புள்ளி விவரம்

நமது வாய் உண்மையை மட்டுமே பேசுதல் வேண்டும். ஒரு கூடை தவிடு, ஒரு படி பருத்திக் கொட்டை, ஒரு கட்டு புல் உண்டு, ஒரு தொட்டி கழுநீரைக்
புள்ளி விவரம்

• நமது வாய் உண்மையை மட்டுமே பேசுதல் வேண்டும். ஒரு கூடை தவிடு, ஒரு படி பருத்திக் கொட்டை, ஒரு கட்டு புல் உண்டு, ஒரு தொட்டி கழுநீரைக் குடிக்கிற அகண்ட பெரிய வாயையுடைய மாட்டை, வாயில்லாத பிராணி என்கிறோம். உண்ணுகிற வாயை " வாய்'  என்று பெரியோர் கூறுவதில்லை. பேச வேண்டியவற்றைப் பேசுகிற வாயே, வாய்.
(வாரியார் உரையிலிருந்து)
ஏ.கே.என்.

• மார்சல் பிராஸ்டு என்பவர் பிரெஞ்சு நாட்டின் பெரிய எழுத்தாளர். அவர் மரணத்தின் பிடியில், படுத்த படுக்கையாக இருந்தபோது அருகிலிருந்தவர்களிடம், தான் எழுதிய புத்தகங்களை எடுத்துவரச் சொன்னார். அந்தப் புத்தகங்களில் ஒன்றை எடுத்தார். அப்புத்தகத்தில் ஒரு கதாபாத்திரத்தின் மரண அவஸ்தையைப் பற்றி எழுதியிருந்தார்.
அவர் சொன்னார்: "நான் அன்று மரண அவஸ்தையைக் கற்பனை செய்துதான் எழுதினேன். ஆனால் இப்பொழுது நான் மரண வேதனையில் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். ஆகவே சில  பகுதிகளை மாற்றங்கள்  செய்து எழுதி விடுகிறேன்''  என்று கூறி அந்தப் பகுதியை மாற்றி, திருத்தி அமைத்து எழுதி முடித்தார். உயிரும் அவர் உடலைவிட்டுப் பிரிந்தது. 
ஏ.கே.நாசர்.

• சட்டீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரில் உள்ள டிவி நிலையத்தில், சுப்ரீத் என்ற பெண் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் செய்தி படித்துக் கொண்டிருந்தபோது ஒரு "ஃப்ளாஷ் நியூஸ்' வந்தது. அதை அவர் உடனே படித்தாக வேண்டும். அதன்படி அந்த நகரிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு விபத்து நடந்து அதில் மூவர் இறந்து விட்டார்கள். சுப்ரீத் அந்த செய்தியையும் வாசித்தார். செய்திகள் படித்துமுடித்துவிட்டு வெளியே வந்தபோது அவருக்கு கிடைத்த செய்தி: "விபத்தில் இறந்த மூவரில் அவருடைய கணவரும் ஒருவர்.
சுப்ரீத்துக்கு திருமணமாகி ஒரு வருஷம்தான் ஆகிறது. ஒரு குழந்தை இருக்கிறது.
 - அனிதா 

• கர்நாடக படவுலகைச் சேர்ந்த சேத்தன் என்ற நடிகரும் பிரியங்கா உபேந்திரா என்ற நடிகையும் FIRE என்ற சங்கத்தை தொடங்கியிருக்கிறார்கள். (Film Industry for Rights And Equality). நடிகை பிரியங்காதான் இந்த சங்கத்தின் தலைவி. மொத்தம் 15 பேர் இந்த சங்கத்தை பொறுப்பேற்று நடத்துவார்கள். 
இந்த கமிட்டியில் பாதிப்பேர் பெண்கள். படவுலகில், பெண்களுக்கு காட்டப்படும் பாரபட்சம், பாலியல் கொடுமைகள், ஆண்களுக்கு மட்டுமே தரப்படும் முக்கியத்துவம். இவற்றுக்கெல்லாம் எதிராக இச்சங்கம் போராடும். மத்திய அரசின் 2013 ஆம் ஆண்டு சட்டப்படி படவுலகில் ஆண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் இந்த சங்கம் போராடுமாம். பிரபல நடிகைகள் பலர் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக சம்மதித்திருக்கிறார்கள்.
- அனிதா

• ஒரு ராஜா, ஒரு மரத்துண்டை இருபுறமும் ஒரே மாதிரி சீவி, இதில் எது அடிப்பக்கம், எது நுனிப்பக்கம் என்று கண்டு பிடிப்பவர்க்கு ஆயிரம் பொற்காசு தரப்படும் என்று அறிவிக்க, ஒரு பெரியவர் மட்டும் அதனை தண்ணீரில் போடச் சொல்லி நீரில் மூழ்கிய பகுதி அடிப்பகுதி என்று சரியாக சொல்லி "இதுதான் அனுபவம்'  என்று பாராட்டோடு ஆயிரம் பொற்காசுகளோடு சென்றார்.
நடிகர் சிவகுமார் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியது.
- பரதன்

வாழ்நாளில் நூறாவது பதிப்பை காணும் எழுத்தாளர்!
மரணத்தைப் பற்றிய பயம் எனக்குள் இருந்தாலும் நிறையவே எழுதுகிறேன். என்னுடைய நீண்ட பணியை முடிக்க இந்த பயம் தடையாக இருந்ததில்லை தொடர்ந்து எழுதுவேன்'' என்று கூறும் 70 வயதாகும் லார்ட் ஜெப்ரி ஆர்ச்சர், 
அண்மையில் பெங்களூரில் "திஸ் வாஸ் ஏ மேன்' என்ற தனது 24- ஆவது நூலை வாசகர்கள் மத்தியில் வெளியிட்டார்.
 மிக சிறந்த நூல்கள் விற்பனைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வரும் ஜெப்ரி ஆர்ச்சருக்கு இதுவரை எந்த எழுத்தாளருக்கும் வாழ்நாளில் கிடைக்காத பெருமை கிடைக்கவுள்ளது. இவர் 1979 ஆம் ஆண்டு எழுதி வெளியான "கேனி அண்ட் ஏபெல்' என்ற நாவல் இதுவரை 34 மில்லியன் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனையாகியுள்ளது. சுமார் 100 மில்லியன் வாசகர்கள் இதைப் படித்துள்ளனர். இந்த நாவல் அவரது வாழ்நாளிலேயே இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நூறாவது பதிப்பாக வெளியாகவுள்ளது. 
 - அ.குமார். 

• "நல்லதம்பி' படத்திற்கு  கதைவசனம் எழுதியதற்காக  அண்ணா, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எவ்வித சன்மானத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அண்ணாவிற்கு என்.எஸ்.கிருஷ்ணன். ஒரு கார் வாங்கிக் கொடுத்தார். அந்தக் காரை அண்ணா, கலைவாணரின் கடைசிக் காலத்தில் கஷ்டப்படும்போது திருப்பிக் கொடுத்துவிட்டார்.
- ஆர். அஜிதா 

தயாரிப்பாளருக்கு உதவிய எழுத்தாளர்!
மராட்டிய எழுத்தாளர் வி.எஸ். காண்டேகர் எழுதிய " அகல்விளக்கு'  என்ற கதையை திரைப்படமாக எடுக்க நினைத்தார் "இருதயநாத் மங்கேசுகர்' என்ற செல்வர், முன் தொகையாக  சிறிது கொடுத்து எழுத்தாளர் காண்டேகரிடம் உடன்படிக்கை செய்து கொண்டார். தொடர்ந்து வந்த படப்பிடிப்பு எதிர்பாராமல் நின்றுவிட்டது. இதை அறிந்த ஒருவர் காண்டேகரிடம் சென்று "உங்களுக்கு மீதிப்பணம் வராது. எப்படியாவது வாங்க முயலுங்கள்'' என்றார். 
 தன்னை வந்து பார்க்கும்படி மங்கேசுகருக்கு கடிதம் எழுதினார் காண்டேகர். மங்கேசுகர் கவலையுடன் தயங்கியபடியே வந்து காண்டேகரைப் பார்த்தார். "எனக்கு சிறிது பணமுடையாக இருக்கிறது, இன்னும் சிலநாளில் உங்களுக்குரிய முழுப் பணத்தையும் கொடுத்துவிடுவேன்''  என்று வருந்தியபடியே கூறினார்.
எழுத்தாளர் காண்டேகர்  மங்கேசுகரிடம், "நான் என் பணத்துக்காக உங்களை வரச் சொல்லவில்லை. படப்பிடிப்பு நின்றதாக அறிந்தேன். உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை'  என்று அன்புடன் கேட்டார்.
மங்கேசுகருக்கோ வியப்பு. "மூவாயிரம் ரூபாய் தேவை'' என்றார். காண்டேகர் உடனே காலம் தாழ்த்தாது, அத்தொகையைக் கொடுத்து படப்பிடிப்பைத் தொடரச் செய்தார்.
(புலவர் தி. இராசகோபாலன் எழுதிய "குறள் வழிச் சான்றோர்' என்ற நூலிலிருந்து)
எஸ்.அருணாச்சலம், மாத்தூர். 

• உ.பி. மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒரு பி.எஸ்.சி. (கணிதம்) பட்டதாரி. 1994- இல் சந்நியாசம் பெற்றார். மற்ற யோகிகளைப் போல இல்லாமல் காலில் ஷு அணிகிறார். தனக்கு வரும் மொபைல் அழைப்புகள், குறுஞ்செய்திகள் எதையும் அலட்சியம் செய்வது கிடையாது. அவருடைய தகப்பனார் ஓர் ஓய்வு பெற்ற காட்டிலாகா அதிகாரி. கோரக்பூரில் உள்ள அவருடைய மடத்தில் முஸ்லீம்களும் முகமலர்ச்சியுடன் வேலை செய்கிறார்கள். 
- அனிதா ராமச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com