ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூளையின் அறிவுத்திறன்!

மூளையின் பல தொழில்களைப் பற்றி இன்று வரையிலும் விவரமான விவரங்கள் தெரியவில்லை.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூளையின் அறிவுத்திறன்!

என் வயது 22. என் நண்பன் என்னை விட படிப்பில் அதிக புத்திசாலியாக இருக்கிறான். மூளையின் அறிவுத் திறனை நான் வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன். மூளையைப் பற்றிய விவரங்கள் - குறிப்புகள் ஏதேனும் அறியலாமா? வயதான காலத்தில் என் மூளை மழுங்கி விடுமோ? என்று பயப்படுகிறேன். என் வயது 22.
கார்த்திகேயன், சென்னை.
மூளையின் பல தொழில்களைப் பற்றி இன்று வரையிலும் விவரமான விவரங்கள் தெரியவில்லை. ஆனால் அது சதா சர்வ காலமும் உழைக்கிறது. தூக்க சமயத்திலும் கூட அது உழைக்கிறது. அதற்கு ஓய்வு தேவை இல்லை என்பதை மட்டும் விஞ்ஞானப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். அதிலும் யோகிகளைத் தவிர மற்றவர்கள் தன் தொழிலைத் தடுக்கவோ குறைக்கவோ முடியாதென்றும் தெரிவிக்கிறார்கள். அது எப்போதும் சர்வ ஜாக்கிரதையாக உடலைப் பாதுகாக்கிறது. உடலின் தேவைக்கு அதிகமான சர்க்கரை ரத்தத்திலிருக்கும் பொழுது பாங்கிரியாஸ் எனும் அக்னி ஆசயத்தைத் துரிதமாக வேலை செய்யச் சொல்லி அதிக இன்ஸுலினைத் தயார் செய்து அதிக சர்க்கரையை அழித்துவிடுகிறது. ஏதாவது ஒரு காரணத்தினால் போதுமான அளவிற்குச் சர்க்கரை உடலில் குறைந்தால் கல்லீரலுக்குச் செய்தி அனுப்பி அதனிடமிருக்கிற சர்க்கரையின் மூலப் பொருளை அதிகரிக்கச் செய்கிறது. உடலுக்கு எது தேவையோ அதனிடத்தில் விருப்பம் உண்டாக்குகிறது. எது தேவை இல்லையோ, எது இருந்தால் நோய்க்குக் காரணமாகிறதோ அதன் மேல் வெறுப்பை உண்டாக்குகிறது. 
மூளைக்கும் உடலுக்கும் இருவிதமான நரம்புத் தொடர்களால் சம்பந்தம் ஏற்படுகிறது. மூளையிலிருந்து பரவுவதற்கு ஆஜ்ஞாவஹ நாடிகள் என்று பெயர். உடலில் பல பாகங்களிலிருந்து மூளைக்குச் செல்லுகிறவற்றுக்கு (Sensory) சம்ஜ்ஞாவஹ நாடிகள் என்று பெயர். மூளை தலைமை அதிகாரியாகவும் அங்கிருந்தபடியே பல பிரிவுகளையுடைய நரம்புக் கூட்டங்கள் மூலம் ஜாக்கிரதை செய்யவோ, தடுக்கவோ, வேலையை அதிகரிக்கவோ முடியும் என்று சோதனைகளால் தெரிகிறது.
மூளையின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனி வேலைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக கைகளை இயக்க ஒரு பகுதியும், கால்களை இயக்க மற்றொரு பகுதியும், பார்வைக்கு ஒருபுறமும், பேச மற்றொரு புறமும் என பல இடங்கள் உள்ளன. எந்த இடம் பாதிக்கப்படுகிறதோ அந்த இடத்தினால் செய்யப்படும் காரியங்கள் கெட்டு விடுகின்றன. இதனால் மூளை அதிக வேலையினால் சோர்வடைந்துவிட்டது என்பதே கிடையாது. எப்பொழுதாவது மூளை வேலை செய்ய மறுத்தால், அதற்குக் காரணம் உடலில் வேறு பாகங்களில் தான் இருக்க வேண்டும். மேலும் கவனக்குறைவும், மற்ற எண்ணங்களிலிருந்து விடுபட முடியாமையுமேதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
உங்களை விட நண்பன் அதிக அறிவாளி என்பதால் அவருக்கு மூளை பெரிதாக இருக்க வேண்டுமென்பதில்லை. மூளையின் மேல் புறத்தில் CEREBRAL CORTEX எனும் பகுதியில் அனேக வளைவுகளிருக்கின்றன. இவ்வளைவுகளில் (CONVOLATIONS) கோடிக்கான கோசாணுக்கள் (BRAIN CELLS) இருக்கின்றன. ஒவ்வொரு கோசாணுவிற்கும் இரண்டிரண்டு படர் கொடிகள் (TENDRILS) இருக்கின்றன. இவற்றின் மூலமாக ஒன்றிலிருந்து மற்றொரு கோசாணுவிற்கு மின் ரசாயனச் (ELECTRO CHEMICAL) செய்திகள் பரவுகின்றன. அறிவு, ஞாபகம் முதலியவை இவ்வணுக்கள் மூலம், மின் ரசாயனச் செய்திகளால்தான் நடைபெறுகின்றன. 
உடலுக்கு வலு வேண்டுமானால் எப்படி தேகப் பயிற்சி தேவையோ அதேபோல்தான் அறிவு வளர்ச்சிக்குப் பயிற்சி தேவை. அறிவுக்கு எவ்வளவு பயிற்சி அளிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அது சிறப்பாகக் கூடும். பலம் பொருந்தியதாக மாறும். அறிவு வளர்ச்சிக்கு மூல காரணம் கவனித்தலும் சர்ச்சை செய்வதும் ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளுக்குமிருக்கும் சம்பந்தா சம்பந்தத்தை அறிந்து கொள்வதுமாகும். அறிவு வளர்ச்சி நேர்மையான சிந்தனையாலும் தர்க்க ரீதியாகப் பேசுவதாலும், மனதின் பண்பாட்டாலும் ஏற்படும். பசுவின் நெய்யிலுள்ள PHOSPHOILPIDS எனும் ஒரு வகைக் கொழுப்பு மூளையினுடைய அறிவுத்திறனுக்குப் பெரிதும் உதவுகிறது. விஷயங்களை அறிவதற்கும், அறிந்த பொருள்களைத் திரும்பவும் நினைவுபடுத்துவதற்கும், தெரிந்த விஷயங்களை மனத்திலேயே தேக்கி வைத்துக் கொள்வதற்கும் பசுவின் நெய்யுடன் காய்ச்சப்பட்ட பிராம்மீக்ருதம், சாரஸ்வதக்ருதம், கல்யணாக்ருதம் போன்ற மருந்துகளால் நீங்கள் பயனடையலாம். வயதான காலத்தில் ஞாபக சக்தியோ அறிவாற்றலோ குறையக் கூடும் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை. மூளைச்சுருக்கம், சர்க்கரை நோய் நிலைகளில் மட்டுமே வயோதிகத்தில் அறிவுத்திறன் மழுங்கலாம். 
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com