ஒரு நாடகம் நடக்குது... ஏலேலங் கிளியே...!

"அமெரிக்காவுல ரெட்டை கோபுரம் எரியுதாமா?... அதே வெச்சு நாடகம் போடுங்க. நான் பணம் தர்றேன்''
ஒரு நாடகம் நடக்குது... ஏலேலங் கிளியே...!

சோதிடக் கதை -2

"அமெரிக்காவுல ரெட்டை கோபுரம் எரியுதாமா?... அதே வெச்சு நாடகம் போடுங்க. நான் பணம் தர்றேன்''
சுப்பையா நீட்டிய நாடக நோட்டீஸ் பழுப்பு நீலக் கலரில் மின்னிக் கொண்டிருந்தது. "சமூகக் கொடுமைகளை வேரறுக்க நாடகம் போடுகிறோம். நிதி உதவி அள்ளித் தாரீர் பட்டத்தரசி அம்மன் அருள் உங்களுக்குக் கிடைக்கும்' என்ற வரிகள் பிரசுரத்தில் மினுங்கின. கையில் தடியுடன் ஒருவரின் உருவம் பிரதிபலித்தது.
"ஆமா அதையும் போடுவோம். அதை அப்புறம் போடுவோம்''
"இப்போ எரியுது. அதை இப்போ நாடகமா போட்டாத் தானே உடனே புரியும்''
"ஒரு நாடகப் படைப்பு எப்போ வரும், எப்படி வருங்கறது படைப்பாளியோட அனுபவத்தைப் பொறுத்தது. அமெரிக்காவோட ரெட்டை கோபுரம் எரியிற பிரச்னை மாதிரி வேற நெறைய எரியுற பிரச்னைங்க இருக்கு. அதையெல்லாம் போடுவோம்''
"அதெப் போடுங்கப்பா. அத மாதிரி எதையாச்சும் கரண்ட்டா போடுங்கப்பா. எப்ப பார்த்தாலும் பண்ணையாரு, பண்ணையாளு, பண்ணையாரு மகளை பண்ணையாளு காதலிக்கறது... இதையே நாடகமா போட்டுகிட்டிருக்கீங்க''
"திருவிழாவாச்சே''
"திருவிழான்னா என்னா பண்ணையாளு, கூலி ஆளப்பத்திதான் போடணுமா? வேற போட முடியாதா?''
"வருசத்துக்கு ஒரு தடவை நாடகம் நடிக்க வர்றவங்க, இதே போதுங்கறாங்க. பண்ணைக் களத்து மேட்டிலிருந்து வேலையை முடிச்சிட்டு நாடக ரிகர்சலுக்கு வர்றவங்க, சரியா பண்ணீர்ராங்க. நாடகம் நாடகம்னு சொல்லீட்டு பொழுதைக் கழிக்கறவங்க ஒழுங்கா ரிகர்சல் பண்றதில்லே''
"அப்போ அந்த ஜாதிக்காரன் நல்லா பண்றான்... இன்னொருத்தன் நல்லா பண்றதில்லேன்னு சொல்றியா? இதிலே ஜாதியை இழுக்கறியா?''
ஆரம்ப சுகாதார நிலைய கட்டட முகப்பிலிருந்து எழுந்தபடி சோமன் கேட்டான். அழுக்கிலிருந்தது கட்டடம். செடிகளின் புதர் அதன் போர்டை மறைத்திருந்தது.
"ஜாதியைப் பார்க்கறதுன்னா... பார்க்கலாம்''
"சரி... சரி... ஞாயம் எதுக்கு? கெடந்துட்டு போகுது''
"நாடகம் டொனேஷனாலே... என் பேர போட்டு ரசீது குடுத்திட்டுப் போ. காசை அப்புறம் வாங்கிக்க என்ன.. கோபிநாத் சிங்கப்பூர் வாழ்க்கை முடிஞ்சிப் போச்சா''
"இல்லீங்க மறுபடியும் போகணும். எங்கியோ தூரமா இருக்கறேன்னு பொண்ணு குடுக்க மாட்டீங்கறாங்க. வெளிநாட்டு காசை காமிச்சாலும் பொண்ணு கிடைக்க மாட்டேங்குது. அதுதா வந்துட்டன்''
"கோபிநாத் இந்த வெளிநாட்டு காசு டயலாக்கை விட்ரு. அதுக்கு மயங்கறவங்க கொஞ்ச பேருதான் இருப்பாங்க. அதனாலே காத்திருந்துதான் ஆகணும்.''
"பொண்டாட்டிக்காக காத்திட்டுதான் இருக்க வேண்டியிருக்கு''
"இந்த நாடகத்துக்கு வர்ற ஹீரோயின் பொம்பளையை மடக்கி போட்டுக்கோ''
"அதெல்லாம் பெரிய காரியமில்லே. நிரந்தரம்னு ஒண்ணு வேணுமில்லே''
மேலத் தெருவில் கிணறு வெட்டும்போது சிறிய கல் தலையில் பட்டு கோபிநாத்தின் அப்பா இறந்து விட்டார். அவனின் அம்மா உறவினர்களை வைத்துக் கொண்டு பல இடங்களில் பெண் பார்த்தார். எதுவும் கிடைக்கவில்லை. "நீயே வந்து பார்த்து கட்டிக்கோ' என்று ஓய்ந்து விட்டாள். அதன் பின் கோபிநாத் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த ரிக் பாகங்கள் செய்யும் கம்பெனி வேலையை விட்டு விட்டு ஊருக்கு வந்து விட்டான். ஏழு மாதங்கள் ஓடிவிட்டன. இன்னும் பெண் கிடைக்கவில்லை. பட்டத்தரசியம்மன் திருவிழாவுக்குப் பின்னால் கோவையில் ஏதாவது ஒர்க்ஷாப்பில் சேர்ந்து விட எண்ணியிருந்தான்.
"கோபிநாத் உங்களுக்காக போடற கணக்கு தப்பாதே''
"அப்படீன்னா?''
"இல்லே ஜாதகம் கணிக்கிறதுலே, அந்தக் கணக்குலே புலியா இருப்பாங்க அவங்க. அந்த கணக்குப்புலி குணம் வாழ்க்கை முழுக்க பிரயோஜனமாகும். நீயென்னவோ அந்த கணக்குலே தப்பி போயிட்டே. ஆனா படிக்கிற காலத்துல நீ வந்து கணக்குலே புலிதான்''
"யாரோடு எதுலே தோப்பாங்கன்னு சொல்ல முடியாது''
சுப்பையா ரசீதை கிழித்துக் கொடுத்தான். சிக்கலாகக் கிழிந்திருந்தது. அதன் கோணல் வாய் தாறுமாறாய் இருப்பவனைக் காட்டியது.
"நம்மூர்லே காலம் காலமா இந்த மாதிரி நாடகமெல்லாம் நடக்குது. ஆனாலும் எவனும் சினிமா பக்கமெல்லாம் போயி பெரிய ஆளா ஆகறதில்லே''
"சுப்பையா நீயே ட்ரை பண்ணு''
"ஆமா... நான் ட்ரை பண்ணப் போறேன். திருவிழா நோம்பு முடிஞ்ச பின்னாலே ஒரு வருஷத்துக்கு இந்த நாடகம் பண்ற வேலையை மட்டும் பண்ணப் போறேன். அதுக்கப்புறம் அந்த அனுபவத்தை வெச்சுகிட்டு சினிமாவுக்கு போகப் போறேன்''
"சபாஷ் சுப்பையா.. பாயும் புலி பதுங்கும் நாகம்னு புதுப்பட போஸ்டர் ஞாபகம் வருது.''
"அது டப்பிங் படம். நாங்க ஒரிஜினலா நிப்போம். சரியா கோபிநாத்''
"இந்த வெளையாட்லேயெல்லாம் எனக்கு ஆர்வமில்லே சுப்பையா. கல்யாணம் பண்ணனும். திரும்ப சிங்கப்பூர் போகணும். ரிக் கம்பனி வேலை கைவுட்டுட்டுப் போயிரக்கூடாது''
"முடியலேன்னா?''
"முடியலேன்னா இந்த ஜாதி, ஜாதகம் இதையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு அதெல்லாம் இல்லாத எவளையாச்சும் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான்.''
"அவ எவ?''
"எவளாவோ இருப்பா. உள்ளுர்க் காரியா இருக்கலாம். சிங்கப்பூர்லே இருக்கற சீனாக்காரியாக் கூட இருக்கலாம்''
"அப்ப அந்த முடிவுக்கு வந்துட்டே''
"வேற வழியில்லாமல்தான் அந்த முடிவுக்கு வர வேண்டியிருக்கு''
திருமணம் என்று வந்தால் பத்துப் பொருத்தம் தேவை என்று அவன் அலைந்ததில் பல இடங்களில் ஆறுக்கு மேல் தேறவில்லை. அமலா யோகம் பத்தாம் இடத்தில் இருந்தால் நல்ல தொழில் வாய்க்கும் என்று சொல்லப்பட்டாலும் அதுவும் நிரந்தரமாய் கிடைக்கவில்லை என்பதில் அவனுக்கும் வருத்தம் இருக்கும். அவனின் சித்தி மகன் எம்பிஏ படித்திருந்தான். பல கோடிக்குச் சொத்து இருந்தது. அவன் பார்த்த பெண்ணும் பி.இ., படித்திருந்தாள். அந்தப் பெண்ணிற்கும் சொத்து இருந்தது. ஆனால் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. அந்த சாதகங்களை பலர் நிராகரித்தார்கள். சித்திக்கு அந்த இடத்தைக் கைவிட விருப்பமில்லை. பிறகு பெரியம்மன் கோவிலில் சீட்டு போட்டு பார்த்து சிவப்புப் பூ கேட்டார்கள். அதுவே கிடைத்ததென்று திருமணம் நடத்திவிட்டார்கள். சித்தி எப்போதும் பெரியம்மன் கோவிலில் சீட்டு பார்க்கிற வழக்கம் உடையவள். நோய்த்தன்மை விலக வெள்ளைப் பூ கேட்பாள். ஒருதரம் உடல்நிலை சம்பந்தமாய் சிவப்புப் பூ கேட்டபோது அது கிடைத்திருந்தாலும் சிவப்புப் பூவில் கொஞ்சம் வெள்ளைப் பொட்டு இருந்ததைப் பார்த்துக் கலக்கமாகிவிட்டாள். அது அவள் உடம்பிற்கு வரும் நோயைச் சொன்னதாக நினைத்தாள். அப்படித்தான் அவளின் கர்ப்பப் பை கோளாறு வந்து, அதை நீக்கும்படி ஆனது. அதை பெரியம்மன் கோவிலில் சீட்டு சொன்னதாக பலரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
சுப்பையா வலது கையிலிருந்த நோட்டீசை சீட்டுக்கு கட்டைப் பார்ப்பதுபோல் பிரித்தான். விசிறிபோல் அரை வட்ட வடிவில் நிறுத்தி வைத்தான். அதன் ஒழுங்கமைப்பு வடிவில் ரசித்து நிற்பவன் போல் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு விசிறலில் எதிரில் வளர்ந்து நிற்கும் நான்கைந்து வாழை மரங்கள் துண்டித்துவிடும் என்பது போல் பார்த்தான்.
வயிற்றுப் பக்கம் சுருங்கியிருந்த சட்டையை நீவிக் கொண்டான் சுப்பையா. ஜீன்ஸ் பேண்ட்டின் செருகலுக்குள் அகப்படாதது போல துருத்திக் கொண்டு நின்றது. சட்டை வெளுப்பும் நீளமுமாய் ஜீன்ஸ் பேண்ட் கீழிறங்கியிருந்தது. அவன் பார்வை தாழ்த்தியபோது கோபிநாத்தினுடைய விலையுயர்ந்த ஷு முனை பிசிறலுடன் சிதைந்து போயிருந்தது தெரிந்தது. அது மீன் முட்கள் போல் துருத்திக் கொண்டிருந்தது. பூவரச மர இலைகள் நாலைந்து ஏதோ பறவையொன்றின் கிளம்பலில் உதிர்ந்தன. அது காகமாகத்தான் இருக்கும் என்று தலையைத் தூக்கிப் பார்த்தான். காகமில்லாத ஊரிலிருந்து வந்தவன் என்று சொல்லிக் கொண்டான் கோபிநாத்.
சுப்பையாவிடம் அவனின் சாதகக் குறிப்புகளை வாங்கி கோபிநாத் பார்த்தான். குரு சனி மூன்றாம் இடத்தில் வக்கிரமாக விருட்சிக லக்கினத்தில் பலமாக இருப்பதால் அவன் எழுத்தில் அபாரமாக வருவான் என்று கேட்டதை அவனிடமும் சொல்லியிருந்தான். சுப்பையா அவனின் பள்ளி வகுப்புத் தோழன் கிருஷ்ணன் சாதகத்தில் எம்.ஜி.ஆர். போல் அவன் அரசாள்வான் என்று சொல்லப்பட்டாலும் அவனுக்கு நிரந்தர வேலை எதுவும் வாய்க்காமல் பல கல்லூரிகளில் தற்காலிக வேலைகளில் அலைக்கழிந்து கொண்டிருப்பதை கிண்டலாகவும் சொன்னான்.
"இதெல்லாம் நாடகன்டா'' என்று சுப்பையா சாதகம் பார்க்கும் வித்தையைப் பற்றிச் சொல்வான். கோபிநாத் வாழ்க்கையே ஒரு நாடகம்தான்டா என்று அலுத்துக் கொள்வான் அடிக்கடி அவனிடம். அப்போதும் அப்படித்தான் சொல்லிக் கொண்டான்.

சுப்ரபாரதிமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com