திரைக் கதிர்

நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் வெளியான மராத்தி திரைப்படம் "சாய்ராட்'. ரிங்கு ராஜ்குரு மற்றும் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான
திரைக் கதிர்

• நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் வெளியான மராத்தி திரைப்படம் "சாய்ராட்'. ரிங்கு ராஜ்குரு மற்றும் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம் 5 கோடி பட்ஜெட்டில்   தயாரிக்கப்பட்டு சுமார் 100 கோடிக்கும் அதிகமான வசூலை வாரி  குவித்துள்ளது. விமர்சனரீதியாகவும் பெரிதும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தேசிய விருது பட்டியலையும் அலங்கரித்தது. இதையடுத்து இப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையைப் பெறுவதற்காக பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டன. போட்டிகளுக்கு நடுவே இப்படத்தின் தென்னிந்திய மொழி உரிமையைப் பெற்றிருக்கிறார் ராக் லைன் வெங்கடேஷ். ரஜினியின் "லிங்கா' படத்தைத் தயாரித்தன் மூலம் பரவலாக அறியப்பட்டவர் இவர். கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட  "சாய்ராட்' விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. பிரபல நட்சத்திரங்கள் இல்லாமல் புதுமுகங்களுக்கு வாய்ப்புத் தரும் வகையில் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகவுள்ளது. நட்சத்திர நடிகர்களுக்கான கதையம்சம் இது அல்ல என்பதால் புதுமுகங்கள் தேர்வு தீவிரமாக நடந்து வருகின்றது. மேலும், தெலுங்கு, தமிழ் பதிப்பை இயக்கும் பொறுப்பை நாகராஜ் மஞ்சுளே ஏற்கவுள்ளார். 

• ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும்  "2.0'  படத்தில்  உதவி இயக்குநராக பணிபுரிந்து வருபவர் முரளி மனோகர். "2.0'  படத்தில் பணிபுரியும் போது, ரஜினிக்கும் தனக்கும் நடந்த உரையாடலை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார் முரளிமனோகர். அதில் அவர் கூறியிருப்பதாவது: "முரளி எப்போ டைரக்ட் பண்ணப் போறீங்க..?''- என்ற அவரின் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். "சீக்கிரம் சார்'' திக்குமுக்காடி, சமாளிப்பாகச் சொன்னேன். "ஸ்க்ரிப்ட் பண்ணிக்கிட்டிருக்கீங்களா..?'' - என விடாப்பிடியாகத் தொடர்ந்து கேட்டால் என்னதான் செய்ய முடியும்?! "ஆமா சார்...'' - என என்னையுமறியாமல் சொல்லி வைத்தேன்!. "நல்லாப்  பண்ணுங்க...'' (சில நொடிகள் தன் தாடியைத் தடவி யோசித்துவிட்டு) "அவசரப் படாதீங்க... உங்க படம் (கர்ண மோட்சம்) நீங்க யாருன்னு சொல்லிருச்சு... ப்பா... இன்னும் அதோட தாக்கம் என்னை விட்டுப் போகலிங்க... சீக்கிரம் பண்ணுங்க'' - அச்சு பிசகாத, மிகைப்படுத்தப்படாத அந்த வார்த்தைகள்! "சரிங்க சார்'' - என மீண்டும் எனக்குள்ளிருந்து தன்னியல்பாக வெளிப்பட்ட குரல். உண்மையாக அவர் பேச்சில்  இருந்த ஒரு அக்கறையை மட்டும் உணர்ந்தேன்! சிலிர்த்தேன். நன்றி ரஜினி சார்! என்று நெகிழ்ந்துள்ளார். 

• சமீபத்திய வரவுகளில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பரவலான வரவேற்பைப் பெற்ற படம் "துருவங்கள் பதினாறு'. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன், நம்பிக்கைக்குரிய இயக்குநர்களின் வரிசையில் வைத்துப் பார்க்கப்படுகிறார். இவரின் அடுத்த படைப்பாக உருவாகவுள்ள படம் "நரகாசூரன்". "துருவங்கள் பதினாறு' படத்துக்காக முதன் முதலில் அரவிந்த்சாமியைத்தான் கார்த்திக் நரேன் அணுகினார். ஆனால் அவரால் அப்போது அப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதனால் இப்போது இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். ஸ்ரேயா சரண், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். முதலில் இப்படத்தில் ஒப்பந்தமான நாக சைதன்யா விலகவே, அவருக்குப் பதிலாக சந்தீப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கி, ஒரே மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது.  

• நீண்ட இடைவெளிக்குப் பின் மாதவன் தமிழில் நடித்த படம் "இறுதிச் சுற்று'. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் மாதவனுக்கு பல முன்னணி இயக்குநர்கள் கதை சொல்லி வந்தனர். இந்நிலையில் பு ஷ்கர் - காயத்ரி இணை இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் மாதவனுக்கு நிகரான மற்றொரு கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியும் ஒப்பந்தமானார். "விக்ரம் வேதா' எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்தது.  ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் இந்த வாரம் தொடங்குகிறது.  இதையடுத்து பட வெளியீட்டுத் தேதியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.   ஜூலை 7-ஆம் தேதி படம் வெளியாகும் எனத் தெரிகிறது. 

• 8 விதமான தோற்றங்களில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படம், "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' . புதுமுகம் ஆறுமுக குமார் எழுதி இயக்கவுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் கௌதம் கார்த்திக், காயத்ரி, ரமேஷ் திலக், நிகாரிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவாளராகவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். காடுகளின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால், வனம் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் 8 விதமான தோற்றங்களில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. பழங்குடி மக்களின் தலைவராக நடித்துள்ள விஜய் சேதுபதி முதல் பாதியில் நகரத்தில் வாழ்பவராகவும், இரண்டாம் பாதி முழுவதும் காட்டுக்குள் வாழ்வது போலவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 
-ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com