ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தூக்கம்... உணவு... உடல்நிலை!

என் மனைவிக்கு வயது 46. அடிக்கடி தலைவலி வருகிறது. தலைவலி வரும் பொழுது கண்ணும் சேர்ந்து வலிக்கின்றது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தூக்கம்... உணவு... உடல்நிலை!

என் மனைவிக்கு வயது 46. அடிக்கடி தலைவலி வருகிறது. தலைவலி வரும் பொழுது கண்ணும் சேர்ந்து வலிக்கின்றது. அது மட்டும் அல்லாமல் சோம்பேறியாகவும், சுறுசுறுப்பில்லாமல் இருக்கின்றார். இரவில் சாப்பிட்டால் மலச்சிக்கல் வருவதால் ஒரு வருடமாக இரவில் சாப்பிடுவதில்லை. நான்கு பிள்ளைகளின் தாய். அவருக்கு தாங்கள் தான் நல்ல ஆயுர்வேத மருந்துகளைக் கூற வேண்டும்.
-ஊர் பெயர் வெளியிடவிரும்பாத வாசகர்.
பெண்களுக்கான அடிப்படை ஆரோக்கியம் என்பது இரத்தத்தின் சுத்தமான தன்மையிலும், அதில் பொதிந்துள்ள அணுக்களிலும் தான் மறைந்துள்ளது. நிறையப் பிள்ளைகளை ஈன்றெடுக்கும் பெண்களுக்கு, பிரசவத்தின் போது ஏற்படும் ரத்தப்போக்கும், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் ரத்தப்போக்கும், அவர்களுக்கு சோகை எனும் உபாதையை உண்டாக்கிவிடக் கூடும் ஆபத்திருப்பதால், தங்களுடைய மனைவியின் இரத்தப் பரிசோதனையின் விஷயத்தில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்திட வேண்டும்.
 எந்தெந்த அம்சங்கள் இரத்தத்தில் குறைவாக உள்ளன என்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டிவிடும் உபகரணங்கள் இன்றைய மருத்துவமுறையில் நிறைய உள்ளதால், அவரை அந்தப் பரிசோதனையில் முழுவதுமாக ஈடுபடுத்தி அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. மேலும் உடல் ஆரோக்கியத்தை நிலை நிறுத்தக் கூடிய, உறக்கம்,  உணவு - ஜீரணம், பொது உடல் நிலை நடவடிக்கைகள் மூலமாகவும், அவர் உடல் நிலையில் முன்னேற்றம் பெறலாம். இவ்விஷயங்களில் அவர் தனக்குத்தானே ஒரு சுய பரிசோதனை செய்து கொண்டால், தன்னிட முள்ள கஷ்ட நஷ்டங்களைத் துல்லியமாக அறிந்து, அதற்கேற்றாற் போல் மாற்றங்களைக் கொண்டு வந்தால் தேகநிலையில் நல்ல முன்னேற்றங்களைப் பெறலாம்.

முதலில், தூக்கம் பற்றிய கேள்விகள்:
1.  நேற்றிரவு நான் தூங்கும் முன் மனதிலிருந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகளையெல்லாம் ஒருவாறு அடக்கிக் கொள்ள முடிந்ததா?
 2.  போதுமான நேரம் தூங்கினேனா?
 3.  ஆழ்ந்த நித்திரையா?
 4.  உடலிலுள்ள அதிகக் களைப்பு, மன உளைச்சல் காரணமாக அடிக்கடி தூக்கம்  கெட்டதா?
 5.  கனவு அடிக்கடி ஏற்பட்டு தூக்கம் கெட்டதா?
 6.  தூங்கி, எழுந்தபோது உடல் சுறுசுறுப்புடன் இருந்ததா?
 7.  மனம் தெளிவடைந்துள்ளதா?
இக்கேள்விகளில் 1,2,3,6,7 கேள்விகளுக்கு "ஆம்' என்றும் 4,5 கேள்விகளுக்கு "இல்லை' என்றும் பதில் வந்தால் அவர் தூக்கம் சம்பந்தப்பட்ட வரையில் ஆரோக்கியம் உள்ளவராகக் கருதலாம். 4ஆம் கேள்விக்கான பதில் "ஆம்' என்றால் ஆயுர்வேத மருந்தாகிய கல்யாணக கிருதம் எனும் மருந்தை பத்து மில்லிலிட்டர் உருக்கி, காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், அவருடைய பதில் "இல்லை' என்றாகிவிடக் கூடும்.

இரண்டாவதாக உணவு, ஜீரணம் பற்றிய கேள்விகள்:
1.  முன்னாள் நான் உண்ட உணவு உடல் நலத்திற்கு நல்லதாக இருந்ததா?
2.  எளிதில் செரிக்கும் உணவை அளவுடன் மிதமாகச் சாப்பிட்டேனா?
3.  மனதில் திருப்தியுடனும், சந்தோஷத்துடனும், அமைதியிடனும், சுவைத்துச்  சாப்பிட்டேனா?
4.  நேற்று மதியம் உண்ட உணவு செரிமானமாகிவிட்டதா?
5.  பசி ஏற்பட்ட பின் ஏப்பம் சுத்தமாக வருகிறதா?
6.  பசி இருந்தாலும் ஏப்பத்தில் புளிப்பு, கசப்பு வாடை வருகிறதா? நெஞ்சில் எரிவு  உண்டாகிறதா? வயிற்றில் உப்புசம்,  புடைப்புள்ளதா? கனம் இருக்கிறதா? எவ்வளவு  சாப்பிட்டாலும் போதாமல் அடிக்கடி பசி எடுக்கிறதா? சில நேரம் பசிப்பதும், சில நேரம் பசிக்காமலும் இருக்கிறதா? பசியே இல்லாமலிருக்கிறதா?
7.  நல்ல பசி ஏற்பட்டுள்ளதா?
8.  கீழ் வாயு தடைபடாமல் வெளியேறுகிறதா?
இக்கேள்விகளுக்கு 1,2,3,4,5,7,8 கேள்விகளுக்கு "ஆம்' என்ற பதிலும், 6வது கேள்விக்கு "இல்லை' என்ற பசிலும் வந்தால், உணவு ஜீரணம் சம்பந்தப்பட்ட வரை ஆரோக்கியமாக இருக்கிறார். 6வது கேள்விக்கான உபாதைகளை நீக்கும் இந்துகாந்தம் க்ருதம் எனும் நெய் மருந்தைப் பயன்படுத்தலாம்.

மூன்றாவதாக பொது உடல் நிலை பற்றிய   கேள்விகள்:
1.  கண் காது முதலிய புலன்களும், உடலை இயக்கும் கை கால்களும் தம்தம் வேலையைச்  சரியாகச் செய்யும் சுறு சுறுப்புள்ளவையாக இருக்கின்றனவா?
2.  உடல் கனக்காமல், லேசாக சுறு சுறுப்பாக இருக்கிறதா?
3.  மலம், சிறு நீர் சரியாக வெளியாகின்றனவா? அவற்றை அனாவசியமாக  கட்டுப்படுத்தாமல் கழித்தேனா?
4.  மனம் தெளிந்து அமைதியுடன் உள்ளதா?
5.  உடலாலும் மனதாலும் செய்ய வேண்டிய பணிகளை அவை களைப்புறும் அளவிற்கு  அதிகமாகச் செய்யாமலும் சோம்பலுக்கு இடம் கொடாமலும் சரி வரச் செய்தேனா?
 இக்கேள்விகளில் பலவற்றிலும் அவரிடம் குறைபாடு தெரிவதால், இந்த ஆரோக்கிய பரிட்சையில் அவர் தோல்வி அடைகிறார் என்பதால், ஆயுர்வேத மருந்தாகிய தாடிமாதி கிருதம் எனும் இரத்த விருத்திக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும் நெய் மருந்தை மதிய உணவிற்கு 1 மணி நேரம் முன்பாக 10 - 15 மிலி உருக்கிச் சாப்பிட்டு வரலாம். 
(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com