அந்திமத் தேடல்

செத்துப் போய் விடுவோமோ என முதல் முறையாக எனக்கு பயம் தொற்றிக் கொண்டது.
அந்திமத் தேடல்

செத்துப் போய் விடுவோமோ என முதல் முறையாக எனக்கு பயம் தொற்றிக் கொண்டது.
என்னுடைய வயது, அனுபவம், தேசாந்திரியாக ஊர் சுற்றியது, மழை, வெள்ளம், நெருப்பு...இப்படி இயற்கையை மூர்க்கமாக எதிர் கொண்ட போதெல்லாம் கூட, இறப்பு என்னைத் தழுவி விடுமோ என நான் எப்போதும் அஞ்சியதில்லை.
கேவலம், பசியால் செத்து விடுவோமோ...? பசியின் கோரத்தால் குடல் மேலெழுந்து, மூச்சே கழுத்தை நெறிக்கிறது. 
என்னுடைய வயசு என்ன இருக்கும்? தோற்றத்தைக் கொண்டு கணிப்பவர்கள் எனக்கு 70, 80 வயது இருக்கும் எனச் சொல்வார்கள். 
வயிறு என்று ஒன்று இருந்தால்தானே பசி எடுப்பதில் நியாயமிருக்கும்?! கடைசியாக எப்போது, என்ன சாப்பிட்டேன்? நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. 
உயிர் உடம்பில் இருக்க பிராண வாயு அவசியம் என்பவர்களின் ஆராய்ச்சி முடிவுகளை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நான் அவர்களுக்கு எதிரி. 
வயிற்றுக்குள் செல்லும் உணவுதான், உடம்பில் உயிரைக் கட்டி இழுத்து நிறுத்தியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவர்களின் பட்டியலில் இப்போது நானும் இணைந்தேன்.
புஷ்ஷ்... புஷ்ஷ்... புஷ்ஷ்... புஷ்ஷ்... 
என்னுடைய அந்திம காலச் சிந்தனைகளை சீர்குலைக்கும் விதமாக, என் பாதுகாவலன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். 
படுக்கையில் இருந்து எழுந்து அவனுடைய கழுத்தை வருடிக் கொடுத்தேன். பெயரெல்லாம் வைத்து கொஞ்சும் அளவுக்கு, அவன் என்னுடைய "செல்ல'ப் பிராணி இல்லை.
அவன் எனக்கு துணையா? நான் அவனுக்கு துணையா?
அந்த நாய்தான் எனக்கு நிச்சயமான துணையாக இதுவரை இருந்து வந்துள்ளது. வீடு, முகவரி, எதிர்காலம் பற்றிய கவலை என, என்னைப் போல, எதற்கும் அந்த நாய் ஏங்கியது கிடையாது. அவ்வளவு ஏன் அடுத்த வேளை சோற்றுக்கு கூட அந்த நாய் கவலைப்பட்டது கிடையாது.
நீங்களே சொல்லுங்கள் அந்த நாய்தானே எனக்கு துணையாக இருக்க தகுதி வாய்ந்ததாக இருக்க முடியும்.
காது ஓரங்களை சிலிர்க்க வைக்கும் குளிர்ந்த காற்று அள்ளி அப்பிய, அந்த இளங்காலைப் பொழுதிலும் கட்டாயம் வியர்க்க வேண்டும் என்பதற்காகவே ஓடிக் கொண்டிருக்கும் குண்டு மனிதர்கள் முன், வாலை ஆட்டத் தொடங்கினான் என் பாதுகாவலன்.
வயிற்றை நிரப்ப சீக்கிரமாகவே தயாராகி விடுவது அவன் வழக்கம். ஒன்றிரண்டு பேர் தூக்கி வீசும் பிஸ்கட்டுகளை லாகவமாக பிடித்து காலைப் பசியை போக்கிக் கொண்டான். 
எனக்கு?
அந்தச் சாலை இன்னும் கொஞ்ச நேரத்தில் பரபரப்பாகி விடும். இருபுறமும் வரிசையாக மரங்கள் அடர்ந்து நிழல் தருவது அந்தச் சாலையின் கவர்ச்சி என்று சொல்லலாம்.
""தாத்தா...எழுந்திருங்க.... பெருக்கி விடணும். இன்னிக்கு இவ்வளவு நேரம் இங்க இருக்கீங்க... காலங்காத்தாலயே கிளம்பிடுவீங்களே... கடைய திறக்க பசங்க வந்திடுவானுங்க. அதுக்குள்ள பெருக்கி தண்ணி தெளிக்கணும்''
"இந்தா எழுந்திருச்சிடுறேம்மா...''
எழுந்து நிற்க முயன்றேன். தடுமாறி மரத்தில் சாய்ந்து சரிந்தேன்.
அப்படியே கைத்தாங்கலாக பிடித்தவள், "என்னாச்சி தாத்தா...இந்தா தண்ணிய குடி"
அவள் பாட்டிலில் கொண்டு வந்திருந்த தண்ணீர், தொண்டைக் குழியில் இதமாக இறங்க, கொஞ்சம் தெம்பு வந்தது. இனிமேல் தூங்கும் போது, அருகில் குடிக்க தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டேன்.
ஒருவனை நாகரிகமாகக் காட்ட என்னென்னவெல்லாம் தேவையோ அவற்றை விற்பனை செய்யும் கடைகளுக்கு அந்தச் சாலையில் வறுமை இல்லை. உணவு விடுதிகளுக்கும் பஞ்சம் இல்லை.
கடை வீதியில் இருக்கும் மரங்களிலெல்லாம் பெரிய மரமொன்றில் கணக்கில்லாத வவ்வால்கள் வசிக்கும், அந்த மரத்தில் எண்ண முடிந்த ஒருவனாக நானும் வசித்தேன். என் கூடவே பெயரிடப்படாத என் பாதுகாவலனும்... 
நினைவு தெரிந்த நாள் என்று சொல்வார்களே அதுபோல, எப்போது நான் தனிமையின் ஆளுமையாக மாறினேனோ அப்போதிருந்தே யாரிடமும் யாசகம் கேட்டதில்லை. 
அதே சமயம் பசியோடு கள்ள உறவு வைத்துக் கொண்டதாகவும் சொல்ல மாட்டேன். ஆனால் இன்று... 
பூமியின் காலைக் கதிர்களை இல்லாமலாக்கி இருட்டுவது போல பசி, கண்களை அடைத்தது. 
பிச்சை கேட்டு கைகளை நீட்டா விட்டாலும் எப்படியாவது தினம் ஒன்றுக்கு ஒரு வேளை உணவாவது கிடைத்து விடும். சோர்வடையும் போதோ, கடைகள் அடைத்த பின்னாலோ வவ்வால்களோடு இணக்கமாக மரத்தடியில் தஞ்சம் புகுவேன். 
எழுந்து உடைகளை சரி செய்து கொண்டு கிளம்பினேன். கால் போன போக்கில் நடந்தேன். 
பசியெடுத்தால் மட்டும் சாப்பாடு என்பதால், உலகம் அவ்வளவு ஒன்றும் பாரம் கொண்டதாக எனக்கு இல்லை. 
வாகனங்கள் அதிகம் செல்லத் தொடங்கியிருக்கவில்லை. அப்போது சைக்கிளில் இருந்து விழுந்த பை, என் கவனத்தை நொடிப் பொழுதில் ஈர்த்தது. 
சாலையோர இட்லிக் கடை அமைந்த திசையிலிருந்து, அவசர அவசரமாக சாலையின் மறுமுனைக்கு சைக்கிளில் பறந்து விட்டான் அந்தச் சிறுவன். பொட்டலத்தை தவறவிட்டதை அவன் கவனிக்கவில்லை. 
நடையைத் தொடங்கிய நான், இன்று காலைப் பொழுதே உணவோடு விடிந்து விட்டதாக மகிழ்ச்சி அடைந்தேன். 
உயிரை நீட்டிக்க உணவு கிடைத்திருப்பதாக நினைத்துக் கொண்டேன். 
சாலையில் குறுக்கும் நெடுக்குமாக வந்து போன வாகனங்கள், சாலையில் விழுந்து கிடந்த பொட்டலத்தின் மீது இதுவரை ஏறவில்லை. 
என்னுடைய நடை, என்னை ஏமாற்றியது. பசியின் இயலாமை என்னை மெதுவாகவே நடக்க வைத்தது. 
ஏதாவது வாகனம் அந்தப் பொட்டலத்தின் மீது ஏறி, பாழாக்கி விடக்கூடாது என பரிதவிப்பு. பசி. பசியின் இடத்தில் இப்போது பரிதவிப்பு. 
சரேலென்று வந்த காக்கை அந்தப் பொதியை கொத்தத் தொடங்கியது. 
சாப்பாடுதான் அதில் இருக்கிறது என காக்கையின் செயலால், உறுதிப்படுத்திக் கொண்ட மனம் உற்சாகமடைந்தது.
கடைகளை திறக்கத் தொடங்கியிருந்தனர். ஐந்து, ஆறு கடைகள் தாண்டித்தான் நடந்திருப்பேன். ஆனால் தளர்ந்து தள்ளாடினேன். நான் தோற்றுப் போய் விடுவேன். என்னால் அந்த உணவுப் பொட்டலத்தை எடுக்க முடியாது. காக்கா என்னை வென்று விடும் என உள் மனது சொன்னது. 
சீராக கைகளைத் தட்டி எழுப்பிய ஓசை என்னை உற்சாகப்படுத்தியது. ஓட்டப் பந்தயத்தில் ஓடும் வீரர்களை ஊக்கப்படுத்துவது போல உணர்ந்தேன். நானும் காக்கையும் எதிர் எதிர் திசையில் பந்தயத்தில்... 
கைகளைத் தட்டி எழுப்பிய ஓசை ஒருபுறம் உற்சாகப்படுத்தினாலும், காகம் மீண்டும் பொட்டலத்துக்கு அருகில் வந்து, என்னைக் கலவரப்படுத்தியது. 
கார் ஒன்று வர காக்கை மீண்டும் பறந்து அருகிலுள்ள குட்டிச்சுவரில் அமர்ந்தது. மாறி, மாறி வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருந்ததால் காகத்தால் வெற்றி பெற முடியவில்லை. பொட்டலம் அருகில் வருவதும், குட்டிச்சுவருக்கு திரும்புவதுமாக அது முயற்சியைக் கைவிடவில்லை. ஆனால் நானோ மீண்டும் தரையில் சாய்ந்தேன். 
"என்ன பாய், கூட யாரும் உதவிக்கு இல்லையா... என்னாச்சி...'' 
"ஒண்ணுமில்லம்மா, நடக்க முடியல''
வாய் மட்டும் சரியாக பேசியது. அந்தப் பெண் என்னை தூக்கி கடை வாசலில் உட்கார வைத்தாள். 
என் முகத்தையும் கண்களையும் உற்றுப் பார்த்த, அந்த அஞ்சனம் தீட்டிய கண்கள் பார்வையை விலக்காமலே, ""பாய் நைட் சாப்பிடலயா...''அவளது ஒட்டிய வயிற்றைத் தடவிக் கொண்டே என் வயிற்றைப் பார்த்து கேட்டாள். 
கையிலிருந்த சில நாணயங்களை என் கையில் திணித்து விட்டு, "உடம்ப பார்த்துக்க பெரிசு'' ன்னு எழுந்து ஓடினாள்.
"ஏய் நில்லுங்கடி நானும் வந்திட்டேன்''
உடைந்த ஆண் குரல், அவர்கள் கைகளைத் தட்டிக் கொண்டு செல்லும் திசையை நோக்கி பார்க்க வைத்தது.
போராட்டம் நினைவுக்கு வந்தது. இந்நேரம் எப்படியும் காக்கா சாப்பாட்டு பொட்டலத்தை சின்னாபின்னமாக்கி இருக்கும் என்றே நினைத்தேன்.
அதுவும் போராடிக் கொண்டுதான் இருந்தது. பொட்டலத்துக்கு அருகில் வருவது, வாகனம் வந்தவுடன் குட்டிச்சுவருக்கு பறப்பதும்...இப்படியாக அதுவும் போட்டியிலிருந்து பின் வாங்கவில்லை. 
காக்காவுக்கு வயிறு நிரம்ப எத்தனையோ வழி உண்டு. ஆனால் எனக்கு? 
திரும்பவும் எழுந்து நடந்தேன். காக்காவும் பறந்து வந்தது. அருகில் சென்றேன். காகமும் அருகில்...மீண்டும் வாகனம் வர காக்காவுக்கு ஏமாற்றம். பறந்தது.
இரண்டு எட்டு தூரம். சாலை நடுவில் பொட்டலத்தை எடுக்க வந்த எனக்காக, சற்று தள்ளிச் சென்றன வாகனங்கள். காக்கா கோபத்தில் குட்டிச்சுவரிலிருந்து கத்தியது. சரேலென பறந்து வந்த காகம் எனக்கு முன்பாக பொட்டலம் அருகில் அமர்ந்து கொத்தத் தொடங்கியது.
அருகில் சென்று, சட்டென்று குனிந்து பொட்டலத்தை தூக்கினேன். காக்கா பயங்கரமாக கத்தியது. எதிரில் உள்ள குட்டிச்சுவருக்கு மீண்டும் பறந்து போய் அமர்ந்து, கொடூரமாக கத்தியது.
பொட்டலத்தை கையில் எடுத்த நான், சாலையின் எதிர் திசையில் இருந்த, அந்த காக்கா அமர்ந்திருந்த குட்டிச் சுவரை நோக்கி நடந்தேன். பொட்டலத்தில் இருந்த இரண்டே இரண்டு இட்லியை எடுத்து, அந்தக் குட்டிச்சுவரில் வைத்து விட்டு நகர்ந்தேன்.
மால்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com