அவரவர் பார்வை

எல்லா இளைஞர்களையும் போலல்லாமல் இப்படிப்பட்ட பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வேண்டுமென்பது அவன் எண்ணம், விருப்பம். 
அவரவர் பார்வை

நாராயணனுக்கு ரேவதி மணம் செய்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. 
ரேவதி 22 வயதில் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குக் கூட தாயாகாத நிலையில்... ஏன்...  கருவே தரிக்காமல் 23 வயதில் விதவையானவள். இவ்வளவிற்கும் அவள் அனாதை. நட்ராஜ் அவளை அனாதை ஆசிரம் போய் தேடிப் பிடித்து திருமணம் முடித்தான். 
எல்லா இளைஞர்களையும் போலல்லாமல் இப்படிப்பட்ட பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வேண்டுமென்பது அவன் எண்ணம், விருப்பம். 
 உலகத்தில், நாட்டில், ஊரில் இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதில் நாராயணனுக்கு ரொம்ப மட்டற்ற மகிழ்ச்சி. ஆகையால் இந்த திருமணத்திற்கு அவனே நண்பனுக்குத் துணையாய்ப் போய் முடித்தான். 
நல்லவர்களை நாடு வாழ வைப்பதில்லையா இல்லை, கடவுள் விட்டுவைப்பதில்லையா..... தெரியவில்லை.  அலுவலகம் விட்டு வந்த நாராயணன் வீட்டிற்கு வந்து சேராமல் நடு வழியிலே மோட்டார் விபத்தில் இறந்து போனதில் இவனுக்கு ரொம்ப அதிர்ச்சி. 
"அண்ணா... அண்ணா என் வாழ்க்கை இந்த கதி கோலமாச்சே''  ரேவதி இவனைக் கண்டதும் வாயிலும் வயிற்றிலும் மார்பிலும் அடித்துக் கதறி அழுதது இவனைப் பொறுத்த வரை வாழ்வில் பெரும் துக்கம். 
ஆனாலும் யாரால் என்ன செய்ய முடியும்?  விதி வலியது.
"கலங்காதம்மா'' அவளுக்கு ஆறுதல் தேறுதல் சொன்னான். 
எல்லாம் முடிந்த பிறகு, "நீ தனியே இருக்க வேணாம் ரேவதி. திரும்ப உன்னை இருந்த இடத்திற்கே கொண்டு விடுறேன்''  என்று சொன்னான்.
"வேணாம்ண்ணா எனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சதில் அங்கே இருக்கிற என் மாதிரி பொண்ணுங்க, தோழிங்களுக்கெல்லாம் சந்தோசம். தங்களுக்கும் இப்படி கிடைக்கும்ன்னு பெரும் நம்பிக்கையோட இருக்காங்க. இப்போ...நான் திரும்ப இந்த கோலத்தோட போனேன்னா... நமக்கு இதுதான் கடைசிவரை விதிக்கப்பட்ட வாழ்க்கை, விதி, சாபம், விளங்காதுன்னு  வெறுத்து மனமொடிஞ்சி போவாங்க. அவுங்க கனவு, மனசுகளை நொறுக்க வேணாம். நான் அவர் விட்டுப் போன இந்த வீட்டிலேயே இருக்கேன். என் வயித்துப் பாட்டுக்கு மட்டும், உங்க கட்சி செல்வாக்கை வைச்சி எனக்கு சின்ன வேலை வாங்கித் தாங்க'' என்று சொன்னாள்.
 நாராயணனுக்கு அவள் சொல்வதிலும் நியாயம் இருந்தது. ஆகையால் "சரி' சொன்னான். இவனும் வேலைக்காக அதிக கஷ்டப்படவில்லை. தன் கட்சி பலம், உள்ளுர் செல்வாக்கை வைத்து நிர்மல் - விமல் நூற்பாலையில் அவளைக் கணக்கெழுதும் வேலைக்கமர்த்தினான். 
ஆறுமாதங்களுக்குப் பிறகு ஓர் இளைஞன் இவனைத் தேடி வந்தான்.
 "நான் பரந்தாமன் சார்''  என்று அவனே தன்னை அறிமுகம் செய்து கொண்டு... "நான் நிர்மல் - விமல் நூற்பாலையில் வேலையில இருக்கேன். ஒரு உதவி'' என்றான்.
"சொல்லுங்க''  
"நா....நான் ரேவதியை விரும்புறேன்''   
நல்ல செய்திதான். ஆனாலும் நாராயணனுக்கு அது அதிர்ச்சி. அவனை ஏற இறங்கப் பார்த்தான். 
"நீங்கதான்....அது அம்மா அப்பா, அண்ணன் தம்பி, தெய்வம்ன்னு சொல்லிச்சு. உங்களைக் கேட்டு உங்க விருப்பம் என்னவோ அதுதான் என் விருப்பம்ன்னு  சொல்லிச்சு'' என்றான்.
இப்போது, நாராயணனுக்கு ஒரு பெரிய பொறுப்பு தன் மீது விழுந்தது புரிந்தது. அதே சமயம் ரேவதி மறுமணத்திற்குத் தயார் என்பதும் அவன் வாய் வார்த்தையிலேயே தெரிந்தது.
"அவள் உன்னைக் காதலிக்கிறாளா?''   விசாரித்தான்.
"அது என்னைக் காதலிக்குதா, காதலிக்கலையா தெரியலை சார். ஆனா அதுகிட்ட நான் உன்னை விரும்பறேன், திருமணம் முடிக்க ஆசை, விருப்பம் சொன்னேன். அதுக்குத்தான் அது... எல்லாம் நீங்கன்னு சொல்லிச்சு'' சொன்னான்.
நாராயணன் ரொம்ப தெளிவாகி நிமிர்ந்தான். சரியாய் முடிக்க ஆயத்தமானான்.
"நீங்க மனைவியை இழந்தவரா?'' கேட்டான்.
"இல்லே''
"விவாகரத்து?''  
"திருமணமே முடிக்கலை சார்''
"அப்புறம் எப்படி இப்படி?''  - ஆளை ஏற இறங்கப் பார்த்தான்.
"எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்தே விதவைக்கு வாழ்வு கொடுக்கணும்ன்னு முடிவு''
"அப்படியா...  காரணம்?''
"என் அக்கா சிறு வயசுல விதவையாய் இருந்து பட்ட கஷ்டம்'' பரந்தாமன் குரல் பிசிறடித்தது. 
"உன் அம்மா... அப்பா?''  
"எல்லாருக்கும் என் மனசு தெரியும். எனக்கு திருமணம்ன்னா ஒரு விதவைதான்னு எப்பவோ என் முடிவைச் சொல்லிட்டேன். அதனால என் குடும்பத்தார்க்கு நான் கை காட்டினதுதான் பெண். இதுல கூடுதல் சந்தோசம் ரேவதி அனாதை என்கிறது''
"இதுக்கு உங்க அம்மா அப்பா?''  
"பிரச்சனையே இல்லே. வாங்க நீங்களே பேசலாம்''  சொல்லி மறு நாளே அழைத்துச் சென்றான். 
அவர்கள் ரொம்ப தெளிவாய் இருந்தார்கள். 
"அவன் விருப்பம் எங்க விருப்பம்'' - சொன்னார்கள். 
நாராயணன் ரேவதியையும் கேட்டான். சம்மதம் தெரிவித்தாள்.
ஒரு சுபயோக சுபதினத்தில் அவர்கள் திருமணம். 

"அண்ணே''  குரல் கலைத்தது. 
நாராயணன் நிமிர்ந்து பார்த்தான். கரை வேட்டி கந்தசாமி உள்ளே நுழைந்தான். அவனைத் தொடர்ந்து... மாநில உபதலைவர்.
வரவேற்பு உபசரிப்புக்குப் பிறகு...
"சொல்லுங்க''   இவன் அவர்களை ஏறிட்டான்.
"நேத்திக்கு நம்ப தலைவரைச் சந்திச்சோம். அவர்கிட்ட நீங்க விளம்பரம் இல்லாம முடிச்ச நல்ல காரியத்தைச்  சொன்னோம். அனாதைப் பொண்ணுக்கு வாழ்க்கைக் கொடுத்தது. அடுத்து மறுமணம்...சொன்னோம். ரொம்ப புரட்சியாய் இருக்குன்னு தலைவர் ரொம்ப சந்தோசப்பட்டார். இதை நாட்டு மக்களுக்குத் தெரிவிச்சு அவர்களை இன்னும் ஊக்கப்படுத்தணும். அதுக்கு சம்பந்தப்பட்டவர்களைக் கெüரவப்படுத்தும்விதமாய் விழா எடுத்து, கட்சி நிதியிலிருந்து ரெண்டு லட்சம், சீர்வரிசை கொடுத்து,  உங்களையும் கெளவரப்படுத்தணும்ன்னு  சொல்லி உங்க சம்மதம் தம்பதிகள் சம்மதம் வாங்கி வரச் சொன்னார்'' என்று வந்த விசயத்தைச் சொன்னான் கந்தசாமி.
"ஆமாம்ண்ணே''  உபதலைவரும் அதற்குத் தலையாட்டினார் .
இப்போதுதான் நாராயணனுக்குத் தான் செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது. அதை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்வது நல்லது என்றும் தெரிந்தது. அதே சமயம் மனசுக்குள் சின்ன தயக்கம்.
 "எனக்கு பாராட்டு, கெளரவம் வேணாம்''  சொன்னான்.
"உங்க தன்னடக்கம் தெரியும்ண்ணே. இதையும் தலைகிட்ட பேசினோம். உங்க விருப்பம் எப்படியோ அப்படி விடுவோம்...  சொன்னார். அதனால அதைப் பத்தி கவலை வேணாம். அவுங்ககிட்டதான் நீங்க சம்மதமும் தேதியும் வாங்கணும்'' என்றான் கந்தசாமி. 
 "சரி. நான் கேட்டுச் சொல்றேன்'' சொல்லி அனுப்பிவிட்டு மாலையே  நாராயணன், தம்பதிகளைப் பார்த்து சேதி சொன்னான்.
ஒரு விநாடி யோசித்த பரமானந்தம், "இது கட்சிக்கு வேணும்ன்னா வியாபாரமும் விளம்பரமுமாய் இருக்கலாம் சார். ஆனா வாழ்க்கைக்கு வேணாம். மன்னிச்சுக்கோங்க. எங்களுக்கு விருப்பமில்லே'' சொன்னான்.
"ஆமாம்ண்ணே'' - ரேவதியும் திருப்தியாய்த் தலையசைத்தாள்.                  
காரை ஆடலரசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com