திரைக் கதிர்

ரஜினியின் 2.0, முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நேரடியாக எடுக்கப்பட்ட படம் என்பதால், கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக வேலை நடந்து வருகிறது.
திரைக் கதிர்

•ரஜினியின் 2.0, முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நேரடியாக எடுக்கப்பட்ட படம் என்பதால், கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக வேலை நடந்து வருகிறது. ஜனவரி வெளியீடாக இருந்த இப்படம் தற்போது ஏப்ரல் வெளியீடாக மாறியுள்ளதற்கு படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் ஏற்பட்ட தாமதமே காரணம். நடந்தது என்ன? அமெரிக்காவின் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு படத்தின் பிரதான காட்சிகள் கொடுக்கப்பட்டு வேலைகள் தொடங்கி நடந்து வந்தன. இதற்கான 90 சதவீத பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பணிகளை முடித்துக் கொடுக்கவில்லை. சுமார் 50 சதவீத பணிகளைத்தான் முடித்திருந்தார்கள். தற்போது அவர்களுக்கு அளித்த காட்சிகளை, 100 ஷாட்களாகப் பிரித்து சுமார் 10 நிறுவனங்களுக்கு அளித்து மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே படம் தாமதம் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பிலிருந்து, அமெரிக்க நிறுவனம் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. . பல்வேறு ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகள் செய்து, ஆஸ்கர் விருது வாங்கிய ஒரு நிறுவனம் இப்படி செய்யும் என நினைக்கவில்லை என்று 
தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

•ரஜினி, கமல், விஜய், விஷால், குஷ்பூ, நக்மா, கஸ்தூரி போன்ற நட்சத்திரங்கள் தமிழக அரசியலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அது போன்று சிரஞ்சீவி, பவன் கல்யாண், என்.டி.பாலகிருஷ்ணன், ரோஜா, வாணி விஸ்வநாத், ஜெயசுதா போன்றவர்கள் ஆந்திரம் மற்றும் தெலங்கானா அரசியலில் ஆர்வமாக உள்ளனர். அந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர் சமந்தா. பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது அறக்கட்டளை மூலம் செய்து வரும் சமந்தா, தெலங்கானா அரசின் திட்டங்களில் பங்கெடுத்தும் வருகிறார். அவரது ஆர்வத்தை அம்மாநில அரசு நற்பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறது. கைத்தறி ஆடை தூதராக சமந்தாவை அறிவித்திருக்கிறது தெலங்கானா அரசு. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் ஹைதராபாத்தில் நடந்த தொழில் முனைவோர் மாநாட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கு பாரம்பரிய கைத்தறி ஆடைகளைப் பரிசளித்தார் சமந்தா. தற்போது அரசின் சார்பில் தொடக்க கல்வி குறித்த பிரசாரத்தில் இறங்கியுள்ளார். அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டும் தலைமை ஆசிரியைக்கு பிரபலமான கோல்லா பஹமா கைத்தறி சேலையைப் பரிசளித்து வருகிறார். மேலும் கடமை தவறாத ஆசிரியைகளுக்கும் சேலையை பரிசளிக்க உள்ளார். அரசு தரப்பில் ரொக்க பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து அவர் பேசும் போது, "அரசியலில் ஆர்வம் இல்லை. ஆனால் அதற்கான நேரம் வரும் போது முடிவு செய்வேன்'' என்று தெரிவித்திருந்தார். ஆனால், தொடர்ச்சியாக அவர் செய்து வரும் பணிகள் அவரது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன என கூறப்படுகிறது. 

•ரஜினிகாந்தின் பிறந்த நாளை ( 12-ஆம் தேதி) யொட்டி "காலா' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பாக படத்தை தயாரித்து வரும் தனுஷ் தனது சுட்டுரைப் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார். 
இதற்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இந்த போஸ்டரில் "காலா' படத்தின் வெளியீடு குறித்து எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. 2.0 ஏப்ரலில் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், "காலா' படத்தின் வெளியீடு எப்போது என்பதும் தெரியாத நிலை உருவாகி உள்ளது. ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நாணா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், "வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இப்படத்துக்கு கபிலன், உமாதேவி பாடல்களை எழுதுகிறார்கள். 

•தங்கர்பச்சானின் இயக்கத்தில் ஐங்கரன் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள படம் "களவாடிய பொழுதுகள்'. பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்தாலும், பல்வேறு பிரச்சினைகளால் வெளியாகாமல் இருந்தது. கடந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், கடைசிக் கட்டத்தில் அந்த முடிவிலிருந்து பின் வாங்கியது தயாரிப்பு நிறுவனம். தற்போது அனைத்து பிரச்னைகளும் முடிக்கப்பட்டு, படம் இந்த மாத கடைசியில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளார் தங்கர்பச்சான். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ், கருப்பு ராஜா, சத்தியன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒரு பாடலை அறிவுமதியும், மற்ற நான்கு பாடல்களை வைரமுத்துவும் எழுதியிருக்கிறார்கள். பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். ""காதலிக்க போகிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம். காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்த கால நினைவூட்டலாக இப்படத்தை படைத்திருக்கிறேன்'' என்று இப்படம் குறித்து தெரிவித்துள்ளார் தங்கர்பச்சான். 
- ஜி.அசோக்

• ஆரம்ப கால கட்டங்களில் இருந்த அஜித்தின் தோற்றத்துக்கும், தற்போது உள்ள அஜித்தின் தோற்றத்துக்கும் மிகுந்த வித்தியாசங்கள் உண்டு. மெலிந்த உடல், கருப்பு நிற தலைமுடி என இளமை ததும்பும் கதாநாயகனாக நடித்து வந்த அஜித், "மங்காத்தா' படத்தில் பெப்பர் சால்ட் எனப்படும் வெள்ளை நிற தலைமுடிக்கு மாறினார். முதலில் அது விமர்சிக்கப்பட்டாலும், மங்காத்தாவின் பெரும் வெற்றியால் ரசிகர்கள் அந்த பாணியை ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அதே உருவத்தில் திரையில் தோன்றவே அஜித் விரும்பினார். "பில்லா 2', "ஆரம்பம்', "வீரம்', "என்னை அறிந்தால்', "வேதாளம்', கடைசியாக திரைக்கு வந்த "விவேகம்' படம் வரை பெப்பர் சால்ட் தோற்றத்திலேயே நடித்தார். அவரது இந்த பாணியை பிற நடிகர்களும் பின்பற்ற தொடங்கினார்கள். கடந்த 7 வருடங்களாக பெப்பர் சால்ட் தோற்றத்தில் நடித்து வந்த அஜித், தற்போது இள வயது தோற்றத்துக்கு மாறியுள்ளார். அடுத்ததாக நடிக்கவுள்ள "விசுவாசம்' படத்தில் பெப்பர் சால்ட் தோற்றத்துக்கு குட்பை சொல்லி விட்டு கருப்பு மை அடித்து இள வட்ட கதாநாயகனாக மீண்டும் மாறுகிறார் அஜித். "விவேகம்' படத்துக்காக உடல் எடையை சிக்ஸ் பேக் தோற்றத்துக்கு மாற்றியவர், புதிய படத்துக்காக உடல் எடையை குறைத்து மெலிந்த உடல் தோற்றத்துக்கு மாறுகிறார். இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் அஜித் மெலிந்த உடல், கருப்பு நிற தலைமுடி தோற்றத்தில் உள்ளார். சுமார் 12 முதல் 15 கிலோ வரை உடல் எடையை அஜித் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com