பேல்பூரி

"ஏம்ப்பா... எடைபோடும்போது வாங்கறவங்களைப் பார்க்காம திரும்பி நின்னு எடை போடுறே?''
பேல்பூரி

கண்டது
* (சுவாமிமலையில் ஓர் ஓட்டலில்)
உணவுக்கு மிகவும் சுவை தரும் பொருள்: பசி
நெ.இராமன், சென்னை-74.

* (கள்ளக்குறிச்சியிலுள்ள ஓர் அரசு அலுவலகத்தில்)
பணி ஓய்வு பெற்றவர்கள் எல்லாம்,
ஓய்ந்து போனவர்கள் அல்லர்; 
ஓரம் கட்ட அனுமதிக்கப்படுபவர்களும் அல்லர்.
ஆர்.மலர்க்கொடி, செம்பாக்குறிச்சி.

* (அருப்புக்கோட்டை காசுக்கடை பஜாரில் உள்ள ஒரு துணிக்கடையில் கண்ட வாசகம்)
 விலையுதிர் காலம்
அன்னபூர்ணா, கோவில்பட்டி.

* ( கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஓர் எஸ்டேட்டின் பெயர்) 
குரங்குமுடி எஸ்டேட்
 மு.இளங்கோவன், மன்னார்குடி.

கேட்டது
• (எரகுடியில் உள்ள மளிகைக்கடை ஒன்றில்)
"ஏம்ப்பா... எடைபோடும்போது வாங்கறவங்களைப் பார்க்காம திரும்பி நின்னு எடை போடுறே?''
"எங்க அப்பா ஆளைப் பார்த்து எடை போடக் கூடாதுன்னு சொல்லியிருக்கிறார்''
ஆர்.ராஜேஸ்வரி, எரகுடி.

• (தருமபுரியில் போலீஸ் காலனியில் ஒரு வீட்டில் மகனும் தாயும்)
"ஏம்மா... பழனியம்மாவுக்குப் போன் பண்ணுங்கம்மா''
"ஏன்டா... அவங்க வயசுக்கு மூத்தவங்க இல்லையா... பெரியம்மாவைப் போய் பழனியம்மான்னு பேர் சொல்லுற?''
"அம்மா நான் மரியாதையில்லாமச் சொல்லலைம்மா... பழனி அம்மாவுக்குப் போன் பண்ணுங்கன்னு சொன்னேன்''
எஸ்.அருள்மொழி சசிகுமார், கம்பைநல்லூர்.

எஸ்எம்எஸ்
இருக்குறதை விட்டுட்டு, பறக்கிறதுக்கு ஆசைப்படாதேன்னு சொல்றாங்களே... அப்படி ஆசைப்படாம இருந்திருந்தா, இப்ப யாருமே ஃபிளைட்ல பறக்க முடியாது.
என்.கோமதி, பெருமாள்புரம்.

யோசிக்கிறாங்கப்பா!
நண்பர்களிடத்தில் நட்பைச் சேமித்தேன்.
உறவுகளிடத்தில் அன்பைச் சேமித்தேன்.
பெரியோரிடத்தில் பணிவைச் சேமித்தேன்.
மாணவர்களிடத்தில் மதிப்பைச் சேமித்தேன்.
இதயத்தில் இரக்கத்தைச் சேமித்தேன்.
ஆனால் எதுவுமே உதவவில்லை.
காரணம்,
என்னுடைய வங்கிக் கணக்கில்
எதையுமே சேமிக்கவில்லை. 
                                  ஒய்.ராபர்ட், 
                       கரிவேடு கிராமம்.

அப்படீங்களா!
சூரிய ஒளியின் மூலம் மின்னாற்றலை உருவாக்க  சோலார் பேனல்கள் பொருத்தப்படுகின்றன. ஆனால் அவற்றைப் பொருத்த நிறைய இடம் தேவை. செலவும் அதிகம். டெஸ்லா என்ற நிறுவனம் வீட்டின்  கூரையில் பொருத்தக் கூடிய சோலார் பேனல்களைத் தயாரித்துள்ளது. ஆனால் வழக்கமான வடிவத்தில் அல்ல. வீட்டின் மேற்கூரையில் பொருத்தக் கூடிய விதவிதமான ஓடுகளின் உட்புறத்தில் அவை பொதிந்து வைக்கப்படுகின்றன. எனவே சோலார் பேனல்கள் பொருத்துவதற்கான தனி அமைப்புகள் எதுவும் தேவையில்லை. அப்படி பொருத்தப்பட்ட சோலார் பேனல்களில் உருவாகும் மின்னாற்றல், வீட்டின் சுவரில் பொருத்தப்பட்டுள்ள POWERWALL இல் சேமிக்கப்படுகிறது. அப்படி சேமிக்கப்பட்ட மின்னாற்றலை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்.ஜே., சென்னை-69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com