ஒன்ஸ் மோர்

கல்கியின் உடல் நிலை மோசமாகி வருவது பற்றி செய்தி பரவவே அவருடைய எண்ணில்லா நண்பர்களும், அன்பர்களும், அரசியல் தலைவர்களும்,
ஒன்ஸ் மோர்

கல்கியின் உடல் நிலை மோசமாகி வருவது பற்றி செய்தி பரவவே அவருடைய எண்ணில்லா நண்பர்களும், அன்பர்களும், அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும் - காலை முதல் இரவு வெகு நேரம் வரை அவரைப் பார்ப்பதற்காக வந்த வண்ணமிருந்தார்கள். அவர்களில் யாரை மேலே மாடியில் கல்கியைப் பார்க்க அனுமதிப்பது என்பது பெரும் சங்கடமான விஷயமாய் ஆயிற்று.

கல்கி வீட்டு வைதிக காரியங்களுக்கு குருவான ரங்கநாத சாஸ்திரி கல்கியைப் போய்ப் பார்த்து "நீங்கள் இப்படி படுத்த படுக்கையாய் இருப்பதற்கு ஏதேனும் கிரகதோஷமாய் இருக்கும் என்று எனக்குச் சந்தேகம். உங்கள் ஜாதகத்தைத் தந்தால் என்ன தோஷம்னு கண்டுபிடித்து அதற்குத் தக்க பரிகாரம் செய்து விடலாம். ஒளஷத பலத்துடன் மந்திர பலத்தையும் நாடலாம்னு நினைக்கிறேன்'' என்றார்.

கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்து விட்டு கல்கி சொன்னார்:
 "என் மேலுள்ள அன்பினால்தான் நீங்க இப்படிச் சொல்றேள். இந்த அன்பே போதும். மணி, மந்திரம், ஒளஷதம்னு சொல்றது உமக்குதான். ஆனால் எனக்கு என்னமோ உங்கள் யோசனை சரியாகப் படலை. பகவான் நம்மைச் சோதிக்கலாம். ஆனால் நாம் பகவானைச் சோதிக்கக் கூடாது. பகவான் சித்தப்படி நடக்கட்டும்னு சரணாகதி நிலையில் இருக்கேன் நான்''
 இதைக் கேட்டு வருத்தமுற்ற சாஸ்திரிகளின் முகத்தைப் பார்த்துவிட்டு,  "நீங்கள் சொன்னபடி நான் கேட்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்.

கடவுள் கிருபையாலே நான் பிழைத்து எழட்டும். அப்புறம் அவருக்கு நன்றி செலுத்துற முறையில் என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்றாலும் சம்மதிக்கிறேன்'' என்றார் கல்கி. அதைக் கேட்டு சாஸ்திரிகள் சமாதானம் அடையாவிட்டாலும் மேலும் வாதாட விருப்பமின்றி விடை பெற்றுச் சென்றார்.

அன்று சனிக்கிழமை. காலையில் தன் குடும்பத்தார் அனைவரையும் தம் அறைக்கு வரும்படி நர்ஸ் மூலம் சொல்லி அனுப்பினார். அவர்கள் வந்ததும், "சும்மாதான். உங்களை எல்லாம் சேர்ந்து பார்க்க வேண்டும் போல் இருந்தது'' என்றார். "அம்மாவையும் பார்க்க வேண்டும் போல இருக்கு. ஏன் இன்னும் வந்து சேரவில்லை?'' என்று கேட்டார். புத்தமங்கலத்திலிருந்து அவருடைய தாயார் ஏற்கெனவே புறப்பட்டு திருச்சிக்குச் சென்று விட்டு அங்கிருந்து ராத்திரி ரயிலில் புறப்பட்டு சென்னை வரப் போவதாய் தகவல் கிடைத்தது. காலையில் எழும்பூருக்குக் காரைக் கொண்டு போய் அம்மாவை அழைத்து வரும்படி சொன்னார் கல்கி.

அன்று பிற்பகலில் முன்னேற்பாட்டின்படி வந்த பத்திரப் பதிவாளரின் முன்னிலையில் தமது உயிலில் கல்கி ஒப்பமிட்டார். அப்போது கல்கிக்கு திடீரென்று ஓர் ஆசை. பாலாற்றுத் தண்ணீர் குடிக்க வேண்டும்போல் இருக்கிறது அவருக்கு. ஆனால் அதற்கு ரொம்ப தூரம் செங்கல்பட்டு வரை போய் வர வேண்டும். அதைக் கேட்டு குடும்ப நண்பர் வரதப்பன் (எம்.பக்தவத்ஸலத்தின் மருமகன்) நான் போய்க் கொண்டு வருகிறேன் என்று ஒரு பெரிய குடத்துடன் தன் காரில் கிளம்பி விட்டார்.

கல்கியின் அறையில் சதாசிவம் தம்பதியினர் அமர்ந்து அவருக்கு தெம்பூட்டும் வகையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கல்கி எம்.எஸ்ஸைப் பார்த்து, "உங்கள் பாட்டைக் கேட்டு நாளாச்சு, கொஞ்சம் பாடுங்களேன்'' என்றார். அதற்கிணங்க எம்.எஸ்.ஸýம் தன் இனிய குரலுடன் இதய நாதமும் இணைந்த பாடல்கள், தெய்வங்களின் அருள் வேண்டும் பாடல்களைப் பாடினார். கண்களை மூடி அந்தத் தேவ கானத்தில் திளைத்திருந்த கல்கி, மகள் ஆனந்தியை தனக்குத் தூக்கம் வரும் வரை ஏதாவது பாடச் சொன்னார்.

"ஆரார் ஆசைப்படார்' என்பதுடன் தொடங்கி இரண்டு, மூன்று பாடல்களைப் பாடிய பின் "மறவேன் மறவேன் என்று வேலின் மேல் ஆணையிட்ட 
மன்னரும் மறப்பாரோ - நீல மயிலே' என்ற பாட்டைப் பாடினார்.

அது கல்கி அவர்கள் படைத்த சிவகாமி அபிநயித்து ஆடுவதற்கென அவரே இயற்றி ஆனந்த பைரவியில் அவரே மெட்டும் அமைத்த பாடல் அது.  "பேஷ் பேஷ்'' என்று சொல்லி அந்த சிவகாமியின் நடனத்தைக் கற்பனையில் கண்டு மகிழ்ந்தபடி உறக்கத்திற்குச் சென்று விட்டார். ஆனந்தி அப்போது பாடிக் கொண்டிருந்த காவடிச் சிந்து மெட்டுப் பாடலை முடித்துக்கொண்டு நர்ஸிடம் அவரை ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளும்படி சைகை காட்டிவிட்டு கீழே சென்றார். அதே வேளையில் கல்கியின் தாயார் ரயில் பிரயாணத்தில் பாதி வழி கடந்திருந்தார். பாலாற்றுத் தண்ணீருடன் நடுநிசியில் சென்னைக்குத் திரும்பிய வரதப்பன் அந்த அகால வேளையில் அதைக் கல்கியிடம் கொடுக்க வேண்டியதில்லை என்று எண்ணி நேரே தன் வீட்டுக்கே குடத்தை எடுத்துச் சென்றார்!

விடிவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருக்கையில் திடீரென வேதனையினால் கல்கி முனகினார். படுக்கை அருகே விரைந்த நர்ஸ் கைநாடியை பார்த்து விட்டுக் கீழே ஓடி டாக்டரை எழுப்பி அழைத்து வந்தாள். இருவரும் அவசரம் அவசரமாய்ச் சிகிச்சைகள் செய்து ஓய்ந்து கொண்டிருந்த உயிரை மீட்க முயன்றார்கள்.

விடிந்த பின் வந்த தாயார், மகனின் உயிரற்ற உடலைத்தான் பார்த்தார். அந்த உடலை நீராட்டத்தான் பயன்பட்டது அந்த பாலாற்றுத் தண்ணீர்.
கல்கியின் வாழ்க்கைச் சரிதமான  "பொன்னியின் புதல்வர்' 
என்ற நூலில் சுந்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com