ரத்தத்தைச் சுத்தம் செய்தால்...!

வாய்ப்புண், கண் விழிப்படல பாதிப்பு, மூக்கிலிருந்து நீராக ஒழுகுதல், வாய் துர்நாற்றம், வயிற்றில் கட்டி, அக்கி, நுண்ணிய தோல் ஓட்டைகளிலிருந்து ரத்தம்
ரத்தத்தைச் சுத்தம் செய்தால்...!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

என் வயது 34. அடிக்கடி வாய்ப்புண், தண்ணீர் தாகம், கசப்புடன் கூடிய புளிப்பு ஏப்பம், பசியின்மை, வியர்வை துர்நாற்றம், முகப்பருக்கள் போன்ற உபாதைகளால் அவதியுறுகிறேன். உத்தியோகம் காரணமாக பல ஊர்களுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் ஓட்டல் சாப்பாடுதான். இவை எதனால் ஏற்படுகின்றன? இவற்றுக்கு ஆயுர்வேத மருந்துகள் எவை?
தனஞ்செழியன்,
சேலம்.

சரகஸம்ஹிதை எனும் ஆயுர்வேத நூலில் மனிதர்களுடைய இரத்தம் கெட்டுவிட்டால் கீழ்காணும் உபாதைகளைத் தோன்றச் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது:
வாய்ப்புண், கண் விழிப்படல பாதிப்பு, மூக்கிலிருந்து நீராக ஒழுகுதல், வாய் துர்நாற்றம், வயிற்றில் கட்டி, அக்கி, நுண்ணிய தோல் ஓட்டைகளிலிருந்து ரத்தம் கசிதல், தலைசுற்றல், மூட்டு வீக்கத்துடன் வலி, உடல் வெளுத்து சோகை அடைதல், பசியின்மை, தண்ணீர் தாகம், உடல் கனம், உடல் எரிச்சல், தாங்க முடியாத சோர்வு, ருசியின்மை, தலைவலி, கசப்பும் புளிப்புமாக கெட்டநீர் ஏப்பத்தில் வருதல், கடுங் கோபம், வாயில் உப்புச்சுவை, அதிக வியர்வையில் துர்நாற்றம், மதம்பிடித்தது போல தள்ளாட்டம், நடுக்கம், குரல் கம்மல், அதிக உறக்கம், சோம்பல், அடிக்கடி மூர்ச்சையாகி விழுதல், அரிப்பு, காணாக்கடி, பருக்கள், சரும உபாதைகள்.
மேற்குறிப்பிட்ட உபாதைகளில், நீங்கள் குறிப்பிடும் உபாதைகளும் அடங்கியிருப்பதால், உங்களுக்கு இரத்தம் தன் சுத்தமான தன்மையைவிட்டு, கெட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இரத்தம் கெடுவதற்கான காரணங்களையும் அந்நூல் எடுத்துக் கூறுகிறது:
ஒவ்வாமை உணவுகள், குடலில் துளைத்துக் கொண்டு செல்லும் சூடான வீரியம் கொண்ட மதுபானங்களை அருந்துதல், அதிக அளவில் உணவைச் சாப்பிடுதல், காரம், புளி, உப்பு சேர்த்த உணவுகள், கொள்ளு, உளுந்து, நல்லெண்ணெய் சார்ந்த உணவுகள், பச்சைமுள்ளங்கி, உப்பு நீரிலும், பொந்துகளிலும், நீர்ப்பாங்கான நிலங்களிலும் வாழும் மிருகங்களின் மாமிசத்தை உணவாக ஏற்றல், தயிர், புளித்த தயிர்த்தண்ணீர், வினிகர், பதனழிந்த கெட்டுப் போன உணவு ஆகியவை.
எண்ணெய், நெய் கலந்து எளிதில் செரிக்காத திரவ உணவு வகைகளைச் சாப்பிட்டு பகலில் படுத்து உறங்குதல், கடும் கோபம், வெயில் மற்றும் நெருப்பினருகில் வேலை, வாந்தியை வலுக்கட்டாயமாக அடக்குதல், அடிபடுதல், உடற்சூடு அதிகரித்தல், முன் உண்ட உணவு செரிமானம் ஆகாத நிலையிலேயே அடுத்த உணவைச் சாப்பிடுதல், இலை உதிர் காலத்தின் இயற்கையான தன்மையாலும் மனிதர்களுடைய இரத்தம் கெட்டுவிடக்கூடும்.
கெட்டுப்போன நிலையில் இரத்தத்தை உடலில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் அதைச் சிறுகச் சிறுக வெளியேற்றும் அட்டைப்பூச்சிகள், கொத்தி எடுத்தல் போன்ற முறைகளால் வெளியேற்றி, சுத்த ரத்தத்தை உடல் பெறும் வண்ணம் முயற்சிக்க வேண்டும். திக்தகம் என்றும் மஹாதிக்தகம் என்ற பெயரிலும் பயன்படுத்தக் கூடிய மூலிகை நெய் மருந்துகளை காலை,மாலை என இருவேளை வெறும் வயிற்றில் சுமார் 21 நாட்கள் வரை உருக்கிச் சாப்பிட்டு வர, உங்களுடைய உபாதைகள் பல, இரத்தம் சுத்தமாவதால் குணமடைய வாய்ப்புள்ளது. மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தை அதன் பின்னர் சுமார் 20-25 கிராம் வரை சாப்பிட, நீர்பேதியாகி குடல் சுத்தமடையும். இரத்தத்தில் கலந்துள்ள பல விஷப்பொருட்களையும், மேற்குறிப்பிட்ட நெய் மருந்துகள், குடலுக்குக் கொண்டுவந்து, லேகிய மருந்தின் மூலம் வெளியேற்றுவதால், இரத்தம் சுத்தமடைகிறது.
இரத்தத்தினுடைய சுகாதார மேம்பாட்டினால், உடல்நிறத்திற்குத் தெளிவு, புலன்கள் அனைத்தும் தத்தம் செயல்களில் மேம்படுதல், புலப்பொருட்களின் மீது இயற்கையான மோகம் அதிகரித்தல், சீரான இடைவேளையில் பசி எடுத்தல், உட்புறக்கழிவுகள் எவ்வித கஷ்டமுமில்லாமல் எளிதாக வெளியேறுதல், மனதில் நிறைவான மகிழ்ச்சி, உடல்வனப்பு கூடுதல், உடல் மற்றும் மனதில் வலுகூடுதல் போன்றவை ஏற்படும். ஆயுர்வேத மருந்துகளாகிய சோணிதாமிருதம், நிம்பாதி கஷாயம், ஜீவந்தியாதி கஷாயம் போன்றவை இரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடியவை. மேற்குறிப்பிட்ட இரத்தம் கெட்டுப் போவதற்கான காரணங்களைத் தவிர்த்து தக்க சிகிச்சை முறைகளை மேற்கொள்வதால், உங்களுடைய உபாதைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com