திரைக் கதிர்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து, தயாரித்த படம் "தேவி'.  வசூல் ரீதியில் இப்படத்துக்கு ரசிகர்களிடம்  பெரும் வரவேற்பு கிடைத்தது.
திரைக் கதிர்

• "இருமுகன்' படத்தையடுத்து விக்ரம் நடித்து வரும் படம் "ஸ்கெட்ச்'. விஜய் சந்தர் இயக்கத்தில்  உருவாகி வரும் இப் படத்தின் டீஸர் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விக்ரம் ஜோடியாக தமன்னா, ஸ்ரீப்ரியங்கா இருவரும் நடிக்கின்றனர். ராதாரவி, வேல. ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  இப்படத்தையடுத்து கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கும் "துருவ நட்சத்திரம்', ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள "சாமி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

• தமிழில்  பெரும் வரவேற்பைப் பெற்ற படம் "விக்ரம் வேதா'. இதன் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டி நிலவி வந்தது. இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிப்பது உறுதியாகியுள்ளது.  "விக்ரம் வேதா' ரீமேக் உரிமையைக் கைப்பற்ற தயாரிப்பாளர் சசிகாந்த்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்தி திரையுலகில் செய்திகள் வெளியாகின. ஆனால் "விக்ரம் வேதா' தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம்,  "விக்ரம் வேதா படத்தின்  ரீமேக் உரிமையை யாருக்கும் விற்கவில்லை. நாங்களே தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். நன்றி'' என்று தங்களுடைய  சுட்டுரைப் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக வெளியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

• "சங்கமித்ரா' படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு முன்பாக "கலகலப்பு 2' படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் சுந்தர்.சி. இதனால் "சங்கமித்ரா' தாமதமாகும் என்று செய்திகள் உலா வந்தன. இதற்கு குஷ்பு தனது சுட்டுரைப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். "கலகலப்பு 2' மற்றும் "சங்கமித்ரா' படப்பிடிப்பு குறித்து குஷ்பு கூறியிருப்பதாவது:
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான "கலகலப்பு' படத்தின் 2-ம் பாகம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும். அதில் ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ரானி ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். எனது அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. "கலகலப்பு 2' குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படக்குழுவினர் போக, மேலும் ஒரு நாயகன் நடிக்கவுள்ளார். படம் என்பது படப்பிடிப்பு மட்டுமே அல்ல என்று இயக்குநர் ஸ்பீல்பெர்க் தெரிவித்திருக்கிறார். 70% படம் என்பது முதற்கட்ட பணிகளே. அதற்குப் பிறகு தான் படப்பிடிப்பு உள்ளிட்டவை அடங்கும். "சங்கமித்ரா' டிசம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார் குஷ்பூ. 

• ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து, தயாரித்த படம் "தேவி'.  வசூல் ரீதியில் இப்படத்துக்கு ரசிகர்களிடம்  பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து தற்போது இக்கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளது. இப்புதிய படத்துக்கான தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. பிரபுதேவாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கருணாகரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது.  ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக சாம், எடிட்டராக ஆண்டனி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். பிரமோத் பிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து இதனை தயாரிக்கவிருக்கிறார்கள். தற்போது "கரு' படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் ஏ.எல்.
விஜய். அதனை முடித்துவிட்டு இப்புதிய படத்தின் படப்பிடிப்புப் பணிகளை மேற்கொள்வார் என தெரிகிறது. ஜனவரி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மே மாத வெளியீடாக படம் திரைக்கு வரவுள்ளது.

• கே.பி.என்.சினி சர்க்யூட்  நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் "கிடா விருந்து' எஸ்.பி. பிரசாத், ஷாலினி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஏ.எஸ்.தமிழ்ச்செல்வன். தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு புறம் ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு பயன்படுகிறது. மறுபுறம் இளம் தலைமுறையினரைத் திசை திருப்பும் விதமாக உருமாறி இருக்கிறது. இந்த பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு செல்வந்தரின் 4 பிள்ளைகள் பொறுப்பின்றி வாழ்கிறார்கள். ஒரு சமயத்தில் நிலை தடுமாறுகிறார்கள். அப்போது அவர்களுக்கு எழுந்துள்ள சிக்கல்கள் எவை.. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா.. என்பதே படம்.  எஸ்.ஆர்.வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.  "பிரின்ஸ்' நல்ல தம்பி இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.  
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com