"எனக்கு நூல்கள்தாம் ஆசிரியர்களாயின!'' - மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி

"வாசிப்பு என்பது எழுத்தாளனுக்கு உணவு மட்டுமல்ல... உயிரைப் போன்றதும் ஆகும். ஐந்தாவது வரை மட்டும் படித்த எனக்கு நூல்கள்தான் ஆசிரியர்களாயின. நான் நூல்களால் கட்டமைக்கப்பட்டவன்.
"எனக்கு நூல்கள்தாம் ஆசிரியர்களாயின!'' - மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி

மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி இப்படித்தான் உருவானார்:

"வாசிப்பு என்பது எழுத்தாளனுக்கு உணவு மட்டுமல்ல... உயிரைப் போன்றதும் ஆகும். ஐந்தாவது வரை மட்டும் படித்த எனக்கு நூல்கள்தான் ஆசிரியர்களாயின. நான் நூல்களால் கட்டமைக்கப்பட்டவன். படிப்பு என்பது சிலருக்குப் பள்ளியுடன் நின்றுவிடும். சிலருக்கு கல்லூரியுடன் முடிந்துவிடும். நூல்களுடன் எனது பரிச்சயம் தொடங்கியது எனது பதினெட்டாம் வயதில். எந்தக் காலவரையறையும் இன்றி வாசிப்பு மூச்சாக தொடர்கிறது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. வாசிப்பு உயிரை வளர்ப்பது. மனதை வளர்ப்பது. ஞானத்தைச் செழுமைப் படுத்துவது. விடுதலைப் போராளி பகத்சிங் தூக்கிலிடுவதற்கு முதல் நாள் வரை வாசித்துக் கொண்டிருந்தார். அதுதான் வாசிப்பின் வசீகரம்.
வறுமை எனது பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் வாசிப்பு, வறுமையின் முற்றுகையைத் தகர்த்து, பள்ளிப்படிப்பு தராத அனுபவங்களைத் தந்தது. அனுபவங்களைப் பகிரச் செய்தது'.
"அச்சமே நரகம்" கதையில் நாயகி பூங்கிளி, "என்னை ஒரு மனுசியாய் மட்டும் மதிச்சி மனைவியா ஏத்துக்கிட துணிச்சலுள்ள ஆம்பளை இந்தக் கூட்டத்திலே உண்டா?" என்று கேட்பதாக எழுதி இருந்தேன். "திருமணத்தின் போது மணமகன், மணமகன் வீட்டார், உற்றார் உறவினர் தெரிந்தவர்கள்.. ஊர்சனம் என்று கூட்டமாக இருக்கும் போது, கிராமத்து மணப்பெண் இப்படி பகிரங்கமாகக் கேட்க முடியுமா? அப்படிக் கேட்க தைரியம் வருமா ? இது ஏதோ நாடகத்திலோ திரைப்படத்திலோ வருவது மாதிரி செயற்கையாக உள்ளதே... நம்புகிற மாதிரி இல்லையே.. ஏன் அப்படி எழுதினீர்கள்..' என்று பலரும் என்னிடம் விளக்கம் கேட்டார்கள்; விமர்சித்தார்கள்.
" அச்சமே நரகம்' உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை. அதில் கற்பனை எதுவும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், பெண் வீட்டாருடன் வரதட்சணையில் பிரச்னை ஏற்பட்டு, மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர். அந்த சூழ்நிலையில் மணமகள் எடுத்த முடிவுதான் திருமணத்தின் உச்ச கட்டமாக அமைந்தது. மணக் கோலத்தில் நின்ற மணமகள் எழுந்து நின்று , "என்னை ஒரு பெண்ணாக மதித்து திருமணம் செய்து கொள்ள யாரும் இங்கு இருக்கிறார்களா?' என்று கேட்டாள். இளைஞன் ஒருவன் முன்வர, அந்த இளைஞனுடன் அந்தப் பெண்ணிற்குத் திருமணம் நடக்கிறது. அந்த உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து "அச்சமே நரகம்' கதையை எழுதி முடித்தேன். இது நாடகத்தனமான கற்பனை அல்ல. பாதிக்கப்படும் பெண்களுக்கு நம்பிக்கை, மன தைரியம் தரவே அந்த சம்பவத்தைக் கதையாக்கினேன். சூழ்நிலை சிக்கலாகும் போது மானம் போய் அவமானம் மிஞ்சும் போது... கிராமத்துப் பெண்ணும் குரல் எழுப்புவாள் என்பதை இந்தக் கதை சொல்வதாக அமைத்தேன்.
குடும்ப அமைப்பு உடைபடாத பெண்ணியத்திற்கு நான் முக்கியத்துவம் தருகிறேன். குடும்பத்திலும் ஜனநாயக மாண்புகள் வேண்டும். குடும்பத்தில் பெண் சொல்வதை மதிக்க வேண்டும். அப்போதுதான் பெண்ணுரிமை துளிர்விடும். ஆணும் பெண்ணும் தோழமையுடன் வாழும்படியான சூழ்நிலையை வாழ்வியல் சிந்தனைகள் உருவாக்க வேண்டும். அதற்கான சூழலை உருவாக்கும் களமாக சமூகம் அமைய வேண்டும் என்பதை எனது எழுத்துகளில் வலியுறுத்த தவறியதில்லை.
எனது வேர் கிராமத்தில் உள்ளது. கிடைத்த அனுபவங்களும் கிராமத்திலிருந்துதான். அனுபவத்தைப் பகிர்வதற்கு எழுத்தை ஊடகமாக்கிக் கொண்டேன். எனது வாழ்க்கைத் தேவைகளை கட்டமைத்துக் கொண்டேன். எழுதிப் பணம் சேர்க்க வேண்டும்... எனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டு பெருமையுடன் உலா வர வேண்டும் என்ற சிந்தனையும் இல்லை. இலக்கியத்தை வருவாய் ஈட்டும் வணிகமாகக் கருதவில்லை. உழைத்து வாழும் எளிய மக்களின் வாழ்வியல் நிலையைப் பதிய வேண்டும் என்பதுதான் குறிக்கோள். அதில் நான் வெற்றி பெற்றுள்ளேன் என்றே நம்புகிறேன்'' என்று சொன்ன மேலாண்மை பொன்னுசாமி தனது சிறுகதைகளின் முதல் தொகுப்பை அச்சிட, தான் வளர்த்த வெள்ளாடுகளை வேறு வழியில்லாமல் விற்றிருக்கிறார்...!
-சுதந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com