ஒன்ஸ் மோர்

திருக்குடந்தையில்  அமைந்துள்ள ஒரு திருக்கோயில் குடந்தைக் காரோணம் என்று திருஞானசம்பந்தரால் பதிகம் பெற்றதாகும்.
ஒன்ஸ் மோர்

திருக்குடந்தையில்  அமைந்துள்ள ஒரு திருக்கோயில் குடந்தைக் காரோணம் என்று திருஞானசம்பந்தரால் பதிகம் பெற்றதாகும். காரோணம் என்றால் என்ன?
பாசுபத சைவகுருவான லகுலீசரால் இரண்டாம் நூற்றாண்டில் பாசுபத சைவ மடம் முதன் முதலாக குஜராத் மாநிலத்தில் காரோணம் என்ற ஊரில் நிறுவப்பட்டது. இவ்வூர் இன்றும் பரோடா அருகில் கர்வான் என்ற பெயரில் உள்ளது. வடமொழிக் கல்வெட்டுகள், இலக்கியங்கள் இவற்றில் கூறப்படும் காயாரோஹணம், காயாவரோஹணம், காயாவிரோஹணம் என்பதன் சுருக்கமே காரோணம் என்பதாகும்.
காயா ஆரோஹணம் என்றால் (பக்தன்) உடலுடன் மேலே (வானத்திற்கு) செல்வது என்பது பொருள். காயா அவரோஹணம் என்றால் பக்தனுக்காக இறைவன் (மனித உருவில்) இறங்கி வருகின்றான் (அவதாரம்) என்பதாகும். மீண்டும் பிறவியில்லை என்ற பொருள் காயாவிரோஹணம் என்று சொல்லப்பட்டுள்ளது.
இவ்வடமொழிச் சொற்களின் சுருக்கமாக காரோஹணம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் கச்சிக்காரோணம், நானக்காரோணம், குடந்தைக் காரோணம் என்று மூன்று கோயில்கள் இருந்தன. இதில் முதலாவது மறைந்துவிட்டது. மற்ற இரண்டும் உள்ளன.
நாகப்பட்டினத்தில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம் திருநாகைக்காரோணம் ஆகும்.
கும்பகோணத்தில் மகாமகக் குளங்கரையின் வடகரையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் திருக்குடந்தைக் காரோணம் ஆகும். இக்கோயில்களுக்குப் பதிகங்கள் அருளிய சம்பந்தர் இப்பதிகங்களைப் பாடுவோர் "கரையா உடலோடு வானடைவர்' (காய அரோஹணம்) என்றும் "தருவார் இடும்பைப் பிறப்பு அறுப்பர் (காய அவரோஹணம்) என்றும் கூறுகின்றனர். இரண்டாம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட லகுலீச பாசுபத தலைமைப் பீடத்தின் இடமான காரோணத்தின் பெயரைத் தாங்கி தமிழ்நாட்டில் கோயில்கள் இருந்தன. இத்தலங்களின் சித்தாந்த விளக்கங்களை ஏழாம் நூற்றாண்டில் சம்பந்தர் தமது பதிகங்களில் எடுத்துரைத்தார் என்பதை நோக்க வேண்டும்.
இறைவன் மனித உருவில் வந்து அருள் புரிந்தான் என்று சொல்லும் புராண வரலாறுகள் நிறைய உள்ளன. திருஞானசம்பந்தரின் பதிகங்களில் கடைசிப் பாடலில் சிறப்பு முத்திரை இருக்கும். சம்பந்தரின் பதிகங்களைப் பாட வல்லார் வானுலகத்தில் உறைவர்; வானுலகு ஆள்வர்; வானோர் உலகத்தில் வீற்றிருப்பர் என்று பல இடங்களில் கூறுகின்றார்.
 ஞானசம்பந்தன் நவின்ற மொழி நலமிகு பத்தும் பண் இயல்பாகப் பக்தியாய்ப் பாடியும் ஆடியும் பயில வல்லோர் விண்ணவர் விமானம் கொடுவா ஏறி விண்உலகு ஆண்டு வீற்றிருப்பர்' என்று திருவெண்குருப் பதிகத்தில் சொல்லுகின்றார். பெரியபுராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறுகள் சொல்லி வைக்கப்பட்டுள்ளன. சிவ பெருமானின் கருணையால் உடலோடு வான் அடைந்ததாகப் பல நாயன்மார்கள் குறிப்பிடப்படுகின்றனர். "கலையா உடலோடு சேரமான்ஆரூரன் திருக்கயிலை சென்றனர்' என்று ஒன்பதாம் திருமுறையில் பூந்துருத்தி காட நம்பி கூறுவதும் எண்ணி நோக்கத் தக்கது.
சைவத்தில் ஒரு பிரிவான காரணேசுவர சமயம் தமிழ்நாட்டில் தஞ்சையில் மட்டுமே பரவியிருக்கிறது. இம்மாவட்டத்தில் நாகைக் காரோணம், குடந்தைக் காரோணம், கரந்தை (தஞ்சை)க் காரோணம் ஆகிய மூன்று காரோணங்கள் உள்ளன. ( சோமலெ அவர்கள் பதிப்பு)
("கும்பகோணத்தில் உலா' என்ற நூலில் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்) 

**************

சங்க பாடல்களிலேயே மரம், செடி, கொடி, பூ, கனி பற்றிய பதிவுகள் இல்லாத பாடல்களே இல்லை. இயற்கையோடு கலந்து வாழ்ந்த நம் வாழ்வு ஏன் இன்று கானலாகிப் போனது? குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலுமான நம் நிலங்கள் ஏன் பாலையாகிக் கொண்டிருக்கிறது? இந்தக் கேள்விகளை எப்போதுதான் நாம் நம்மைக் கேட்டுக் கொள்ளப் போகிறோம்? மீண்டுமொரு பெருஞ்சோர்வு என்னைத் தொற்றிக் கொண்டது. மெல்ல எழுந்து கடற்கரையின் சாலைப் பகுதியில் போட்டிருந்த ஒரு கல் மேடையில் அமர்ந்தேன்.  காற்றில் அடித்துக் கொண்டு வந்த ஒரு பழைய தினமணி நாளிதழில் உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் சில கிராமங்களில் இப்போதும் கூட ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தவுடன் ஒரு மாமரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைப் படித்தவுடன் ஒரு புத்துணர்ச்சி. அந்தத் தாளை எடுத்துப் பத்திரப்படுத்தினேன். இனி மாணவர்களை "மரமண்டை, ஏன்டா மரம் போல நிக்குற?' என்றெல்லாம் திட்டக் கூடாது என்று மனதில் உறுதி செய்து கொண்டேன். கடல் காற்று சில்லென்று என்னை வாரி அணைத்துக் கொண்டது.
("சமூகம் வலைத்தளம் பெண்' என்ற நூலில் தி.பரமேசுவரி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com