துடன் மீண்டும் இணைகிறார். "விவேகம்' படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்துக்கு "விசுவாசம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் தரப்பிலிருந்து இரு வேறு மாதிரியான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. பலர் இதை வரவேற்று கருத்து தெரிவித்துள்ள நிலையில், சில ரசிகர்கள் வேறு ஓர் இயக்குநருடன் இணைந்து அஜித் பணியாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அஜித் - சிவா கூட்டணியில் ஒளிந்திருக்கும் மற்றொரு சென்டிமென்ட் ரகசியம், 4-ஆவது படத்தின் டைட்டிலும் "வி' என்ற எழுத்தில் தொடங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இதர நடிகர், நடிகைகளின் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது. 

• ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் "2.0'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படம், இந்திய அளவில் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் படம் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் 2.0 படத்தின் இசை வெளியீடு துபாயில் நடந்தது. படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி
வரும் நிலையில், இப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று பதிப்புகளுக்கான டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமத்தை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளது. அமேசன் ப்ரைம் வீடியோ நிறுவனத்தின் இயக்குநர் விஜய் சுப்பிரமணியம் இது குறித்து பேசும் போது... "இந்த மிக முக்கியமான ஒப்பந்தத்தின் மூலம், அமேசன் ப்ரைம் தனது பாலிவுட் மற்றும் மாநில மொழி திரைப்பட நூலகத்தை இன்னும் வலுவாக்கியுள்ளது. இந்த பிரம்மாண்ட படைப்பின் ஸ்ட்ரீமிங் உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி. ரஜினிகாந்த், அக்ஷய்குமார் இருவரும் அற்புதமான நடிகர்கள். நம்பமுடியாத ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர்கள். விரைவில் அந்த ரசிகர் பட்டாளத்துக்கு, ரஜினி நடிப்பில் என்றும் நினைவிலிருக்கும் படத்தின் 2-ஆம் பாகத்தை, அவர்களுக்கு பிடித்த கருவிகளில் ஸ்ட்ரீம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்'' என்றார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

• சமீப கால அரசியல் நிகழ்வுகளை முன்வைத்து பலரும் தொலைக்காட்சி கலந்துரையாடலில் விவாதித்து வருகிறார்கள். இதில் கரு.பழனியப்பனின் பேச்சு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் கரு.பழனியப்பன் இயக்கி அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் "புகழேந்தி எனும் நான்' எனும் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிந்துமாதவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். "பிக்பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே வரவேற்பு பெற்றிருப்பவர் பிந்துமாதவி. இப்படம் குறித்து பிந்துமாதவி பேசும் போது... "எனக்குப் பல பட வாய்ப்புகள் வந்தாலும், சிறந்த கதைகளையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நல்ல கதை மட்டுமல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம் தான் "புகழேந்தி எனும் நான்'. இது அரசியல் சார்ந்த படம் என்றாலும் என் கதாபாத்திரத்திமும் முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் கரு பழனியப்பன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அருள்நிதியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. டிசம்பரில் தொடங்கவுள்ள படப்பிடிப்புக்காக ஆவலாக காத்திருக்கிறேன்'' என்றார். யுகபாரதி பாடல்கள் எழுத, இமான் இசையக்கிறார். ஆக்சஸ் ஃ பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. 
- ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com