பீம்சிங் குழந்தைகள் திரைப்பட சங்கம்!

அப்படிப்பட்ட குழந்தைகள் மனதில் நல்ல எண்ணங்களை வளர்ப்பதில் பெரியவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.
பீம்சிங் குழந்தைகள் திரைப்பட சங்கம்!

இன்றைய குழந்தைகள்தான் நாளைய தலைவர்கள் என்று கூறலாம்.

அப்படிப்பட்ட குழந்தைகள் மனதில் நல்ல எண்ணங்களை வளர்ப்பதில் பெரியவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.அதைத்தான் கோவையில் உள்ள "க்லெஸ்டர்ஸ் மீடியா அண்ட் டெக்னாலஜி' (Clusters Media and Technology) செய்கிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது இந்த இன்ஸ்டிடியூட். அவர்கள் சமீபத்தில் செய்த செயல் தான் மற்றவர்களை இந்த கல்லூரி பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ஆமாம்; இயக்குநர் பீம்சிங் பெயரால் குழந்தைகள் திரைப்பட சங்கம் ஒன்றை சென்றவாரம் தொடங்கி உள்ளார்கள். இது குறித்து அதன் தலைவர் அரவிந்தன் கூறியது:
"பொழுதுபோக்கு சாதனங்களையும் மாணவர்கள் சுலபமாக கற்று, வேலைக்கு செல்ல உறுதுணையாக இருந்து வரும் எங்கள் கல்லூரியின் ஒரு பிரிவுதான் திரைப்படத் துறை. இந்த திரைப்படத் துறையில் உள்ள நுணுக்கங்களை கற்று, அதை மக்களுக்கு போதிக்கும் ஆற்றல் கொண்ட ஒரு சிலரில் முதன்மையானவர் இயக்குநர் மற்றும் படத் தொகுப்பாளர் லெனின். நாங்களோ கோவையில் இருக்கிறோம். அவரோ சென்னையில் இருக்கிறார். 5 தேசிய விருதுகளைப் பெற்றவர் அவர். அவரைச் சந்தித்து எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். எந்தவித தயக்கமும் இல்லாமல் "நான் என்ன செய்ய வேண்டும்?'' என்றார். அதன்பின்னர், திரைப்படத் துறையைப் பற்றிய ஒரு சங்கம் இருந்தால் மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற எண்ணம் உதித்தது.

உடன் பணிபுரிபவர்கள் எல்லாருமே திரைப்பட சங்கம் என்றதும் ஆமோதித்தனர். பின் அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, எனக்கு தோன்றிய பெயர் லெனின் தந்தையார் பீம்சிங் பெயர்தான்.அன்று "ப' வரிசை படங்கள் மக்களை வசீகரிக்க காரணம், அந்தப் படங்கள்தான் மக்களுக்கு குடும்ப உறவினை போதித்தது. திரைப்படம் எப்படி எடுக்கவேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தது. அந்த வழியில் பலரும் வந்தார்கள். அதற்கு ஏகலைவனாக அன்று இருந்தது ஏ.பீம்சிங். பலரையும் சிறந்த நடிகர்களாகவும் மாற்றியவர். மக்களின் ரசனையையும் மேலோங்க செய்தார். அவர் பெயரை நான் சொன்னவுடன் என் சக தோழர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

எங்கள் பிரச்னையே இதற்கு இயக்குநர் லெனின் ஒப்புக் கொள்ளவேண்டுமே என்பதுதான். நாங்கள் எல்லாரும் அவரை முற்றுகையிட்டு சம்மதிக்க வைத்தோம். ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள்தான் இன்றும் என் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது. "வெறும் படங்கள் பார்த்துவிட்டு போவதை விட்டு, நல்ல மனிதர்களை, இளைஞர்களை நாம் உருவாக்க முயற்சிப்போம். அதற்கு என் தந்தையார் பெயர் இருந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்'' என்றார். அவர் கூற்று புரிந்தது. பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்காமல் இருக்க, இந்த சங்கத்தை "பீம்சிங் குழந்தைகள் திரைப்பட சங்கம்' என பெயரிடுவோம் என்றார்.

நல்ல எண்ணங்களும் செயல்களும் இன்று அரிதாகிக் கொண்டே போகிற இந்தக் காலகட்டத்தில், தீய எண்ணங்களை மாற்ற, குழந்தைகள் திரைப்பட சங்கம் வைப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

அடுத்த வருடம் சர்வதேச சிறுவர்கள் திரைப்பட விழாவையும் நடத்த எண்ணம் இருக்கிறது. கோவையில்தான் பட்சிராஜா ஸ்டுடியோ, சென்ட்ரல் ஸ்டுடியோ இருந்தது. ஆக, இங்கு சிறந்த திரைப்பட கல்லூரியும், இயக்குநர் பீம்சிங் பெயரால் குழந்தைகள் திரைப்பட சங்கமும் அமைந்தது எங்களுக்குப் பெருமை.

இயக்குநர் லெனின் போன்ற நல்லுள்ளம் கொண்ட பலரும், குழந்தைகள் சங்கத்தை திறந்து வைக்க வந்திருந்தார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இயக்குநர் ஞான ராஜசேகரன், பல்வேறு திரைப்பட விழாக்களை நடத்தும் ஸ்ரீனிவாசன் சந்தானம், படத்தொகுப்பாளர் துரைராஜ், மற்றும் தேவராஜ்.

இவர்கள் எல்லாரும் பார்த்து பிரமித்த விஷயம் எங்கள் கல்லூரிதான். நாங்கள் படப்பிடிப்பு நடத்த மாநகரத்துக்குளேயே மிகப் பெரிய ஸ்டுடியோ உள்ள இடமும் மற்றும் அனைத்து சாதனங்களும் இருக்கும் வண்ணம் உள்ளது. இதில் டான்ஸ் ஸ்டுடியோ, ஒளிப்பதிவு கற்றுத்தரும் தளம், சுமார் 100 பேருக்கு மேல் அமர்ந்து படம் பார்க்கும் வசதியான திரைப்பட தியேட்டர், இரண்டு பெரிய தளங்கள், இங்கு படப்பிடிப்பிற்கு வேண்டிய அளவிற்குத் தேவையான உபகரணங்களுடன் உள்ளன. அது மட்டுமல்லாமல் இங்கு அனிமேஷனும் (animation) சிறப்பான முறையில் கற்றுத் தரப்படுகிறது. இப்பொழுதே மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் விசாரித்த வண்ணம் உள்ளனர்'' என்றார் அரவிந்தன்.
-சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com