திரைக் கதிர்

சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா, வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் "இட்லி'.
திரைக் கதிர்

• சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா, வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் "இட்லி'. இப்படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். படம் குறித்து இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன் பேசும் போது, காமெடியுடன் கூடிய ஜனரஞ்சகமான படமான இதில் முக்கியமான சமூக அக்கறையுள்ள அம்சமும் இருக்கிறது. 29 நாட்களில் படப்பிடிப்பை முடித்தேன். படப்பிடிப்பின் இடையே கல்பனா இறந்துவிட்டார். அவர் நடிக்க வேண்டிய சில காட்சிகளை வேறொருவரை வைத்துப் படமாக்கினேன். டப்பிங்கும் வேறொருவர் பேசியுள்ளார். ஆனால், கல்பனா நடித்தது போலவே தத்ரூபமாக இருக்கும். வயதான மூன்று பாட்டிகள்தான் ஹீரோக்கள். இன்பா, ட்விங்கிள், லில்லி ஆகியோர் எதிர்கொள்ளும் சம்பவங்களைப் படமாக்கியுள்ளேன். பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் கிடையாது. ரசிகர்களைச் சிரிக்க வைத்து, பிறகு சிந்திக்க வைக்கும் படமாக கதை அமைந்துள்ளது. வங்கியில் கொள்ளையடிக்கும் மூன்று பாட்டிகளும் ஏன், எதற்கு, யாருக்காக இதைச் செய்கிறார்கள் என்பது திடுக்கிடும் திருப்பமாக இருக்கும்.சரண்யாவிடம் கதை சொன்னபோது, "நாங்கள் மூன்றுபேரும் துப்பாக்கி தூக்கி வந்தால் சரியாக இருக்குமா? இதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?' என்று சந்தேகத்துடன் கேட்டார். ஆனால், டப்பிங் பேசியபோது பார்த்த அவர்ஆச்சரியப்பட்டார். இதே மனநிலை, நவம்பரில் ரிலீசாகும் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் ஏற்படும்'' என்றார்.

• பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப், 85 நாள்கள் சிறை வாசத்துக்குப் பின் ஜாமீன் பெற்று வீடு திரும்பியுள்ளார். திலீப் திரும்பி வந்துள்ளதற்கு அவரின் ரசிகர்கள் முக நூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திலீப்பை ஏற்கெனவே தாக்கிப் பேசி வரும் நடிகை ரிமா கல்லிங்கல், மீண்டும் அவரை தாக்கி பேசியுள்ளார். "பேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருந்த ஒரு மெசேஜில் "திலீப் இஸ் பேக்' என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தனர். இதுபற்றி எனது தோழிக்கு சொல்ல விரும்புவது இதுதான். எல்லா ஆண்களுமே இதுபோன்ற செயல்களுக்கு வெட்கப்பட வேண்டும். உண்மையான ஆண்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெண்கள் துணை நிற்க வேண்டும். அவர்களை பாதுகாக்க வேண்டிய நேரம் இதுதான். திலீப்புக்கு ஆதரவாக ரசிகர்கள் வெளியிட்டிருப்பது உண்மையாக வேண்டுமானால், சிறையில் 85 நாட்கள் இருந்தபிறகு வெளிவந்தவர் அதற்கு பிறகாவது நற்குணங்களைப் பின்பற்ற வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார் ரீமா.

• எடாகி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சித்தார்த் தயாரித்து, நடித்து வரும் படம் "அவள்'. ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, அனிஷா விக்டர், அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. மூளை நரம்பியல் நிபுணர் ஒருவரின் வாழ்க்கையில், ஒரு சிறுமியின் நடவடிக்கையால் நிகழும் சம்பவங்களே கதை. அறிவியலுக்கும், கடவுளுக்கும் இடையே இருந்து வரும் குழப்பங்களுக்கு தீர்வு காணும்விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மணிரத்னத்தின் உதவியாளர் மிலிந்த் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மிலிந்துடன் இணைந்து திரைக்கதை உருவாக்கத்திலும் பணியாற்றியுள்ளார் சித்தார்த். கிரீஷ் இசையமைக்கிறார். ஷ்ரேயோஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். லாரென்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக சிவ ஷங்கர் பணியாற்றுகிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஒரு பாடல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. நவம்பர் மாத வெளியீடாக இப்படம் திரைக்கு வரவுள்ளது.

• சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் "அர்ஜுன் ரெட்டி'. இதில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்திருந்தனர். இந்தப் படத்தின் பெரும் வெற்றியால், இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய போட்டி நடக்கிறது. தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், போஜ்பூரி உள்ளிட்ட பல மொழிகளுக்கு இதன் ரீமேக் உரிமை விலை பேசப்பட்டு வந்தது. கடும் போட்டிகளுக்கு இடையே தமிழ் மற்றும் மலையாள பதிப்பு உரிமையை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாபாத்திரத்தில் விக்ரமின் மகன் துருவ் நடிக்க உள்ளார். இதன் மூலம் ஹீரோவாக சினிமாவில் அவர் அறிமுகமாக இருக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாலாவின் இயக்கத்தில் தமிழில் "அர்ஜுன் ரெட்டி' உருவாகவுள்ளது. விக்ரமின் வேண்டுகோளை ஏற்று பாலா இப்படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

• ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு பெயரிடப்படாமல் நடந்து வந்தது. குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முதற்கட்டப் படப்பிடிப்பில் இயக்குநர் மகேந்திரன், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்று நடித்து வந்தனர். சுமார் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்துக்கு "நிமிர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற "மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. மீதமுள்ள படப்பிடிப்பும் குற்றாலம் பகுதிகளிலேயே படமாக்கப்படவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டார். இப்படத்துக்கு சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகின்றனர். டிசம்பர் மாத வெளியீடாக படம் திரைக்கு வரவுள்ளது.
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com