சாந்தினி

லே. இந்தியாவின் உச்சத்தில், வருடத்தில் 9 மாதங்கள் உறைந்து கிடக்கும் குளிர்ப்பிரதேசத்தின், முக்கியமான நகரம்.  
சாந்தினி

லே. இந்தியாவின் உச்சத்தில், வருடத்தில் 9 மாதங்கள் உறைந்து கிடக்கும் குளிர்ப்பிரதேசத்தின், முக்கியமான நகரம்.  இங்கே மூன்று விதமான மனிதர்களை மட்டுமே பார்க்க வியலும்.  அந்தப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ்குடிமக்கள், இராணுவத்தினர், மற்றும் சொற்பஅளவில் வரும் சுற்றுலாப்பயணிகள். சுற்றிச்சுற்றிப் பனிபடர்ந்த மலைகள், சப்தமில்லாமல் பொழியும் பனி, வானையே உருட்டியடிக்கும் வண்ணம் ஊளையிட்டு வீசும் பேய்காற்று, இவற்றைத் தவிர வேறெதையும் இங்கே எதிர்பார்க்க இயலாது.  சுற்றுலாவுக்காக அங்கு சென்று ஓரிருநாட்கள் இருந்துவிட்டு வருவது என்பது வேறு; அங்கேயே வசிப்பது என்பது ஒருவித தண்டனை; பித்துப்பிடிக்கவைக்கும் தண்டனை.
லே' நகரத்திலிருந்து சுமார் 100 கி.மீ. தூரம் உள்ள இராணுவப் பகுதி. "தீனோ தீன்', "தைனே சலேகா',  "தைனே மூட்' இராணுவப் பயிற்சிக்கான குரல், உரக்க ஒலித்துக்கொண்டிருந்தது.  பனிப்பரப்பாய் உறைந்து கிடந்த அந்த சிறிய சமவெளியிலிருந்து இராணுவ வீரர்களை, காலை பயிற்சி செய்விக்கும் நேரம். கைகளில் ரைஃபிளை உயரத் தூக்கியபடி, மும்மூன்று பேராய், அணிவகுப்புப் பயிற்சியாக நடைபயின்று கொண்டிருக்க, அந்த அணியில் கடைசி வரிசையில் மத்தியில் வருபவன்தான் அவன்.  ஆறடி ஐந்து அங்குலம்.  அசாத்தியமான வளர்ச்சி.  அவனைப்போல் உயரமான தமிழனைப் பார்ப்பது சற்று அபூர்வம்தான். "தைனே மூட்' என்றவுடன், எந்திரங்கள் போன்று அனைவரும், கால்களை ஒருசேர திரும்பி மீண்டும் அந்த லெஃப்ட், ரைட்- இல் இணைந்தார்கள். இந்தியாவின் அத்தனை மொழிகளும் அங்கே இந்த இருசொற்களுக்குள் சுருங்கிப் போகின்றன. 
 அவனுடைய அந்த கனத்த பனிக் காலணிக்குள் அணிந்திருந்த காலுறை, வியர்வையில் நனைய ஆரம்பித்தது. அந்தப் பனிபடர்ந்த காலையில், அத்தனை வீரர்களின் மூச்சும், நீராவி இரயிலைப்போல், இலேசான நீராவிப்புகையை வழியெல்லாம் எழுப்ப, அத்தனை பேரும், பின்னர் ஓடிவந்து கொண்டிருக்கும் பயிற்சியாளரின் சொல்லை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். பயிற்சி முடிந்து ரோல்-கால் முடிந்ததும், எல்லாரும் கேன்டீனுக்குள் புகுந்தபோது, அவன்மட்டும் தன்னுடைய அறையை நோக்கி நடந்தான். கண்களைப் பூக்க வைக்கும் அந்தப் பனியை மேலும் அவன் பார்க்க விழையவில்லை. அவனுடைய அறை என்றால் அது அவனுக்காகவே என்று நினைத்துவிடாதீர்கள். இராணுவத்தில் எதுவுமே தனியொருவனுக்காக அமைக்கப்படுவதில்லை. எட்டுபேர் படுக்கக் கூடிய வசதிகொண்ட அந்த அறையில் தற்பொழுது, ஆறு பேர்களே இருக்கின்றனர். அதிலும், இருவர் நீண்டவிடுப்பில் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதால், இப்போது அந்த அறையில் நான்குபேர்கள் மட்டுமே. இன்று அவனுக்கு விடுப்புதினம்.
அறைக்குள் நுழைந்து, காலணியையும், ஃபர் கோட்டையும் அவிழ்த்தெறிந்து விட்டுப் படுக்கையில் வீழ்ந்தான். அந்தக் குளிர்ப்பிரதேசத்தில், கண்களைப் பூக்கவைக்கும் அந்த வெள்ளைப் பனித்தொடர்களைப் பார்க்காது, அறைக்குள் நுழைந்துவிட்டாலே அரைப் பங்கு குளிர் குறைந்ததுபோல் தோன்றும். மெல்ல மெல்ல, அவன் போர்த்துக் கொண்டிருந்த அந்த ரஜாயி, அவனை கதகதக்க வைத்தது. இந்த மாதிரியான தருணங்களில் அவன் தன்னுடைய கற்பனைக் கோட்டைக்குள் சென்றுவிடுவது வழக்கம். மூடிய ரஜாயிக்குள் அவனுடைய கற்பனைக்கோட்டை சட்டென்று வியாபிக்க ஆரம்பித்தது.

வெள்ளைக்குதிரை, விலை உயர்ந்த கார், நீண்ட படகு, நிழலாக பெண், தாஜ்மஹால், பாலைவனம், மரங்கள் சூழ்ந்த கடற்கரை என  சம்பந்தமில்லாமல், பல யோசனைகள் அவனுடைய கற்பனைக்கோட்டைக்குள் வந்தவண்ணம் இருந்தன. இதைப்பார்ப்பதா, அதைப்பார்ப்பதா, என்று அவனால் தீர்மானிக்க முடியாத அளவிற்கு அவனைச் சுற்றி பொருள்கள்; பொருள்கள் - பார்த்தவை, பார்க்க நினைத்தவை, பார்க்கத்தவறியவை, இதுவரை பார்க்காதவை என்று எல்லா
வகையிலுமாக அவன் கண்களை அயர்த்தின. இவையெல்லாம் வேண்டாம்; எனக்குத் தனிமையில் இனிமை வேண்டும் என்று அவன் உள்மனம் நினைத்தவண்ணமே, திடீரென, ஒரு தீவு; அத்தீவின் கரையை அவன் படகில் நெருங்கிக் கொண்டிருக்கிறான். தூரத்தில் சன்னமாக யாரோ ஒரு பெண் பாடுவதை அவனால் உணரமுடிந்தது. அந்த ஹிந்திப் பாடலைக் கேட்டிருக்கிறான் என்றாலும் அப்போது அந்தப் பாடலின் வரிகள் அவனுக்கு நினைவில் வரவில்லை. மிக ரம்மியமான குரல்; அவனுக்காகவே பாடுவதைப்போல்.
"தூ கானா பி நை காயேகா கியா?' அந்த அறையில் தூரத்துக்கட்டிலின் சொந்தக்காரனாகிய பஞ்சாபியின் குரல் அவனைத் திடீரென எழுப்பியது. அதற்குள் ரஜாயி நீக்கப்பட, தீவு, படகு எல்லாம் சட்டென மறைந்து, நீட்டிய மீசையுடன் பஞ்சாபி அவன் எதிரில். அவன் கண்ணகியாய் மட்டும் இருந்திருந்தால், அந்தப் பஞ்சாபியை அப்படியே எரித்திருப்பான். வேண்டா வெறுப்பாக, கேன்டீன் சென்று மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அறைக்கே திரும்பினான் அவன். 
என்ன ஒரு தருணம்? என்ன ரம்மியமான பாடல்! அதை இழந்துவிட்டோமே? என்று நினைத்த அவன் மனத்தில் சோகம் நிறைந்தது. அவனுடைய கற்பனைக்கோட்டையில், பொதுவாக, வந்த காட்சிகளே மீண்டும் மீண்டும் வருவது இல்லை. என்றாலும், அந்தப் பாடல் அவன் நெஞ்சை இன்னும் பிசைந்துதான் கொண்டிருந்தது.  
அன்று இரவு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. 
அந்தப்பாடலின் தாக்கம், அவனைத் தூக்கமிழக்கச் செய்தது. ஒருவிதமான வேட்கையை ஊட்டியபடி அந்தப்பாட்டு இன்னும் அவன் செவிகளில் ஒலித்தபடியே இருந்தது. மீண்டும் கேட்குமா? கற்பனைக் கோட்டைக்குள் எத்தனைமுறை செல்ல அவன் எத்தனித்தாலும், அது நடக்கும் என்ற நம்பிக்கையைச் சிதைத்தபடி அவன் எண்ணம், அந்தப் பாடலை நினைத்தவண்ணமே இருந்தது.  புலன்கள் மயங்காதிருந்தால், தூக்கம் எப்படி வரும்? தூக்கம் வாராமலிருந்தால் கனவுதான் எப்படி வரும்? கனவே வாராதிருக்கும் போது, கோட்டை ஏது?  அந்தப் பாடல்தான் ஏது? தூங்க முயன்றுகொண்டிருந்தான் அவன். மெல்ல ஒலிக்கத் தொடங்கியது அந்தப்பாட்டு. தூக்கி வாரிப் போட, ரஜாயியை விட்டெழுந்தான் அவன். பின்னும் அந்தக் குரல் கேட்டது.  இப்போது மிக அருகில்.  வெலவெலத்தபடி, பயந்து ரஜாயிக்குள் தன்னைத் துருத்திக்கொண்டான். மெல்ல மெல்ல அந்தப் பாட்டு, கரையத் தொடங்கியது. அதற்குப்பின் தூக்கம் வரவில்லை அவனுக்கு. 
அடுத்தநாள் காலை ஷிஃப்ட் என்பதால், வழக்கத்துக்கு மாறாக முன்னரே எழுந்து பணிக்குச் செல்லத் தயாரானான். கண்களைத் தவிர மற்ற இடங்கள் எல்லாம் மறைக்கும்படி ஆடைகள் அணிந்திருந்தாலும், வெளிக்கதவைத் திறந்ததும், சில்லென்று அவன் எலும்பு வரை சிலிர்த்தது. வானம் சிறிது வெளுத்துத்தான் இருந்தது. அந்தப் பைன் மரத்தோப்பைத் தாண்டித்தான் அவனை ஏற்றிக்கொண்டுபோகும் இராணுவ வண்டி வருவதற்கான சாலையை அடைய முடியும். முந்தைய நாள் பெய்த பனியில், பைன் மரங்கள் வெள்ளையுடை அணிந்திருந்தன. அவற்றின் கிளைநுனிகளிலிருந்து வழிந்த நீர், ஆங்காங்கே, வழிந்த நிலையிலேயே, கண்ணாடி வாட்கள் போன்று உறைந்திருந்தன. உள்ளங்கைகளைத் தேய்த்தபடி, அந்த பைன் மரத்தோப்பைக் கடக்கின்றான் அவன். திடீரென்று அவன்மேல் பனித்துளிகளின் தெளிப்பு.  பனியா? காற்றா? சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தலையைத் தன் கையால் துடைத்தபடி முன்னேறினான். மீண்டும் பனித்துளிகளின் தெளிப்பு... இம்முறை மிகுந்த வலிமையுடன். 
திடுக்கிட்டு மேலே பார்க்க, அவன் கடக்கும் மரங்களின் கிளைகள் மட்டும் அசைகின்றன. அந்த அசைப்பில், உறைந்த பனித்துளிகளின் தெளிப்பு. இப்போது ஓடினான். ஓடியும் அந்தப் பனித்தெளிப்பு தொடர்ந்தது. இன்னும் இரண்டு மரங்கள்தாம். அதோ சாலை வந்துவிட்டது. ஒரே தாவலாகச் சாலையைத் தொட்டவன் சற்று சுதாரிக்கும் தருணத்தில், அவன் பின் புறத்திலிருந்து, மெல்லிய பெண்குரல். "என்ன பயந்து விட்டாயா?' அவன் திடுக்கிட்டுத் திரும்ப, அங்கு ஒருவரையும் காணோம். "களுக்' என்ற சிரிப்பு! இப்போது குரல் அவன் வலப்புறத்திலிருந்து. 
இழுத்த மூச்சு, தொண்டைக்குள் அடைத்துக் கொள்ள, அவன் பயத்தில் வியர்த்தபடி குழறினான். "ஏய், யார் நீ?''
"களுக்' மீண்டும் அந்தச் சிரிப்பின் ஓசையோடு மலரால் தன் முகத்தை வருடுவதுபோன்ற உணர்வு. குரல் இப்போது இடதுபுறத்திலிருந்து கேட்டது. "தெரியவில்லை?' அவன் காதருகில் அந்தப் பாடல்... இரவெல்லாம் எந்தப் பாடலுக்காக ஏங்கினானோ அந்தப்பாடல்.  அவனுக்கு மட்டுமே கேட்கும்படியான மெல்லிய குரலில். அவன் இதயமும் மூளையும் ஒருசேர படபடத்தன; ஆயினும் காரணங்கள் வெவ்வேறு. இதயம் பாடலை ரசித்தது...  மூளை அவனை பயமுறுத்தியது. தூரத்தே இராணுவ வண்டியின் சைரன் ஓசை. மெல்ல அவனை விலகுவதுபோல் மெலிந்தது அந்தப் பாட்டு.
அவனை ஏற்றிக் கொண்டு வண்டி, அந்த வளைவைக் கடந்ததும், அந்தத்தோப்பின் அத்தனை மரங்களும் ஒரு மொத்தமாக தத்தம் கிளைகளை பலமாக உலுக்கின. ஓங்கி ஒலித்த அந்தப் பாடலைப் போலவே பனித்துளிகள் அந்தத் தோப்பை நிறைத்தன.

அன்று இரவு அவன் மிகவும் பயந்துவிட்டான். தன் கற்பனை அதிகமாகி விட்டது என்ற எண்ணத்தில், ரஜாயியை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க முயன்றான். என்னதான் இழுத்துப் போர்த்திக் கொண்டாலும், தூங்கவிடாமல் குளிர், கால்களைத் தாக்கியது. கண்களை மூடிக்கொண்டிருந்தவன், ரஜாயியின் அசைவினால் கண்களைத் திறக்க, அசைவுகள் அதிகமாவதை உணர்ந்தான். "யாரேனும் இழுக்கிறார்களா?' தலையை வெளியே விட்டுப் பார்த்ததில் தானும், அந்தக் கடைசிக் கட்டிலில் பஞ்சாபியும்தாம் அந்த அறையில் இருந்தனர். அந்த மெல்லிய குளிரிலும்,  ஓர்  இனந்தெரியாத கதகதப்பை அருகில் உணர ஆரம்பித்தான் அவன்.  ரஜாயி, மெல்லமெல்ல அசைந்து சிறிய கூடாரம் போலாகி அவனுக்கு இடப்புறத்தில் இடம் செய்துகொண்டது. 
"என்ன முழிக்கிறாய்?  நான் தான் மலரின் இதழ்'' தன் செவிமடல்களைத் தடவிவிடுவது போன்ற உணர்வுடன் அந்த மெல்லிய பெண்குரல். துள்ளியெழுந்த அவன் தன்னையும் அறியாமல் ஓவென்று கத்த, தூரத்தில் இருந்த பஞ்சாபி, தன் போர்வையை விலக்கி, "சுப் நகி சோயேகா க்யா? சாலா. மேரி நீந்து கோ பர்வாத் கர்த்தா ஹை'' என்று காட்டுக்கத்தல் கத்திவிட்டு மீண்டும் போர்வையைப் போர்த்திக்கொண்டான். அந்தப் பாடல், மெல்ல மெலிந்து அவனைவிட்டு விலகியது. அதற்குப்பின் அவனால் தூங்க முடியவில்லை. நடந்த நிகழ்ச்சியினால் ஏற்பட்ட அச்சமும், தன் செவியருகில் ஒலித்த அந்த குரலின் இனிமையும் ஒரு சேர  அவனைத் துன்புறுத்தின.
வர வர இரவுகளுக்காக அவன் பயப்பட ஆரம்பித்தான். அடுத்தநாளும், "இன்று என்னாகுமோ!'  என்ற எண்ணத்துடன் படுத்த அவனை, இரண்டு நாட்களாகச் சரியாகத் தூங்காததால் வந்த களைப்பு, தூங்கச் செய்தது. தூக்கத்தில் இடப்புறம் திரும்பியவன் ஏதோ நெருடும் உணர்வுற்று, கண்களைத் திறந்து பார்க்க, தனது இடப்புறம் ரஜாய் மீண்டும் கூடாரம் போல் குவிந்திருந்தது. மீண்டும் அதே கதகதப்பு. இலேசான மூச்சுவிடும் ஓசை. நாவுலர "யார் நீ? என்ன வேண்டும்?' என்று குழறினான். 
"பயப்படாதே. நான் உன்னை ஒன்றும் செய்து விடமாட்டேன்'' இம்முறை அந்தக்குரல் அவன் செவியருகில் கேட்டது. குரலில் அத்தனை ஈர்ப்பு இருக்குமென்று அதுவரை அறியாத அவன், அக்குரலுக்குத் தன்னை இழக்க ஆரம்பித்தான். இராணுவப் பயிற்சியில் பெற்ற அத்தனை தைரியத்தையும் திரட்டி, "உன் பெயரென்ன?' என்று வினவியபோது, மீண்டும் அதே "களுக்' சிரிப்பு. 
"உனக்கு என்ன பெயர் பிடிக்கும்? அதையே வைத்துக் கொள்''
"உருவமில்லாமல் வந்து என்னை ஏன் பயமுறுத்துகிறாய்?''
"உன் பக்கத்தில்தான் இருக்கிறேன். உன் மனத்தைக் குவித்து நான் இருப்பதாக உணர். என்னைக் கண்டு கொள்வாய்''
"உணர வேண்டுமா? பேயா நீ?''
மீண்டும் அதே "களுக்' சிரிப்புக்குப் பின் அமைதி. அந்தச் சிரிப்பு அவனுக்குத் தைரியத்தை அளித்தது.
"போய்விட்டாயா?''
"போய்விடட்டுமா?''
"இல்லை. போகாதே. அந்தப் பாட்டு. அந்தப்பாட்டைப் பாடு''
மெல்லிய குரலில் தேன்பிழியும் அந்தப்பாட்டு. அவன் செயலிழந்தான்.
"நீ யார்?  உன் பெயரென்ன?''
"அதான் சொன்னேனே. என்ன பெயர் உனக்குப் பிடிக்குமோ அந்தப் பெயரால் நீ என்னைக் கூப்பிடலாம்''
"உருவத்தில் வராத உன்னை எப்படி அழைப்பது?''
"இப்போது உன்பக்கத்தில்தான் இருக்கிறேன். உன் மனத்தைக் குவித்து நான் இருப்பதாக உணர். என்னைக் கண்டுகொள்வாய்''
"புரியவில்லை. இல்லாத ஒன்றை எப்படிக் கண்டுகொள்வது?''
"கண்களை மூடிக்கொண்டு,  நான் இருப்பதாக உணர்; என்னைக் காண்பாய்''
கண்களை மூடிய அவன் கரங்களில் கதகதப்பான மலர் வருடல். அந்த வருடலில் தன் நிலையை இழந்து, ஏதோ இருப்பதை உணர ஆரம்பித்தான். 
"மெல்ல மெல்ல என்னை உணர். உன் கரங்களுக்கு நான் வசப்பட ஆரம்பிப்பேன்''
அந்தத் தேன்குரல் அவன் செவிகளில் மதுவை நிறைத்தது. இதயம் நிரம்பி, கனக்க ஆரம்பித்தது.
இப்போது அந்த மலர்வருடல்கள் அவனுக்கு கனக்க ஆரம்பித்தன. மெல்லிய விரல்களை அவன் உணரத் தொடங்கினான். அவ்வளவு மென்மையான விரல்களை அவன் உணர்ந்தது கிடையாது. கதகதப்பு அதிகரிக்க, அவன் உடலும் அவன் இடப்புறத்தில் எதையோ உணர ஆரம்பித்தது. 
விரல்களின் நகங்கள்கூட அத்தனை மென்மையாக இருக்கமுடியுமா?  பெண்மையின் மென்மையை அவன் விரல்கள் உணர ஆரம்பித்த போது, திடீரென்று குளிர் காற்று. விரலையும் காணோம்; கதகதப்பையும் காணோம். கண்கள் திறந்தவன் தன் முன்னர் பஞ்சாபிக்காரன் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். 
"ஜல்தி வுட்டோ, சொப்னா தேக் ரஹேஹோ கியா? ரோல்-கால் டைம் ஹோகயா'' 
வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த அவன் அடுத்த இரண்டு நிமிடங்களில் காலைப் பயிற்சி ரோல்-காலுக்குத் தயாரானான்.

யாரிவள்? தேவதையா? ஏன் அருவத்தில் வந்து என்னிடம் விளையாடுகிறாள்? கேள்விகள் அவனைத் துளைத்தெடுத்தாலும், மனம் மட்டும், அவளுக்கென்றொரு பெயரைத்தான் தேடிக்கொண்டிருந்தது. பெண்மைக்கு அத்தனை மென்மையா? வாய்பிளந்தபடி அவள் நினைவில், பகலைக் கழித்த அவன், இரவுக்காக  காத்துக்கிடக்க ஆரம்பித்தான்.
வந்தாயிற்று.  வந்தவள், அந்தப் பாடலை அவனுக்காகவே அன்றிரவும் அவன் காதில் கிசுகிசுத்தாள். அவனுடைய இதயம், அவன் மூளையை ஒதுக்க ஆரம்பித்தது. 
"என்ன, பெயர் வைத்துவிட்டாயா?''
பாடலின் கிறக்கத்தில் இருந்த அவனை இந்தக் கேள்வி சற்றே உசுப்பிவிட, ரஜாயியை விலக்கி அங்கும் இங்கும் பார்த்தான். அன்று பௌர்ணமியோ? வெள்ளியை வாரியிறைத்தபடி, நிலா, மூடிய ஜன்னல் கண்ணாடியின் ஊடே புகுந்து அந்த அறையை ஒளிரச் செய்து கொண்டிருந்தது. 
"உன்னைச் சாந்தினி என்று கூப்பிடட்டுமா?''
"உனக்குப் பிடித்துள்ளதா?''
"ஆம், எனக்கு நிலா பிடிக்கும், நிலாவின் ஒளியும் பிடிக்கும். உனக்கு?''
"சரி... அழைத்துக்கொள்.  நான் இன்றிலிருந்து, இப்பொழுதிலிருந்து சாந்தினி. உன்னுடைய சாந்தினி''
"சாந்தினி''
"ஹூம்'' 
"சாந்தினி,  உன்னை நான் முழுமையாகப் பார்க்க முடியுமா?''
"முடியும்.  சில நாட்கள், ஏன் சில மாதங்கள் கூட ஆகலாம்''
"ஏன்? நீ உன் உருவத்தை எனக்குக் காட்ட
மாட்டாயா?''
"என்னால் காட்ட முடியாது. நீயேதான் என்னை உணர வேண்டும்''
"புரியவில்லை''
"கண்களை மூடிக்கொண்டு, என்னை உணர, உன்னைப் பழக்கிக் கொள். என்னை நீ உணர்வாய்''
"ஹூம், உன்னைப் பற்றிச் சொல்லமாட்டாயா?''
"என்ன சொல்ல? நீயே தெரிந்து கொள்வாய்''
"எப்படி? அதையும் நானாகவே உணரப் பழகிக் கொள்ள வேண்டுமா?''
"ஆம், நீயேதான் என்னை உணர வேண்டும்''
"களுக்' என்ற சிரிப்பை உதிர்த்துவிட்டு, "அதோ உன் நண்பன் உன்னை அதட்ட எழுகிறான் போலிருக்கிறது. நாளை வருகிறேன்''
அந்தப் பாடலைப் பாடியபடி, சாந்தினி கரையலானாள்.

அன்றிலிருந்து அவனுக்கு, சாந்தினியோடு பேசிக்கொண்டிருப்பதே இரவு நேர வாடிக்கை ஆகிவிட்டது. அவனுக்கு ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டது என்றே அந்தப் பஞ்சாபி இளைஞன் முடிவு செய்துவிட்டான். அவன் இரவில் ஏதோ புலம்பிக் கொண்டிருப்பதை, இப்போதெல்லாம் அந்தப் பஞ்சாபி பொருட்படுத்துவதே இல்லை. பைத்தியக்காரனுடன் அவனுக்கு என்ன பேச்சு? 
அன்றும் சாந்தினி வந்தாள்.அதே பாடல். எத்தனை முறை கேட்டாலும் அவனுக்குச் சலிக்காத பாடல். சாந்தினியின் விரல்களை உணரும் தந்திரத்தை மட்டும் அவன் கற்றுக்கொண்டான். 
"சாந்தினி''
"ஹூம்'
அந்தத் தேன்குரலில் வரும் "ஹும்' அவனை வெகுவாகவே கட்டிப்போட்டது. 
"சாந்தினி''
"ஹும்.  சொல்... என்ன?''
"எப்போதும் என்னுடன் ஏன் இருப்பதில்லை? இரவில் மட்டுமே வருகிறாயே ஏன்?''
"களுக்' என்று ஒரு சிரிப்பை உதிர்த்தாள் சாந்தினி. 
"உன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை''
"புரிந்துகொள்ள முயலாதே. என்னை உணர முயல்''
"ஹும். உன் விரல்களின் மென்மையை இப்போதெல்லாம் உணர்கிறேன். விரல் நகங்களின் மென்மையை, அதன் வழவழப்பை உணர்கிறேன்''.
"தெரியும். பழகிக் கொள். என்னை முழுமையாக உணர்வாய்''
"சரி - சாந்தினி!''
"ஹூம்''
"அந்தப் பாடலைப் பாடு''
"பாடுகிறேன். பாடல் முடியும்போது நான் சென்றுவிடுவேன்'' என்றபடி சாந்தினி அந்தப் பாடலைப் பாடிய படியே கரைந்தாள்.
இரவுகள் பகல்களாயின. பகல்கள் நாட்களை நகர்த்தின. நாட்கள் மாதங்களாயின. அவன் சாந்தினியின் பாட்டிலும் அந்தத் தேன்குரலிலும் வசியப்பட்டுக் கிடந்தான். இப்போதெல்லாம் சாந்தினியின் கரங்களை உணரும் தந்திரத்தையும் கற்றுத் தெரிந்திருந்தான். 

அன்று அவனுக்கு அவனுடைய தந்தையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 
"என்னப்பா, எப்படி இருக்கீங்க?''
"நான் நல்லா இருக்கேன்டா. ஒரு வருஷத்துக்கு மேலாச்சே. இன்னுமா லீவு கிடைக்கலே?''
"இல்லேப்பா. இப்ப  கொஞ்சம் கஷ்டம்தான்''
"அதெல்லாம் தெரியாது. உங்க மாமாகிட்ட பேசிட்டேன். அவர் பொண்ணை உனக்குக் கட்டறதா எல்லா பெரியவங்களும் சேர்ந்து முடிவு செஞ்சிருக்கோம். அடுத்த மாசம் 10-ஆம் தேதி கல்யாணம். அதுக்குத் தகுந்த மாதிரி லீவ் எடுத்துக்கிட்டு வந்துரு என்ன?''
"மாமா பொண்ணை நீ பாத்து ரொம்ப நாளாச்சேன்னு மாமா போட்டோவை உனக்கு அனுப்பியிருக்கார்''
வைத்துவிட்டார்.  சட்டென்று ஏதோ மிகப்
பெரிய மலையைத் தன் தலைக்குமேல் வைத்தாற்போன்று அவன் உணர்ந்தான்.
"என்ன யோசனை?'' சாந்தினி அன்று அவனைக் கேட்டாள்.
"ஒன்றுமில்லை'' 
அவன் எப்போதும் உணரும் அவள் விரல்களையும் நகங்களையும் அவளுடைய கரங்களையும் அன்று அவனால் இயல்பாக உணர இயலவில்லை.
"பாடட்டுமா?''
"இல்லை. பாடாதே. பாடினால் நீ சென்றுவிடுவாய்''
"ஹும்... சரி. சொல் என்ன யோசனை?''
அன்று முதல்முறையாய் அவன் தன் தலைமேல் மெல்லிய வருடலை உணர்ந்தான்.
"ஹும்''  சாந்தினி தொடர்ந்தாள்.
"சொல்லு சாந்தினி''
"இல்லை. நான் நாளை வருகிறேன்''
முதல்முறையாக அந்தப் பாடலைப் பாடாமலே அவள் கரைந்துவிட்டாள்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு, சாந்தினி அவனுடன் இருக்கும் நேரம் குறைந்துவிட்டது. முன்னர் சாந்தினியின் கைகளை உணர்ந்த அவன், இப்போதெல்லாம், அவள் நகங்களைக்கூட உணரக்கூட தன் மனத்தைக் குவிக்க இயலவில்லை. ஓரிரு நாட்கள் சாந்தினி அந்தப் பாடலைப் பாடினாலும், அவன் மனம் அதில் ரசிக்கவில்லை.
அப்பா சொன்னது போலவே, அவனுடைய மாமா தன் பெண்ணின் புகைப்படத்தை அனுப்பியிருந்தார். தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பார்த்ததைவிட அவள் இப்போது நன்றாக மெருகேறி இருந்தாள். படத்துடன், அவள் கைப்பேசியின் எண்ணையும் மாமா அனுப்பியிருந்தார். படித்துவிட்டு மேசையின் டிராயரில் வைத்தான் அவன்.
அன்று இரவு, "இன்று சாந்தினியிடம் சொல்லி விடவேண்டும்' என்று நினைத்த வண்ணம், ரஜாயிக்குள் அவன் தன்னை முடக்கிக்கொள்ள எத்தனித்தான்.
"என்ன சொல்ல வேண்டும்?'' காதருகே கிசுகிசுப்பாய், சாந்தினியின் குரல்.
தான் வாய்விட்டுச் சொல்லிவிட்டோமோ என்று திடுக்குற்று,  "ஒன்றும் இல்லை'' என்றான்.
"என்னிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றினால் சொல்லலாம்''
"சாந்தினி''
"ஹூம், சொல்''
சில நாட்களுக்கு முன் என் அப்பா என்னிடம் பேசினார்.
"அப்படியா? என்ன சொன்னார்?''
"எனக்குத் திருமணம் நிச்சயித்து இருப்பதாகக் கூறினார்''.
"உனக்கா? எப்போது?''
"வரும் பத்தாம் தேதி''
"எப்போது போக நினைத்துள்ளாய்?''
"ஐந்தாம் தேதி இங்கிருந்து கிளம்புகிறேன்''
"சரி''
"சாந்தினி''
"ஹும்'' 
"இது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?''
"நான் நினைப்பது இருக்கட்டும். நீ என்ன நினைக்கிறாய்?''
"தெரியவில்லை''
சரி, நான் நாளை வருகிறேன்'
சாந்தினி அன்றும் அந்தப் பாடலைப் பாடாது கரைந்துவிட்டாள்.

ஐந்தாம் தேதியும் வந்தது. அன்று முந்தைய இரவு சாந்தினி வரவில்லை. வாட்டத்துடன் பேருந்தில் ஏறி அமர்ந்தான். இரவுமுழுதும் சாந்தினிக்காக விழித்திருந்த அசதியால் தூங்க ஆரம்பித்தான். அங்கிருந்து 120 கி.மீ. சென்ற பின்னர்தான் இரயிலைப் பிடிக்க இயலும். பேருந்து மெல்ல மெல்ல வேகம் எடுத்து அந்த ஊரைவிட்டு மலைச்சாலைகளில் செல்லத் துவங்கியது. திடீரென்று அவன் தலையை யாரோ வருடுவது போன்ற உணர்வால் அவன் தூக்கத்தை விடுத்து எழுந்தான். அதுவரை உட்கார்ந்துகொண்டு பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர், கண்ணிமைக்கும் நேரத்தில், யாரோ அவரைத் தூக்கி வீசியதுபோல், எதிர்ப்பக்கம் போய்விழுந்தார். வண்டி நிலையில்லாமல் சாலையைவிட்டுச் சரிவில் சென்று பாதாளத்தில் விழுந்தது. 
பேருந்திலிருந்து தூக்கியடிக்கப்பட்ட உணர்வு. அந்தரத்தில் பறந்து ஏதோ மரங்களின் மீது நான்கு, ஐந்து முறை அடிபட்டு, சொத்தென்று மண்ணில் அறையப்பட்டான் அவன். விழுந்த ஒரு விநாடிக்குள், விசையுடன் வந்த பேருந்து அவன் மீது விழுந்தது. 
இருட்டு. கும்மிருட்டு. அவனுக்கு இலேசாக நினைவு திரும்பியபோது, தன் கால்கள் பேருந்தின் கீழ் நசுங்கியிருப்பதை உணர்ந்தான். குரல் எழும்பவில்லை. 
மீண்டும் மூர்ச்சையானான். யாரோ அவனை இழுப்பது போன்ற உணர்வு. அரை மயக்கநிலையில், "சாந்தினி, சாந்தினி'' என்று அவன் உள்ளம் நினைக்க ஆரம்பித்தது. உடலின் அத்தனைச் சக்தியையும் சேர்த்துத் தன் கண்களைத் திறந்துபார்த்த அவன் திடுக்குற்றான். அவன் காண்பது பேருந்தின் கீழ் நசுங்கிக் கிடக்கும் அவன் உடலை. மீண்டும் தன்னை யாரோ இழுப்பது போன்ற உணர்வு. 
"யாரது?''
"நான்தான் சாந்தினி''.
"சாந்தினி, நீ எப்படி இங்கே? நான் உயிரோடுதான் இருக்கிறேனா? எதிரில் நான் காண்பது என் உடலல்லவா?''
காதருகே மலரால் வருடுவது போன்ற உணர்வு.
"ஆம். அது உன் உடல்தான்''
"ஆனால் நான் என்னை யாரோ இழுப்பது போல் உணர்கிறேனே''
"நான் தான் இழுக்கிறேன்''
"சாந்தினி, அப்படியானால் நான் செத்துவிட்டேனா?''
சாந்தினி தன்னுடைய தேன்குரலில், மெல்ல அவன் காதில் கிசுகிசுத்தாள்:  "நீ இருப்பதாக உணர். உன் மனத்தைக் குவித்து உணர்''

சந்தர் சுப்ரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com