இப்படித்தான் என் மனைவி

அந்தக் கதையை அவள்தான் முதலில் படித்திருந்தாள். அவள் என்றால் வேறு யாருமில்லை. என் மனைவி லட்சுமி. 
இப்படித்தான் என் மனைவி

அந்தக் கதையை அவள்தான் முதலில் படித்திருந்தாள். அவள் என்றால் வேறு யாருமில்லை. என் மனைவி லட்சுமி. 
 "ஏங்க இந்தக் கதையைப் படித்துவிட்டீர்களா?'' கேட்டுக் கொண்டே என்னருகில் வந்தாள். 
 "எந்தக் கதை?'' என்று கேட்டுக் கொண்டே கணிப்பொறித் திரையிலிருந்து கண்ணை விலக்கி ஏறெடுத்து அவளைப் பார்த்தேன். அவள் கையில் இந்த வாரப் பத்திரிகை ஒன்று இருந்தது.
 நான் இன்னும் படிக்கவில்லை. 
"இப்பதானே வந்திருக்கு? எந்தக் கதை சொல்லு?'' நான் சொல்லி முடிக்கும் முன்னே என் கையில் வாரப் பத்திரிகையைத்  திணித்துவிட்டு இந்தக் கதையை உடனே படியுங்க'' உத்தரவு போட்டுவிட்டு அடுப்பங்கரைக்குள் போனாள்.
"அப்படி என்ன சமாச்சாரம் இந்தக் கதையில் இருக்கு?' யோசித்துக் கொண்டே கணிப்பொறியை அணைத்தேன்.
 அவள் காட்டிவிட்டுப் போன பக்கத்தைப் புரட்டிக் கதையைப் படிக்கத் தொடங்கினேன். கால்வாசிக் கதையைப் படித்தவுடனேயே, அவள் எதற்கு இந்தக் கதையைப் படிக்கச் சொல்லியிருக்கிறாள் என்பது புரிந்துவிட்டது.   
 இருந்தாலும் ஒன்றும் தெரியாத மாதிரி, "இந்தக் கதையில் என்ன இருக்குன்னு இப்போ இதைப் படிக்கச் சொன்னே?'' அடுப்பங்கரையை நோக்கிக் கேட்டேன்.
 "என்ன இருக்கா? ஒண்ணும் புரியாத மாதிரி  நடிக்காதீங்க'' சொல்லிக் கொண்டே அடுப்பங்கரையிலிருந்து எட்டிப் பார்த்தவள், "உங்களப் போல பெரிய மனுஷங்க நெறைய இருக்காங்கன்னு தெரியுது'' என்று முகத்தை மேலும் கீழும் ஒருவிதமாக அசைத்துக் கொண்டே என்னை நோக்கி வந்தாள். 
"பெரிய மனுஷங்க' என்று அவள் குறிப்பிட்டது புகழ்மொழியல்ல என்பது எனக்குத் தெரியும். அது ஏளன மொழி. அவள் பாஷையில் அதற்கு இளிச்சவாயன் என்று பொருள். கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் நானொரு ஏமாளி என்பது அவளுடைய தீர்மானம். அதைத்தான் இப்பொழுதும் சுட்டிக் காட்டினாள். அதற்கு வாய்ப்பாக அந்தக் கதை அமைந்துவிட்டது.
   வந்தவள் என் கையிலிருந்த வாரப் பத்திரிகையை வாங்கி, கதையில் வந்திருந்த "ஒத்தப் பைசா வட்டியில்லாம பத்தாயிரம் சொளையா தூக்கிக் கொடுத்திருக்கிறது உங்களுக்குக் கைமாத்தாத் தெரியறதாக்கும்'' என்ற வரியைச் சத்தமாக வாசித்துக் கொண்டிருந்தாள். அது அந்தக் கதையில் வரும் நாயகனின் மனைவி அவனைப் பார்த்துக் கேட்பது. 
 எல்லா மனைவிமார்களும் இப்படித்தான் இருப்பார்கள் போல என்று என் மனசுக்குள்ளே  நினைவு ஓடிக் கொண்டிருந்தது.  
   வாசித்து முடித்தவள், "என்ன நெனச்சிகிட்டு இருக்கீங்க. உடனே உங்க மாசானமுத்து அண்ணனுக்கு  போன் போடுங்க'' என்று "உங்க' என்பதில் ஓர் அழுத்தம் கொடுத்து என் நினைவோட்டத்தில் வேகத்தடை வைத்தாள். "உங்க' என்பதில் அழுத்தம் கொடுத்தாள் என்பதற்காக மாசானமுத்து அண்ணன் என் நெருங்கிய உறவுக்காரர் என்று எண்ணிவிடாதீர்கள். அவர் ஒன்றும் என் உறவினர் இல்லை. குடியிருக்க வந்த இடத்தில் ஏற்பட்ட பழக்கம்தான். அது அவளுக்கும்  தெரியும். ஆனாலும் அப்படியோர் அழுத்தம். அது அவள் சொன்னதை  நான் கேட்கவில்லை என்பதைக்  குத்திக்காட்டும் உத்தி.   
 செல்பேசியைக் கையிலெடுத்தேன். பதிவு செய்திருந்த மாசானமுத்து அண்ணனின் எண்ணைத் தேடியெடுத்து அழைப்புப் பொத்தானை அழுத்தி,  காதருகில் கொண்டு போனேன்.  மாசானமுத்து அண்ணனுக்கு இந்த மாதிரி பலதடவை போன் பண்ணியிருக்கிறேன். "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதால் தொடர்பு கொள்ள முடியவில்லை'  தமிழிலும் ஆங்கிலத்திலும் கனிவான குரல்.  
  காதருகிலிருந்து போனை நகர்த்தினேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்த  என் மனைவி, "தெரியுமே உங்க போனுன்னு தெரிஞ்சா எடுக்கமாட்டாரே?  இந்தாங்க என் போனிலிருந்து போன் பண்ணுங்க'' என்று சொல்லி போனை நீட்டினாள். 
 "எடுக்காமலா? அப்படி ஒண்ணுமில்ல. தொடர்பு கொள்ள முடியவில்லை என்றுதான் பதில் வருது''
"போன் போடுங்க'' என்று லட்சுமி சொல்வது எத்தனையாவது முறையென்று நான் எண்ணிப் பார்த்தது இல்லை. ஆனால் அவளிடம் கேட்டால் நூறு தடவைக்கு மேல் சொல்லிவிட்டேன் என்பாள். அதோடு மட்டும் நிற்காமல், கூடவே எத்தனை தடவை சொன்னாலும் உங்களுக்கு உறைக்காது என்று புகாரும் கூறுவாள். அப்படி என்னதான் பிரச்னை என்று கேட்கிறீர்களா?
 அந்தக் கதையில் வருபவனைப் போல் நானும்  மாசானமுத்து அண்ணனுக்குக் கைமாற்றாக இருபதாயிரம் ரூபாய் கொடுத்ததுதான் பிரச்னை. லட்சுமிக்குத் தெரிந்துதான்  கொடுத்தேன். அவளுக்குத் தெரியாமல் கொடுத்திருக்கலாம். எனக்கு அந்தப் புத்தியில்லை. மனைவியிடம் எதையும் மறைக்கக் கூடாது என்று நினைப்பவன். 
 "மாசானமுத்து அண்ணன் சரியில்லாத ஆள். குடிச்சு அழிக்கிறார் என்று கேள்விப்படுகிறேன். அவருக்குப் பணம் கொடுக்காதீங்க. வம்பா பணத்தை இழக்காதீங்க'' என்று அவள் தடுத்தும் நான் அவள் பேச்சைக் கேட்காமல் மாசானமுத்து அண்ணனுக்குப் பணம் கொடுத்துவிட்டேன். அதுதான் பிரச்னை. கொடுத்தது கூடப் பிரச்னையில்லை. வாங்கிய பணத்தை அவர் திருப்பித் தராததுதான் பெரும்பிரச்னை. 
 போன் எதுக்கு ஊருக்குப் போகும்போது நேரிலே பார்த்து கேட்கிறேன். போன் செய்யாமல் சமாளித்துவிடலாம் என்று நினத்தேன்.
 "நேரிலே போயி நீங்க கேட்டது போதும். இப்போ போன் போட்டுக் கேளுங்க?''
 அவள் விடுவதாயில்லை. நின்ற இடத்திலிருந்து நகருவதாயுமில்லை.  இனிமேல் போன் பண்ணாமல் அவளிடமிருந்து தப்பிக்க முடியாது. மனதில் எண்ணிக் கொண்டே, "ஏதோ சிக்னல் பிரச்னை இருக்கு போல. கொஞ்சநேரம் கழிச்சி பண்ணிப் பார்ப்போம்'' என்றேன்.
"ஆமா நீங்க பண்ணி அவரு போனை எடுக்கறதப் பார்க்கத்தானே போறேன்'' என்று சொல்லிக்கொண்டே சமையல்கூடம் சென்றவள் பாத்திரங்களை உருட்டத் தொடங்கினாள். அவள் என் மீது கோபத்தில் இருக்கிறாள் என்று எனக்குப் புரிந்தது...
 அவள் கோபத்திலும் ஒரு நியாயம் இருப்பதாக எனக்குப்பட்டது. பின்னே என்ன? ஆத்திர அவசரத்துக்குக் கைமாத்து வாங்குறது சகஜம்தான். அப்படி வாங்கினா அதை உடனடியா திருப்பித்தர வேண்டாமா? அப்படித் தராவிட்டால் யாருக்குத்தான் கோபம் வராது?
 என் ராசியோ என்னவோ தெரியல. எங்கிட்ட கைமாத்து வாங்கினவங்க யாரும் திருப்பித் தருவதில்லை. ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி  ஏமாத்திகிட்டே இருக்காங்க. எப்பவாவது வழியில் பார்த்தா, அண்ணே, ஐயா, சார்னு ஏதாவதொரு மரியாதை விளியைச் சேர்த்து, "உங்களுக்குத் தரணும்னுதான் நெனைச்சிருந்தேன். அதுக்குள்ள இன்னொரு முக்கியமான செலவு வந்திடுச்சி'' அப்படி, இப்படின்னு ஏதாவது சொல்லிப்புடுறாங்க. 
  இப்படி, பல பேருக்குக் கைமாத்து கொடுத்து ஏமாந்திருக்கிறேன். அதுக்காக கைமாத்து கேக்கிறவங்களுக்குக் கொடுக்காமலும் இருக்க முடியல. அது என்னோட இயல்பாகிப் போச்சு.  
 அதுக்கு  பெரிசா ஒண்ணும் காரணமில்ல. ஒரு காலத்தில்  அவசரச் செலவுக்குப் பணம் இல்லாமல் ஐந்து வட்டிக்கும் பத்து வட்டிக்கும்  வாங்கி  அவஸ்தைப்பட்டதுதான் காரணம் என நினக்கிறேன். பணக்கஷ்டத்தால்  உண்டாகும் மனவுளைச்சல் எனக்குத் தெரியும். அந்த வலியின்  விளைவே, கூடுமானவரை நம்மால் இயன்ற சிறு உதவியை இப்படிப்பட்டவர்களுக்குச் செய்வோமே என்ற இந்தக் கைமாத்துக் கொடுக்கும் பரோபகாரம். அதோடுமட்டுமல்ல. இரப்பது இழிவென்றும் கொடுப்பது உயர்வென்றும் சங்கப் பாட்டன் சொல்லிவைத்தது என்  மனத்தில் பதிந்துவிட்டதும் கூடக் காரணமாக இருக்கலாம். 
 அதுக்காக, என் கையில் எப்பவும் பணம் புழங்குதுன்னு நீங்க  நினைத்தால் அதைப்போல பெரிய தவறு வேற ஒண்ணும் இருக்காது. என்னிடம் அப்படியெல்லாம் பெரிசா பணம் ஒன்றும் கிடையாது. என் கையில் பணம் இல்லாவிட்டாலும் வேறு யாரிடமாவது வாங்கியாவது கொடுப்பேன். அது என் பழக்கம். நான் கேட்டால் பணம் தர யாரும் மறுப்பதில்லை. ஏனென்றால் நான் உடனே திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்பது அவர்களுக்குத் தெரியும். 
  அதுமட்டுமில்ல, எனக்குப் பணம் கொடுத்தவங்க என்னைப் பார்க்கும் போதெல்லாம் ,"எப்போ பணம் கிடைக்கும்?''என்று சட்டுன்னு கேட்டுப்புடுறாங்க. எனக்கு இது ஒரு பெரிய அவமானமாகப் படும். அதுக்குப் பயந்து உடனே கொடுத்திடுவேன். நான் அப்படி யாரிடமும் கேட்பதில்லை. தருகிறபோது தரட்டுமேயென்று இருந்துவிடுவேன். நான் கொடுத்த கைமாத்து வராமல் இருப்பதற்கு இது ஒரு காரணமாகஇருக்கலாம். கேளாக்கடன் பாழ்தானே? 
  இப்படி நான் நினைத்துக் கொண்டிருந்தபோது, "என்னங்க என்ன நெனைப்பு ஓடிகிட்டு இருக்கு? பணம் கொடுத்தது நெனைப்பு இருக்குதா? இல்லையா? இல்லைன்னா இதையும் வங்கிகள் போல வாராக்கடன் பட்டியலில் சேர்த்துட்டிங்களா?'' சமையல் கூடத்திலிருந்து சத்தமாகக் கேட்டாள்.
 "நினைப்பு இல்லாமல் போகுமா? அதுதான் நீ அடிக்கடி நினைவு படுத்திகிட்டுயிருக்கியே'' சத்தமாகச் சொல்லாமல் மனத்துள் சொல்லிக் கொண்டேன். 

எங்கள் வீட்டுக்கு அடுத்த தெருவில் இருந்தவர் மாசானமுத்து அண்ணன். அவர் ஒருநாள் என்வீடு தேடி வந்து, "சார் என் மகளுக்குக் கல்யாணம் கூடியிருக்கு. அவசரமா கொஞ்சம் பணம் தேவைப்படுது. நானும் யார் யார்கிட்டலாமோ கேட்டுப் பார்த்திட்டேன். பணம் புரளுற மாதிரி  தெரியல. என் வீட்ட அடமானமா எழுதித் தாறேன்.  ஒரு ஐம்பதாயிரம் ரூவா கொடுங்க. கொஞ்சநாளில் நான் திருப்பிக்கிடுறேன்'' என்று கண்கலங்க நின்றார்.
  "ஐயையோ என்கிட்ட அவ்வளவு பணம் கிடையாதண்ணே. நான் அப்படியொண்ணும் பெரிய பணக்காரன் இல்ல. அதுமட்டுமில்ல. அடமானம் வாங்குறதிலயோ வட்டிக்குக் கொடுக்கிறதிலேயோ எனக்கு உடன்பாடு கிடையாது. நான் அப்படியாளும் இல்லே. நீங்க வேற யார்கிட்டயாவது கேளுங்க''  
நான் இப்படிச் சொன்னதை அவர் பொருட்படுத்தாமலே, "நீங்க அப்படி ஆள் இல்லன்னு எனக்குத் தெரியும். ஆனாலும்  இந்த ஒரு தடவையும் எனக்கு நீங்க 
உதவிசெய்யணும். எனக்கு வேற வழி தெரியல'' சொல்லிவிட்டு என் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
 நாங்க இந்த ஊருக்கு வந்தநாளில் அவருடைய தோட்டத்துக்குப் பக்கத்தில்தான் இடம் வாங்கி வீடு கட்டினோம்.  அப்போதிருந்தே அவர் பழக்கம். அவருடைய தோட்டத்தில் இருந்துதான் எங்கள் வீட்டு வளவில் நட்டுவைத்திருந்த தென்னைக்கும் வாழைக்கும் தண்ணீர்ப் பாய்ச்சினோம். கொஞ்சநாளில் அவர் தோட்டத்தை விற்றுவிட்டார். அதற்குப் பிறகு அடிக்கடி அவரைப் பார்க்க முடிவதில்லை. எங்கள் வீட்டுப் பக்கம் எப்போதாவது ஒரு தடவை வருவார்.  அவர் ஏதேதோ தொழில் பண்ணிப் பார்த்ததாகவும் ஒன்றும் சரிப்பட்டு வராததாகவும்  அவர்பாடு திண்டாட்டம்  என்றும் பக்கத்தில் உள்ளவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். 
   திடீரென்று வந்து கடன் கேட்டுக்கொண்டு  வெளியேறாமல் நின்றவரைப்  போக வைக்க வேண்டும் என்பதற்காக, "அண்ணே நீங்க வேற யார்கிட்டயும் கேட்டுப் பாருங்க. ரொம்பவும் முடியலைன்னா கேளுங்க ஓர் இருபதாயிரம் தாரேன்'' என்று சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன். அவர் அதையே சாக்காக வைத்து கல்யாணத்துக்கு இரண்டு நாளைக்கு முன் வந்து பிடிச்ச பிடியா  இருபதாயிரம் வாங்கிக் கொண்டார். இந்தப் பணத்தை மூன்று மாதத்தில்  தந்துவிடுவேன் என்று பத்துமுறை சொல்லிச் சென்றார். வீட்டையும்  அடமானம் வைத்து வேறொருவரிடமும் ஐம்பதாயிரம் வாங்கியிருந்திருக்கிறார். எனக்கு இது பின்னர் தெரிந்தது. 
  அவர் மகள் கல்யாணம் நல்லபடியாக முடிந்தது. கல்யாணத்திற்குச் சென்று மொய்யும் எழுதிவந்தேன். மூன்று மாசத்தில் தருகிறேன் என்று சொன்னவர் ஒரு வருடமாகி இன்னும் தரவில்லை. நாங்களும் எங்கள் மகன் வேலை பார்க்கும் கோயம்புத்தூரில் குடியேறிவிட்டதால் அவரைப் பார்க்கவும் முடியவில்லை.  

"என்ன யோசனை பலமாயிருக்கு? போன் போடவா... வேண்டாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கீங்களா? இதுக்குத்தான் இவ்வளவு பெரிய யோசனையா?'' கேட்டுக்கொண்டே அருகில் வந்த லட்சுமி கையிலிருந்த காபி தம்ளரைச் சிறிய மேசையில் வைத்தாள். நானொரு காபி விரும்பி. அதனால் அவள் குறிப்பிட்ட நேரத்தில் காபி தந்துவிடுவாள்.  தம்ளரைக் கையிலெடுத்து காபியை ரசித்து உறிஞ்சியபோது  என் செல்பேசி ஒலித்தது. மாசானமுத்து அண்ணன்தான் போன் போடுகிறார் போல எண்ணிக்கொண்டே போனைக் கையிலெடுத்தேன். ஆனால் அழைத்தது அவரில்லை.என்னுடைய சித்தப்பா மகன். போனையெடுத்தேன். 
"அண்ணே நான்தான் சுந்தரம் பேசுறேன். வருகிற வெள்ளிக்கிழமை என் பையனுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணுகிறோம். இடம் பிடிச்சிருந்ததால திடீர்னு முடிவுபண்ணிவிட்டோம். நீங்களும் மதனியும் கட்டாயம் வந்திடுங்க. மறக்காம வாங்க வியாழக்கிழமையே உங்கள எதிர் பார்ப்பேன்'' சொல்லிவிட்டு போனைத் துண்டித்துவிட்டான்.
"சுந்தரம் மகனுக்கு வெள்ளிக்கிழமை நிச்சயம் பண்றாங்களாம். நம்மள வியாழக்கிழமையே வரச் சொல்றான்'' லட்சுமியிடம் செய்தியைக் கடத்தினேன்.
 "போக வேண்டியதுதான்.  நாளைக்கே புறப்பட்டா தானே வியாழக்கிழமை போக முடியும்? அவ்வளவு அவசரமாக என்னால புறப்பட முடியாதுங்க. இங்க நிறைய வேலை கிடக்கு. நீங்க மட்டும் போயிட்டு வாங்க. நல்லதாப் போச்சு. அப்படியே உடன்குடிக்கும் போயி, மாசானமுத்து அண்ணன்கிட்ட பணத்தைக் கேட்டு வாங்கிவிட்டு வாங்க'' ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினத்தாள்.
 அவள் சொல்வதும் சரிதான். ஆனால் சுந்தரம் இருக்கும் என் சொந்த ஊருக்கும் உடன்குடிக்கும் நாற்பது கிலோமீட்டர் தூரம். எப்படிப் போய்விட்டுத் திரும்புவது? பரவாயில்லை. போய்விட்டு வரவேண்டியதுதான்.தீர்மானமாக முடிவெடுத்தேன்.

உடன்குடி போய் இறங்கியதும் அதிர்ந்து போனேன். மாசானமுத்து அண்ணன் இறந்துபோயிருந்தார். 
   அவர் இறந்து ஒரு வாரமாகிவிட்டதாம். ராத்திரி படுத்தவர் காலையில் எழுந்திருக்கவேயில்லையாம். பத்து நாட்களுக்குமுன் என்னைத் தேடி வந்தாராம். சாருக்கு ரூபாய் கொடுக்கணும். எப்போ வருவாங்கன்னு கேட்டாராம். பையில் ரூபாய் இருந்த மாதிரி தெரிந்ததாம். இவ்வளவும் என் வீட்டில் வாடகைக்கு இருப்பவர் சொன்னவை. 
 "எனக்கு அவர் ரூபாய் தரணும்னு உங்களுக்குத் தெரியத்தானே செய்யும்? வாங்கி வைக்கவேண்டியதுதானே?'' நான் கேட்டேன். மாசானமுத்து அண்ணனுக்கு நான் பணம் கொடுக்கும்போது, "பணம் திரும்பி வந்த மாதிரிதான்' என்று என்னிடம் ஏளனம் பண்ணியவர்தான் இவர்.
"அவர் தந்துவிட்டுப்போவார்னு நெனைச்சேன். ஆனால் அவர் அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டாரே'' என்று மெல்ல நழுவிக்கொண்டார்.
 என்னால் கவலைப்படத்தான் முடிந்தது. பணத்தைத் திருப்பி வாங்க முடியவில்லையே என்ற கவலையில்லை. மாசானமுத்து அண்ணன் இறந்து போனாரே என்ற கவலை. அவருடைய அடக்கத்திற்குப் போக முடியவில்லையே என்ற கவலை. சாகக்கூடிய வயதில்லை அவருக்கு. 
   அவருடைய மனைவி, மக்களுக்கு அவர் நம்மிடம் பணம் வாங்கியிருப்பது தெரியுமா? துஷ்டி கேட்கப் போவதுபோல் கடனைப் பற்றி மெல்லப் பேச்சுக்
கொடுத்து தெரிந்து கொள்ளலாமா? என்றெல்லாம் என் மனத்தில் பலவாறு எண்ணங்கள் ஓடின. 
   ஒருவர் இறந்தபின்,  கடன் கொடுத்திருக்கிறேன் என்று சொல்லி அவர் வீடு தேடிச் சென்று கேட்பது அராஜகம் என்று என் உள் மனம் தடுத்துவிட்டது. அவர் வீட்டிலிருந்து யாராவது தேடிவந்து பணம் தந்தால் வாங்கிக்கொள்வோம்.  என்னுடைய இளகிய மனம் என்னைச் சமாதானப்படுத்தியது.
 நாம் சமாதானம் அடையலாம். லட்சுமியை எப்படிச் சமாதானப்படுத்துவது? 
போன் போட்டுச் சொல்வோமா நேரில் போய்ச் சொல்லிக் கொள்ளலாமா யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் மனைவியிடமிருந்து போன் வந்தது.
 "என்ன உடன்குடி போய்ச் சேர்ந்துவிட்டீர்களா? மாசானமுத்து அண்ணனைப் பார்த்துக் கேட்டீங்களா? அவர் பணம் தந்தாரா? என்ன சொல்கிறார்?'' கேள்விமேல் கேள்விகளை அடுக்கினாள்.  என் தம்பி சுந்தரம் வீட்டிலிருந்து புறப்படும்போது உடன்குடிக்குப் போகிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினேன். அதை உறுதிசெய்துகொள்ளும் வகையில் இப்போது போன் செய்கிறாள்.
 "உடன்குடி வந்துசேர்ந்துவிட்டேன். ஆனால் மாசானமுத்து அண்ணன் வீட்டுக்கு இன்னும் போகலை. இங்கு ஒரு சின்ன பிரச்னை'' என்று மெல்ல இழுத்தேன்.
"அப்படி என்ன பிரச்னை? என்ன பிரச்னை இருந்தாலும் பணத்தை வாங்காமல் வந்துவிடாதீர்கள்'' கொஞ்சம் குரலில் கடுமை தெரிந்தது.
  "அது இல்லம்மா... மாசானமுத்து அண்ணன் இறந்து ஒரு வாரம் ஆகிறதாம். என்ன செய்யுறதுன்னு புரியல?''குரல் தழுதழுத்தேன்.
"'என்னது அவர் இறந்துபோனாரா? என்ன செய்ததாம்?'' அவள் குரலில் ஒரு பதற்றமும் நடுக்கமும் தெரிந்தது. 
"மாரடைப்பா இருக்கும் போல. ராத்திரி படுத்தவர் காலையில எழுந்திருக்கலையாம். இப்போ என்ன பண்ணுறதுன்னு தெரியல''
"ஒண்ணும் பண்ண வேண்டாம். உடனே புறப்பட்டு வாங்க.. பாவம். மாசானமுத்து அண்ணன் பொஞ்சாதி.  ஒரு அப்பாவி. அதுகிட்டபோய் எதுவும் கேட்டிட்டாதீங்க''  என் மனைவியின் தொனியில் ஒரு கனிவு இருந்தது.
"அப்போ பணம்?''
"பணம் என்னங்க பணம். நம்மகிட்டயிருந்து எவ்வளவோ போயிருக்கு. அதைப்போல இது என்று நெனைத்துக் கொள்ள வேண்டியதுதான். அவங்களுக்குத் தெரிஞ்சி திருப்பித் தந்தால் தரட்டும். இல்லைன்னா ஒரு கொமரைக் கரையேத்தின புண்ணியம் நமக்குக் கிடைக்குமுங்க'' இரக்கமும் கரிசனமும் கலந்த ஒரு  தழுதழுப்புடன் அவள் பேசிமுடித்தாள். இப்படித்தான் என் மனைவி...... இந்த இரக்கம் என்னிடமிருந்து அவளுக்குப் போனதோ அவளிடமிருந்து எனக்கு வந்ததோ தெரியவில்லை.   
 வீட்டு முகப்பிலிருந்து  வளவுக்குள் போனபோது, மாசானமுத்து அண்ணன் தோட்டத்திலிருந்து தண்ணீர் பாய்ச்சிய தென்னையிளமரம்  தள்ளியிருந்த  கன்னிப்பாளையொன்று என் கண்ணில்பட்டது.
மா. இராமச்சந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com