ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மரத்துப் போவதைக் குறைக்க..!

தோலினுடைய தொடு உணர்ச்சிக்காக வேலை செய்யும் நரம்புகளில் வறட்சியும், குளிர்ச்சியும் ஆதிக்கம் செலுத்தும் தறுவாயில்,
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மரத்துப் போவதைக் குறைக்க..!

என் வயது 74. எனக்கு சுமார் 5 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருந்து வருகிறது. சுமார்  3 மாதங்களுக்கு முன் எனக்கு சுகர் 500க்கு மேல் போய்விட்டது. நமஎஅத SUGAR Specialist இடம் காண்பித்து எனக்கு SUGAR தற்போது NORMAL ஆக உள்ளது. எனக்கு கை, காலில் மரத்துப் போகும் தன்மை அதிகம் உள்ளது. அதற்கு என்ன காரணம்?  நான் ஆயுர்வேதம் காட்டும் முறையான வழிமுறைகளைப் பின்பற்ற நினைக்கிறேன். உணவு முறைகள் மற்றும் மருத்துவ முறைகளையும் கூறவும்.
-ப.ச. சுவாமிநாதன், கோவை-10.

 தோலினுடைய தொடு உணர்ச்சிக்காக வேலை செய்யும் நரம்புகளில் வறட்சியும், குளிர்ச்சியும் ஆதிக்கம் செலுத்தும் தறுவாயில், அவற்றிலுள்ள உணர்ச்சித் தன்மையானது குறைந்து, நீங்கள் குறிப்பிடும் மரத்துப் போகும் தன்மைக்குக் காரணமாகி விடுகின்றது. சமையல் தொழிலை முக்கியமாகக் கொண்டுள்ள உங்களுக்கு, சமையல் செய்யும் பாத்திரங்களுடைய குளிர்ச்சியாலும், நெடுநேரம் நின்று தரமான சமையலுக்கான முயற்சியால் ஏற்படும் உடல் வறட்சியாலும், நீங்கள் இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகியிருக்கக் கூடும். உடலில் சிறிதும் எண்ணெய்ப் பசையின்றி, விடியற்காலையிலேயே எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, நெற்றியில் திருநீர் அணிந்து, இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கும்  சமையல் விற்பன்னர்களுக்கு, காலைக் குளிரும், தண்ணீரும் வறட்சியையும், குளிர்ச்சியையும் இயற்கையாகவே தோலில் ஏற்படுத்தக் கூடும்.  அதனால் நீங்கள் குளிப்பதற்கு முன், ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய மஹாநாராயண தைலத்தையோ, பலாஅஸ்வகந்தாதி தைலத்தையோ சூடாக்கி, உடலெங்கும் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதை பழக்கிக் கொண்டால், மரத்துப் போகும் தன்மையைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது. நரம்பு மண்டலங்களில் ஆதிக்க இருப்பிடமாகிய மூளையையும் நாம் இவ்விஷயத்தில் உதாசீனப்படுத்த இயலாது. அதனால் மூளை நரம்புகளை வலுப்படுத்தும் க்ஷீரபலா தைலத்தையோ கார்ப்பாஸôஸ்த்யாதி தைலத்தையோ, வெதுவெதுப்பாக தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பிறகு இளஞ்சூடான வெந்நீரில் குளிப்பதும் நல்லதே.
 நரம்புக் கூட்டத்தை பலவீனப்படுத்தும் காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையைத் தவிர்த்து இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையை சற்று அதிகம் சேர்ப்பதும் நலமே.
நரம்புகளுக்கு உணர்வும், ஊட்டமும் தரும் ஆயுர்வேத மூலிகை நெய்மருந்துகளாகிய இந்துகாந்தம், விதார்யாதி, க்ஷீரபலா 101 போன்றவற்றில் ஒன்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட, மரத்துப் போகும் தன்மையைப் பெருமளவு குறைக்கலாம். சர்க்கரை உபாதையினுடைய அதிக அளவு தாக்கம் மூலமாக, பலரும் தொடு உணர்ச்சியை இழந்து போகிறார்கள். அவர்களும் இதுபோன்ற சிகிச்சை முறையால் பலனடையலாம்.
ஆயுர்வேத மருந்துவமனைகளில் நரம்பினுடைய உணர்வற்ற தன்மையை மேம்படுத்த உதவும் சிகிச்சை முறைகளாகிய உடலெங்கும் ஊற்றப்படும் எண்ணெய்க் குளியல், வியர்வையை உருவாக்கும் மூலிகை இலை ஒத்தடம், நவரக்கிழி, ஆஸனவாய் வழியாக செலுத்தப்படும் மூலிகைத் தைலம், தலையில் எண்ணெய் கட்டும் சிரோவஸ்தி மூக்கினுள்விடும் நஸ்ய சிகிச்சை போன்றவற்றை நீங்கள் செய்து கொள்ளலாம்.
 குடலில் வாயுவினுடைய ஆதிக்கத்தால் ஏற்படும் வறட்சியும் குளிர்ச்சியும், தோல் நரம்புகளை வலுவிழக்கச் செய்யும் என்பதால், நீங்கள் உணவில் வாயுவை அதிகப்படுத்தும் சூடு ஆறிப்போன கொண்டைக் கடலை சுண்டல், பட்டாணி, வேர்க்கடலை, பருப்பு வகைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான வெந்நீரைக் குடிக்கப் பயன்படுத்துவதும், புளித்த மோரை உணவின் இறுதியில் குடிப்பதும், குடல் வாயுவைக் குறைக்க உதவும் எளிய வழிகளாகும். 

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com