வறட்சியை ஏற்படுத்தி வலுவைச் சேர்த்தல்!

வயது 54. கடந்த ஏழுவருடங்களாக கழுத்து வலியால் அவதிப்படுகிறேன். கடந்த ஒரு வருடமாக கழுத்தை திருப்பக் கூட முடியவில்லை.
வறட்சியை ஏற்படுத்தி வலுவைச் சேர்த்தல்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
வயது 54. கடந்த ஏழுவருடங்களாக கழுத்து வலியால் அவதிப்படுகிறேன். கடந்த ஒரு வருடமாக கழுத்தை திருப்பக் கூட முடியவில்லை. MRI SCAN Report-இல் கழுத்து எலும்பு வில்லைகள் முழுவதுமாக தேய்ந்து விட்டது எனத் தெரிகிறது. அதிக நேரம் உட்காரவோ, படுக்கையில் மல்லாந்து படுக்கவோ இயலவில்லை. தலை படுக்கையில் படுவதில்லை. விரைப்பாக உள்ளது. பஸ்ஸில் கழுத்துப்பட்டை போட்டுக் கொண்டால் தான் போக முடிகிறது. உட்கார்ந்த நிலையில் இருகைகளும், இருகால்களும் மரத்துப் போகின்றன. கழுத்தை மெதுவாகத் திருப்பினாலும் எலும்புகள் உரசும் சத்தம் வருகிறது. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை உள்ளதா?
அ.சோமசுந்தரம், பவானி.

இளைத்துப்போன ஒரு நபரை, புஷ்டியாக்க  பயன்படுத்தும் மருந்துகளை முதலில் பயன்படுத்தாமல், அவர் மேலும் இளைப்பதற்கான சிகிச்சை முறைகளை சிறிது காலம் செய்வதால் நல்ல பலன்களைப் பெறலாம் எனும் ஓர் ஆயுர்வேத சித்தாந்தம் தங்களுக்குப் பயன்படலாம். அந்தவகையில் Ankylosing spondylitis, loss of joint space at C2,C3 and C4 facet joint. Small hyperintense cyst at right C7 neural foramina Guß MRI SCAN Report இல் வந்திருக்கும் தங்களுக்கு, சில நாட்கள் மூலிகைகளால் கட்டப்பட்ட பொடி ஒத்தடம் சூடாகக் கொடுப்பதும் அதன் பிறகு வறட்சி ஏற்படுத்தும் மூலிகைப் பற்று இடுவதும் அவசியம். 

காலையில் உணவிற்கு முன், கொட்டஞ்சுக்காதி, ஏலாதி, ராஸ்னாதி என்று பெயரில் விற்கப்படும் சூரண மருந்துகளைப் பொடி ஒத்தடமாக சூடாகக் கொடுப்பதும், இஞ்சி சாற்றுடன் கலந்து ராஸ்னாதி சூரணத்தைச் சூடாக்கி மாலையில் பற்று இடுவதன் மூலமாக வறட்சி ஏற்பட்டு, கழுத்து எலும்பு தேய்மானம் ஏற்பட்டுள்ள பகுதிகளை வறட்சியுறச் செய்ய வேண்டும்.

அதன் பிறகு, அதே கழுத்தினுடைய பகுதியில் கார்ப்பாஸôஸ்தியாதி தைலத்தை சூடாக்கி துணியில் நனைத்து இடுவதும், ஆமணக்கு, நொச்சி, கற்பூரம், புங்கம், கல்யாண முருங்கை, சித்தரத்தை இலை ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் போட்டுக் காய்ச்சி, அதிலிருந்து வெளியேறும் நீராவியை, கழுத்தில் நன்கு படும்படியாகக் காட்டுவதும் நலமே. இதனால் விரைப்பான தன்மையைப் போக்கிக் கொள்ளலாம். இதற்கு ஸ்நேஹ-ஸ்வேதம் என்று பெயர்.

உட்புற வறட்சியை முதலில் ஏற்படுத்திய பிறகு எலும்பு வில்லைகளை வலுப்படுத்துவதே சிறப்பு. அந்த வகையில்-  பசியைத் தூண்டி செரிமானத்தைக் கூட்டும் வகையில் உள்ள அஷ்டசூரணம், வைஷ்வானரம் சூரணம் போன்ற மருந்துகளைச் சாப்பிடச் செய்து குடலில் வாயுவின் ஓட்டத்தை அடக்க வேண்டும். எனிமா முறையும் செய்ய வேண்டும். 

அதன் பிறகு உட்புற நெய்ப்பைத் தரும் ஷீரபலா101, விதார்யாதி கிருதம், அஸ்வகந்தாதி லேஹ்யம் போன்ற மருந்துகளைப் பிரயோகிப்பதன் மூலம், வில்லைகளை வலுப்படுத்தி, அவற்றிற்குத் தேவையான நெய்ப்பும், வலுவையும் சேர்க்கலாம். இவை யாவும் சிறப்பான  முயற்சிகளே. இதையும் மீறி வில்லைகளின் தேய்மானம் சரியாகாதிருந்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம். மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் அனைத்தும் ஆயுர்வேத மருத்துவமனைகளில் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com