திரைக் கதிர்

"ரோமியோ ஜூலியட்',  "கத்திசண்டை', "வீரசிவாஜி' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த  மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின்
திரைக் கதிர்

• "ரோமியோ ஜூலியட்',  "கத்திசண்டை', "வீரசிவாஜி' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த  மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அடுத்த படமாக உருவாகி வரும் படம் "96'. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் பிரேம்குமார். "பசங்க', "சுந்தரபாண்டியன்', "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் மேனன் இசை.  படத்தொகுப்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார். கலை இயக்குநர் வினோத்குமார். உமா தேவி, கார்த்திக் நேத்தா இருவரும் பாடல்களை எழுதுகின்றனர்.  படப்பிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் தொடங்க உள்ளது.

• "பாகுபலி' பாணியில் வரலாற்றுப் பின்னணியைக் களமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "சங்கமித்ரா'. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் அறிமுக விழா பிரான்ஸில் நடைபெறவுள்ளது. அங்கு நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் அறிமுக விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்கவுள்ளார். இதன் இன்னொரு முக்கிய அம்சமாக படக்குழுவினருடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்கப்படுவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று  வருகின்றன. 

• "வீரம்', "வேதாளம்' படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் "விவேகம்'. ஆகஸ்ட் 10-ஆம் தேதி படம் வெளியாகும் எனத் தெரிகிறது.  கடந்த மே 11-ஆம் தேதி படத்தின் டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டது. "இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் "நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட' என உன் முன்னால் நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. NEVER EVER GIVE UP என்று அஜித் பேசியுள்ள வசனம் இணையத்தில் லட்சக்கணக்கானோரைப் பார்க்க வைத்துள்ளது. டீஸர் வெளியான 12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளை  வென்றுள்ளது.

• ஸ்ரீபெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "வீரவம்சம்'. செல்வம், அனிதா ஆகிய புதுமுகங்களோடு ராதா ரவி, வாகை சந்திரசேகர், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் பகவதி பாலா. சொற்கள் உண்டாக்கும் தாக்கம்தான் படத்தின் கரு. சேலம் மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஆத்தூர் அருகில் உள்ள நாவலூர் கிராமத்தில் திருவிழா அரங்குகள் அமைக்கப்பட்டு, நிஜத் திருவிழா நடப்பது போன்று காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில காட்சிகள் மதுரை, திருநெல்வேலி பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளன. இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com