மொழி தேவையில்லை!

"நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பூர்வீகம் கும்பகோணம் பக்கத்தில் உள்ள வலங்கைமான்.
மொழி தேவையில்லை!

"நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பூர்வீகம் கும்பகோணம் பக்கத்தில் உள்ள வலங்கைமான். சிறுவயதிலிருந்தே போட்டோகிராபி மீது ஆர்வம் அதிகம். ஆனால் போட்டோகிராபி பற்றிய எந்த புரிதலும் என் குடும்பத்தாருக்கு அப்போது இல்லை. அதனால் பல எதிர்ப்புகளைத் தாண்டிதான் போட்டோகிராபி படிக்க சென்னை வந்தேன். படிப்பு முடித்து சின்னசின்ன நிறுவனங்களில் வேலை செய்துவந்தேன். அதன் பிறகு "தரன்சியா' என்ற சொந்த நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். அதன்மூலம் வெளிவந்த என் புகைப்படம் ஒன்றுதான் என்னை திரும்பிப் பார்க்க வைத்தது. அதன்பிறகு சில இயக்குநர்களுடன் சேர்ந்து விளம்பரப் படங்கள், ஜிங்கிள்ஸ் என செய்து வந்தேன். ஒருகட்டத்தில் என்னுடைய புகைப்படங்களில் ஸ்பெஷலாக எதுவும் இல்லை என்று எனக்குத் தோன்றியது. அதனால் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல பயணங்கள் தேவையாக இருந்தன. அந்த பயணங்களின் போதுதான் எனக்கு இறகுகள் முளைக்க ஆரம்பித்து, மெல்லமெல்ல உயரே போக ஆரம்பித்தேன். பாராட்டுகள் வர வர அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அதிகரித்தது'' என்கிறார் தலைசிறந்த புகைப்படக் கலைஞர்கள் டாப் 60 -இல் ஒருவராக இருக்கும் எல்.ராமச்சந்திரன். அவரைச் சந்தித்தோம்:

சென்னையில் நடந்த புகைப்படக் கண்காட்சி குறித்து?
பொதுவாக புகைப்படக் கண்காட்சி எனும் போது பலவிதமான புகைப்படங்களை காட்சிக்கு வைப்பார்கள். ஆனால் இது ஒரு வித்தியாசமான கண்காட்சி. ஒரு மாடலை நேரடியாக வைத்து வேறுபட்ட பல பரிமாணங்களில் எடுக்கப்பட்ட படங்களைத்தான் கண்காட்சியில் வைத்திருந்தோம். அதற்கு இப்படி ஒரு பாராட்டும், வரவேற்பும் கிடைக்கும் என்று நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பாராட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க அந்த மாடலாக இருந்த மஞ்சு சங்கருக்கும், எங்கள் குழுவுக்கும்தான் போய்ச் சேரும்.

உலக புகைப்படக் கலைஞர்களில் டாப் 60-இல் ஒருவராக இருப்பது குறித்து?
அது நான் தேர்வு செய்தது அல்ல, தானாக அமைந்தது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் சார்பாக சிறந்த புகைப்படக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு என்னுடைய புகைப்படங்கள் எல்லாம் பேசும்படியாக அமைந்தன. அதுமட்டுமல்லாமல், கொரியாவில் நடந்த ஆர்ட் காலரியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் "பேன்டஸி குயின்' என்ற எனது புகைப்பட புத்தகத்தைப் பார்த்திருக்கிறார்கள். இப்படி என்னைப் பற்றிய சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அவர்களாகவே என்னைத் தேர்ந்தெடுத்து இந்த டைட்டிலைக் கொடுத்திருக்கிறார்கள். அது மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொருபுறம் 60 - இல் ஒன்றாகத்தானே இருக்கிறேன். முதலாவதாக இல்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

ப்ளேபாய் பத்திரிகை குறித்து?
ப்ளேபாய் பத்திரிகை என்பது எனக்குக் கிடைத்த வரம். ஏனென்றால் ப்ளேபாய் பத்திரிகை என்றதுமே அது வேறுமாதிரியான பத்திரிகை என்றுதான் எண்ணுவார்கள். ஆனால் அதற்கும் உலகத்தரத்தில் ஒரு லைப் ஸ்டைல் இருக்கிறது. உலக நாடுகளில் முதல் இடத்தில் இருக்கும் பத்திரிகை. ஒரு மில்லியன் மக்களால் வாசிக்கப்படுகிறது. இந்தியாவிலும், அந்தவகையைச் சார்ந்த எம்.எம்.எச்., காஸ்மோபாலிடன் போன்று எவ்வளவோ பத்திரிகைகள் இருக்கின்றன. அதிலும் கிளாமர் இருக்கிறது. ஆனால் ப்ளேபாய் கிளாமரை சற்று அதிகமாக எக்ஸ்போஸ் செய்கிறது எவ்வளவுதான். அதிலும் நார்மல் மனிதர்களின் பேட்டி, பிரபலங்களின் பேட்டி, சாதனையாளர்களின் கலந்துரையாடல் என எல்லாமே இருக்கிறது. அதன் கூடவே ஒரு பிரபலத்தின் நியூடிட்டியும் இருக்கிறது.
அதனால் என்னைப் பொருத்தவரை எனக்கு அது ஒரு வாய்ப்புதான். அதில் நுழைவது என்பது பிரம்ம பிரயத்தனமாக இருந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகே அதன் வாசல் எனக்கு வசப்பட்டது. இன்று இந்த இடத்தில் நான் இருக்கிறேன் என்றால் அதற்கு பின் எத்தனையோ போராட்டங்களையும், இழப்புகளையும், வலிகளையும் தாண்டித்தான் வந்திருக்கிறேன்.

உங்களை அடையாளப்படுத்திய முதல் புகைப்படம் ?
"ரஷியன் மாடல்' ஆனான் எனும் பெண்மணியின் புகைப்பட ரிலீஸுக்கு பிறகுதான் எனது புகைப்படங்கள், புகைப்படவுலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. அதிலிருந்து இன்று வரை அந்த தாக்கத்தைக் குறையவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் என்னுடைய புகைப்படம் பேசும்படியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் வைத்திருக்கிறேன்.

புகைப்படவுலகின் இளம் தலைமுறைக்கு சொல்ல விரும்புவது?
ஆயிரக்கணக்கான,லட்சக்கணக்கான புகைப்படக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் நமக்கான தனித்துவம் இருந்தால் மட்டுமே நாம் நிலைக்க முடியும். இன்றைய இளைஞர்களைப் பொருத்தவரை விரும்பி இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள். ஆனால் தனக்கென்று எந்த குறிக்கோளும் இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் ஒரு நிலையாக இல்லாமல் தோன்றும் திசையெல்லாம் செல்கிறார்கள். இதற்கு இன்னொரு காரணம் வாழ்வாதாரப் பிரச்னை. இதிலிருந்து மீள தனக்கென்று ஒரு கான்சப்ட்டை உருவாக்கிக் கொண்டு அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். அடுத்து அவர்களுக்குள் இருக்கும் மொழிப் பிரச்னை குறித்த தாழ்வுமனப்பான்மையைத் தூக்கியெறிய வேண்டும். நமது புகைப்படம்தான் பேச வேண்டும். அதற்கு மொழி தேவையில்லை.
}ஸ்ரீதேவி குமரேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com