அதிசய இரட்டையர்கள்...

அரிதிலும் அரிது  மனிதராகப் பிறப்பது  என்று   அன்று  ஒளவையார் பாடிவைத்தார்.
அதிசய இரட்டையர்கள்...

அரிதிலும் அரிது  மனிதராகப் பிறப்பது  என்று   அன்று  ஒளவையார் பாடிவைத்தார். ஆனால் பிறப்பில்  பல சிக்கல்கள்  நடந்துவிடுகின்றன.  இரண்டு தலை, ஒரே உடம்புடன்   அதுவும்  ஒரு பெண் பிறந்தால் எப்படி இருக்கும்? இந்தக் குழந்தைக்கு ஒற்றைப் பெயர் வைப்பதா... இரட்டைப் பெயர் வைப்பதா என்ற குழப்பத்தில், இரண்டு தலை இருப்பதால், இருவர் என்று  தீர்மானித்து இரண்டு பெயர்களை  பெற்றோர் வைத்து விட்டனர்.

அப்படி அதிசய இரட்டை தலை பிறவியாய் பிறந்து ஆச்சரிய வாழ்வை சகஜமாக வாழ்ந்து   அனைவரையும்  திகைக்க வைப்பவர்கள்தான் இருபத்தாறு வயதாகும் அப்பி மற்றும் பிரிட்டனி  ஹென்செல். 

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் அப்பி,  பிரிட்டனி  ஹென்செல்  இருவருக்கும் ஒரே உடல் என்றாலும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல், வயிறு போன்றவைகள் தனித்தனியாக உள்ளது. செயல்படுகிறது. 

சாதாரண  குழந்தைகளுக்கு  மிக  எளிதானதாக அமையும்  நடப்பது,  ஓடுவது, கைதட்டுவது  இந்த  இரட்டையர்களுக்குச்  சவாலான  விஷயமாக  சிறு வயதில் இருந்தது.

இந்த இரட்டையர்கள்  குழந்தைப் பருவம் முதல்   இளமைப் பருவம் வரை எப்படி நடந்தார்கள், விளையாடினார்கள்.. சாப்பிட்டார்கள்  என்பதை விளக்கும்   வீடியோ தொகுப்பு தொலைக்காட்சிகளில்  நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகியுள்ளது.

வேகமாக ஓட, நீச்சல் அடிக்க, சைக்கிள் ஓட்ட   இந்த அதிசய இரட்டையர்களால் முடியும்.  ஆனால்  அதற்கு  பிறரைவிட   சற்று மெனக்கெட வேண்டும்.

அப்பி,  பிரிட்டனி  ஹென்செல்  ஆகிய இருவரும் கார் ஓட்டுவதில் வல்லவர்கள். அப்பி  சாலையின் வலது பக்கத்தின்  கண்காணிப்பைச் செய்ய,  பிரிட்டனி   சாலையின் இடது பக்க  கண்காணிப்பைச் செய்து கொள்கிறார். 

புகழ்பெற்ற பெத்தேல்  பல்கலைக்கழகத்தில் கடந்த 2012- ஆம் ஆண்டு தங்கள் பட்டப்படிப்பில் இந்த  இரட்டையர்கள்  தேறியிருப்பது இன்னொரு அதிசயம். அப்பிக்கு கணிதமும், பிரிட்டனிக்கு எழுதுவதும் பிடிக்கும்.

இவர்கள் பார்க்க வித்தியாசமாக இருப்பதால் பலர் இவர்களை புகைப்படம் எடுக்க நினைப்பார்கள். இவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுப்பவர்களை இவர்களுக்குப் பிடிக்காது.

காதல் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது இவர்களது விருப்பம். 

இரட்டையர்களின் உடலை தனித்தனியாக பிரிக்க பெற்றோர் விரும்பவில்லை. காரணம்  அறுவை சிகிச்சை  செய்தால் அவர்கள் உயிருக்கு  ஆபத்து நேர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியதால்  இரட்டையர்களாக இருக்கட்டும்  என்று  முடிவு செய்தார்களாம்.
- அங்கவை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com