ஒன்ஸ் மோர்

பெரிய மனிதருக்கு ஒரு மரியாதை, சின்ன மனிதருக்கு ஒரு மரியாதை என்பது இந்தக்காலத்தில் சர்வ சாதாரணம்.
ஒன்ஸ் மோர்

பெரிய மனிதருக்கு ஒரு மரியாதை, சின்ன மனிதருக்கு ஒரு மரியாதை என்பது இந்தக்காலத்தில் சர்வ சாதாரணம். ஆனால் பெருந்தலைவர் காமராஜருக்கு அப்படியொரு குணம் இருந்து யாருமே பார்த்திருக்க முடியாது. எல்லாருக்கும் சம மரியாதை தருவதே அவருடைய சுபாவம்.

ஒருநாள் இரவு பத்து மணிக்கு மேலிருக்கலாம். ஏதோ கூட்டத்திற்குப் போய்விட்டு வீடு திரும்பினார் காமராஜர். உதவியாளர் வைரவன் சாப்பாடு பரிமாறலானார்.

அவர் சாப்பிடத் தொடங்கும் முன்பாக அங்கே ஜெயராம ரெட்டியாரும் வந்து சேர்ந்தார். அவர் கட்சிக்காரர் மட்டுமல்ல, காமராஜரின் மிக நெருங்கிய பழைய நண்பரும் ஆவார்.

"ஆந்திரா டூர் போயிருந்தே போலிருக்கே. அங்கெல்லாம் நிலைமை எப்படியிருக்கு?'' என்று கேட்டுக்கொண்டே, "இவருக்கும்  இலை போடு வைரவா'' என்றார் காமராஜர்.

இருவரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்து சாப்பிட்டவாறே அரசியல் நிலவரங்களைப் பேசலானார்கள். சாப்பாடு முடிந்தது. ரெட்டியார் போய்விட்ட பிறகு - பாத்திரம் பண்டங்களைக் கழுவி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார் வைரவன்.

அப்போது பார்த்து சமையல் கட்டுக்கு வந்து சேர்ந்தார் காமராஜர். "ஏம்பா... நீ சாப்பிடலே?'' என்றார்.

பதில் சொல்ல முடியாமல் தவித்தார் வைரவன். "என்னப்பா கிறுக்கனாயிருக்கே! ரெண்டு பேருக்குத்தான் சாப்பாடு இருக்கும்னா, ரெட்டியாரை ஓட்டலுக்கு அனுப்பி இருக்கலாமில்லே? சரி... சரி...'' என்று சொல்லிவிட்டு வேக வேகமாக வெளியே போனார் காமராஜர்.  டிரைவரை அழைத்து வைரவனுக்காக எங்காவது போய்ச் சாப்பாடு எடுத்து வரச் சொன்னார்.

சாப்பாடு வந்து சேர 12 மணியாகிவிட்டது.  வைரவன் சாப்பிட்ட பிறகே நிம்மதியோடு படுக்கைக்குச் சென்றார் காமராஜர்.

இப்படியெல்லாம் சங்கடங்கள் ஏற்படும் என்றுதானோ என்னவோ அதன் பிறகெல்லாம் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது யார் வந்தாலும் காமராஜர் பேசுவாரே தவிர, "சாப்பிடுறீங்களா?'',
"சாப்பிட்டீங்களா?'' என்றெல்லாம் கேட்காதவராக மாறிவிட்டார்!

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அவர் கடைசி காலச் சாப்பாடு கிட்டத்தட்ட பத்தியச் சாப்பாடு போலிருக்கும்!

இரவில் நீண்ட நேரம் விழித்துக் கொண்டிருப்பார் காமராஜர். அதேநேரம் படுத்தவுடனும் தூங்கியும் விடுவார்! காரில் எங்காவது நெடுந்தூரம் பயணம் என்றால் காரின் பின்சீட்டில் அப்படியே சுருட்டிக்கொண்டு படுத்து விடுவது அவர் வழக்கம். வெளியூர் சுற்றுப்பயணம் முடிந்து அவர் அப்படித் திரும்பி வந்து கொண்டிருந்தார் ஒருசமயம்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் தனது கார் அப்படியே நிற்பதும், ஏராளமான கார்களின் ஹாரன்கள் ஒலிப்பதும் அவரை விழிப்படையச் செய்தன. எழுந்து வெளியே பார்த்தார் காமராஜர். சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் (அப்போது மர்மலாங் பாலம்) டிராஃபிக் ஜாம் ஆகியிருந்தது. முன்னால் பார்த்தார் காமராஜர்.

நடுப்பாலத்தில் ஒரு லாரி "பிரேக் டவுன்' ஆகியிருந்தது. ஒரே ஒரு டிராஃபிக் போலீஸ்காரர் போக்குவரத்தைச் சரிப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

தான் ஒரு முதலமைச்சர் என்பதையெல்லாம் மறந்துவிட்டு உடனே காரை விட்டிறங்கி அந்தப் போலீஸ்காரருக்கு உதவியாக இருந்து போக்குவரத்தைச் சரிப்படுத்திவிட்டே மறுபடியும் காரில் ஏறினார் காமராஜர். அதுமட்டுமல்ல, பொறுப்போடு சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கும் போய், "அது போன்ற இடங்களில் இன்னொருவரைக் கூடுதலாகப் போட்டால் என்னண்ணேன்'' என்று கண்டித்துவிட்டும் வந்தார் காமராஜர்!

"சோ' எழுதிய "காமராஜரைச் சந்தித்தேன்' என்ற நூலிலிருந்து.
தொகுப்பு: கேசி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com