ஒன்ஸ் மோர்

ஒவ்வோர் இதழிலும் என்னென்ன மேட்டர் வரவேண்டும் என்பதைத் தீர்மானித்து அவற்றுக்கான படங்களை முடிவு செய்து,
ஒன்ஸ் மோர்

ஒவ்வோர் இதழிலும் என்னென்ன மேட்டர் வரவேண்டும் என்பதைத் தீர்மானித்து அவற்றுக்கான படங்களை முடிவு செய்து, போட வேண்டிய இடங்களில் ஜோக்குகளைப் போட்டு, லே அவுட்டில் கவனம் செலுத்தி பத்திரிகையை, தினசரியோ, வாராவாரமோ மாதா மாதமோ கொண்டு வருகிற ஆசிரியர்தான் எடிட்டர் என்று பொதுவாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஆனால், பிரசுரமாகிற ஒவ்வொரு மேட்டரையும், ஜோக் உள்பட எடிட் செய்கிறவர்தான் எடிட்டர் என்று நான் பொருள் கொள்கிறேன். நான் படித்த பத்திரிகைக் கூடங்களில் எனக்குச் சொல்லிக் கொடுத்தது அப்படி.
 என் பத்திரிகைக் கூடங்களின் பெயர்: வாசன் - கல்கி.
 வள வளவென்று எழுதக் கூடாது. அப்படியே எழுதப்பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரசுரம் செய்யாமல் வளர்ந்து போன முடியை வெட்டி "ட்ரிம்' செய்வதுபோல எடிட் செய்து மேட்டரைச் சுருக்கி வெளியிட வேண்டும்.
அதுதான் எடிட்டரின் வேலை. ஓர் உண்மையை இங்கே சொல்லியாக வேண்டும். இதுவொன்றும் சுகமான வேலையோ, சுலபமான வேலையோ அல்ல. நாம் எழுதியவற்றை திரும்பவும் ஒரு தரம் படிப்பதே போரடிக்கும். அப்படியிருக்க வெளியில் இருந்து வருகின்ற மேட்டரையெல்லாம் படிப்பது என்றால்? அந்தப் பொறுமைதான் ஓர் எடிட்டரின் மிக முக்கிய தகுதி.
கல்கியிலும், ஆனந்த விகடனிலும் பணியாற்றிய நாள்களில் கல்கி, வாசன் ஆகிய ஜாம்பவான்களின் எடிட்டிங் திறமையை நான் அருகே இருந்து கவனித்துப் பார்ப்பதுண்டு.
 சிறுகதையோ, கட்டுரையோ எதுவாக இருந்தாலும் எழுத்தாளர்கள் பக்கம் பக்கமாக எழுதியிருப்பார்கள். அவற்றைக் கொஞ்சம்கூட தயவு இல்லாமல், பாரா, பாராவாக வெட்டித் தள்ளுவார்கள் இந்த இரண்டு பேரும். பிரசுரம் ஆகும்போது பார்த்தால் "அடடா' என்று வியக்கும்படி இருக்கும். கல்லில் இருந்து சிலை வடிப்பது என்கிற கோணத்தில் பார்க்காமல், கல்லிலேயே சிலையிருக்கிறது, சிலையைச் சுற்றியுள்ள தேவையற்ற பகுதிகளைச் செதுக்கி எடுத்து வீசி விட்டால் சிற்பம் தயார் என்ற கோணத்தில் பாருங்கள். அதுதான் எடிட்டிங்.
 "கம்போஸ்' ஆகி வந்த மேட்டரை எடிட் செய்வதற்கு கையில் எடுத்து விட்டால் எனக்கு உலகமே மறந்து போகும். நாலாவது பாராவில் நடுவில் இரண்டு வரிகளைத் தூக்கிவிட்டால் பாதகமில்லை என்று தோன்றி அந்த வரிகளை அடிக்கும்போது முதல் பாராவில் இன்னும்கூட கை வைக்கலாமே என்று தோன்றும். பேனா மீண்டும் முதல் பாராவில் "கிராப்' வெட்டும். இது ஏதோ மற்றவர்கள் எழுத்தில் மட்டும்தான் என்று நினைத்துவிடக் கூடாது. என் எழுத்துகளிலேயே நான் கருணை காட்டுவதில்லை.
 "சாவி'யில் நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டதே என் கேள்வி பதில் பகுதியை ஓ.கே. செய்வதற்குத்தான். எத்தனையோ முறை கேள்விக்கான பதிலை இரண்டு வரிகளில் எழுதி, திருத்தி, குறைத்து ஒரு வரியாக்கி, கடைசியில் ஒரே ஒரு வார்த்தையாகக் கூட ஆக்கியிருக்கிறேன்.
வரலாறு சம்பந்தப்பட்ட எழுத்துகளில் வர்ணனைகள் சற்று நீளமாக இருப்பதுண்டு. அரசகுமாரி தன் தோழியுடன் நீராடி விட்டு மஞ்சத்தில் அமர்ந்து அகிற்புகை போட்டு மயிலிறகால் தலையை ஆற்றிக் கொள்ளும் ஒரு காட்சியை மட்டுமே தொடர்கதையில் ஒரு வாரக் கதையாக எழுதிய காலங்கள் உண்டு... சில வாசகர்கள் அந்த வர்ணனைகளுக்காகவே வாங்கி ரசிப்பதும் உண்டு. ஆனால், அப்படிப்பட்ட வளவளாக்களில் எனக்கென்னவோ உடன்பாடு இல்லை.
1938-ஆம் ஆண்டு ஜுன் மாதம் சென்னை வானொலியில் கல்கி பேசினார். தமிழில் சிறுகதை என்று தலைப்பு. பின்னர் அந்த உரை விகடனில் பிரசுரமாயிற்று.
சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு கல்கி அதில் ஓர் உதாரணம் கொடுத்திருந்தார்.

 ... ஒரு நாள் காஞ்சிபுரம் உபய வேதாந்த தாத்தய்யங்கார் ஸ்வாமிகள், அவருடைய வேலைக்காரன் குப்பனைக் கூப்பிட்டு, "அடே குப்பா! நீ உடனே ஸ்ரீபெரும்புதூர் திருவேங்கடாச்சாரி ஸ்வாமி வீட்டுக்கு ஓடிப்போய் திருக்குடந்தை திருநாராயண ஐயங்கார் ஸ்வாமி, திருக்கோயில் ஆராதனைக்குத் திருத்துழாய் எடுத்துக்கொண்டு திருக்குளத்திற்குப் போனபோது, திருப்பாசி வழுக்கவே, திருவடி தவறி விழுந்தார் என்று சொல்லு'' என்றார்.
 "சரி சாமி' என்றான் குப்பன். தான் சொன்னதை குப்பன் சரியாக மனதில் வாங்கிக் கொண்டானா என்பதை உறுதி செய்து கொள்ள, "அங்கே போய் என்ன சொல்லுவே, சொல்லு!'' என்று கேட்டார்.
 குப்பன் சர்வ சாதாரணமாகப் பதில் சொன்னான்.
 இது தெரியாதா சாமி! "கும்பகோணத்து அய்யரு குட்டையில் விழுந்தாரு... இதுதானே சேதி'' என்றான்.  குப்பன் செய்தானே, அதுதான் எடிட்டிங்.
-"என்னுரை' என்ற நூலில் சாவி.
தொகுப்பு: கேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com