திரைக் கதிர்

பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் குற்றச் செயல்களை கருவாகக் கொண்டு உருவாகி வரும் படம் "தமிழனானேன்.'
திரைக் கதிர்

• பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் குற்றச் செயல்களை கருவாகக் கொண்டு உருவாகி வரும் படம் "தமிழனானேன்.'  பெண்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்னையைப் பழங்காலத் தமிழன் எதிர் கொண்டால் எப்படி இருக்கும் என்பதன் கற்பனையாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவருக்கு உலகத் தற்காப்புக் கலைகளில் ஆர்வம் அதிகம்.  இதன் காரணமாக இப்படத்தில் ஆதித் தமிழரின் தற்காப்புக் கலைகளான சிலம்பம், குத்து வரிசை, வர்மம், பிடி வரிசை போன்றவை மட்டுமல்
லாமல் குங்பூ, கராத்தே போன்ற உலகின் சிறந்த 8 தற்காப்புக் கலைகளும் காட்டப்பட்டுள்ளன. வந்தனா வரதராஜன், சரவணன் ராதாகிருஷ்ணன், பிரித்தா, திருலோகசந்தர், வெங்கட், அத்விக், ஷக்தி, ஜான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 

• ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் "2.0.' அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம், இந்திய சினிமா வரலாற்றில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் என்று கூறப்படுகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சுமார் 400 கோடியில் இப்படத்தைத் தயாரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தென்னிந்தியா மட்டுமல்லாமல், வட இந்திய மொழிகளிலும் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் இன்னொரு பிரமிக்க கூடிய அம்சமாக இப்படத்தின் இந்தியத் தொலைக்காட்சி உரிமை சுமார் 110 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஜீ டி.வி. நிறுவனம் இந்தப் படத்தின் இந்திய தொலைக்காட்சி உரிமையை பெற்றுள்ளது. தற்போது பிரதான காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரே ஒரு பாடலும், சில காட்சிகள் மட்டுமே மீதம் இருப்பதாக  இயக்குநர் ஷங்கர் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் டீஸர் வெளியிடப்படவுள்ளது. இந்தியா மட்டுமன்றி, உலக அளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தைத் தீபாவளிக்கு வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

• "மிருதன்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி - சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி இணையும் படம் "டிக் டிக் டிக்.' ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. விண்வெளியை மையப்படுத்தி இந்தியாவில் உருவாகும் முதல் படம் என்கிற சிறப்பை இப்படம் பெறுகிறது. விண்வெளிக்கும்,  பூமிக்குமான தொடர்புகளைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. விண்வெளி குறித்து பல ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில், அது பற்றி கற்பனையாக உருவாக்கப்பட்ட கதை இது. சென்னையில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் பிரத்யேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்காக ஹாலிவுட் நடிகர்கள் பலரின் பெயர் பரிசீலனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட ஆரோன் அஜிஸ் ஹாலிவுட் உள்ளிட்ட பல நாட்டு மொழிப் படங்களில் நடித்து உலக சினிமா ரசிகர்களின் கவனம் பெற்றவர். தற்போது இந்தப் படத்தின் வில்லன் வேடத்தை அஜீஸ் ஏற்கிறார். பல இந்திய படங்களுக்காக அணுகியும் நடிக்க ஒப்புகொள்ளாத ஆரோன் அஜீஸ் இப்படத்தின் திரைக்கதைக்காக நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார். 

• 31 வருடங்கள் திரைத்துறையில் இருந்த சாவித்திரி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் மொத்தம் 263 படங்களில் நடித்து தனிச்சிறப்பு பெற்றவர். தற்போது இவரது வாழ்க்கையைத் தழுவி உருவாகி வரும் படம் "நடிகையர் திலகம்.' வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. நாக் அஷ்வின் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் சமந்தா. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. 

• ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களும் வசூல்ரீதியாக சிக்கலைச் சந்தித்து வரும் நேரம் இது. இது குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்தில் வெளிப்படையாக தெரிவித்த கருத்து, எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இதற்கெல்லாம் தீர்வாக வெளிவரவுள்ள "வைகை எக்ஸ்பிரஸ்' படத்துக்கு தமிழகம் முழுவதும் ஆயிரம் விநியோகஸ்தர்களை நியமித்து புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளார் ஆர்.கே. இவர்கள் வீடு வீடாகப் போய் டிக்கெட் விற்பார்கள். இரண்டு டிக்கெட் வாங்கினால் மூன்று டிக்கெட் இலவசம். குடும்பத்தோடு எல்லாரையும் தியேட்டருக்கு வரவழைப்பதே இதன் இலக்கு. திரையிட்ட தியேட்டர்கள் நிரம்புவதுடன்,  ஒரு வார கால ஓட்டத்திற்கு இது உத்தரவாதம் அளிக்கும் என்பது இந்த திட்டத்தின் நோக்கம். இது குறித்து பேசிய ஆர்.கே. "ஆன் லைன் மூலம் டிக்கெட் புக் செய்யப்படும் போது, சர்வீஸ் சார்ஜ் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த வருமானம் எந்தத் தயாரிப்பாளரையும் போய்ச் சேருவதில்லை. இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த வருமானத்தை விநியோகஸ்தர்களுக்குத் தரலாம். இதனால் சிலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். ஆனால், இது பற்றி எந்தச் சங்கமும் இதுவரை வாய் திறக்கவில்லை. இந்தத் திட்டத்தை எல்லாப் படங்களின் விநியோகஸ்தர்களும் நடத்த வேண்டும். அதை நான் தொடங்கி வைக்கிறேன்'' என்றார் ஆர்.கே. 
-ஜி.அசோக்


அட்டையில் : நேகா சர்மா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com