வாய் கொப்பளியுங்கள்! ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

அடிக்கடி வேலை காரணமாகவெளியூர்களுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் அவ்விடங்களில் கிடைக்கக் கூடிய உணவு, தண்ணீர் ஆகியவற்றை நம்பியே வாழ வேண்டியுள்ளது.
வாய் கொப்பளியுங்கள்! ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

அடிக்கடி வேலை காரணமாகவெளியூர்களுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் அவ்விடங்களில் கிடைக்கக் கூடிய உணவு, தண்ணீர் ஆகியவற்றை நம்பியே வாழ வேண்டியுள்ளது. இதனால் எனக்கு வாய்வேக்காடு, நெருப்பு சுட்டது போன்ற எரிச்சல், காயம், சுவையறியாமை, வாய் அழுக்கு, கெட்ட நாற்றம், வறட்சி போன்று மாறி மாறி ஏற்படுகிறது. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை ஏதேனும் உள்ளதா?
-ஜெயசீலன், மதுரை.

மூலிகைப் பொருட்களால் ஆன திரவத்தை வாயில்விட்டுக் கொப்பளித்தல் எனும் சிகிச்சை முறை தங்களுக்கு உதவிடக்கூடும். இதற்கு "கண்டூஷம்' என்று பெயர். வாத தோஷத்தினால் ஏற்படும் வாய் உபாதைகளுக்கு  ஸ்நைஹிகம் என்று கொப்பளித்தல் முறையும், பித்தத்தினால் ஏற்படும் உபாதைகளுக்கு  சமன
கண்டூஷம் என்ற முறையும்,  கபத்தினால் ஏற்படும் வாய் உபாதைகளுக்கு  சோதன கண்டூஷம் என்ற முறையும்  வாய்ப்புண்ணை அகற்ற- ரோபண கண்டூஷமும் சிறந்தவை.
 இனிப்பு, புளிப்பு,  உப்புச் சுவையுள்ள சூடான வீரியம் கொண்ட பொருட்களால்  தயாரிக்கப்பட்ட அல்லது அதிகச்  சூடில்லாத எண்ணெய், மாமிச சூப்பு, எள்ளு அரைத்து கலந்த நீர் அல்லது பால் இவற்றின் சேர்க்கை ஸ்நைஹிகம் எனப்படும். அதனால் வாய் கொப்பளித்தால் வாதத்தினால் ஏற்படும் உபாதை
களான பற்கூச்சம், பல் ஆடுதல், வாய் வறட்சி போன்றவை நீங்கும். எள்ளை மைய அரைத்து குளிர்ந்த நீரிலோ, அல்லது சூடான நீரிலோ கலந்து வாய் கொப்பளித்தால் சிறந்த முறையாகும்.
 பொதுவாக வாய் கொப்பளிப்பதற்கு நல்லெண்ணெய் அல்லது மாமிச சூப்பு சிறந்த பொருளாகும்.
 நெருப்பு சுட்டது போன்ற எரிச்சல், வாய்வேக்காடு, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காயம், விஷம், காரம், உப்பு மிகுதியாக உள்ள பொருட்களை சாப்பிட நேர்வதால் ஏற்படும் வாய்ப்புண், நெருப்பினால் ஏற்படும் சுட்டபுண் ஆகியவற்றில் பசுநெய் அல்லது பசும்பாலை வாயில் 8 - 10 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு துப்பி விட வேண்டும்.  இதனால் வாய் சுத்தமாவதுடன், வாயில் பிளந்த புண்களைக் கூட்டி வைக்கிறது. தேனைக் கொண்டு வாய் கொப்பளித்தால் வாயிலுள்ள எரிச்சலும் நீர்வேட்கையும் அடங்குகின்றது.
 புளி கரைத்த  தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்தால் சுவையறியாமை, வாயில் உண்டாகும் அழுக்கு, கெட்ட நாற்றம் இவை விலகும்.
 உப்பு சேராத குளிர்ந்த புளித்தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்தால் வறட்சி நீங்கும்.
 மிளகு, உப்பு கலந்த தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்தால் கபத்தினால் ஏற்படும் மாவு போன்ற நாக்கில் படியும் படிவங்கள், நீர் சுரப்பு, கனம், இனிப்புச் சுவை போன்றவை விரைவில் குணமடையும்.
 அதிகக் காற்றோட்டமில்லாத சூரிய ஒளியுள்ள இடத்தில் நன்றாக அமர்ந்து கொண்டு அதிலேயே மனதை ஈடுபடுத்தி, தொண்டை, தாடை, நெற்றி இவற்றை வியர்க்கச் செய்து, கொப்பளிக்கும் திரவத்தை வாயில் பாதி அளவு நிரப்பிக் கொண்டு கொப்பளிப்பது உயர்ந்த அளவாகும். மூன்றில் ஒரு பங்கு அதை நிரப்பிக் கொண்டு  கொப்பளிப்பது நடுத்தர அளவாகும். நான்கில் ஒரு பங்கு அதை நிரப்பிக் கொண்டு கொப்பளிப்பது குறைந்த  அளவாகும். வாய் கொப்பளிக்கும் போது தலையைக் கொஞ்சம் நிமிர்த்தியபடி இருக்க வேண்டும்.
 தாடையின் உட்பகுதி கபத்தினால் நிரம்பும் வரையும், மூக்கு, கண் இவற்றிலிருந்து நீர் பெருகத் தொடங்கும் வரையும், கபத்தினால் வாயிலிடப்பட்ட பொருட்கள் கெடாதவரையும் கொப்பளிக்கப் பயன்படும் கஷாயத்தை வாயில் வைத்திருக்க வேண்டும். இம்மாதிரி மூன்று, ஐந்து அல்லது ஏழு முறை செய்ய வேண்டும். இச்சிகிச்சையினால் பிணி நீங்கியிருந்தால் இம்முறை நன்கு நிறைவேறியுள்ளது என அறியலாம்.
 அரிமேதஸ்” எனும் தைலம் வாய் கொப்பளிக்க சிறந்த மூலிகைத் தைலமாகும். வாய் உபாதைகள் எதுவும் இல்லாதவர்கள் கூட, இந்த தைலத்தை 5 மி.லி. அளவில் எடுத்து வாயில் விட்டு 5 - 8 நிமிடங்கள் பற்கள், ஈறுகள், நாக்கு, மேலண்ணம் ஆகிய பகுதிகளில் நன்கு படுமாறு சுழற்றி சுழற்றிக் குலுக்கித் துப்பிவிடுவதன் மூலம், வாய் தொடர்பான பல உபாதைகள் ஏற்படாதவாறும், ஏற்பட்ட உபாதைகள் குறையவும் பயன்படுத்தலாம். இரவில் பல் தேய்த்து படுக்காதவர்கள்  இந்த தைல முறையை இரவில் படுக்கும் முன் பயன்படுத்தி வாய் அழுக்கை அகற்றி, முக வசீகரத்தையும் பெறலாம். 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com