மருத்துவர்களுக்கான பாடப் புத்தகம்!

புத்தகம் எழுதுவதற்கு முதலில் நேரம் வேண்டும், பின் பொறுமை வேண்டும். அதற்கு மேல் எழுத்தின் மேலும்,

புத்தகம் எழுதுவதற்கு முதலில் நேரம் வேண்டும், பின் பொறுமை வேண்டும். அதற்கு மேல் எழுத்தின் மேலும், தான் எழுதும் பொருளின் மீதும் ஓர் ஆளுமை வேண்டும். மூன்றும் நிரம்பப் பெற்றவர்தான் பேராசிரியரான மருத்துவர் டி. வி. தேவராஜன். இவர் சுமார் 29  ஆண்டுகளாக இலவசமாக மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காகப் பாடம் நடத்துபவர். இவருக்கு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?  கூறுகிறார் டாக்டர்  தேவராஜன்: 
"நான் சுமார் 29  ஆண்டுகளாக சென்னை மருத்துவ கல்லுரியில் இலவசமாக இளம் மாணவ, மாணவியர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டு வருகிறேன். ஒவ்வொரு நாளும் அதே பாடப் புத்தகங்கள் தான் இருக்கின்றன. இன்று நம் வாழ்க்கை முறையும், அதை ஒட்டிய  பலவும் மாறி விட்டன. மருத்துவத்துறையில் பல்வேறு புதிய நோய்களும், அதற்கான புதிய மருந்துகளும், சிலவற்றிற்கு புதிய முறைகளும் வந்து விட்டன. அதை இன்றைய இளம் மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அதற்காகப் புத்தகம் எழுத வேண்டும் என்று தோன்றியது.  பல ஆண்டுகளாக இதையே சிந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்தேன்.

உடல் கூறு என்று நாம் எழுத ஆரம்பித்தால் ஒவ்வொரு பாகமும், ஏன், நகம், சதை கூட இந்த மருத்துவ புத்தகத்தில் இடம் பெறவேண்டும் என்று நினைத்தேன். இந்த புத்தகம்,  இன்றைய மருத்துவத்தில் உள்ள புதுமைகளை, மற்றும் அது எப்படி நடைமுறைக்கு வந்தது என்ற விஷயங்களைக் கூட சொல்ல விரும்பினேன். மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் படங்கள், charts, மற்றும் பல்வேறு வகையில் மாணவர்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் உள்ள அனைத்தும் இந்த புத்தகத்தில் இருக்க வேண்டும் என்றும், நினைத்தேன். எழுதுவதை நான் செய்துவிடலாம், ஆனால் படங்களையும், அதற்கான குறிப்பேடுகளையும் எங்கிருந்து எடுப்பது என்று புரியாமல் இருந்தேன். 

அப்போது நான் இருக்கும் அப்போலோ மருத்துவமனைத் தலைவர் திரு.ரெட்டியைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னேன். நாமே இந்த புத்தகத்தைக் கொண்டு வரலாம் என்றார் அவர்.  சுமார் 11  ஆண்டுகாலம் தொடர்ந்து இந்த வேலையில் இறங்கினேன். காலை மருத்துவமனைக்கு வருவதற்கு முன் புத்தக வேலைகள் செய்வேன். பின்னர் பகலில் என் தூக்கத்தை தியாகம் செய்து புத்தக வேலை பார்ப்பேன். மாலை திரும்பவும் வீட்டுக்கு வந்த பின் புத்தக வேலை தொடங்கும். இரவு வெகு நேரம் கழித்தே தூங்கப் போவேன். இப்படி உழைத்த பின் ஒரு நாளில் மேலும் சில விஷயங்களை இந்த புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று தோன்றியது. 

அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களில் பலரையும் இதில் சேர்க்க விரும்பினேன். சுமார் 42 மருத்துவர்கள் இதில் இன்றைய மருத்துவத்தில் உள்ள பல்வேறு விஷயங்களை சொல்லி உள்ளார்கள். மகப்பேறு மருத்துவத்தில் என் மனைவி லட்சுமி தேவராஜன் சென்னையில் ஒரு சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளார்கள். வீட்டில் நான் வேலை செய்வதை பார்த்து என்னை எந்த ஒரு நிலையிலும் தொந்தரவு செய்யாமல், இன்னும் சொல்லப் போனால் பல சமயங்களில் எனக்கு உதவியும் செய்து இந்த புத்தகத்தில் ஒரு சிறந்த கட்டுரையும் எழுதி உள்ளார் அவர். 

உலகத்திலேயே சிறந்த மருத்துவ பாடப் புத்தகங்கள் என்று எடுத்துக் கொண்டால் இரண்டு புத்தகங்கள் உள்ளன. அவை இரண்டும் வெளிநாட்டினரால் எழுதப்பட்டவை. ஆனால் இந்த  புத்தகம் தான் ஆசியாவிலேயே முதன் முறையாக இந்திய   மருத்துவர்களால் எழுதப்  பட்ட முதல் மருத்துவ பாடப் புத்தகம் என்ற பெயரைப் பெற்றுள்ளது'' என்றார் டாக்டர் தேவராஜன். 

இந்த புத்தகத்தில் பேராசிரியர் தேவராஜன் ஒன்றல்ல, இரண்டல்ல  சுமார் 14 கட்டுரைகளை எழுதியுள்ளார்.   மற்ற மருத்துவ புத்தகங்களை விட இந்த புத்தகத்தில் 13 பிரிவுகள் அதிகமாக உள்ளன. இந்த புத்தகத்தில், யோகா உடலுக்கு எவ்வளவு இன்றியமையாதது, மருத்துவர்களும் சட்டமும் போன்ற பிரிவுகள் மட்டுமல்லாமல், மற்ற மருத்துவ முறைகளும், புகை மற்றும் மது அருந்துவோருக்குக்கான மருத்துவ சிகிச்சைகள் என்று பல புதிய விஷயங்களும் இதில் அடங்கியுள்ளன. இன்றைய ஸ்டெம் ஷெல் (Stem Shell) சிகிச்சை முறைகளையும் இந்த புத்தகம் விட்டு வைக்க வில்லை.  1500  பக்கங்கள் உள்ள இந்த புத்தகம், மாணவர்கள் எளிதாகச் தூக்கிச் செல்ல 2 தொகுதிகளாக வந்துள்ளது. 
-சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com