திரைக் கதிர்

ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி "தி இஸ் இட்' என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. அதைப் போன்று
திரைக் கதிர்

• ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி "தி இஸ் இட்' என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. அதைப் போன்று இந்தியாவில் முதன் முறையாக ஏ.ஆர். ரஹ்மானின் இசைச் சுற்றுப் பயணம் திரைப்படமாக வெளியாகவுள்ளது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் நடந்த இசைப் பயணத்தின் முழுமையான தொகுப்பு இது. ஒய்.எஃப் மூவீஸ் நிறுவனத்துடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு "ஒன் ஹார்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி  இப்படம் கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் முதன் முறையாக திரையிடப்பட்டது. இதையடுத்து தற்போது இந்தியாவில் இது வெளியாகிறது. அமெரிக்காவின் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசைச் சுற்றுபயணம், இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்யேக பேட்டிகள் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன. திரை இசைப் பயணத்தில் ரஹ்மானுக்கு இது 25-ஆம் ஆண்டு என்பதால், இப்படம் இந்தியாவில் திரையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

• குறும்பட படைப்பாளிகளுக்கு மேடை அமைத்து தரும் வகையில், மூவி பஃப் நிறுவனத்தின் சார்பில் ஃபர்ஸ்ட் கிளாப் குறும்பட போட்டியை அறிவித்திருந்தது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் குறும்படங்கள் வரவேற்கப்பட்டன. மூன்று நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய படங்கள் இதில் பங்கேற்றன. தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 300 படங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டன. சிறந்த கதைக் களம், நடிப்பு ஆளுமை, திரைக்கதையாக்கம், சுவாரஸ்யம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய "அப்பாலாக்', மகேஷ் பாலசுப்பிரமணியம் இயக்கிய "இந்த நாள் இனிய நாள்', ஸ்ரீவிஜய் கணபதி இயக்கிய "அவள் அழகு', நட்டுதேவ் இயக்கிய "திங்க் அண்ட் இங்க்', பிரபு ஜெயராம் இயக்கிய "என்னங்க சார் உங்க சட்டம்' ஆகிய 5 படங்கள் சிறந்த குறும்படங்களாகத் தேர்வு செய்யப்பட்டன. இந்தப் படங்கள் தமிழகம் முழுக்க 150 திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பும் உருவாக்கித் தரப்பட்டுள்ளது. சூர்யாவின் 3டி நிறுவனம் வாய்ப்புகளை உருவாக்கித் தர முன் வந்திருக்கிறது.

• பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு "நடிகையர் திலகம்' என்ற பெயரில் தமிழில் உருவாகிறது. நாக் அஸ்வின் இயக்குகிறார். சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சமந்தா ஒப்புக் கொண்டார். கதாபாத்திரத்துக்காக உடல் எடையை ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்காக அப்படத்திலிருந்து அவர் விலகினார். இதையடுத்து அந்த வேடத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமானார். தனக்குப் பிடித்த நடிகை என்பதால், இதில் தானும் நடிக்க வேண்டும் என சமந்தா கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற இயக்குநர் சமந்தாவின் கதாபாத்திரத்தையும் கதையில் இணைத்தார். சாவித்திரி பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக களம் இறங்கியவர் ஜமுனா. இந்த கதாபாத்திரத்திரம்தான் சமந்தாவுக்கு என பேசப்பட்டு வந்தது. அதே சமயம் சாவித்திரியின் மார்க்கெட்டை முடிவுக்கு கொண்டு வந்தது சரோஜாதேவி என்று சொல்லப்படுகிறது. அவரது வரவுக்குப் பின்புதான் சாவித்திரிக்கு பட வாய்ப்புகள் மங்கின. அந்த கதாபாத்திரமும் படத்தில் முக்கியமாக இடம் பெறுகிறது. இந்த இரு கதாபாத்திரங்களும் கதையில் இடம் பெறுவதால், அதில் யாருடையை கதாபாத்திரத்தை ஏற்பது என்பதில் சமந்தா குழப்பத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

• வாகா, வீரசிவாஜி ஆகிய படங்களைத் தொடர்ந்து விக்ரம்பிரபு நடித்து வரும் படம் "பக்கா'. சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம்புலி, மனோபாலா, சிங்கமுத்து, மயில்சாமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் எஸ்.எஸ்.சூர்யா. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்த நிலையில், விக்ரம் பிரபு ஜோடியாக நடிப்பதற்கு கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்தது. இக்கதைக்கு இரு கதாநாயகிகள் தேவை என்பதால், இந்த தேர்வில் இழுபறி நீடித்து வந்தது. பலரின் பெயர் பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது நிக்கி கல்ராணி, பிந்துமாதவி இருவரும் அந்த வேடங்களுக்குத் தேர்வாகியுள்ளனர். பென் கண்ஸ்டோரிடியம் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சரவணன் ஒளிப்பதிவு இயக்குநராக பணியாற்றுகிறார். சத்யா இசையமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். கலை இயக்குநராக கதிர் பணியாற்றுகிறார். படத்தொகுப்பாளராக சசி பணியாற்றுகிறார்.  ஜூன் மாதம் படம் திரைக்கு வருகிறது. 

• ஆட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "ஒரு கிடாயின் கருணை மனு'. ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்  நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில்,  விதார்த்,  ரவீனா, ஜார்ஜ், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரகுராம் இசையமைக்கிறார்.   கே.எல். பிரவீன் படத்தொகுப்பு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சுரேஷ் சங்கையா. பங்கேற்று நடித்துள்ள 40 முக்கிய கதாபாத்திரங்களுக்கு திரைக்கதையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சிறு தெய்வங்களின் வழிபாடு  முக்கியம் என்பது இந்த கதை சொல்ல வரும் செய்தியாக இருக்கும். அருப்புக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கதை நடக்கிறது. கனடா, கேரளம் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு இப்படம் அனுப்பப்பட்டுள்ளது. 
-ஜி.அசோக்

அட்டையில் :  அதிதி ராவ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com