ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எப்படிச் சாப்பிட வேண்டும்?

உணவின் அமைப்பு, நிறம், மணம் முதலியவை மனத்திற்குப் பிடித்ததாக இருத்தல் அவசியம். உணவருந்தும் சூழ்நிலையும் அப்படியே இருத்தல் நல்லது
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எப்படிச் சாப்பிட வேண்டும்?

உணவை எப்படிச் சாப்பிட்டால் அதனுடைய சத்து முழுவதையும் உடல் அடைந்து வலுப்பெறும் என்பதை ஆயுர்வேதம் கூறியுள்ளதா?
ஆதித்யாசுரேஷ், பெங்களூரு.

உணவின் அமைப்பு, நிறம், மணம் முதலியவை மனத்திற்குப் பிடித்ததாக இருத்தல் அவசியம். உணவருந்தும் சூழ்நிலையும் அப்படியே இருத்தல் நல்லது. கூட உணவருந்துபவரும் அன்புக்குரியவராக இருத்தல் அவசியம். வெறுப்புக்குரியவருடன் மனத்திற்குப் பிடிக்காத மணம், ருசி அமைப்புள்ள பொருளை அருவருக்கத்தக்க சூழ்நிலையில் ஏற்பதை விடப் பட்டினிக் கிடத்தல் நல்லதே. உணவு மனத் திருப்தி அளிப்பதே அதன் உயர்விற்கு அடையாளம்.

உணவில் பெருமளவில் அரிசி முதலிய தானியத்தாலான அன்னமே சேர்கிறது. அதன் ஜீரணம் நாவிலேயே தொடங்குகிறது. உமிழ்நீரில் ஜீரணத் திரவாம்சம் இதனைப் பக்குவமாக்கத் தொடங்குகிறது. இரைப்பையில் அது மேலும் வலிவடைகிறது. இதற்கு உதவவே பற்கள். நன்கு மென்று உண்ட உணவு எளிதில் ஜீரணமாகிறது. மிக வறண்ட பொருளாயின் (முறுக்கு, சீடை, வறுவல் முதலியவை) அதிக நேரம் மெல்ல நேர்கிறது. மெதுவானதும் நீர்த்து நெகிழ்ந்ததுமான உணவு அதிகம் நேரம் வாயில் தங்காமல் உட்சென்றுவிடும். மென்று சாப்பிடுபவனுக்கு உமிழ்நீர் அதிகம் சுரக்கும். பரக்கப் பரக்கச் சாப்பிடுபவன் உமிழ்நீரால் பெறும் லாபத்தை இழப்பான். உண்பதற்கு உட்கார்ந்ததும் நீர்பருகுபவனும் உமிழ்நீரை வலிவற்றதாக ஆக்கிவிடுவான். உமிழ்நீரால் ஆக வேண்டிய ஜீரணமும் அதனால் ஜீரணிக்கப் பெற்ற உணவுச்சத்து உட்சேர்வதும் இதனால் குறைகிறதென்பது கவனத்துக்குரிய விஷயம். உமிழ்நீரில் கரையும் சத்தே மன நிறைவைத் தருவதாகும்.

இரைப்பையின் கொள்ளளவு முழுவதையும் உணவால் நிரப்புவதால் லாபமில்லை, கெடுதலும் உண்டு. இரைப்பையின் கொள்ளளவை அதிக அளவில் உண்பதால் வளர்த்துக்கொண்டு பெருவயிறு கொண்டவராகலாம்.  வயிறு நிறையத் திணிப்பதால் இரைப்பையின் இயக்கம் தடைபட்டு ஜீரணமாகத் தாமதம் ஏற்படுகிறது. சிலருக்கு மூச்சு முட்டலும் மாரடைப்பும் ஏற்படக்கூடும். அதனால் இரைப்பையின் கொள்ளளவில் பாதியைக் கனத்த உணவாலும் மிகுந்துள்ள இடத்தில் பாதியை நீர்த்த உணவு அல்லது குடிநீராலும் நிரப்பி, கொள்ளளவில் மீந்த கால் பங்கை வாயு சஞ்சாரத்திற்கும் இரைப்பைத் தசைகள் இறுகித் தளர்ந்து பிசைவதற்கும் விட்டு விட வேண்டும்.

உணவின் அளவை நிர்ணயிக்க கீழ்க்கண்ட ஒன்பது அம்சங்களைச் சரகர் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்: 
1. வயிறு உணவால் உள் அழுத்தத்திற்கு உள்ளாகாதவாறு அமைதல்.
2. இதயத்திற்கும் இரைப்பைக்கும் இடையே திரை போன்று அமைந்துள்ள மஹாபிராசீர தசை (டயாஃப்ரம்) இரைப்பையின் நிறைவு அழுத்தத்தால் விம்மிப் புடைத்து மேலுள்ள இதயத்தை அழுத்தாதிருத்தல்.
3. விலாப்புறம் புடைக்காதிருத்தல். விலாப்புறம் அழுத்தம் பெற்றால் நுரையீரலும்  கல்லீரலும் மண்ணீரலும் செயலிழக்க நேரிடும்.
4. வயிறு அதிகம் கனக்காதிருத்தல். பெருமூச்சும் களைப்பும் காரணமாக நடை முதலியவற்றில் வயிற்று கனம் சிரமத்தைத் தரும். 
5. கண் முதலிய புலன்கள் பூரிப்பு பெறுதல். அதிக உணவேற்றால் அவை உடல் சோர்வின் விளைவாகத் தாமும் சோர்வடையும். தூக்கம், சோம்பல், மெத்தனம் முதலியவை ஏற்படும். அளவில் குறைந்தால் பொறிகள் தெளிவு பெறாது.
6. பசியும் தாகமும் அடங்குதல். பசியைத் தூண்டி உணவேற்க வைத்த உணர்ச்சிகள் பூரண உணவு பெற்றதால் தானே அடங்கிவிடுகின்றன. கனத்த உணவு நிறைய உண்பதால் பசி அடங்கினாலும், நாவறட்சி மிகுந்து அடிக்கடி நீர் பருகத் தூண்டுவதும் நீர் பருக இடமின்றி சிரமப்படுவதும் உண்டு. அதனால் நாவறட்சியைத் தூண்டவல்ல வறண்ட கனத்த உணவை அளவிற்கு மீறி உண்ணலாகாது.
7. நிற்பது, உட்கார்வது, படுப்பது, நடப்பது, மூச்சை உள் இழுப்பதும் விடுவதும், சிரிப்பது, அரட்டை முதலியவற்றைச் சிரமமின்றி சுகமாகத் தொடர்ந்து செய்ய முடிவது. வயிறு முட்ட உண்பதால் எந்நிலையிலும் நிலைகொள்ளாதிருப்பதும், மூச்சுத்திணறுவதும், பேசவும் சிரிக்கவும் சிரமப்படுவதும் கண்கூடு.
8. காலையில் உண்ட உணவு மாலையில் செரித்துவிடுவதும்,  மாலை உண்ட உணவு மறுநாள் காலையில் செரித்துவிடுவதும் நேர்ந்தால், உணவு சரியான அளவில் உட்கொண்டதாகக் கொள்ளலாம்.
9. வலிவும், நிறப்பொலிவும், உடல் வளர்ச்சியும் சீராக அமைவது.
இந்த ஒன்பதும் அளவுடன் உட்கொண்டதன் அறிகுறிகள்.   ஏப்பம் சுத்தமாக விடுதல், உற்சாகம், மலம் சிறுநீர் போன்ற இயற்கை உந்துதல்கள் எந்த விதமான கஷ்டமும் இல்லாமல் சுலபமாக வெளியேறுதல் . உடல் லேசாக இருத்தல், பசியும் தண்ணீர் தாகமும் நன்றாக எடுத்தல் ஆகியவை உண்ட உணவு நன்றாகச் செரித்துவிட்டது என்பதனை தெரிவிக்கின்றன. இவை ஏற்பட்ட பிறகே அடுத்த உணவை உண்ண வேண்டும் என்பது ஆயுர்வேதத்தின் ஓர் உயர்ந்த அறிவுரையாகும். 
(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com