ஒன்ஸ் மோர்

1891-ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, முதலில் பம்பாயிலும் பிறகு சில காலம் ராஜ்கோட்டில் பாரிஸ்டராய் தொழில் செய்தார்
ஒன்ஸ் மோர்

1891-ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, முதலில் பம்பாயிலும் பிறகு சில காலம் ராஜ்கோட்டில் பாரிஸ்டராய் தொழில் செய்தார். ஆனால் அங்கு அத்தொழிலை நேர்மையுடன் நடத்துவது மிகவும் கஷ்டமாயிருந்தது. ராஜ்கோட் சமஸ்தானத்தில் நடந்து வந்த சூழ்ச்சிகளும், தந்திரங்களும் அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. எப்படியாவது அவ்விடத்தை விட்டுத் தப்பித்துப் போய்விட வேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்த அவருக்கு, ஆண்டவன் ஒரு வழி காட்டினார். போர்பந்தரில் ஒரு பெரிய முஸ்லிம் வியாபார கம்பெனியார் இருந்தனர். இவர்களுக்குத் தென் ஆப்பிரிக்காவிலுள்ள பிரிடோரியா என்னும் நகரில் ஒரு வியாபாரச் சாலையிருந்தது. அங்கே பெரிய வழக்கு ஒன்று நடந்து வந்தது. இந்த வழக்கைக் கவனித்து நடத்த காந்தி அந்நாட்டுக்குப் போகிறாரா? என்று கேட்டார்கள். காந்தி உடனே அதற்கு இணங்கினார். 1893-ஆம் ஆண்டு மே மாதம் அவர் தென் ஆப்பிரிக்கா டர்பன் துறைமுகத்தில் இறங்கினார்.

ஒரு வழக்கை வென்று ஏதோ கொஞ்சம் பணம் சம்பாதித்து வாழ்வில் ஒரு தொழிலைத் தொடங்குவதுதான் அவர் அப்போது மேற்கொண்டிருந்த நோக்கம். "என் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று தென் ஆப்பிரிக்காவில் பார்க்கவே போனேன்'' என்று அவர் கூறி இருக்கிறார்.

அக்காலத்தில் தென் ஆப்பிரிக்காவில் வசித்த இந்தியர்கள் பெரும்பாலானோர் ஒப்பந்தக் கூலிகளாகப் போனவர்கள். அங்கே வெள்ளையர்களிடம் படாத பாடு பட்டார்கள். இந்தியர்கள் தங்களுக்கு அடிமையாகக் கூலி வேலை செய்து பிழைத்தால் தென் ஆப்பிரிக்க வெள்ளைக்காரர்களுக்குச் சம்மதந்தான். ஆனால் அவர்கள் சுதந்திரமாக வாழ்ந்து தங்கள் நெறியினாலும், உழைப்பாலும் பொருள் சேர்த்து முன்னுக்கு வருவது அவர்களுக்கு ஆகவில்லை. எனவே இந்தியர்களுக்குச் சொல்லொணாக் கொடுமைகளை இழைத்தனர். இந்தியர்களில் ஆண், பெண், குழந்தைகள் எல்லாருக்கும் ஒவ்வொருவருக்கும் மூன்று பவுன் தலைவரி விதிக்கப்பட்டது. இந்தியர்களின் கல்யாணம் கூடச் செல்லுபடியாகாது என்று சட்டம் பிறந்தது!

இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துப் போராடி தென் ஆப்பிரிக்க இந்தியர்களைக் காப்பாற்றுவதற்காகவே காந்தியை ஆண்டவன் அனுப்பினார் போலும்! காந்தி டர்பன் நகரில் காலடி வைத்த உடனே அவர், இந்தியர்கள் சிறுமைப்படுத்தப்படும்விதத்தை அனுபவத்தில் அறிந்தார். மறுநாள் அந்நகரின் கோர்ட்டுக்கு காந்தி சென்றபோது "தலைப்பாகையை எடு'' என்று மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். காந்தி இதற்குச் சம்மதிக்காமல் வெளியே வந்து விட்டார். "என்ன துன்பம் நேர்ந்தாலும் சுயமரியாதையை இழக்கக் கூடாது'' என்பது அவரின் கொள்கையாயிற்று. எனவே, அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தவரையில் தலைப்பாகையைக் கைவிடவேயில்லை.

டிரான்ஸ்வால் மாகாணத்தின் தலைமை ஸ்தலமான பிரிட்டோரியா நகரத்துக்கு அந்த வழக்கு சம்பந்தமாக காந்தி போக வேண்டியிருந்தது. டர்பன் நகரில் முதல் வகுப்பு ரயில் டிக்கெட் வாங்கிக் கொண்டார். இரவிலே பிரயாணம் செய்ய வண்டியேறினார். நேட்டால் மாகாணத் தலைமை ஸ்தலமான மாரிட்ஸ்பர்க் நகர் வந்தபோது, அங்கே ஒரு வெள்ளைக்காரர் இந்தப் பெட்டியில் நுழைந்தார். பெட்டியினுள் அமர்ந்திருந்த காந்தியை - அந்தக் கறுப்பு மனிதரை - ஒரு பார்வை பார்த்தார் அந்த வெள்ளைக்காரர். அந்த முதல் வகுப்புப் பெட்டியில் ஏறக்கூடாத ஒரு நபர் ஏறி ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகக் கருதிய அந்த வெள்ளைக்காரர் உடனே வெளியேறி, சில நிமிஷ நேரத்தில் இரண்டு ரயில்வே அதிகாரிகளை அழைத்துக் கொண்டு மீண்டும் அந்தப் பெட்டியினுள் நுழைந்தார். காந்தியை மூன்றாம் வகுப்புக்கு மாறிவிடும்படி அந்த அதிகாரிகள் கூறினர். காந்தி அதை ஆட்சேபித்து, தாம் முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருப்பதாகச் சொன்னார். "அதைப் பற்றி அக்கறை இல்லை. நீர் வெளியேறித்தானாக வேண்டும்'' என்று அவர்கள் சொன்னார்கள். காந்தி நகரவேயில்லை. அவர்கள் ஒரு போலீஸ்காரனை அழைத்து வந்தார்கள். அவன் அவரை அவருடைய பெட்டி படுக்கையோடு வெளியேற்றி விட்டான்.

காந்தி திரும்பவும் வண்டிக்குச் சென்று மூன்றாம் வகுப்புப் பெட்டியில் இடம் பிடித்திருக்க முடியும். ஆயினும் அவரோ ஸ்டேஷன் வெயிட்டிங் ரூமிலேயே தங்கியிருக்க முடிவு செய்தார். அது மலைப்பிரதேசம். மிகவும் குளிராய் இருந்தது. அவருடைய பெட்டி படுக்கையோடு ஓவர்கோட்டும் அதில் இருந்தது. அவையோ ரெயில்வே அதிகாரிகள் வசம் இருந்தன. ஓவர்கோட்டைக் கேட்டால் எங்கே மீண்டும் அவமானம் இழைப்பார்களோ என்று பயந்தார். எனவே அதைக் கேட்கவில்லை. இரவெல்லாம் "வெடவெட'வென்று குளிர் நடுக்க எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியவண்ணம் உட்கார்ந்திருந்தார்.

நிறவெறுப்பு என்ற கொடிய நோய் தம்மை வந்தெதிர்த்திருக்கிறது. அதைக் களையப் போராடுவது தம் கடமை. தம் நாட்டு மக்களை இந்த இடுக்கணில் தவிக்க விட்டு விட்டு தாம் மட்டும் இந்தியாவுக்கு ஓடிப் போவது கோழைத்தனம் என்றெல்லாம் சிந்தித்து நிறப் பாரபட்சம் என்ற கோலியாத் அரக்கனை எதிர்க்கும் டேவிட் சிறுவனாக இந்த நோஞ்சான் லாயர் தம்மைப் பாவித்துக் கொண்டார்.

"மாரிட்ஸ்பர்க் ரயில்வே பிளாட்பாரத்தில் விழுந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆனால் எழுந்தவரோ மகாத்மா காந்தி' என்று ஒரு அறிஞர் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்போது எழுதியிருக்கிறார். அது முற்றிலும் உண்மை.

"எனது தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள்' என்ற புத்தகத்தில் கலைமாமணி "யோகா' (புகைப்படக் கலைஞர்).
தொகுப்பு: கேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com