திரைக் கதிர்

கடந்த 2014 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான படம் "குயின்' . விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியானது, இப்படம்.  
திரைக் கதிர்

கடந்த 2014 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான படம் "குயின்' . விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியானது, இப்படம்.  அமோக வரவேற்பைப் பெற்ற  இப்படம் புது சாதனை படைத்தது. இதையடுத்து  தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இப்படம் ரீமேக் ஆகி வருகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன் மற்றும் கன்னடத்தில் பரூல் யாதவ் நடித்து வருகிறார்கள். இதில் தமிழ் மற்றும் கன்னட ரீமேக் இரண்டையும் ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். ஒரே நேரத்தில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இப்படம் உருவாகி வருகிறது. நான்கு மொழிப் படங்களையும் ஒரே தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. "குயின்' படத்தின் பிரதான காட்சிகள் வெளிநாட்டில்தான் படமாக்கப்பட்டன.
ஒரே தயாரிப்பாளர் 4 மொழி ரீமேக்கையும் தயாரித்து வருவதால், சரியாகத் திட்டமிட்டு தற்போது பாரீஸில் அனைத்து மொழி ரீமேக்கின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மும்பை, சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் ஒரு சில காட்சிகளும் இப்படத்துக்காக படமாக்கப்படவுள்ளன. டிசம்பர் மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு 
முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.


"காற்று வெளியிடை'  படத்தையடுத்து கார்த்தி நடித்து வரும் படம் "தீரன் அதிகாரம் ஒன்று'. "சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய வினோத் இப்படத்தின் திரைக்கதை எழுதி இயக்குகிறார், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் தழுவலே இப்படத்தின் திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னை தொடங்கி மைசூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. காவல் துறையினரின் மதிப்பை உயர்த்தும் விதமாக இதன் கதைக் கரு அமைக்கப்பட்டுள்ளது. ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்தார். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், படத்துக்கான தணிக்கையைப் பெறுவதற்கான பணிகள் நடந்து
வந்தன. இந்நிலையில் படத்துக்கு  "யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதையடுத்து இப்படம் வரும் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  "தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்கு தயாராகி வருகிறார் கார்த்தி. இப்படத்துக்குப் பின் புதுமுக இயக்குநர் ஒருவரின் கதையைத் தேர்வு செய்துள்ளார் கார்த்தி. நீண்ட இடைவெளிக்குப் பின் புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


"விவேகம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  
இப்படத்தில் தனது வழக்கமான கூட்டணியை மாற்றலாம் என்று முடிவு செய்திருக்கிறார் சிவா. அனிருத்துக்குப் பதிலாக இதற்கு யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தோள்பட்டை அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் அஜித், டிசம்பர் மாதத்திலிருந்து மீண்டும் பணிக்குத் திரும்பவுள்ளார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் சிவாவிடம் முழுக் கதையையும் கேட்டு முடிவு செய்யவுள்ளார் அஜித். அடுத்த பிப்ரவரியில் இக்கூட்டணி இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க சத்யஜோதி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறது. அஜித் நடிப்பில் வெளியான "தீனா', "பில்லா', "ஏகன்', "மங்காத்தா', "பில்லா 2' மற்றும் "ஆரம்பம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன். இதைத் தொடர்ந்து இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார் யுவன். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. 


சீனியர் நடிகைகளில் பலர் தங்களை முன் நிறுத்தும் விதமாக கதைகளைத் தேர்வு செய்து நடிக்கின்றனர். தமிழில் நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்டோர் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதை விட, இவ்வகை பாணி படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். நயன்தாரா நடித்த "மாயா' உள்ளிட்ட படங்களின் வெற்றியால், தன்னை முன் நிறுத்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். இதே பாணியை த்ரிஷாவும் தற்போது தீவிரமாக கடைப்பிடித்து வருகிறார். ஏற்கெனவே "மோகினி', "கர்ஜனை' ஆகிய இரு படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தற்போது "பரமபதம்' என்ற புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் முழுக்க முழுக்க த்ரிஷாவின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாகி வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதிஇப்படத்தின் மூலம் இயக்குநராக
அறிமுகமாகிறார் திருஞானம். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒப்புக் கொண்ட "சாமி' படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து விலகியுள்ள த்ரிஷா, அந்த கால்ஷீட் தேதிகளை இப்படத்துக்கு ஒதுக்கியுள்ளார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகள் சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆற்காடு கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை 15 நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து எவ்வித இடைவெளியுமின்றி ஏதும் இல்லாமல் தொடர்ச்சியாக படப்பிடிப்பைத் தொடர படக்குழு முடிவு செய்துள்ளது. 24 ஹார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அம்ரிஷ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துவருகிறார்.

நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகிறார். இந்நிலையில் இதற்காக ‘ய நட்ஹப்ப்’ என்ற பெயரில் மொபைல் செயலி ஒன்றைதொடங்கியுள்ளார். இந்த செயலியின் நோக்கம் குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள விடியோ பதிவில்...  ""பொதுவாகவே ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பார்ப்பது அல்லது செல்ஃபி எடுக்க பயன்படுத்துவோம். ஆனால், அதைத் தாண்டி ஸ்மார்ட் போன் மூலமாக நிறைய தெரியாத நபர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்புள்ளது. 

சமூக சேவை மூலமாக அதைச் செய்ய முடியும். இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் அனைத்து விஷயங்களுக்கும் மொபைல் செயலி இருக்கிறது. மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் எனஎது வாங்க வேண்டுமானாலும் மொபைல் செயலி இருக்கும் போது, சமூக சேவைக்கு ஏன் இருக்கக் கூடாது எனத் தோன்றியது. இதற்காக சுமார் ஒன்றரை வருடங்கள் நண்பர்களோடு சேர்ந்து, இச்செயலி விஷயங்களில் ஈடுபட்டு வந்தோம். அது தான் ‘ய நட்ஹப்ப்’ செயலி. உலகத்திலேயே இது சமூக சேவைக்கான முதல் செயலி. நிறையப் பேர் வீட்டில் பழைய துணிகளோ, குழந்தையின் பிறந்த நாளுக்கு அன்னதானம் உள்ளிட்டவற்றை எப்படிச் செய்யலாம் என்ற கேள்வி இருக்கும். அந்த சமயத்தில் இச்செயலி உதவியாக இருக்கும். முக்கியமாக கல்வி, மருத்துவம், சாப்பாடு என நிறையப் பிரிவுகளை வைத்திருக்கிறோம். தமிழகம் முழுவதும் பண வசதியின்றி படிக்க முடியாமல் இருப்பவர்கள், இந்த செயலியில் பதிவு செய்யலாம். இதில் வரும் அனைத்து கோரிக்கைகளுமே சரிபார்த்துதான் வரும்.

இதில் எந்ததொரு தவறான பதிவுமே இடம்பெறாது. அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றிணைப்பதே ‘V Shall’  செயலியின் முதல் பணி'' என்று தெரிவித்துள்ளார் விஷால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com