ஆசியாவின் ஒரே மூலிகைப் பூங்கா!

உலகில் பல்வேறு வகையான பூங்காக்கள் இருக்கலாம். இதில் மலைகளின் அரசியான நீலகிரியில் கேளிக்கைப்பூங்கா, மலர்ப்பூங்கா, மரப்பூங்கா, தாவரவியல் பூங்கா என
ஆசியாவின் ஒரே மூலிகைப் பூங்கா!

உலகில் பல்வேறு வகையான பூங்காக்கள் இருக்கலாம். இதில் மலைகளின் அரசியான நீலகிரியில் கேளிக்கைப்பூங்கா, மலர்ப்பூங்கா, மரப்பூங்கா, தாவரவியல் பூங்கா என பல்வேறு வகைகளிலான பூங்காக்கள் இருந்தாலும் மனித வாழ்வுக்கு உதவக்கூடிய வகையிலான மூலிகைப் பூங்காவும் அமைந்துள்ளது சிறப்பானதாகும்.

ஹோமியோபதி மருத்துவத்தில் மூலிகைகளின் பங்கே பிரதானமாகும். இதில் சுமார் 1,100 ரகங்களிலான மூலிகைகள், மருத்துவத்திற்காக பயன்படக்கூடிய மூலிகை ரகங்கள் என்றழைக்கப்படுகின்றன. இதில் இந்தியாவில் சுமார் 400 வகைகளும், நீலகிரியில் 300க்கும் மேற்பட்ட வகைகளும் உள்ளன.

ஹோமியோபதி மருத்துவம் உலகில் முதன்முதலில் ஜெர்மன் நாட்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். டாக்டர் சாமுவேல் ஹனிமன் என்பவரால் உருவாக்கப்பட்ட இம்மருத்துவ முறை, ஜெர்மனியைத் தொடர்ந்து இந்தியாவில்தான் பிரபலமடைந்தது. அதற்காகவே இந்தியாவில் முதன்முதலில் உத்தரபிரதேச மாநிலத்தில் காஸியாபாத் பகுதியில் 1979 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சார்பில் மூலிகை ஆய்வு மற்றும் சேகரிப்புக்கூடம் தொடங்கப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட ஆய்வுகளில் நாட்டிலேயே அதிகளவிலான மருத்துவ மூலிகைகள் நீலகிரி மாவட்டத்தில்தான் உள்ளதென கண்டறியப்பட்டதால், சுமார் 2 ஆண்டுகள் மட்டுமே அங்கு செயல்பட்டு வந்த இந்த மையம் அதன் பின்னர் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது.

தொடக்கத்தில் உதகையில் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்த நிலையில் 1987ஆம் ஆண்டில் இம்மையத்தை மூலிகைப் பண்ணையாக மாற்ற தமிழக அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து உதகை அருகேயுள்ள எமரால்டு பகுதியில் இப்பண்ணை செயல்படத் தொடங்கியது. 

தொடக்கத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த இப்பண்ணை தற்போது ஆயுஷ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இம்மூலிகைப் பண்ணை தொடர்பாக இம்மையத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் எஸ்.ராஜன் பகிர்ந்து கொண்ட தகவல்களாவன:
 "நீலகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள மருத்துவ மூலிகைகளுடன், வெளி நாடுகளிலிருந்தும் பல்வேறு வகையான மூலிகை ரகங்களைக் கொண்டு வந்து வளர்க்க முடியும். அதற்கேற்ற தட்பவெப்பநிலையே இங்கு நிலவுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தை தாயகமாகக் கொண்ட ஜெர்மனியை விட நீலகிரி மாவட்டத்தின் தட்பவெப்ப சூழல் மிகவும் ஏற்றதாக உள்ளது. இதற்கு ஜெர்மனியிலுள்ளதைப் போல நீலகிரியில் தொடர் பனிப்பொழிவு இல்லாததே காரணமாகும். அதனால் நீலகிரியில் ஆண்டு முழுதும் மருத்துவ மூலிகைகளை வளர்க்க முடியும்.

மூலிகைகளை வளர்ப்பது மட்டுமின்றி, புதிய மூலிகைகளைக் கண்டறிந்து, அவற்றை சேகரித்து அடையாளம் கண்டு, மருந்துகள் தயாரிக்க மருத்துவ ஆய்வுக் கூடங்களுக்கும் இம்மையம் அனுப்பி வருகிறது. அத்துடன் மருத்துவ மூலிகைகளைப் பாடம் செய்து பாதுகாப்பாக வைத்திருப்பதால் எதிர்காலத்தில் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருந்து ஆராய்ச்சியாளர்களுக்கும், மூலிகை ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்படும். எமரால்டிலுள்ள மூலிகைப்பண்ணை கடல் மட்டத்திலிருந்து 6,100 அடி உயரத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதாகும்.

இம்மூலிகைப் பண்ணையிலிருந்து குளிர் பிரதேசத்தில் வளரும் மூலிகைகள் மட்டுமின்றி, சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய மூலிகைகளும் வளர்த்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இப்பண்ணையிலுள்ள மூலிகைகளில் 6 வகையான மூலிகைகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு காட்ராக்ட், வெள்ளைத்தழும்பு, மலேரியா, மஞ்சள் காமாலை, மன அழுத்தம், ரத்த அழுத்தம் மற்றும் தோல் நோய்களுக்கு மருந்து தயாரிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இப்பண்ணையில் ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட மிக முக்கிய மருத்துவ குணம் கொண்ட டிஜிட்டாலிஸ், மில்லிபோலியம் மற்றும் அம்மி விஸ்னஹா, மத்திய தரைக்கடல் பகுதியை தாயகமாகக் கொண்ட சினரேரியா, சிலிபம் உள்ளிட்ட மூலிகைத் தாவரங்களும், பெரு நாட்டை தாயகமாகக் கொண்ட சின்கோனா மூலிகையும், சீனாவை தாயகமாகக் கொண்ட ஆர்ட்டிமிசியா, இந்தியாவின் பூர்வீக மூலிகைத் தாவரமான கோலியஸ், ஆடாதொடை, வசம்பு, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஜிம்னிமா உள்ளிட்ட மூலிகைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இப்பண்ணையின் சிறப்புகளைக் குறித்து கேள்வியுற்ற அணிசேரா நாடுகளின் பட்டியலிலுள்ள 25 நாடுகளின் பிரதிநிதிகள் கடந்த ஆண்டில் இப்பண்ணையை நேரில் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டிலும் ஹோமியோபதி மருத்துவத்தைப் பிரபலப்படுத்த அண்மையில் ஜப்பான் நாட்டிலிருந்து 45 ஹோமியோபதி மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழுவினர் இங்கு வந்து இப்பண்ணையைப் பார்வையிட்டதோடு, மூலிகைப் பயிர்களை பயிர் செய்யும் விதம் குறித்தும் அறிந்து சென்றுள்ளனர்'' என்றார்.

மத்திய அரசு சுகாதாரத்துறையிலிருந்து பிரித்து "ஆயுஷ்' என தனியாக ஒரு துறையையே உருவாக்கியுள்ளது மூலிகை மருத்துவம் மற்றும் இயற்கை வேளாண் முறைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது எனலாம். மூலிகை மருந்துகளை உட்கொள்ளும்போது எத்தகைய பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை என்பதோடு, ஆரோக்கியமான வாழ்வையும் வாழ முடியுமென தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில் ஆசியாவிலேயே அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரே மூலிகைப்பண்ணை நீலகிரி மாவட்டத்திற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது என்றால் வியப்பல்ல'' என்றார். 

-ஏ.பேட்ரிக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com