உதகையைக் கலக்கிய கலாசார விழா!

கலைக்கு மொழியோ, மதமோ, ஜாதியோ இல்லை. மாறாக மனம் மட்டுமே முக்கியம்-இவ்வாறு கூறியவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை துணைச் செயலர் டாக்டர் நஸீர் லடாக்கி.
உதகையைக் கலக்கிய கலாசார விழா!

கலைக்கு மொழியோ, மதமோ, ஜாதியோ இல்லை. மாறாக மனம் மட்டுமே முக்கியம்-இவ்வாறு கூறியவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை துணைச் செயலர் டாக்டர் நஸீர் லடாக்கி.

இதை அவர் உதகையில் கூறியதற்கும் ஒரு காரணம் இருந்தது. அதுதான் உதகையில் நடைபெற்ற கலாசாரத் திருவிழாவான வசந்த விழாவாகும். 

ஒவ்வொரு பிராந்தியத்திலுமுள்ள மாநிலமும், மற்றொரு பிராந்தியத்திலுள்ள மாநிலத்துடன் கலாசாரப் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த வசந்த விழாவுக்கு தமிழகத்திற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலமும், புதுவைக்கு டாமன்-டையூவும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஜம்மு காஷ்மீர் மாநில சுற்றுலா மற்றும் கலாசாரத் துறையினரும், தென்னகப் பண்பாட்டு மையத்தினரும், உதகை அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து செய்திருந்தனர்.

நாட்டுப்புறக் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வசந்த விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜம்மு காஷ்மீரிலிருந்து ஜம்மு, ஸ்ரீநகர், கார்கில், லடாக் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 7 குழுக்களைச் சேர்ந்த 100 கலைஞர்களுடன், நீலகிரி மாவட்டத்தில் வசித்துவரும் திபெத்திய மக்களும், நீலகிரி மாவட்டத்தின் பண்டைய பழங்குடிகளான தோடர், கோத்தர், குரும்பர், இருளர், பணியர், காட்டுநாயக்கர்,  ஆலுக் குரும்பர் மற்றும் பெட்ட குரும்பர் ஆகிய 8 இனங்களைச் சேர்ந்த பழங்குடியினருமாக நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

இந்த வசந்த விழாவைக் குறித்து, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், உதகை அகில இந்திய வானொலி நிலையத்தின் கூடுதல் இயக்குநருமான மாதவி ரவீந்திரநாத் கூறுகையில்,  உதகையில் காஷ்மீர் மாநில கலாசார நிகழ்ச்சி தீர்மானிக்கப்பட்டவுடனேயே  காஷ்மீர் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களை அழைக்கத் திட்டமிட்டதாகவும், இதில் குறிப்பாக லடாக் பகுதியைச் சேர்ந்த கலைஞர்களை அழைத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், இவர்கள் மாமன்னன் அலெக்ஸôண்டர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த போது லடாக் பகுதியில் நிலவிய காலநிலையில் மயங்கிய அவரது படைவீரர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். அவர்களது வழித்தோன்றல்கள் தற்போதும் அங்குள்ளதால் அவர்களை அழைத்து வந்து இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம். அதேபோல காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும், ஜகர்னா எனப்படும் அவர்களது பாரம்பரிய திருமண நடன நிகழ்ச்சியும்,  பாரம்பரிய நாட்டுப்புற நடன இசை நிகழ்ச்சியும், காஷ்மீரிலுள்ள பஹாரி இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும், ஜம்மு பகுதியில் வசிக்கும் குத் இன மக்களின் நாட்டுப்புற நடன நிகழ்ச்சியும், காஷ்மீரின் நாட்டுப்புற இசையிலேயே மிகவும் தொன்மையானதாக கருதப்படும் சக்கேரி இசை நிகழ்ச்சியும் உதகை மக்களை வெகுவாகக் கவர்ந்தன.

இவர்களோடு நீலகிரி மாவட்ட மக்களாகவே மாறிவிட்ட திபெத்திய மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும், நீலகிரி மாவட்டத்தின் பண்டைய பழங்குடியின மக்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளோடு, மாவட்டத்தில் வசிக்கும் படகரின மக்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டதாகவும், இந்நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் இத்தகைய கலாசார பரிமாற்ற நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்து வடகிழக்கு பிராந்திய மக்களின் கலாசார நிகழ்ச்சியை உதகையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உதகையில் தாங்கள் பங்கேற்ற நிகழ்ச்சி குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை துணைச் செயலர் டாக்டர் நஸீர் லடாக்கி கூறுகையில், கலைக்கு மொழியோ, ஜாதியோ, மதமோ இல்லையென்பது உதகையில் நடைபெற்ற தங்கள் மாநில நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை வைத்து உணர முடிந்ததாகவும், இந்த ஆண்டில் காஷ்மீரில் நிலவிய பனிப்பொழிவின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் வெகுவாக குறைந்திருந்த சூழலில் தங்களது நீலகிரி பயணம் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரஸôர் பாரதி அமைப்பின் ஆலோசகர் வெங்கடேஸ்வரலு கூறுகையில், "இத்தகைய நிகழ்ச்சிகளை பிரஸôர் பாரதியின் உதவியுடன் நடத்துவதன் மூலம் நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் தங்களுக்கும் பெரிய கடமை உள்ளதை உணர்த்துவதாக'' தெரிவித்தார்.

இதற்கு சாட்சியாக, நீலகிரி மாவட்டத்தின் பழங்குடிகளான இருளர் இன மக்களின் நடனங்களும், குரும்பர் இன மக்களின் இசை நிகழ்ச்சிகளும் காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளோடு ஒத்திருந்தது கலைக்கு மொழியோ, மதமோ, இனமோ கிடையாது என்பதைப் பறைசாற்றுவதாகவே அமைந்திருந்தது எனலாம்.
-ஏ.பேட்ரிக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com