இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்?

வாசலில் "கண கண'வென்று மணி அடிக்கும் சத்தம். குல்ஃபீ ஐஸ். இரவில் மலரும் பூக்களைப் போல் இந்த ஐஸ்ஸýம் ராத்திரியில் விற்பனைக்காகப் பவனி வருகிறது.
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்?

வாசலில் "கண கண'வென்று மணி அடிக்கும் சத்தம். குல்ஃபீ ஐஸ். இரவில் மலரும் பூக்களைப் போல் இந்த ஐஸ்ஸýம் ராத்திரியில் விற்பனைக்காகப் பவனி வருகிறது.  வாசலுக்குப் போய் கூப்பிடுவதற்குள் ஐஸ்காரன் மூன்று சக்கர சைக்கிளில் தெருக்கோடிக்குப் போய்விடுவான். பெரிய பானையும் மேலே மூடிய சிவப்புத் துணியும், சிறிய காஸ் லைட்டுமாக சமயங்களில் வீட்டு வாசலில் நின்றிருந்து, ஐஸ் வண்டியும் வந்து விட்டால், கல்யாணி வாங்காமல் இருக்கமாட்டாள்.  அரைச் சாண் நீள இரும்புக் குப்பியில் நிரப்பி, மந்தார இலைத் துண்டில் உதறுவான்.  உரித்த வாழைப்பழம் போல விழும்.  கத்தியால் துண்டுகளாக வெட்டி விடுவான். வாயில் உணரும் இனிப்பும் ஜில்லிப்பும், அப்பப்பா....
 கல்யாணி அந்த இரவு ஐஸ் வாங்கும் மன நிலையில் இல்லை. நடு நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.  இரத்தப் பிசுபிசுப்பு, அன்று காலை சண்டை வந்தபோது கணவன் ஈயச் செம்பை விட்டெறிந்ததில் ஏற்பட்ட காயம்.  அந்தக் காயம் அவளுக்கு அதிகம் வலிக்கவில்லை.  கூடவே மனதைப் புண்படுத்தினானே அதுதான் வலித்தது.
 காலையில் பாதிச் சாப்பாட்டில் கோபமாக எழுந்து சென்றவன்தான். இரவு வீடு திரும்பமாட்டான்.  இரண்டு நாட்களாகும், திரும்பி வர. கோபம் வரும்போதெல்லாம் இரு தெருக்கள் தள்ளியிருக்கும் குடும்ப நண்பர் வீட்டில்தான் சாப்பாடு, தூக்கம் எல்லாம்.
 இந்த நான்கு வருடத் தாம்பத்தியத்தில் கல்யாணிக்கு இதெல்லாம்  பழகிவிட்டது. முன்பு தனியாக இரவைக் கழிப்பது சிரமமாக இருந்தது.  இரண்டு வருடங்களாகக் குழந்தை லட்சுமிநரசிம்மன் துணை.
 தூங்கும் குழந்தைக்கு ஈ மொய்க்காமல் போர்த்திய துணியை இழுத்துக் குஞ்சுக் கால்களை மறைத்தாள். சிறிய ரோஜாப் புஷ்பம் போன்ற உள்ளங்கையை முத்தமிட்டாள். நிலாத்துண்டு கன்னங்கள். தூக்கத்தில் என்ன கண்டதோ, இதழில் சிரிப்பு. குழந்தையின் தலையை வருடினாள்.
 கல்யாணியின் கணவனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் கோபம் பரம்பரைச் சொத்து. "முணுக்' என்றால் மூக்குக்கு மேல் வந்துவிடும். "இந்தக் காரியத்தை இப்படிச் செய்' என்று முன்னதாகச் சொல்ல மாட்டார்கள். செய்த பிறகு தப்பாகப் போய்விட்டது என்று குதிப்பார்கள். "பையைத் தூக்கிக் கொண்டு புறப்படு உடனே'' என்று கத்துவார்கள். நரசிம்மசுவாமியைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் எல்லாரும் இப்படித்தானோ?
 குழந்தையின் முதுகைத் தடவினாள் கல்யாணி. இவன் வளர்ந்து பெரியவனானால் அம்மாவுக்கு ஆதரவாக இரண்டு வார்த்தை சொல்வானோ இப்போதே, அம்மாவை அடிப்பது போல யாராவது பாவனை செய்தால் அழக் கிளம்பிவிடுகிறான். காலையில் இவள் நெற்றியை சொம்பு குசலம் விசாரித்த போது இவன் தூங்கிக் கொண்டிருந்தான்.
 "செவ்வாய் தோஷமும், பூராட நட்சத்திரமுமா விலைபோகாத மாடாக் கெடந்தியேடி... உன்னை எத்தனை பேர் வந்து பாத்துட்டுப் போனார்கள்? கடைசீல நான்தானே உனக்கு வாழ்வு குடுத்தேன்?'' 
என்று காலையில் கத்திவிட்டு வெளியேறிய கணவனை நினைத்தாள். நெஞ்சு வலித்தது.
 குழந்தையைக் கட்டிக்கொண்டு படுத்தாள். குழந்தையின் காதில், "ரவீந்தர்', "ரவீந்தர் ' என்று முணு முணுத்தாள்.

ரவீந்தர்.
 கோவையில் ஐந்து வருடங்களுக்கு முன்பு கல்யாணி தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் குமாஸ்தா வேலை பார்த்தாள். காலை ஒன்பது மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை வேலை.
 ஓர் இரவு எட்டு மணிக்கு அவள் மேசை டிராயர்களைப் பூட்டிப் புறப்பட்டபோது நர்ஸ் மிஸஸ் மேனன், "அயோக்கியன்கள், இவன்களைத் தெய்வம்தான் கேக்கணும். என்ன சத்தம் போட்றானுங்க?'' என்று பொரிந்தாள்.
"என்ன சிஸ்டர்?''
 ஆஸ்பத்திரிக்கு நேர் எதிரே ஒரு வீடு. பிரம்மசாரிகள் வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தனர். இரவானால் ரெகார்டு பிளேயரைப் பெரிதாக இரைய விட்டுக்கொண்டு சீட்டாட்டமும், சிகரெட் புகையும், குடிநாற்றமும் பதினைந்து இரவுகளாக இப்படிக் கலாட்டா, ஆஸ்பத்திரியின் பிரதான டாக்டர் நேரடியாக எதிர்வீட்டுப் பையன்களுடன் பேசாமல், உடனே போலீசுக்கு போன் பண்ணிவிட்டார்.  எதிர்வீட்டுக்கு வந்து கூத்தடித்த பையன்களும் சாதாரணமானவர்கள் அல்ல. கலெக்டர், எம்.எல்.ஏ., டி.எஸ்.பி, மூவரின் பிள்ளைகளும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.  போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், "தயவுசெய்து, சத்தத்தைக் குறைங்க'' என்று கேட்கும் நிலை.
 கல்யாணிக்கு ஏதோ வேகம் வந்தது. எதிர் வீட்டுக்குச் சென்றாள். தைரியமாகப் படிகள் ஏறி மாடியையும் அடைந்தாள். 
 அப்போதுதான் அங்கே ஒரு பார்ட்டி ஆரம்பம் ஆக இருந்தது.  மேசையைச் சுற்றி நாற்காலிகள், மேசை மீது விஸ்கி பாட்டில், கிளாஸ் டம்ளர்கள், சோடா, பிரித்த வறுவல் பொட்டலம், வேர்கடலை உருண்டைகள்.
 கையில் புகையும் சிகரெட்டுகளோடு எல்லாரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர்.  எல்லாருமே கைலியிலும், முண்டா பனியனிலும் இருந்தனர். ஒருவன் டேப் ரிக்கார்டரில் கேசட்டைப் பொருத்திக் கொண்டிருந்தான்.    
"அட, நடிகை ஜெயரத்னா''
"வாங்க, சரியான நேரத்துக்கு வந்தீங்க. பார்ட்டீல கலந்துக்கலாமே?''
"தாங்க்ஸ். ரெண்டே வார்த்தை பேச என்னை அனுமதிங்க'' என்று கும்பிட்டாள் கல்யாணி. 
"நீங்க படிச்சவங்க, பண்பாடு தெரிஞ்சவங்க. உங்க வீட்ல யாராவது  நோயாளி படுத்திருந்தா இப்படிச் சத்தம் போடுவீங்களா? யோசிங்க. உங்க சுதந்திரத்துல குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லே. இருந்தாலும், நேர் எதிர இருக்கிற ஆஸ்பத்திரி நோயாளிகள் கிட்டக் கொஞ்சம் இரக்கம்காட்டி, சத்தத்தைத் தயவுசெஞ்சு குறைங்க'' என்று சொல்லிவிட்டு கல்யாணி திரும்பி விட்டாள்.
 ஏதோ ஒருமுயற்சி என்று நினைத்தாளே தவிர, பலன் இருக்கும் என்று நினைக்கவில்லை.  நாளடைவில் சத்தம் படிப்படியாகக் குறைந்து, இல்லாமலே போய்விட்டது. 
 எதிர்வீட்டில் அதிக ஆள் நடமாட்டமே இல்லை. மாடியில் கண்ணாடி ஜன்னல் வழியாக அதிக வெளிச்சம் இல்லாமல் சாதாரண விளக்கு எரியும். எப்போதாவது நாதசுர இசை கேட்கும், கல்யாணி வீட்டுக்குக் கிளம்பும் நேரம் எதிர்வீட்டு மாடியில் விளக்கு அணையும். ஒரு நாள் ஏதோ ரிஜிஸ்டரில் ஜன்னல் அருகில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த கல்யாணி தற்செயலாக நிமிர்ந்தாள். எதிர்வீட்டு மாடி ஜன்னல் அருகில் ஓர் இளைஞன் அமர்ந்து இவளையே பார்த்தான்.
 இவளுக்கு ஆரம்பத்தில் என்னவோ போல இருந்தது.  பிறகு அந்தப் பார்வையை அலட்சியப்படுத்த ஆரம்பித்தாள். ஆனாலும் அவன் பார்வை குறித்து இவள் இதயம் படபடத்தது.
"உங்க ஆஸ்பத்திரிக்கு அய்யாயிரம் ரூபா நன்கொடை தர்றதா இருக்கேன்.  யாரைப் பார்க்கணும்'' என்று இவளை நெருங்கிக் கேட்டான்.
"கடைசி ரூம்ல சீஃபைப் பாருங்க''  குனிந்த தலை நிமிராமல் சொன்னாள்.
"ஒரு ஃபோன் பண்ணிக்கலாமா?''
" நாங்க வெளியாரை அனுமதிக்கிறது இல்லே.''
"நெஃப்ராலஜிஸ்ட் வீட்டு அட்ரஸ் வேணுமே?''
 துண்டுச் சீட்டில் குறித்துக் கொடுத்தாள்.
 தினமும் ஏதாவது சாக்கில் ஆஸ்பத்திரியில் நுழைந்து அவளிடம் பேச்சுக் கொடுத்தான் அந்த வாலிபன். அவள் நிமிர்ந்து அவனைப் பார்ப்பதே இல்லை.

ஒரு நாள் காலை அவள் வேலைக்கு வந்து கொண்டிருந்த போது அவன் பரந்த மைதானத்தில் அவளைச் சந்தித்தான்.
 "வணக்கம், என் பேர் ரவீந்தர், நீங்க வேலை பார்க்கற ஆஸ்பத்திரிக்கு நேர் எதிர்வீட்ல குடி இருக்கேன்.  எம்.காம் பட்டதாரி. இதே ஊர்ல எனக்குச் சொந்தமா ரெண்டு, மூணு கடை இருக்கு.  சாயங்காலம் போய்க் கொஞ்சம் கடைகளைப் பாத்துட்டு வருவேன்.  மத்த  நேரம் முழுவதும் உங்களைப் பாக்கறதுதான் எனக்கு வேலை. அன்னிக்கு நீங்க என் வீட்டுப் படியேறி வந்து அப்படிப் பேசினது என் மனசிலே பொன் ஓவியமாப் பதிஞ்சிடிச்சி.  அந்தப் பசங்களை விரட்டிவிட்டுட்டு நானே முழு வீட்டுக்கும் வாடகை குடுக்கறேன்'' இப்படிச் சொல்லிக் கொண்டு அவன் அவள் அருகில் நடந்தான்.
அவள் அவனைப் பொருட்படுத்தவே இல்லை, கையில் விரித்த குடையோடு அழகாக ஆடி ஆடி நடந்து ஆஸ்பத்திரியினுள் சென்றுவிட்டாள்.
 அடுத்த நாள் அவன் அவளுக்காக அதே மைதானத்தில் ஒரு காதல் கடிதத்துடன் நின்றான்.  அவள் மைதானத்தைச் சுற்றி நடந்து போய்விட்டாள். அன்றிரவு அவள் புறப்படும் நேரத்துக்காகக் காத்திருந்து, பின்னாலேயே போய், "மிஸ் கல்யாணி'' என்றான்.  அவள் காதிலேயே வாங்காமல் நடந்தாள்.
 மறுநாள் ஆஸ்பத்திரியிலேயே நுழைந்து கடிதத்தைக் கையில் கொடுத்தான், "என்ன இது?'' கடுமையாக வினவினாள்.
"தப்பாக ஒன்றும் இல்லை.''
 வாங்கிப் பிரித்தவள் உடனே அதைக் கசக்கிக் குப்பைக் கூடையில்  எறிந்தாள்.
 இரண்டு நாளில் ரவீந்தர் ஒரு கார் வாங்கி விட்டான்.  அவள் வீட்டு வாசலிலேயே காரோடு பழிகிடந்தான்.
"இன்னிக்கு ஆபீசுக்கு லேட் போலிருக்கு வாங்க, அஞ்சு நிமிஷத்தில கொண்டு விட்றேன்.''
மாலையிலும் பின்னாலேயே சென்று ஹாரன் அடித்தான்.
"வேலை செஞ்சு  களைச்சுப் போயிருப்பீங்க. ஏறுங்க.''
 அவள் தம்பிகளைக் காரில் ஏற்றிக் கொண்டு ஊரைச் சுற்றினான். ஓட்டலுக்கு, சினிமாவுக்கு அழைத்துச் சென்றான். பேனா வாங்கிப் பரிசளித்தான்.
 ஒரு சமயம் அவனுடைய அம்மாவை அழைத்து வந்து அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தான்.  ஒரு மாதத்துக்கு மேல் அவளை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிடாமல் பார்த்துக் கொண்டான்.  நர்சுகளுக்கும், ஆஸ்பத்திரி சிப்பந்திகளுக்கும் நிறைய இனாம் கொடுத்தான்.  எல்லா டாக்டர்களோடும் நன்கு பழகினான். தலைமை டாக்டரிடமும் அடிக்கடி பேசி, நிறைய நன்கொடைகொடுப்பதாக உறுதி அளித்து, அவரின் நட்பையும் சம்பாதித்தான்.
 "இந்த கல்யாணி ரொம்ப நல்ல பொண்ணு. அழகு, அடக்கம், பதவிசு'' என்றாள் ரவீந்தரின் அம்மா, கட்டிலில் உட்கார்ந்து.
"ஆமாம்மா, தங்கமான குணம்'' என்று சாத்துக்குடி உரித்தபடி பல்லைக் காட்டினான் ரவீந்தர்.
 ஆஸ்பத்திரிக்குக் கட்ட வேண்டிய பாக்கித் தொகைகள் பற்றிப் பேச வந்த கல்யாணி, "உங்களுக்கு உடம்பு குணம் ஆயிடிச்சு. இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆயிப் போறீங்க. எங்களை மறந்துடாதீங்க'' என்றாள் சம்பிரதாயமாக.
"அம்மா. இவங்களை நம்ம கிராமத்துக்குக் கூப்பிடும்மா.''
"ஆமா கல்யாணி, ரெண்டு நாள்ல கார் அனுப்புவேன். நீ அவசியம் எங்க வீட்டுக்கு வரணும்.''

 இரண்டு நாளில் ரவீந்தரின் கார், கல்யாணியின் வீட்டு வாசலில் நின்றது. காரில் ரவீந்தர் இல்லை. டிரைவரும், ரவீந்தரின் அம்மாவும்தான். அவள் வீட்டில் மறுப்புச் சொல்லாமல் அவளை அனுப்பினர்.
 போகிற வழியில் ரவீந்தரின் அம்மா, தங்கள் பல எஸ்டேட்கள் பற்றியும், ரவீந்தர் வீட்டின் மூன்றாவது பிள்ளையான போதிலும் அவன் பங்குக்குக் கிடைக்கக் கூடிய பெரும் சொத்துக்கள் பற்றியும், அவன் விருப்பத்துக்குக் குறுக்கே யாரும் நிற்க மாட்டார்கள் என்பது பற்றியும் விரிவாகச் சொன்னாள். கார் ஓடும் வழியில், "இதோ, இதெல்லாம் நம்ம தோட்டம்தான்'' என்றாள் ரவீந்தரின் தாயார்.
 பங்களா காம்பௌண்டினுள் இன்னும் இரண்டு கார்கள், ஸ்கூட்டர், மோட்டார் பைக், அழகான மாட்டு வண்டி, ட்ராக்டர் எல்லாம் இருந்தன. வீட்டுத் தரை எல்லாம் மொசைக், லினோலிய விரிப்பு.
சோபாவில் உட்கார்ந்தாள். ஆப்பிள் ஜூஸ் வந்தது.
 பேண்ட் சட்டையில் ஒருத்தி, சல்வார் கமீசில் இன்னொருத்தி,  ரவீந்தரின் தங்கைகள். சிரித்துச் சிரித்துப் பேசினார்கள். 
"உங்களப் பத்தி எங்க அண்ணா நிறையச் சொல்லி இருக்குது''.
 அப்போது டெலிபோன் மணி அடிக்க ஒருத்தி எடுத்து பேசினாள். 
"எஸ்.கே. பேசறார். சாப்பாட்டுக்கு வர மாட்டாராம். ஜி.எம்.மும் அவரும் திருநெல்வேலி போறாங்களாம். வர ரெண்டு நாளாகுமாம்.''
 அவர்கள் வீட்டில் யாரும் ஆண்களின் முழுப் பெயரைச் சொல்ல மாட்டார்களாம். இனிஷியலையும், பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்துத்தான் சொல்வார்கள்.
 டீப்பாய் மீது தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள். எல்லாவற்றுக்கும் சந்தா கட்டுகிறார்களாம்.
வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார்கள். ரவீந்தரின் அறையில் நிறைய தமிழ், ஆங்கில நவீனங்கள் இருந்தன.  
 மேசை மீதிருந்த ஒரு நோட்டைப் பிரித்துப் பார்த்த ஒருத்தி "களுக்' என்று சிரித்தாள். "அண்ணன் ஸ்ரீராமஜயம் எழுதுது பாருங்க''
கல்யாணி பார்த்தாள். நோட்டு முழுவதும் "கல்யாணி, கல்யாணி, கல்யாணி' என்று எழுதப் பட்டிருந்தது.
"வர்ற ஞாயித்துக்கிழமை நாம ஒரு படம் பாக்கறோம். சரிதானா?''
"ஆன் லைனில் டிக்கெட் புக் பண்ணட்டுமா?'' என்று ஒருத்தி சினிமாத் தியேட்டரை கணினியில்
 சிற்றுணவு அருந்திய பின் ரவீந்தரின் அம்மா மனமே இல்லாமல் அவளுக்கு விடைகொடுத்தாள். குங்குமம் கொடுத்தபோது ஒரு நைலக்ஸ் சேலையும், ஐநூறு ரூபாயும் பரிசளித்தாள்.
 அவளைத் திருப்பிக் கொண்டுவிடக் கார் டிரைவர் இருக்கையில் ரவீந்திரனே இருந்தான். அவளோடு அவன் எதுவும் பேசவில்லை. மெüனமாகவே திரும்பி வந்துவிட்டான்.

 அடுத்த நாள் காலை அவள் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டபோது தெருமுனையில் அவன் காரோடு நின்றிருந்தான். அவளோடு ஏதோ பேசவும் முற்பட்டான். அவள் வழக்கம்போல் அலட்சியமாக நடந்து சென்றாள்.
 "இந்தக் கடிதத்தைத் தயவுசெய்து பெற்றுக் கொள்'' என்று கெஞ்சினான். வாங்கிக் கொண்டு நடந்தாள்.
அந்தக் கடிதம் பிரிக்கப்படவே இல்லை. அப்படியே அவள் கைப்பையில் அவளின் பிறந்த வீட்டில் இரும்புப் பெட்டியில் இருக்கிறது.
 மறுநாளிலிருந்து ரவீந்தரை அவளால் பார்க்க முடியவில்லை. அது பற்றியும் அவள் மனத்தில் சலனம் இல்லை. நிம்மதியாகவே இருந்தாள். 

பதினைந்து நாட்களுக்குப் பிறகு ஒரு கார் அவள் வீட்டு வாசலில் வந்து நின்றது. அதில் ரவீந்தரின் அம்மா, தங்கைகள், அண்ணா-அண்ணிகள் என்று நிறையப் பேர் இருந்தார்கள்.
 ரவீந்தர் கடும் ஜூரத்தில் கிடக்கிறானாம். அவன் பிழைப்பது பற்றி டாக்டர் சந்தேகமாகச் சொல்லிவிட்டார். "நீ வந்து பாரும்மா. அந்தத் திருப்தியோடயாவது அவன் சாகட்டும்'' என்று கண்ணீர் விட்டாள் முதியவள்.
 கல்யாணி அவர்களோடு சென்று நான்கு நாட்கள் இருந்தாள். அவளே ரவீந்தரின் படுக்கை அருகில் இருந்து வேளை தவறாமல் மருந்து கொடுத்தாள்.
 ரவீந்தர் ஐந்தாவது நாள் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான். தாடியும் மீசையுங்கூட அவனுக்கு அழகாகவே இருந்தன.
அந்தஸ்து, ஜாதிபேதம் பார்க்கவில்லை என்றும், அவளைத் தங்கள் மருமகளாக ஏற்கத் தயாராக இருப்பது பற்றியும் ரவீந்தரின் அம்மா அவளிடம் மனம்விட்டுப் பேசினாள். "தொடர்ந்து மெüனம் சாதித்தால் எப்படி? வாயைத் திறந்து மனசில் உள்ளதைத்தான் சொல்லேன்''
கல்யாணி சொல்ல நினைத்தாள்:
முதலில் இருவரும் வெவ்வேறு ஜாதி. பிறகு, அப்பா உயிரோடு இருந்தும், இவர்களின் கூடவே இல்லாமல் எங்கோ இவர்களுக்கு உபயோகம் இல்லாமல் இருந்து வருகிறார். பாட்டி வளர்ப்புத்தான் இவர்கள் எல்லாரும். இவர்கள் எங்கே உருப்படப் போகிறார்கள் கைம்பெண் வளர்த்த கழிசடைகள்தான் என்று உறவினர்கள் ஏளனம் செய்கிறார்கள். உறவினர்களால் உதவி இல்லை என்றாலும் கேலிப் பேச்சுகளுக்குக் குறைவில்லை. சபலத்துக்கு ஆட்பட்டு இவள் சுலபமாக வேலியைத் தாண்டிவிட முடியும். ஆனால் குடும்பக் கெüரவம் தொலைந்துவிடும். காலத்துக்கும் பழிச்சொல் நீளும். "இதுகள் இப்படிக் கெட்டழியும் என்று எங்களுக்குத் தெரியுமே' என்று உறவினர்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள். எங்களை ஆளாக்க அரும்பாடுபட்ட எங்கள் கிழவியை அவமானப்படுத்தும் காரியத்தை நான் செய்ய மாட்டேன். 
 கல்யாணி புன்னைகையுடன் எழுந்து கும்பிட்டாள். "என்னை மன்னியுங்கள்.  என் தங்கைகளின் பிற்கால நலனையும் நான் கவனிக்க வேண்டி இருக்கிறது.  ரவீந்தருக்குச் சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் செஞ்சு வையுங்க.  ரவீந்தர் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன்''  கண்களில் திரண்ட நீரை விரலால் சுண்டி எறிந்தாள். 
 
மூன்று வாரங்களில் ரவீந்தர் அவளை ஆஸ்பத்திரியில் சந்தித்து, "என் கல்யாணப் பத்திரிகையின் முதல் பிரதியை உனக்குத்தான் தரவேண்டும் என்று விரும்புகிறேன் கல்யாணி.  நீ அவசியம் கல்யாணத்துக்கு வரவேண்டும்.  நான் உதயகுமாரன்: நீ மணிமேகலை. இந்த  ஜென்மத்தில் இணைய முடியவில்லை.  ஆனால் என் இதயத்தில் உன் பிம்பமே என்றென்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.  எனக்கு மனைவியாக வருகிறவளிடம் உன்னைக் காண்பேன்''என்று மலர்களைப் போல் கண்ணீர்த் துளிகளைக் கொட்டித் திருமணப் பத்திரிகையைக் கொடுத்தான்.
 அப்போதுதான் அவனை நிமிர்ந்து, சரியாக, மிக அருகில் பார்த்தாள் கல்யாணி, நல்ல அழகன், பணக்காரனும் கூட, அவனைக் கணவனாக அடையப் போகிறவள் பாக்கியசாலிதான்.
 அவள் ஏதும் சொல்லத் தோன்றாமல் அவனையே பார்த்திருந்தாள். அந்த மௌனமே அவளுடைய கம்பீர நிலை என்று அவனும் வெளியேறினான். 
 ரவீந்தரின் திருமண நாள் நெருங்க நெருங்க, கல்யாணி ஆஸ்பத்திரிக்கே ஒழுங்காகச் செல்ல முடியவில்லை.  தினமும் கார் வந்து அவளை அழைத்துச் சென்றுவிடும்.
 ரவீந்தரின் திருமணத்தன்று கல்யாணி கோவையில் இல்லை. எங்கே சென்றாள் என்று யாருக்கும் தெரியவில்லை.  பத்து நாட்களுக்குப் பிறகே திரும்பிவந்தாள்.  மதுரையில் ஒரு சிநேகிதியின் வீட்டுக்குச் சென்றிருந்தாளாம்.  ரவீந்தர் தாலி கட்டிய நேரத்தில் மீனாட்சியின் சந்நிதியில் அவன் பெயருக்கு அர்ச்சனை செய்தாள் என்பதும், மாலை மாலையாகக் கண்ணீர்  பெருக்கினாள் என்பதும் அந்தச் சிநேகிதி மட்டுமே அறிந்தவை.
 தாலியைக் கையில் எடுத்த ரவீந்தரின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது என்றும், அவனுடைய அம்மாவும் சகோதரிகளும் அழுதனர் என்றும், கைகள் நடுங்க, தாலிகட்டி முடித்ததும் மயங்கிவிட்டான் என்றும் கல்யாணிக்குத் தகவல் சொன்னார்கள்.
 கல்யாணிக்குத் தீவிரமாக வரன் பார்த்தார்கள். நிறையப் பையன்கள் வந்து அவளைப் பார்த்துவிட்டுப் போனார்கள். ஒருவழியாக இந்த விசுவாமித்திர வாரிசு இவளுக்கு நிச்சயமாகியது.
கல்யாணி, ரவீந்தருக்குத் திருமணப் பத்திரிகை தரவில்லை. ஆனால் அவனுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருந்தன. அவன் கல்யாணியின் வீட்டினருக்கு  பத்தாயிரம் ரூபாய் கொடுத்தான். ஐந்து பவுன் சங்கிலியும் அவளுக்குப் பரிசளித்தான்.
 முகூர்த்த நேரத்தில் கல்யாணியின் கண்கள் கலங்கின. ரவீந்தரும் கைகுட்டையால் நாசூக்காகக் கண்களை ஒற்றிக் கொண்டான்.
 இரண்டு வருடங்கள் சென்று கல்யாணி ஒரு நாள் பிறந்த வீடு வந்தபோது, "உனக்கு விஷயம் தெரியுமா அக்கா? ரவீந்தருக்குப் பெண் பிறந்திருக்கிறது'' என்றாள் தங்கை.
 ரவீந்தர் பற்றிய எந்த ஒரு சின்னச் செய்தியும் கல்யாணிக்கு மகிழ்ச்சியை அளித்தது. "அப்படியா?'' என்றாள். அவள் முகம் மலர்ந்தது. டாக்சி வைத்துக் கொண்டு கணவனோடு ரவீந்தரின் வீட்டுக்குச் சென்றாள்.
 ரவீந்தரின் வீட்டில் எல்லாரும் அளவு கடந்த உற்சாகப் பரபரப்புக் காட்டினர். "நான் கெளரவிக்கப்பட்டேன்'' என்றான் ரவீந்தர்.
குழந்தைக்கு லட்சுமி என்று பெயர் வைக்கப் போவதாக ரவீந்தர் சொன்னதும், கல்யாணிக்குச் சிலிர்த்தது. அவள் வீட்டில் அவளைச் செல்லமாக அழைக்கும் பெயரை அவன் எப்படியோ அறிந்து வைத்திருந்தான். குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்து, கணக்கில்லா முத்தம் சொரிந்தாள் கல்யாணி. பத்து ரூபாயைக் குழந்தையின் கையில் வைத்தாள்.
 இவளுக்குக் குழந்தை பிறந்தபோது அவனால் பகிரங்கமாகப் பரிசளிக்க முடியவில்லை. காலுக்குக் காப்பு, கை வளையல் கழுத்துச் சங்கிலி எல்லாம் தங்கத்தில் பாட்டி செய்து அணிவித்தாள். செலவு அவனுடையது.
 குழந்தைக்கு ஆளுக்கு ஒரு பெயர் சொன்னார்கள். அவனை எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் கல்யாணி ஒவ்வொரு தடவையும் ரவீந்தர் என்று மனத்துக்குள் சொல்வாள்.
 இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. பால் காய்ச்சிக் குழந்தைக்குத் தர வேண்டும். கல்யாணி எழுந்தாள். சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியில் முகம் தெரிந்தது. விலை போகாத மாடு என்று சொல்லிச் சிரித்துக் கொண்டாள். "ரவீந்தர்'' என்று சொல்லியபடி நெற்றிக் காயத்தைத் தொட்டாள். வலிக்கவில்லை.
கண்ணன் மகேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com