சாகித்ய அகாதெமியும் சர்ச்சைகளும்!

இலக்கியத்திற்கு இந்திய அரசாங்கத்தின் வழியாகக் கொடுக்கப்படும் சாகித்ய அகாதெமி விருதுதான் மிக உயரியது. அது ஒவ்வோர் ஆண்டும் இருபத்து நான்கு இந்திய மொழி எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
சாகித்ய அகாதெமியும் சர்ச்சைகளும்!

இலக்கியத்திற்கு இந்திய அரசாங்கத்தின் வழியாகக் கொடுக்கப்படும் சாகித்ய அகாதெமி விருதுதான் மிக உயரியது. அது ஒவ்வோர் ஆண்டும் இருபத்து நான்கு இந்திய மொழி எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் பணமும், ஒரு பட்டயமும் கொண்டது. அது எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் புத்தங்களை அனுப்பிப் பெறுவதில்லை. சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் பரிந்துரைகள் வழியாக பல அடுக்குகளில் தேர்ந்தெடுக்கிறது. இறுதியாக மூன்று பேர் கொண்ட குழு பெரும்பான்மை அடிப்படையில் விருதுக்குரிய படைப்பைத் தேர்ந்தெடுக்கிறது. சாகித்ய அகாதெமி தலைமையில் கூடும் செயற்குழுவின் ஆலோசனைக்குப் பிறகு செயலாளரால் விருது அறிவிக்கப்படுகிறது.
சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டதும் பல மொழிகளிலும் எழுதும் எழுத்தாளர்கள், விமர்சகர்கள் கடுமையான கருத்துகளை முன்வைக்கிறார்கள். அதில் முதன்மையானது இவருக்கு ஏன் விருது கொடுக்கப்படுகிறது; இவர் இரண்டாம் தரமான, மூன்றாம் தரமான எழுத்தாளர்; இவருக்கு விருது கொடுத்தது தவறு என்று சொல்லி விட்டு, முதல் தரமாக எழுதும் இவர்களுக்கு ஏன் விருது கொடுக்கப்படவில்லை என்று பட்டியல் வெளியிடப்படுகிறது. 
சாகித்ய அகாதெமி தன்னாட்சி பெற்றது என்றாலும் அரசுக்குக் கட்டுப்பட்டது. எனவே நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து 1954-ஆம் ஆண்டில் இருந்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்திய அரசு பதினான்கு மொழிகளை தேசிய மொழிகள் என அங்கீகரித்து இருந்தது. எனவே பதினான்கு மொழிகளுக்கும் விருது வழங்குவது என்றுதான் இருந்தது. ஆனால் பன்னிரண்டு மொழி எழுத்தாளர்கள் தான் விருதுக்குரியவர்கள் என்று ஆலோசனைக் குழு பரிந்துரை செய்தது. எனவே பன்னிரண்டு எழுத்தாளர்கள் விருது பெற்றார்கள். 
இந்திய அரசாங்கம், இந்திய மொழிகள் என்று இருபத்திரண்டு மொழிகளை அங்கீகாரம் செய்து இருக்கிறது. ஆனால் சாகித்ய அகாதெமி இருபத்து நான்கு மொழிகளுக்கு விருது வழங்குகிறது. அதாவது இந்திய அரசு, இந்திய மொழிகள் என்று அங்கீகரிக்காத ஆங்கிலம், ராஜஸ்தானி மொழிகளையும் சேர்த்துக் கொண்டு இருக்கிறது.
சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, வங்காளம் ஆகிய பழைய, அதிகமான மக்கள் பேசும், எழுதும் மொழிகளோடு சமமாக சந்தாலி, மைதிலி, டோக்கிரி, மணிப்புரி, டோடோ- என்று சில பழங்குடி மக்கள் பேசும் மொழிகளில் எழுதக் கூடியவர்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது. 
இந்தியா சுதந்திரம் அடைந்து, மக்களாட்சி ஏற்பட்டது. கலைஞர்கள், சங்கீத வித்வான்கள், ஓவியர்கள், சிற்பிகள், இலக்கியவாதிகளை ஆதரித்து கெüரவப்
படுத்திக் கொண்டிருந்த சிற்றரசர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். ஆனால் கலைஞர்கள் இருக்கிறார்கள். படைப்பு எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். கலையும், கலைஞர்களும் இல்லாமல் ஒரு நாடு என்பது இல்லை. ஏனெனில் எல்லா மனிதர்களும் அடிப்படையில் கலைஞர்கள்தாம். அவர்களில் சிலர் கலைக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். 
கலை என்பது தேசத்தின் பொதுச் சொத்து. நாட்டின் அடையாளம். எனவே கலைஞர்களை அங்கீகாரம் செய்ய வேண்டும், இளைஞர்கள், பெண்கள், கலை, இசை, நாட்டியத்தின் மீது ஈடுபாடு கொண்டு அவற்றின் வளர்ச்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு ஏற்ற மாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அபுல் கலாம் ஆஸாத் விரும்பினார். பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு பெரும் ஆதரவு நல்கினார். 
1954-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி, சங்கீத நாடக அகாதெமி, லலித் கலா அகாதெமி ஆகிய மூன்று அமைப்புகள் உருவாக்கப்பட்டன. புதுதில்லியின் மத்திய பகுதியில் அவற்றுக்காகப் புதுக் கட்டடம் கட்டப்பட்டது. ரவீந்திர பவன் என்று பெயர் சூட்டப்பட்ட வளாகத்தில் இருந்து அகாதெமிகள் தனித்தனியாகச் செயல்பட தொடங்கின. 
இந்திய பிரதம மந்திரியாக இருந்த ஜவாஹர்லால் நேரு விரும்பி சாகித்ய அகாதெமியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பிரதமர் பதவி அதற்கு இடையூறாக இருக்காது என்ற அவர், ""எனக்கு அகாதெமியின் தலைவராக இருப்பதற்குத் தகுதி இருக்கிறதா என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் சாகித்ய அகாதெமி தலைவராக இருப்பதற்குப் பெருமைப்படுகிறேன். தலைசிறந்த எழுத்தாளர்களோடு சேர்ந்து இருப்பதை விரும்புகிறேன்'' என்றார். அதோடு சாகித்ய அகாதெமி தன் நூல்களுக்குப் பரிசு கொடுக்கக் கூடாது. அவற்றை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கும் காரியத்திலும் ஈடுபடக்கூடாது என்றார். 
1954-ஆம் ஆண்டில் புதுதில்லியில் சாகித்ய அகாதெமி வருது வழங்கும் விழா, பிரதமரும், அகாதெமியின் தலைவருமான ஜவாஹர்லால் நேரு தலைமையில் நடைபெற்றது. முதல் பரிசுத் தொகை ரூபாய் ஐயாயிரம். அதோடு ஒரு தாமிரப் பத்திரமும் வழங்கப்பட்டது. தமிழ்மொழிக்காக விருது பெற்றவர் ரா.பி.
சேதுப்பிள்ளை. நூல் "தமிழின்பம்'. அது பற்றி - அதன் இலக்கியத் தரம் பற்றி நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. 
சாகித்ய அகாதெமியின் செயல்பாட்டை எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மொழி வல்லுநர்கள் கொண்ட பொதுக்குழுவும், செயற்குழுவும் கண்காணிக்கிறது. தலைவர், துணைத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதுபற்றியும் ஒவ்வொரு மொழி பேசும் எழுத்தாளர்கள் இடையில் கடுமையான கருத்துகள் இருக்கின்றன. அதில் சீர்திருத்தங்கள் வேண்டுமென கோரி வருகிறார்கள். தலைவர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் இரண்டாம் முறையாகப் பதவியில் இருக்க முடியாது. பதவிக்காலம் ஐந்தாண்டுகள். 
சாகித்ய அகாதெமியின் செயல்பாட்டைப் பரவலாக்க நாட்டின் முக்கிய நகரங்களான மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் மண்டல அலுவலகங்களை அமைத்தார்கள். சென்னை மண்டலம் தமிழ் மொழியோடு, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கான இலக்கிய மேம்பாட்டிற்குப் பாடுபடுவதாக அமைந்தது. முப்பது ஆண்டுகள் சென்னையில் செயல்பட்டு வந்த சாகித்ய அகாதெமி தென் மண்டல அலுவலகம், அரசியல் காரணங்களால் பெங்களூருக்குத் தூக்கிக் கொண்டு செல்லப்பட்டது. தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னையில் கிளை அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 
சாகித்ய அகாதெமி செயல்பாடுகளிலேயே மிகவும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது அதன் நூல் வெளியீடுதான். அது முப்பது மொழிகளில் - தினம் ஒரு நூல் என்று வெளியிட்டு வருகிறது. அகாதெமி விருது பெற்ற நூல்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுகிறது. அதுபோல பிற மொழிகளில் இருக்கும் மகத்தான படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிட்டு, இலக்கியத் தரமான நூல்கள் ஒவ்வொரு மொழியிலும் எழுதப்பட்டிருப்பதைப் பலரும் அறிய வைக்கிறது. இலக்கியக் கலைக்களஞ்சியங்கள், எழுத்தாளர் யார்? எவர்? இந்திய இலக்கியச் சிற்பிகள், சிறுகதை, கவிதைத் தொகுப்புகளை வெளியிடுகிறது.
சிறுகதை, கவிதைத் தொகுப்புகள் வெளிவந்ததும், இவர் படைப்பு இல்லை; அவரைச் சேர்த்தது தவறு; புத்தகத்தை வெளியிடவே கூடாது என்று சில எழுத்தாளர்கள் ஒன்று கூடி கூட்டம் போட்டு, தீர்மானம் நிறைவேற்றி சாகித்ய அகாதெமிக்கு அனுப்பி வைக்கிறார்கள். 
நாட்டில் எழுத்தாளர்கள் கொல்லப்படும் போதும், எழுத்துச் சுதந்திரம் நசுக்கப்படும் போதும் சாகித்ய அகாதெமி போராட முன்வர வேண்டும் என்றும் சில எழுத்தாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அதற்காகத் தான் பெற்ற விருதைத் திருப்பிக் கொடுக்கிறார்கள். ஆனால் அகாதெமி விருதைத் திருப்பி வாங்கிக் கொள்வதில்லை. 
மொழிகளுக்கான மொழிபெயர்ப்பிலும் சமச்சீர் இல்லை. விருது பெற்ற படைப்புகள் நான்கைந்து மொழிகளில் கூட மொழிபெயர்க்கப்படுவதில்லை. அதனால் எங்கள் மொழியில் என்ன மாதிரியான படைப்புகள் வெளியாகின்றன என்று மற்ற மொழி பேசுவோர் அறிய முடியாமல் போய் விடுகிறது. எதற்காக சாகித்ய அகாதெமி அமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தில் இருபது சதவீதம் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. சில மொழிகள் வழங்கும் மொழிகளாகவும், பல மொழிகள் வாங்கும் மொழிகளாகவும் இருக்கின்றன. 
சாகித்ய அகாதெமியில் வழங்கும் இடத்தில் முதலில் இருப்பது வங்காளம். அது பங்கிம் சந்திர சாட்டர்ஜி தொடங்கி, தாகூர் வழியாகப் பல நவீன படைப்புகள் எல்லா இந்திய மொழிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. அதில் வங்காளிகளுக்குப் பெருமை. தங்கள் மொழி படைப்புகள் வெளியில் போவதை விரும்பும் வங்காளிகள், இதர இந்திய மொழிகளில் இருந்து படைப்புகள் தங்கள் மொழிக்கு வருவதை விரும்புவதில்லை. வங்காளம் மொழிதான் நவீன இலக்கியத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்த மொழி என்று சொல்லிக் கொள்கிறார்கள். மொழிபெயர்க்கப்படும் படைப்புகளையும் அவர்கள் படிப்பது இல்லை. அதோடு மற்ற இந்திய மொழிகளில் இருந்து வங்காளத்திற்கு மொழிபெயர்க்கத் தகுதியானவர்களும் இல்லை. வங்காளிகள் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதில்லை என்று சாகித்ய அகாதெமியில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது. 
தமிழ் மொழியில் இருந்து ஒரே ஒரு நாவல் தான் வங்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அது இந்திரா பார்த்தசாரதியின் "குருதிப் புனல்'. அகாதெமி விருது பெற்ற நாவல் இது. மொழிபெயர்ப்பாளர் தமிழரான சு.கிருஷ்ணமூர்த்தி. 
சாகித்ய அகாதெமி இந்திய எழுத்தாளர்கள் பற்றி ஆவணப் படங்கள் எடுத்து வருகிறது. அது ஒரு பதிவு தான். எழுத்தாளரின் உருவமும், பேச்சும் பதிவாகிறது. உயிரோடு இருக்கிறவர்களுக்கான வாய்ப்பு என்றாலும் இல்லாமல் போனவர்களையும் ஆவணப்படுத்துகிறது. அதில் தமிழில் மகாகவி பாரதியார், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஜெயகாந்தன் ஆகியோர்க்கு ஆவணப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 
சாகித்ய அகாதெமியின் "எழுத்தாளர்கள் சந்திப்பு' - ஒரு சிறப்பான நிகழ்ச்சிதான். அதில் எழுத்தாளர் மட்டும் தான் மேடையில் ஏறித் தன் எழுத்து பற்றியும், எழுதும் விதம் பற்றியும் - சமூகம் தன்னை நடத்தும் விதம் குறித்தும் பேசுகிறார். அதனை எழுத்தாளர்கள் பேருரை என்றே குறிப்பிட வேண்டும். எழுத்தாளர் பற்றி ஆவணப்படுத்தும் விதமாக சிறுபிரசுரம் ஒன்றும் வழங்கப்படுகிறது. 
தமிழ்நாடு அரசுக்கும், சாகித்ய அகாதெமிக்கும் பல ஆண்டுகளாகவே ஒத்துப் போகவில்லை. ரவீந்திரநாத் தாகூர் நூற்றாண்டு விழாவையொட்டி மத்திய அரசு சாகித்ய அகாதெமி மூலமாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கலையரங்கம் கட்ட நிதி கொடுத்தது. நிலம் அரசு தர வேண்டும். தமிழ்நாட்டில் அரங்கம் கட்டும் பணி தொடங்கியது. தேர்தல் வந்தது. ஆட்சி மாறியது. தாகூர் கலையரங்கம் கட்டும் வேலையைக் கிடப்பில் போட்டது. அது ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பாகி விட்டது. பல மாநிலங்கள் தங்கள் மொழிக்கென்று சாகித்ய அகாதெமி அமைத்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் சாகித்ய அகாதெமி அமைக்கப்படவே இல்லை. எனவே தமிழ்நாட்டில் இலக்கியம் சார்ந்து, எழுத்தாளர்கள் சார்ந்து ஒரு பணியும் நடைபெறுவதில்லை. 
ராஜாஜி, ம.பொ.சிவஞானம் எழுத்துக்களை அங்கீகரித்து விருது வழங்கியுள்ள சாகித்ய அகாதெமி அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதிக்கு விருது வழங்கவில்லை என்ற கோபம் இருக்கிறது. அதோடு தொகுப்புகளிலும் சேர்ப்பதில்லை. எங்களை எழுத்தாளர்களாக மதிக்காத சாகித்ய அகாதெமியை நாங்கள் மதிக்க மாட்டோம் என்பதுதான் கொள்கையாக இருக்கிறது. இது புரிதலில் ஏற்பட்ட குறைபாடு. 
புதுதில்லியில் உள்ள சாகித்ய அகாதெமி தலைவர், செயலாளர் தலையீட்டில் பரிசுகள், தொகுப்புகள் பற்றிய காரியங்கள் நடைபெறுவதில்லை. ஒவ்வொரு மொழிக்கும் ஆலோசனைக் குழு இருக்கிறது. அதில் பேராசிரியர்கள், அரசு சார்பான உறுப்பினர்கள், சங்கங்களின் பிரதிநிதிகள் என்று ஒருவர் இடம் பெறுகிறார்கள். அவர்கள் தான் எல்லா விதமான செயல்பாடுகளுக்கும் காரணம். அவர்கள் தங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள், நண்பர்கள் என்று விருதைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். சில நேரங்களில் அசலான எழுத்தாளர்களும் விருது பெற்று விடுகிறார்கள். அதுவே சாகித்ய அகாதெமி பெயரைக் காப்பாற்றுகிறது. 
சாகித்ய அகாதெமி பற்றி எத்தனை தான் குறைகள் சொன்னாலும்,அறுபதாண்டுகளுக்கு மேலாக இலக்கியம் என்கிற ஒற்றை இழையைப் பற்றிக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்பதை அதன் சிறப்பாகச் சொல்ல வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com