பிஞ்சு மனசு

"யம்மா... ஆஆஆஆஆஆஆ...  என்னால படிக்க முடியல. ஒரே சத்தமாயிருக்கு''  ப்ரதீப்பின் கத்தல் கேட்டு ஓடோடி வந்தாள் மல்லிகா. 
பிஞ்சு மனசு

பக்கத்து வீட்டில் டி.வி. அலறியது. 
"யம்மா... ஆஆஆஆஆஆஆ...  என்னால படிக்க முடியல. ஒரே சத்தமாயிருக்கு''  ப்ரதீப்பின் கத்தல் கேட்டு ஓடோடி வந்தாள் மல்லிகா. 
"ஜன்னல சாத்திக்கோ. கேட்காது'' என்றாள். 
"ஆமா... நீ எப்பப் பார்த்தாலும் இப்டித்தான் சொல்லுவ. அவுங்க வீட்டுல போய் சொல்லிட்டு வாயேன். ஜன்னல சாத்தினாலும் கேட்கும்.''
"இப்பதான் புதுசா குடி வந்திருக்காங்க. போயெல்லாம் சொல்ல  முடியாது. நீ அப்பா ரூம்ல போய் படி'' 
"அங்க வெளிச்சம் இல்லம்மா. இந்த ரூம்தான் வசதி.  போய்ச் சொல்லிட்டு வா.''
"ஏன்டா என்னைப் இப்டிப் படுத்தறே? எனக்கு வேலை இருக்குப்பா. உங்க அப்பா குளிக்கப் போயாச்சு. டிபன் ரெடி பண்ண வேணாமா?'' 
"சரி. போ...'' விறுட்டென்று எழுந்து  ஜன்னலை ஓங்கிச் சாத்தினான் ப்ரதீப். 
"சமத்து ப்ரதீப் தங்கமாச்சே...''  சொல்லிக் கொண்டே அடுப்படியை நோக்கி விரைந்தாள் மல்லிகா. 
பக்கத்து வீட்டை நோக்கிய இரண்டு ஜன்னல்களையும் சாத்திய பின்னும், சத்தம் குறைந்தபாடில்லை. ஒரு வேளை சவுண்டை இன்னும் அதிகமாக்கிட்டாங்களோ... இப்டி அலறுது?''  மீண்டும் ஜன்னலைத் திறந்தான். பாட்டுச் சத்தம் புயலாய் வந்து முகத்தில் அறைந்தது. "இதென்ன சினிமா தியேட்டர் மாதிரி... யம்மாடீ''
"அங்கிள்... ஆன்ட்டி..'' கத்தினான் எதிர் வீட்டு ஜன்னலைப் பார்த்து. எந்தப் பதிலுமில்லை. டி.வி. ஓடும் இடத்தில் யாரும் இருப்பதாய்த் தெரியவில்லை. இவ்வளவு சத்தமா வச்சா, மத்த சத்தம் எப்டிக் கேட்கும்?  மாடியில் பேச்சுக் குரல் லேசாய்க் காதுகளில். இங்கே டி.வி.யை வெறுமனே ஓடவிட்டு, அங்கயிருக்காங்களா?  
 இத்தனை நாள் பூட்டிக் கிடந்த வீட்டிற்கு வந்தாலும் வந்தார்கள். இப்படியா யாரும் இல்லாத போது எத்தனை நிம்மதியாய் இருந்தது. ப்ரதீப்பிற்கு அவன் தற்போது இருக்கும் அந்த அறைதான் ரொம்பப் பிடிக்கும். என் ரூம் இது, எனக்கே எனக்குத்தான் என்று சொல்லி கிரகப் பிரவேசம் செய்தவுடனேயே வந்து உட்கார்ந்து கொண்டான். கடந்த ரெண்டு வருஷமாய் அதுதான் அவன் ரூம். இதுநாள் வரை ஒரு தொந்தரவும் இல்லை. இப்போது புதுசாக.   
 "வயசு பத்துதான் ஆகுது. ஃபிப்த் ஸ்டாண்டர்டுதான் எட்டியிருக்கான். தனி ரூம் வேணுமாம்... பார்த்தியா உன் பிள்ளையை?'' பத்ரி, மல்லிகாவிடம் விளையாட்டாய்ச் சொன்னபோது,
"நல்லாப் படிக்கிறான்ல. நாமதா வசதி செய்து கொடுக்கணும். அவன் இஷ்டம் போல விட்டிடுங்க. சொந்த வீடுதானே? அவனுக்கில்லாம வேறே யாருக்கு. புக் ஷெல்ப்., ஃபேன், டேபிள் லைட்டுன்னு வேணுங்கிறதை அரேஞ்ச் பண்ணிக் கொடுங்க, இன்னும் உற்சாகமாப் படிப்பான்.'' 
எல்லாமும் செய்து கொடுத்தான் பத்ரி. கூடவே ஒரு மினி சைஸ் டி.வி.யும் வாங்கி அவன் அறையில் வைத்தான். ஆனால் அதைப் போட்டதேயில்லை ப்ரதீப். டி.வி. பார்க்கணும் என்றால்  ஹாலுக்குத்தான் போவான். அங்கேயுள்ள 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி.யில் பார்த்தால்தான் அவனுக்குத் திருப்தி. ஸ்பைடர் மேன் பார்க்கும்போதெல்லாம் அப்படியே வீட்டிற்குள் வந்து குதிப்பது போலிருக்கும். போதாக்குறைக்கு பக்கத்திற்கு ஒன்றாக சுவர்களில் டிஜிட்டல் சவுன்ட் சிஸ்டமும் பொருத்தியிருந்தான் பத்ரி. இதை விட்டுவிட்டு யாராவது உள்ளே இந்த இக்குனூண்டு டி.வி.ல போய் படம் பார்ப்பாங்களா?
" எதுக்குப்பா இதை வாங்கினே? நானென்ன கேட்டேனா?'' 
"வேண்டாம்னா நான் எடுத்துக்கட்டுமா?'' அப்பா கேட்டதும்,  "ஓ... தாராளமா'' என்று சொல்லி விட்டான் ப்ரதீப். ஆச்சரியமாய் இருந்தது பத்ரிக்கு. இருந்தாலும் என்ன காரணமோ, குழந்தையை ஏமாற்றக் கூடாது என்று. குட்டி டி.வி.யை இடம் மாற்றவில்லை. ப்ரதீப் அடிக்கடி டி.வி. பார்க்கும் பழக்கமுள்ளவனில்லை. எப்போதாவதுதான். அவனுக்குப் படிப்பு... படிப்பு... படிப்புதான். இந்த வயசில் இப்படியா? ஆச்சரியம்தான் பெற்றோர்களுக்கும்.  
தவறினால் ஏதேனும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு. அப்பா வாங்கிப் போடும் ஆங்கில, தமிழ் இதழ்களைப் புரட்டுவான். சிலவற்றைப் படிப்பான். அவனை அதிகம் கவர்ந்தது ஆங்கில தினசரிகள்தான். அதைப் படிப்பதன் மூலம் நிறைய வார்த்தைகள் கற்றுக் கொண்டிருந்தான். ஆங்கிலம் பேசுவது சரளமாய் அவனிடம் படிந்து போயிருந்தது. பள்ளியில் டீச்சர்களிடம் அவன் முழு ஆங்கிலத்தில் தடங்கலின்றிப் பேசுவது அவர்களுக்கே ஆச்சரியம்.. 
 ப்ரதீப்பிற்கு தமிழிலும் ஆர்வமிருந்தது. அதற்குக் காரணமும் அப்பாதான். அவர் வாங்கிப் போடும் சின்னச் சின்னப் புத்தகங்களான ஆத்திசூடி, கொன்றை வேந்தன், ஒüவையார் பாடல்கள், திருக்குறள் உரை, திருப்பாவை, திருவெம்பாவை  என்று தினசரி ஒன்றையேனும் எடுத்துப் படித்து விடுவது அவன் வழக்கம். அம்மா பாடிக் காட்டும் பாவைப் பாடல்கள் அவனை மயக்கும். தமிழ் இலக்கிய இதழ்களை அப்பாதான் அவனுக்கு அடையாளம் காட்டினார். "எல்லாம் பெரிசு பெரிசா இருக்கே'' என்று முதலில் சலிக்கத்தான் செய்தான். தொட்டே பார்க்கமாட்டான். பிறகு ஒரு நாள் எடுத்துப் புரட்டினான். சின்னச் சின்னக் கவிதைகளாய்ப் படிக்க ஆரம்பித்தான் முதலில். அதில் வரும் கதைகள் அவனை ஆச்சரியப்படுத்தின. பல புரியவில்லை. படிப்பதற்குக் கஷ்டமாய் உணர்ந்தான். இத்தனை பக்கமா? என்று பிரமித்தான். பிறகு ஒரு வீம்பு வந்தது அவனிடம். "அப்டி என்ன பெரிய்ய்ய்ய புக்கு'' என்று ஆரம்பித்தான்.  இப்போதெல்லாம் அவற்றை ஊன்றிப் படிக்கப் பழகிவிட்டான் அவன்.  அதென்னவோ படிப்பதில் அவனுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு வந்து விட்டது. டி.வி. பார்ப்பது சுத்தமாய் நின்று போனது. அவனொத்த பையன்கள் அதுவே கதியாய் கிடக்கையில் ப்ரதீப்பின் இந்தப் பழக்கம் பெற்றோர்களுக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. 
"அப்பப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்டா பார்... அதுல ஒண்ணும் தப்பில்ல'' என்றார்கள். ஆனால் ப்ரதீப் புத்தகப் புழுவாய் மாறிப் போனான்.

மதியம் ரெண்டு மணி ஷிப்ட் அவனுக்கு. கொஞ்ச தூரத்தில்தான் பள்ளி. ஸ்கூல் பஸ்ஸில்தான் போவான். இருக்கும் டிராஃபிக் ஆபத்தானது என்று அப்பா அப்படி ஏற்பாடு செய்ததில் அவனுக்கு வருத்தம்தான். சைக்கிளில் போய் வரவேண்டும் என்று ஆசை. டென்த்லேர்ந்துதான் என்றுவிட்டார் அப்பா. ஏன் அப்படிச் சொன்னார் இவனுக்குப் புரிந்ததில்லை. எப்போது பத்தாவது வருவோம் என்று ஆசையாய் காத்திருந்தான் ப்ரதீப். அப்பாவின் பேச்சை மீற முடியவில்லையே? "அதெல்லாம் கிடக்கட்டும். இப்போ இந்தச் சத்தத்தை நிறுத்த என்ன செய்றது?' யோசித்தவாறே எழுந்தான் ப்ரதீப். வாசலை நோக்கிப் போனான். டைனிங் ஹாலில் அப்பா டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கேட்டைத் திறந்து கொண்டு மெல்ல வெளியேறினான். "டே... டேய்... எங்க போற?'' அம்மா கத்துவது கேட்டது. 
"இதோ வந்திட்டேம்மா'' சொல்லிவிட்டு பக்கத்து வீட்டு கேட்டை அடைந்து "சார்.... சார்'' என்று கத்தினான். அங்கிள் என்று சொல்லாமல் சார் என்று சொல்லிவிட்டோமே என்று சிரிப்பு வந்தது அவனுக்கு. யாரும் வராததனால் தயங்கித் தயங்கி மெல்ல உள்ளே நுழைந்தான். 
 ஹாலில் அந்தப் பெரியவர். ஈஸிசேரில் சாய்ந்து படுத்தமேனிக்கு இருந்தார். பார்வை தணிந்து எதிரே நிலைத்திருந்தது. கண்களை மூடியிருக்கிறாரா, திறந்திருக்கிறாரா? அலறியது டி.வி. பாட்டுக்கச்சேரி ஓடியது.. மிருதங்கத்தின் தனி ஆவர்த்தனத்திற்கு அவரது வலது கை மெல்லத் தொடையில் தாளமிட்டுக் கொண்டிருந்தது. இசையில் தன்னை மறந்து லயித்திருந்தார் தாத்தா. அதுக்கு இத்தனை சத்தமா? அப்பத்தான் தாத்தாவுக்குக் கேட்குமா? நினைத்துக் கொண்டே என்ன செய்வது என்று தெரியாமல் அவரையே பார்த்தான் ப்ரதீப். பொக்கை வாயோடு கண்ணை மூடித் தலைசாய்த்து,  அவர் தாளம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க இவனுக்குள் சிரிப்பு. காந்தித் தாத்தா ஞாபகம் வந்தது அவனுக்கு. அதே மாதிரி மூஞ்சி இந்தத் தாத்தாவுக்கும். 
"டேய் குட்டீ... இங்க எங்க வந்தது செல்லம்?''
என்றவாறே ஒரு சத்தம் கேட்க, மாடிப் படிகளில் இறங்கி வேகமாய் வந்த பாட்டியைக் கண்டு தயங்கி ஒதுங்கினான் ப்ரதீப். 
"ஒ.ஒ... ஒண்ணுமில்ல பாட்டி... சும்மா பார்க்க வந்தேன்''  எப்படிச் சொன்னான் இந்தப் பதிலை. அவனுக்கே ஆச்சரியம். இன்னொருத்தர் வீட்டுக்குள் நுழைந்து விட்டு இப்படிக் கமுக்கமாய் நின்று கொண்டிருந்தால் என்ன நினைப்பார்கள்?  லேசான பயம் வந்துவிட்டது மனதில். 
"தாத்தா பாட்டியைப் பார்க்க வந்தியா. என் செல்லமே இரு வரேன்'' என்று சொல்லிவிட்டு உள்ளே போய் கையில் ஏதோ ஒரு பாக்கெட்டை எடுத்து வந்தாள் பாட்டி. அவனைஅப்படியே அள்ளி அணைத்து, முத்தமிட்டாள். 
"இந்தா வச்சிக்கோ வீட்டுல போய் அம்மாட்டக் கொடுத்துட்டு, சாப்பிடு''
"தேங்க்யூ பாட்டி... தேங்க்யூ... தாத்தா...ஸீ யூ... போய்ட்டு வர்றேன்..'' கையில் பற்றிய ஸ்வீட் பாக்கெட்டோடு ஓட்டமெடுத்தான் ப்ரதீப். 
"எங்க வீட்டுக்கு வாங்க'' என்ற அவன் பதில் குரலில், "அடித்தங்கம்... எப்டி பேசறது பார், இந்த நண்டு'' என்று பாட்டி சொல்வது காதில் விழுந்தது. 
வாசல் வரை டி.வி. சத்தம் அவனை அதிர வைத்தது. அதுதான் அவனை உடனே விரட்டி விட்டதோ? 
"என்னடாது கைல?'' கேட்டவாறே வந்த அம்மாவிடம், "ஸ்வீட்டும்மா அந்தப் பாட்டி கொடுத்தாங்க'' என்றவாறே நீட்டினான். 
"அங்க எதுக்குடா போனே?'' புரியாது நோக்கினாள் மல்லிகா. 
"அங்கிள்ட்ட சவுண்டைக் குறைக்கச் சொல்லலாம்னு போனேன்ம்மா. அங்க ஒரு பொக்க வாய் தாத்தாதான் இருந்தார்.  கண்ண மூடிண்டு படுத்திண்டிருக்கார். தாளம் போட்டுண்டே பாட்டுக் கேட்கிறார்''
"அங்கிள்ட்ட.. சொன்னியா?''
"அவரைத்தான் காணலியே... மாடில சத்தம் கேட்டுது. அங்க இருப்பார் போலிருக்கு.''
"பார்க்கலியா?'' 
"இல்ல.. அந்தத் தாத்தா காதுல மெஷின் மாட்டிண்டிருக்கார்ம்மா. அதோட சத்தமா வச்சாத்தான் அவருக்குக் கொஞ்சமாச்சும் கேட்கும் போலிருக்கு... பாவம்தானே? அதான் பேசாம  வந்துட்டேன்'' ப்ரதீப்பின் முகத்தைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது.
"யம்மா..நான் அப்பா ரூம்லருந்தே படிச்சிக்கறேம்மா.. லைட்டு போட்டுக்கிறேன். அங்க சத்தமே கேட்காதுல்ல'' என்ற ப்ரதீப்பை வினோதமாய்ப் பார்த்தாள் மல்லிகா.  ஆதரவாய் இழுத்து அணைத்து, தலையை ஆதுரமாய்த் தடவிக் கொடுத்தாள்.
உஷாதீபன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com