அண்ணலின் அடிச்சுவட்டில்... 28

அண்ணலின் அடிச்சுவட்டில்... 28

கல்யாணத்திற்கு பெண் தருவதற்காக இந்தியாவில் மிக முக்கியமான குடும்பத்தார், உயர் பதவியிலிருப்பவர்கள், கோடீஸ்வரர்கள் பலர் முன்வந்தனர். ஆனால் அவர் அவை எல்லாவற்றையும் மறுத்து வந்தார்.

காந்திஜியின் செயலர் கல்யாணத்தின் அனுபவங்கள்

கல்யாணத்திற்கு பெண் தருவதற்காக இந்தியாவில் மிக முக்கியமான குடும்பத்தார், உயர் பதவியிலிருப்பவர்கள், கோடீஸ்வரர்கள் பலர் முன்வந்தனர். ஆனால் அவர் அவை எல்லாவற்றையும் மறுத்து வந்தார். 1959-இல் கல்யாணம் சென்னையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் மலை சாதியினருக்கான தென் மண்டல ஆணையராக நியமிக்கப்பட்ட போது அவருக்கு சம்பளம் மாதம் 600 ரூபாயாக இருந்தது. நரஹரிராவின் குடும்பத்தாரோடு மிகவும் நெருக்கமான நட்பு இருந்தது. அவருக்கும் கல்யாணத்தைப் பற்றி நன்றாக தெரியுமாதலால் கல்யாணத்தின் மேல் ஓர் உயர்ந்த அபிப்பிராயம் இருந்தது. காந்தியுடன் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே கல்யாணம் அவருடைய வீட்டிற்கு போய் கொண்டிருந்தார். அப்போது அவரது வீடு பிர்லா இல்லத்திற்கு அருகிலேயே இருந்தது. அந்த நீண்ட உறவின் காரணமாக கல்யாணத்திற்கு எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாதென்பதும் அவருக்குத் தெரியும். அவருக்கு ஆந்திரா, கர்நாடகாவில் நிறைய நண்பர்கள் இருந்தனர். அவர்களும் நரஹரிராவிடம் தமக்குத் தெரிந்த பெண்களுக்கு நல்ல வரன்கள் தேடி அவரது உதவியை நாடி இருக்கின்றனர். உடனே அவரும் கல்யாணத்தைப் பற்றிக் கூறி நிறைய பேரிடம் அவரைப் பரிந்துரைத்திருக்கிறார். 
அப்போது மைசூரிலிருந்து ஓர் எக்ஸிகியூட்டிவ் கவுன்சிலர் இருந்தார். அவரது பதவி ஒரு அமைச்சருக்கு சமமானது. அவர் எப்படியாவது தன் மகளை கல்யாணத்திற்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். ""பெண் பிடித்திருக்கிறதா'' எனக் கேட்டு கல்யாணத்திற்குக் கடிதம் கூட எழுதினார். 
அப்போது கல்யாணத்தின் ஆசையானது ஒரு ஏழைப் பெண்ணையே திருமணம் செய்ய வேண்டுமென இருந்தது. தன்னைவிட வசதிகள் குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டுமென விரும்பினார். கல்யாணத்தின் உழைப்பால்தான் திருமணம் செய்யும் பெண்ணை முன்னுக்கு கொண்டு வர வேண்டுமென்பதே அவரது அவாவாகவும் இருந்தது. 
பணம் அதிகம் இருக்குமிடத்தில் திருமணம் செய்து கொண்டால் தனது மரியாதையும் நிம்மதியும் போய் விடுமெனக் கருதினார். 
காந்தி இறந்த பின்பு நான்கைந்து பணக்காரக் குடும்பத்தார் அவரைத் திருமணம் முடிக்க முற்பட்டனர். அவர்களெல்லாம் அந்தக் காலத்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள். 
""எனக்கு தற்போது எந்த வேலையுமில்லை.. நான் சமூக சேவைதான் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு எந்த வருமானமும் இல்லை'' எனக் கூறி தட்டிக் கழித்தார். 
அவர்கள் பலவந்தமாக கல்யாணத்தை வற்புறுத்தினார்கள். ஆனாலும் அந்த வேண்டுதல்களுக்கு அவர் இணங்கவில்லை. 
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரின் மகளைக் கூட கல்யாணத்திற்கு திருமணம் செய்யக் கேட்டார்கள். மறுத்து விட்டார். நகைச்
சுவையாக ஒரு சுவையான அனுபவத்தை கல்யாணம் எப்போதுமே கூறுவார். 
கல்யாணம் 39 வயது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. குடியரசு தினத்திற்கு மறுநாள் படைகள் பாசறைக்குத் திரும்பும் ஒரு நிகழ்வு (ஆங்ஹற்ண்ய்ஞ் ற்ட்ங் ழ்ங்ற்ழ்ங்ஹற்) சிறப்பாக நடக்கும். அப்போது அந்த நிகழ்வை காண்பதற்காக டெல்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் அங்கே கூடியிருந்தனர். கல்யாணத்தோடு படித்த ஒரு நண்பன் தனது இரண்டு குழந்தைகளுடன் அந்தக் காட்சியைக் காண அங்கே வந்திருந்தான். ஒரு குழந்தையை இடுப்பில் வைத்திருந்தான். சிறிது வளர்ந்த குழந்தையை கையில் பிடித்துக் கொண்டிருந்தான். அந்தக் குழந்தை அங்கே நடக்கும் நிகழ்வுகளை காண இயலாமல் தவிப்புடன் எம்பி எம்பி பார்த்துக் கொண்டிருந்தது. கல்யாணம் பின்னால் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் கல்யாணத்திடம்
""எப்பா! இந்தக் குழந்தையை கொஞ்சம் தூக்கி காண்பி'' என்று உரிமையாக கூறினார். உடனே கல்யாணம் நகைச்சுவையாக " "இதெல்லாம் வேண்டாம்ண்ணுதான் நானே கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறேன்'' என்று கூறிவிட்டு குழந்தையை தூக்கிக் காண்பித்தாராம். நண்பர் மனம் விட்டுச் சிரித்தாராம். 

சென்னைக்கு வந்த பின்புதான் கல்யாணம் திருமணம் செய்து கொள்ள ஓரளவு ஆயத்தமானார். சென்னையில் அவருக்கு ஆசிரியர் நண்பர் ஒருவர் இருந்தார். அவர் ""எனக்குத் தெரிந்த ஒரு பெண் இருக்கிறாள்.. பார்க்கிறாயா?'' எனக் கேட்டார். கல்யாணமும் ஒத்துக் கொண்டார். 
தேனாம்பேட்டையிலுள்ள அவர்களின் வீட்டிற்கும் போனார். அந்தப் பெண்ணின் தந்தை ஒரு உதவித் தலைமையாசிரியர். அவருக்கு எட்டுக் குழந்தைகள். அவர் ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவர். அவருடைய குழந்தைகள் உயர்ந்த படிப்பு படிக்காவிட்டாலும் எல்லோரும் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருந்தனர். ஆங்கிலத்தில் மிகச் சரளமாகப் பேசுவார்கள். எல்லோரும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தார்கள். அவருடைய மூத்த பெண் ஒரு மருத்துவராக இருந்தார். அவர் குழந்தைப் பேறு மருத்துவ நிபுணராக இருந்தார். அவர் மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருந்தபோதே ஒரு மேனன் பெண்ணும் ஓர் இஸ்லாமிய நண்பரும் அவரின் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். வீட்டில் என்ன விசேஷமென்றாலும் அந்த மூவரையும் அவர்கள் வீட்டில் காண இயலும். 
கல்யாணத்திற்கு அந்த வீட்டின் இளைய பெண்ணோடு திருமணம் நிச்சயமான தருணத்தில் அந்த வீட்டின் மூத்த பெண் அந்த இஸ்லாமிய மருத்துவரை ஏற்கெனவே திருமணம் செய்திருந்தார். அவர்கள் ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் திருமணம் செய்திருப்பதால் கல்யாணமும் அதை அறிந்தால் அவர்களது வீட்டில் திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுவாரோ என அஞ்சி அவரிடம் அந்த விஷயத்தை மறைத்து விட்டார்கள். 
பெண்ணைப் பார்த்தபோதே கல்யாணத்திற்கு மிகவும் பிடித்துவிட்டது. மிகவும் அழகாக இருந்தார். நல்ல ஆங்கிலம் பேசினார். அவரின் பெயர் சரஸ்வதி. அவர் தலைமை கணக்காயர் அலுவலகத்தில் வேலையில் இருந்தார். வீடும் அவர்கள் வீட்டின் பக்கத்தில்தான் இருந்தது. அடிக்கடி சந்தித்தார்கள். திருமணமாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தினமும் சந்தித்து வந்தனர். அன்றாடம் பேசிக் கொள்வார்கள். இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டார்கள். 
அந்தக் காலத்தில் கல்யாணத்திற்கு சென்னையிலுள்ள கல்யாணச் செலவு நடைமுறைகளைப் பற்றியெல்லாம் தெரியாது. அந்தக் காலத்திலெல்லாம் மூன்று நாட்கள் திருமண வைபவங்கள் நடக்கும். தனது நண்பரொருவரைச் சந்தித்து கல்யாணத்திற்கு எவ்வளவு செலவாகுமெனக் கேட்டார். அவர் அதற்கு ஐம்பது அறுபதினாயிரம் ரூபாயாகுமென்றார். 
அப்போது கல்யாணத்திடம் இருந்ததே வெறும் பத்தாயிரம் ரூபாய்தான்.
""ஐம்பதாயிரம் ரூபாய் அளவிற்கு என்ன செலவு இருக்கிறது'' என்று கேட்டார் கல்யாணம்.
அதற்கு அவர் துணிமணி, பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வரவேற்பு, உணவு வகைகளென செலவாகுமென்று கூறினார். கல்யாணத்திற்கு அது ஆச்சரியமாக இருந்தது. உடை, அலங்காரப் பொருட்கள், நகை, பாத்திரங்கள், பகவத் கீதை போன்ற பொருட்களெல்லாம் தம்மோடு இருப்பவை. அவற்றைச் செலவாகக் கருதக் கூடாதென்று கல்யாணம் கருதினார். அதன்பின் மற்ற செலவு கணக்கெல்லாம் பார்த்த போது ஐயாயிரம் ரூபாய்க்குள் கல்யாணச் செலவை நிறுத்திவிடலாமென கல்யாணத்திற்கு நம்பிக்கை வந்தது. 
உடனே தனது மனைவியாகப் போகிற சரஸ்வதியிடம் ""உன்னிடம் பணம் ஏதாவது வைத்திருக்கிறாயா'' எனக் கேட்டார். அதற்கு அவர், ""எனக்கு மாதா மாதம் 200 ரூபாய் சம்பளம் வருகிறது. இது வரைக்கும் 5000 ரூபாய் வரைக்கும் சேமித்து வைத்திருக்கிறேன்'' என்றார். 
""எங்கே வைத்திருக்கிறாய்?'' என்றார். 
அப்பாவிடம் கொடுத்திருப்பதாக கூறினார். 
அப்பா அதை என்ன பண்ணுகிறார்? 
அதற்கு அவர் அதை வீட்டிலேயே வைத்திருப்பதாக கூறினார். 
அந்தக் காலத்தில் கல்யாணத்தின் தந்தை பங்குச் சந்தையில் நிறைய முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதையெல்லாம் பார்த்த அனுபவம் கல்யாணத்திற்கு ஏராளமாக இருந்தது. அவரும் அதில் அடிக்கடி முதலீடு செய்து வந்தார். தன்னிடம் ஒரு நூறு ரூபாய் இருந்தால் அதை 200 ரூபாயாக மாற்றுவதற்கான நுணுக்கத்தினை நன்கு அறிந்திருந்தார். இதைப் பற்றி அவர்கள் சிறிதும் அறியாமல் இருந்தார்கள். அவர்கள் பணத்தினை வெறும் துணிமணியைப் போல் வீட்டில் அப்படியே அலமாரியில் பூட்டி வைத்திருப்பதாக கல்யாணம் கருதினார். 
திருமணத்திற்கு முன்பே மிகுந்த உரிமையுடன் அவரிடம் ""பணத்தை வெறுமனே ஏன் பூட்டி வைத்திருக்கிறாய். அதை என்னிடம் கொடு. நான் அதை பன்மடங்காக்குகிறேன்'' என்றார் கல்யாணம்.
சரஸ்வதியும் எதுவும் ஆலோசிக்காமல் அப்பாவிடமிருந்து அந்த ஐந்தாயிரத்தை வாங்கி கல்யாணத்திடமே கொடுத்து விட்டார். அதை கல்யாணமும் லாபகரமாக முதலீடு செய்தார்.

இருவரும் தினமும் வெளியில் போவார்கள். அப்போது கல்யாணத்திற்கு மிகவும் தெரிந்த நெருக்கமான நண்பராக எஸ்.எம். பழனியப்பா செட்டியார் இருந்தார். அவர்களது "கோனார் தமிழ் உரை' தமிழகத்தில் மிகவும் பிரபலமானது. அவர் கடுமையான உழைப்பின் காரணமாக வறுமையிலிருந்து விடுபட்டு முன்னுக்கு வந்தவர். 1953, 54 களில் மிதிவண்டியில் சென்று புத்தகம் விற்று பணம் சம்பாதிக்கத் தொடங்கி பின் பெரிய நிலையை அடைந்தவர். 
அவர் அப்போது ஒரு கார் வாங்கினார். அது ஸ்டூடி பேக்கர் கார். அவரிடம் ஒரு சின்ன ஆஸ்டின் காரும் இருந்தது. அதை அவர் கல்யாணத்தின் அவசியத்திற்காக கொடுப்பார். கல்யாணம் டெல்லியிலிருக்கும்போது காரும் மோட்டார் சைக்கிளும் வைத்திருந்தார். சென்னைக்கு வரும்போது அதையெல்லாம் விற்று விட்டார். அதனால் கல்யாணத்திற்கு அப்போதே நன்றாக காரோட்டத் தெரியும். பழனியப்பா செட்டியாரின் அந்தக் காரை எடுத்துக்கொண்டு சரஸ்வதி அலுவலகத்திலிருந்து வந்ததும் இருவரும் கடைகளுக்குச் செல்வார்கள். 
முக்கியமாக ஜார்ஜ் டவுனுக்குச் செல்வர். அப்போது சாலைகள் வாகனங்களின்றி ஏகாந்தமாக இருக்கும். அதனால் மூன்றே நிமிடங்களில் பத்திரமாக ஜார்ஜ் டவுனுக்குச் சென்று விடுவார்கள். 
அப்படி அவர்கள் நகரத்தை வலம் வந்த ஒரு தருணத்தில் சரஸ்வதியிடம் ஒரு தடவை "'எத்தனை புடவை உன்னிடம் இருக்கிறது'' என கல்யாணம் கேட்டார். 
அதற்கு அவர் நான்கு புடவைகள் இருப்பதாக கூறினார். நான்கு புடவை போதாதென்று இன்னும் நான்கைந்து புடவைகள் வாங்கிக் கொடுத்தார். 

1959 செப்டம்பரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கல்யாண அழைப்பிதழை பழனியப்பா செட்டியாரின் அச்சகத்திலேயே அடித்திருந்தார். அப்போதையச் செலவு 40 ரூபாய் ஆனது. திருப்பதி கோயிலில்தான் திருமணத்தை முடித்தார். அதிக செலவாகவில்லை. சரஸ்வதியின் சகோதரியின் கணவர் திருப்பதி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். அவர் அங்கு எல்லா திருமண ஏற்பாடுகளையும் செய்திருந்தார். திருமணம் முடிந்த மறுநாளே இருவரும் சென்னைக்கு திரும்பி வந்து விட்டனர். அதிகச் சடங்குகளொன்றும் வைத்துக் கொள்ளவில்லை. 
கல்யாணம் சென்னை வந்தபோது அவர் தங்கியிருந்த உட்லண்ட்ஸ் ஹோட்டலிலேயே திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய பிரமுகர்கள் பலர் வந்திருந்தனர். ராஜாஜி, சி. சுப்ரமணியம், காமராசர், பக்தவத்சலம், பி.கக்கன், சர்வன்ட்ஸ் ஆஃப் இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருந்த எஸ். ஆர். வெங்கட்ராமன், எஸ். ஆர். கைலார் போன்ற ஐ. சி. எஸ் அதிகாரிகள் பலரும் வந்திருந்தார்கள். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி உள்பட பலரும் வந்திருந்தார்கள். 
அப்போது திருமணத்தில் சுமார் 2,000 ரூபாய் மொய் பணமாக வந்தது. பரிசுப் பொருட்களை மட்டுமே கல்யாணம் எடுத்துக் கொண்டார். பணமாக வந்தவற்றை அன்றே முத்துலெட்சுமி ரெட்டி மூலமாக புற்றுநோய் மருத்துவமனைக்கும் மற்றும் பல சேவை நிறுவனங்களுக்குமாகக் கொடுத்து விட்டார். அன்று அவரது திருமண வரவேற்பிற்கு சுமார் 150 பேர் வந்திருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஆடம்பரமுமின்றி எளிய சிற்றுண்டியை விருந்தாகக் கொடுத்தார். மொத்த செலவு வெறும் நானூற்று ஐம்பது ரூபாய்தான் ஆகி இருக்கிறது. அந்த செலவை மட்டுமே கல்யாணம் தனது கல்யாணச் செலவாகக் கணக்கிலெடுத்துக் கொண்டார். மற்ற செலவுகளெல்லாம் தனக்காகச் செய்தமையால் அவற்றையெல்லாம் அவரது திருமணக் கணக்கில் உட்படுத்திக் கொள்ளவில்லை. ஆக மொத்தம் அவரது அன்றைய கல்யாணச் செலவு வெறும் ஆயிரம் ரூபாய்தான் என்பார் கல்யாணம். இப்போதைய திருமணச் செலவுகளைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com