அமைதி எங்கே?

"எத்தனை தடவைதான் ஒரே புடைவையைத் திரும்பத் திரும்பப் பார்ப்பாயோ?'' என்று சேகர் தன் மனைவி சுதாவைப் பார்த்துக் கேட்டான்.
அமைதி எங்கே?

தேடி எடுத்த கதை

"எத்தனை தடவைதான் ஒரே புடைவையைத் திரும்பத் திரும்பப் பார்ப்பாயோ?'' என்று சேகர் தன் மனைவி சுதாவைப் பார்த்துக் கேட்டான்.
"ஒரு புடைவைதானே வாங்கி வந்திருக்கிறீர்கள்? அதைத்தானே பார்த்தாக வேண்டும்?'' என்று பதில் அளித்தாள் சுதா.
"உனக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா?''
"ஹும்! அதெப்படி உடனே சொல்லிவிட முடியுமாம்?'' என்று கூறிக்கொண்டு அவள் புடைவையை அட்டைப் பெட்டியில் எடுத்து வைத்து விட்டாள்.
சேகரின் முகத்தில் சிரிப்பு மறைந்தது. அவன் தன் கையில் இருந்த பேப்பரைப் பிரித்து வைத்துக்கொண்டான். சுதா காபி தயாரிப்பதற்காகச் சமையலறைக்குள் போய்விட்டாள்.
அவள் கொஞ்ச நேரம் கழித்துக் காபியைக் கொண்டு வந்தபோது, சேகர் சட்டையை அணிந்து வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான்.
"இப்பொழுதுதானே வந்தீர்கள்? அதற்குள் எங்கே வெளியே கிளம்பி விட்டீர்கள்?''
"எங்கும் இல்லை.''
"கோபம் வந்துவிட்டதாக்கும்? இதுதான் நான் கொடுத்து வைத்தது. எப்பொழுது பார்த்தாலும் கோபமும் சிடுசிடுப்புந்தான். தீபாவளிப் பண்டிகை என்று பட்டாசே வாங்க வேண்டாம்; உங்கள் முகத்தில் வெடிக்கிற வெடியே போதும்!'' என்று பொரிந்து கொட்டிக் கொண்டே சுதா காபியை "டக்'கென்று மேஜை மேல் வைத்தாள். வைத்த வேகத்தில் காபி தளும்பி டபராவில் சிந்தியது.
"ஏன், என் தலைமேலேயே கொட்டி விடேன்!'' என்று உரைத்துவிட்டு அவன் அந்தக் காபியைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் விடுவிடென்று இறங்கி வெளியே போய்விட்டான். 
சுதா குமுறி வந்த துக்கத்தை அடக்கியபடி, கணவனுக்காக வைத்த காபியைக் கையில் எடுத்துக்கொண்டு, தன் வேலையைப் பார்க்கச் சமையலறைக்குள் புகுந்தாள். அவளுக்குக் காபி அருந்த வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை. பட்சணங்கள் செய்வதற்காக அவள் மாவுகளைச் சலிக்க ஆரம்பித்தாள்.
"சே, சள் சள் என்று விழுந்து கொண்டு! என்ன பண்டிகை வேண்டியிருக்கிறது? ஆனால், இந்த இரண்டு பிசாசுகளும் வந்துவிட்டால் விடாதே! அதற்காகத்தான் ஏதாவது செய்ய வேண்டும். வாங்கி வந்த புடைவை இந்த உலகத்திலேயே கிடைக்காத பொருள் என்று கொண்டாட வேண்டும்! அப்பப்பா, சுயநலக்கார மனிதன்!'' என்று வாய்விட்டு முணுமுணுத்துக் கொண்டே அவள் அடுப்பைப் பற்ற வைத்து வேலையைக் கவனித்தாள்.
அவள் உயிர்த் தோழி லட்சுமி அங்கு வந்தாள். "சுதா, உன் தீபாவளிப் புடைவை என்ன நிறம்?'' என்று உற்சாகத்துடன் கேட்டாள். அவள் அப்பொழுதுதான் ஜவுளிக் கடையிலிருந்து வருவதன் அடையாளமாக அட்டைப் பெட்டிகளும், பிளாஸ்டிக் பைகளும் அவள் கைநிறைய இருந்தன. 
சுதா அவளைப் பார்த்து ஒன்றுமே சொல்லவில்லை. ஓமப்பொடிக்கு மாவு பிசைவதில் அவள் முனைந்துவிட்டாள். 
"சுதா, உனக்கென்ன, செவிடா? நான் கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையே! என்ன புடைவை உனக்கு?'' 
"காட்டுகிறேன்'' என்று உரைத்துக் கொண்டே சுதா தன் கையைக் கழுவிக் கொண்டு எழுந்து சென்று தன் புடைவையைக் கொண்டுவந்து காட்டினாள்.
"இதுவா? இது என்.ஸி.ஸி. பச்சை. இந்த வருஷம் கற்பகக் கலர்தான். என் புடைவையைப் பார்'' என்று கூறிக்கொண்டே தன் புடைவையை எடுத்து நீட்டினாள் லட்சுமி.
கற்பகக் கலர் என்ற புது மாதிரி நிறத்தில், மிளகாய்ச் சிவப்புக் கரையில் ஒற்றைச் சரிகைப் பேட்டும், அதன் கீழ் நட்சத்திரங்களுமாகப் புடைவை கண்ணைக் கவர்ந்தது.
 "இது நன்றாக இல்லையல்லவா?'' என்று ஏமாற்றம் தோய்ந்த குரலில் கேட்டாள் சுதா.
"யார் அப்படிச் சொன்னார்கள்? புடைவை மிகவும் நன்றாக இருக்கிறது. இப்பொழுது அது பழைய கலராகிவிட்டது; அவ்வளவுதான். அதாவது, அதற்குப் பிறகு இந்தக் கலர் வந்துவிட்டது.''
லட்சுமி வெகு நேரம் புடைவை, பாவாடை, துணிமணி, விலைவாசிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினாள். கணவனுக்காகத் தயாரித்த காபியைச் சுடவைத்துத் தோழிக்குத் தந்து உபசரித்தாள் சுதா.
"நேரமாகிறது; நான் போய்ப் பார்க்க வேண்டும். சமையல்காரி என்ன செய்து வைத்திருக்கிறாளோ?'' என்று துரிதப்பட்டாள் லட்சுமி.
"என்ன பட்சணம் செய்யச் சொன்னாய்?''
"எதையாவது செய் என்றேன். இரண்டே பேர் இருக்கிறோம்; எதைச் சாப்பிட்டால் என்ன? புடைவைதான் மோசு, தீபாவளியில்'' என்றாள் லட்சுமி.
"அவர் என்ன வாங்கிக்கொண்டார்?''
"சாதா கைத்தறி வேஷ்டி ஒரு ஜதை. அவருக்குத் தீபாவளியில் ஆசையே கிடையாது. நான்தான் வீட்டில் பண்டிகை செய்யாமல் இருக்கக் கூடாது என்று பிடிவாதமாகக் கொண்டாடுவேன்.''
"ஆண் பிள்ளைகளே அப்படித்தான் போலும்! வெறும் யந்திரப் பிறவிகள்!'' என்றாள் சுதா.
லட்சுமி கலகலவென்று சிரித்தாள். "அதொன்றும் இல்லை. கார்த்திகை விளக்கு வைத்தால் அவரே நூறு அகல் ஏற்றுவார்'' என்று பதில் தந்துவிட்டு அவள் அவசர அவசரமாகக் கிளம்பினாள்.
மீதிப் பட்சணங்களையும் செய்து முடித்துவிட்டு, சுதா சமையல் செய்ய ஆரம்பிப்பதற்கும் அவள் பிள்ளையும் பெண்ணும் பள்ளிக்
கூடத்திலிருந்து வீடு திரும்புவதற்கும் சரியாக இருந்தது.
"என்னம்மா, ஓமப் பொடிதானா?'' என்று கேட்டு மூக்கைச் சுளித்தாள் பெண் சித்திரா.
"ஹையா! ஓமப் பொடியும் முந்திரிக் கேக்குமா? ஜோர்!'' என்றான் பிள்ளை சுகுமாரன்.
"நன்றி கெட்ட வீட்டிலே நீயாவது இருக்கிறாயே, அப்பா'' என்றாள் சுதா.
"நீ ஏன் அம்மா, சிடுசிடென்கிறாய்? நளினி, சோபா, அம்மா எல்லாரும் வாசலிலேயே காத்துக் கொண்டிருந்து ஆசையோடு கூப்பிடுகிறார்கள்'' என்றாள் சித்திரா.
"சரி, சரி, கை காலை அலம்பிக் கொண்டு வா. நளினி அம்மாவுக்கு வீட்டிலே சமையல்காரன், சோபா அம்மாவுக்கு மேரு மலையாட்டமா மாமியார் இருக்கிறார்கள். எனக்கு யார் இருக்கிறார்களாம்? வாழ்த்திக் கொண்டாலும் நானேதான்; தாழ்த்திக் கொண்டாலும் நானேதானே?'' என்றாள் சுதா.
சித்திரா ஓடிவிட்டாள். பிறகு அவள் தாயுடன் பேச வரவே இல்லை. பட்டாசும் மத்தாப்பும் எடுத்துக் கொண்டு தெருப்பக்கம் போய்விட்டார்கள் இரண்டு குழந்தைகளும்.
சுதா சமையல் செய்து முடித்து வைத்துவிட்டுக் காத்திருந்தாள். அவள் கணவன் வருவதற்குள் குழந்தைகள் இருவரும் சாப்பிட்டு விட்டார்கள்.
"அப்பா இல்லாமல் சாப்பிட்டால் பண்டிகை மாதிரியே இல்லை'' என்றாள் சித்திரா.
"ஆமாம். அப்பாவுடன் பேசிச் சிரிக்காமல் தீபாவளி மாதிரியே இல்லை'' என்று குறைப்பட்டுக்கொண்டாள் சுகுமார்.
"உங்கள் அப்பாவுக்கு அல்லவா அது தெரிய வேண்டும்?'' என்றாள் சுதா.
குழந்தைகள் உறங்கவும் போய்விட்டார்கள். அப்பொழுதுதான் சேகர் வீடு வந்து சேர்ந்தான்.
சுதா இலையைப் போட்டாள். சேகர் முதலில், "வேண்டாம், எனக்குப் பசிக்கவில்லை'' என்றான்.
படுத்துக் கொண்டிருந்த சித்திராவும் சுகுமாரும் எழுந்து வந்து தகப்பனாரைக் கட்டிக் கொண்டார்கள்.
"ஏம்பா நீங்கள் எங்களுடன் சாப்பிட வரவில்லை? உங்களோடு பேச மாட்டோம்'' என்று சித்திரா கொஞ்சினாள்.
"அப்பா, நீங்கள் சாப்பிடாவிட்டால் அம்மா சாப்பிட மாட்டாள். பிறகு பண்டிகை மாதிரியே இருக்காது. வாருங்கள், நீங்களும் சாப்பிடுங்கள். நாங்களும் மறுபடியும் பாயசம் சாப்பிடுகிறோம். அப்போது சாப்பிடவே தோன்றவில்லை'' என்றான் சுகுமார்.
சேகர் மெளனமாக மனைவியின் முகத்தைப் பார்த்தான். குழந்தைகளை உன்னினான். பிறகு நிதானமாக அவன் முகத்தில் தெளிவு பிறந்தது.
"வாருங்கள், கழுதைகளா. தூங்கிப் போயிருப்பீர்கள் என்று நினைத்தேன். சீக்கிரம் தூங்கினால்தானே விடியற்காலம் விழிக்கச் செளகரியமாக இருக்கும்?'' என்று செல்லமாக அவர்களைக் கண்டித்து உணவருந்த அமர்ந்தான் சேகர். "சுதா, நீயும் கூடவே சாப்பிடேன்'' என்றான்.
"ஆகட்டும். அவசரம் இல்லை. எனக்குப் பசிகூடத்தான் இல்லை'' என்று பதில் அளித்தபோது சுதாவின் கண்களில் நீர் மல்கியது.
சேகர் அவளை முறைத்துப் பார்த்தான். அவள் அதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. அவன் சாப்பிட்டு எழுந்ததும், அவள் அந்த இடத்தைச் சுத்தப்படுத்தியபின், பட்டினியாகவே படுத்தாள். சேகர் பார்த்துக் கொண்டே இருந்தான்; ஆனால் ஒன்றும் பேசவில்லை.

விடியற்காலை எல்லாரும் எழுந்தார்கள். சதிபதிகள் ஒன்றும் பேசிக் கொள்ளவே இல்லை. சேகர் குழந்தைகளுடனேயே பேசிச் சிரித்துக் கொண்டு, தெருவில் வெடிகளைக் கொளுத்துவதில் இருந்தான்.
சுதா தன் போக்கில் மங்கள ஸ்நானம் செய்துவிட்டுப் புதுப் புடைவையைப் பிரித்து உடுத்திக்கொண்டு சுவாமி படத்தின் முன் வணங்கி எழுந்தாள். கூடத்து மரப் பீரோவின் நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தையும் புதுப் புடைவையையும் அவள் பார்த்துக்கொள்வதை அப்பொழுதுதான் உள்ளே வந்த சேகர் ஓரக் கண்ணால் கவனித்தான். உடனே அவன் சரசரவென்று வெளியே போய்விட்டான். இதைப் பார்த்த சுதாவும், துக்கத்தை அடக்க நறுக்கென்று உதட்டைக் கடித்துக்கொண்டாள்.
இருட்டுப் பிரிவதற்கு முன்பே சேகரின் தங்கை லலிதா கணவனுடன் வந்துவிட்டாள். அவள் வரவைக் கண்டு சித்திராவும் சுகுமாரும் ஆர்ப்பரித்தனர். தங்கள் அத்தையை இரண்டு கைகளாலும் கட்டி இழுத்துக் கொண்டு வந்தனர்.
"வா, லலிதா'' என்று உற்சாகமின்றி அழைத்துவிட்டு, வந்தவர்களுக்குப் பட்சணம் கொண்டு வரும் சாக்கில் சுதா உள்ளே போனாள். அவள் தன் நாத்தனாரின் புடைவையைக் கவனித்தாள். ஆம், அவள் கற்பகக் கலரில்தான் புடைவை உடுத்திருந்தாள். சுதா தன் புடைவையைப் பார்த்துக் கொண்டாள். அவள் தொண்டை அடைத்தது.
"உன் புடைவை மிகவும் அழகாக இருக்கிறது. மன்னி. உன் சிவந்த மேனிக்கு நல்ல எடுப்பாக இருக்கிறது'' என்றாள் லலிதா.
"போன வருஷப் பழைய கலர்'' என்று வெடுக்கென்று கூறிவிட்டு, உதட்டைஇளக்காரமாக முறுக்கினாள் சுதா.
"இதுவரை நீ கட்டாத கலர் தானே?''
சுதா பதிலே பேசவில்லை. அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"அத்தை, அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்வதில்லை. நீங்கள் வரும் வரை வீடு நன்றாகவே இல்லை. நீங்கள் இங்கேயே இருங்கள், அத்தை'' என்றாள் லலிதாவின் காதோடு, அவள் மருமகள்.
அவள் வாயைப் பொத்தினாள் லலிதா. பிறகு தன் மதனியைத் தேடிப் பின்புறம் சென்றாள். "மன்னி, ஏன் ஒரு தினுசாக இருக்கிறாய்?'' என்று கேட்டாள்.
"எனக்கு என்ன தினுசு வந்து விட்டது இப்பொழுது?''
"நேற்று அண்ணா என் வீட்டுக்கு வந்திருந்தான். எங்கோ அவசர ஜோலியாக ஊருக்குப் போவதாகச் சொன்னான். திரும்பி வர நாளாகும் என்றான். பண்டிகை நாளில் திடீரென்று இப்படி நேர்ந்துவிட்டதே என்று நான் அங்கலாய்த்தேன். என்ன செய்வது என்று பதில் சொல்லும்போது அண்ணாவின் முகமே பேயறைந்த மாதிரி இருந்தது. இரவெல்லாம் என் மனசு மிகவும் குடைந்தது. இன்று உங்களை என்னுடன் சாப்பிட அழைத்துச் செல்ல வேண்டும் என்று இருட்டிலேயே ஓடி வந்தேன்'' என்றாள் லலிதா.
"இல்லாவிட்டாலுந்தான் என்ன கவலை?''
லலிதா மன்னியைப் பார்த்துப் பிறகு சட்டென்று திரும்பி முன்பக்கம் போனாள். "அண்ணா, இன்று நீங்கள் அங்கே சாப்பிட வந்து விடுங்கள்'' என்று அவள் அழைப்பது கேட்டது.
"பெண்ணும் மாப்பிள்ளையும் இங்கு வருவதுதான் முறை. நீங்கள் எல்லாரும் இங்கு வாருங்கள்'' என்று சேகர் பதிலளித்தான்.
"பட்டாளத்தோடேயா?'' என்று லலிதாவின் கணவன் கேட்டான்.
"ஆமாம், எல்லாரும் வந்து விடுங்கள்; மஜாவாக இருக்கும்'' என்றாள் சித்திரா.
"சரி, அண்ணா. அவர் போய்ப் பட்டாளத்தைத் திரட்டிக் கொண்டு வரட்டும். நான் இங்கு நின்றுவிடுகிறேன். ஆனால், இன்றைக்கு நான்தான் சமைப்பேனாக்கும். என் கையால் சமைத்துப் போட வேண்டுமென்றுதான் அழைக்க வந்தேன். இங்கேயாவது சமைத்தால் எனக்குத் திருப்தியாக இருக்கும்' என்றாள் லலிதா.
தன் சுளித்த முகத்தைச் சற்றுச் சாதாரணமாக ஆக்கிக் கொண்டாள் சுதா.
"என் புடைவை எப்படி, மன்னி?'' என்று கேட்டாள் லலிதா.
"நன்றாக இருக்கிறது. புதிய, இன்றைய, இந்த நிமிஷத்திய நிறம் என்று தெரிந்திருக்கிறதே! இனி என்ன சொல்ல வேண்டும் என்கிறாய்?''
"இல்லை. எங்கள் எதிர்வீட்டு அம்மாள் இந்தக் கலர் கொஞ்சம் சாயம் போன பாக்குக் கலர் மாதிரி இருக்கிறது என்றாள். அதனால்தான் கேட்டேன். என்வரைதிருப்திதான். அவர் ஆசைப்பட்டு வாங்கி வந்தார். இந்த வருஷம் எனக்குப் பட்டுப் புடைவை வாங்க வேண்டும் என்று குழந்தைகள் முதல் தம் அப்பாவோடு சேர்ந்து கொண்டு தீர்மானம். பாவாடை வாங்கிக் கொண்டவள், சட்டை வாங்கவில்லை. சட்டை வாங்கிய பிள்ளை நிஜார் வாங்கவில்லை. இப்படி எல்லாருமாக எனக்குப் புடைவை வாங்கி நேற்றுத் திடீரென்று காட்டினார்கள். அப்பொழுதுதான் அந்த எதிர்வீட்டு மாமி அப்படித் தத்துப் பித்தென்று சொல்லி வைத்தாள். நல்ல காலம், இவர் காதில் விழவில்லை.''
"இதில் நல்ல காலம் என்ன, கெட்ட காலம் என்ன, லலிதா? அவரவர் மனத்துக்குத் தோன்றியதைச் சொல்லத்தான் சொல்வார்கள். லட்சுமியும் இதே நிறந்தான் வாங்கியிருக்கிறாள். மிளகாய்க் கரை போட்டுப் பளிச்சென்று இருக்கிறது. இதில் வேறு கரை இல்லை. மங்கலாகத் தெரிகிறது.''
"உன் புடைவைக் கலர் எனக்கு மிகவும் பிடித்தது.''
"என்னைச் சமாதானப் படுத்தப் பார்க்கிறாயா?''
லலிதா அதற்கு மேல் பேசவில்லை. வேலையைத் துவக்கும்முன், சித்திராவுடனும் சுகுமாருடனும் தன் தமையனுடனும் பேசி இன்புறலாம் என்று அவள் முன்பக்கம் போய்விட்டாள்.

அன்று விருந்துச் சாப்பாடும், குழந்தைகளின் ஆரவாரமும், வெடிச் சத்தமுமாக வீடு கோலாகலமாக இருந்தது.
சுதா மட்டும் சிரிப்பின்றி, யந்திரம் போல வேலை செய்தாள். உணவு முடிந்ததும், லலிதாவின் கணவன் முன் பக்கத்து அறையில் படுத்து உறங்கி விட்டான். லலிதா தீபாவளி மலர்களைப் புரட்டிக்கொண்டிருந்தாள். அவளைச் சூழ்ந்து குழந்தைகள் கொட்டம் அடித்தன.
சுதா ஒரு பழைய புடைவையைப் பிரித்துப் போட்டுக்கொண்டு சமையலறையில் படுத்துவிட்டாள். தண்ணீர் குடிப்பதற்காக அங்கு வந்த சேகர் அவளைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
"நேற்று எங்கே போவதாக இருந்தீர்கள்?''
"எங்கோ? உனக்கு வசதி செய்து விட்டுத்தான் போயிருப்பேன்.''
"பின்னே ஏன் திரும்பிவிட்டீர்களாம்?'' வார்த்தைகள் அவளை மீறி வெளியே வந்தன.
"உன்னை உத்தேசித்து ஓடினேன். குழ்தைகளை எண்ணித் திரும்பினேன். ஆனால் ஒன்று மட்டும் நினைவில் இருக்கட்டும். ஓரளவுதான் மனிதனின் பொறுமை தாங்கும். நாக்கை அடக்கிப் பேசு. நேற்று இரவோடு உன் கண்ணியமான வாழ்வே முடிந்துவிட்டிருக்கும்!''
"அற்ப விஷயத்துக்காக வீட்டை விட்டு ஓடினீர்கள் என்றால் உலகம் சிரிக்காது?''
"அதற்கு நீதான் காரணம் என்று தெரிந்து உலகம் சிரிக்காவிட்டால், அது என்னைக் கண்டும் சிரிக்காது. பெரிய விபரீதம் வந்துதான் பிளவு ஏற்பட வேண்டும் என்பதில்லை. சின்னச் சின்ன விரிசல்கள்கூட அதற்குக் காரணமாகலாம். ஏற்கெனவே இற்றுப் போயிருக்கும் ஓர் இடத்துக்குக் கோடாலி வேண்டாம் பிளக்க; ஓர் ஊசி முனை கூடப் போதும்.''
பேச்சுத் தடித்துக்கொண்டே போயிருக்கும். ஆனால் அதற்குள் லட்சுமி புதுப் புடைவை புசு
புசுக்க அங்கு வந்தாள். சேகர் சட்டென்று சமாளித்துக் கொண்டு சிரித்து அவளை வரவேற்றான். "அடுத்த தீபாவளிகூட வருவதற்காகிவிட்டது. இப்பொழுதுதான் கங்காஸ்நானம் விசாரிக்க வருவதா?''
"என்ன செய்வது? இந்தத் தீபாவளி அப்படியாகிவிட்டது. இந்தப் புதுப் புடைவை கட்டக்கூட மனசில்லை'' என்று கூறியபோது லட்சுமியின் வதனம் வாடிவிட்டது.
"என்ன, என்ன?''
"இன்று விடியற்காலை குளிக்கிற அறையில் அவர் சறுக்கி விழுந்தார். கணுக்கால் எலும்பு முறிந்து விட்டது. ஆஸ்பத்திரிக்கு அலைந்து கட்டுப் போட்டுக்கொண்டு சற்று முன்தான் வந்தேன். அவர் விடாமல், புதுப் புடைவை உடுத்துக்கொண்டு உங்களைப் பார்த்துவரச் சொன்னார்.''
"அவர் மனம்போல மாங்கல்யமாகி விட்டதா?'' என்றாள் சுதா.
"என்ன பேசுகிறாய், சுதா? அந்த மட்டும் இடுப்பு எலும்பு உடையாமல் கணுக்காலோடு நின்றதே என்று நான் திருப்தி செய்துகொள்கிறேன்.''
"என்ன திருப்தியோ உங்களுக்கெல்லாம்!'' என்றாள் சுதா.
"இப்பொழுது உனக்கு மட்டும் என்ன நேர்ந்து
விட்டதாம்? திருப்தி என்பது வெளியிலிருந்து வந்து உள்ளத்தில் நிறைவதில்லை. அது உள்ளத்திலிருந்து பிறந்து அங்கேயே நிலைக்க வேண்டியதுதான். நானும் நல்ல நாளும் அதுவுமாக உன்னுடன் சண்டை போடக்கூடாது என்று பேசாமல் இருந்தேன். லட்சுமி, இன்று நாங்கள் இங்கு வரவில்லையென்றால் இங்கே கலகலப்பே இருந்திராது. நீதான் சொல் உன் சிநேகிதிக்கு'' என்று லலிதா படபடவென்று பேசினாள்.
"ஆமாம், சுதா. ஏன் உனக்கு எப்பொழுதும் அதிருப்தி? எங்காவது ஒரு நிலையில் திருப்தியைக் கொள்ள வேண்டியதுதான். லலிதாவின் புடைவையை விட என் புடைவை பளிச்சென்று இருக்கிறது. என்னுடையதைவிட எதிர்வீட்டில் சரிகைக் கரை போட்ட புடைவை இன்னமும் பிரமாதமாக இருக்கிறது. இப்படியே பார்த்துக் கொண்டு போனால், எப்பொழுதுதான் முடிவு காண முடியும்?'' என்று கேட்டாள் லட்சுமி.
"அதிருப்திதான் உலகத்தில் அபிவிருத்திக்குக் காரணமாக இருந்திருக்கிறது என்பது உங்கள் இருவருக்கும் நினைவிருக்கட்டும்'' என்றாள் சுதா, சுடச்சுட.
"ஆக்க முறையில் அது சரிதான். அமைதிக்குக் காரணம் திருப்திதான். தெரியும் அல்லவா?'' என்றாள் லட்சுமி.
"உன் வீட்டில் பட்டாடை வாங்கப் பஞ்சம் இல்லை. என் வீட்டில் அதற்குப் பஞ்சம். ஆனால் சந்தோஷத்தை அதிகரிக்கவோ, துக்கத்தை ஆற்றவோ குழந்தைகள் இருக்கின்றன. லட்சுமிக்கு அதுவும் இல்லை. ஆனால், அவள் திருப்தியாகத்தான் இருக்கிறாள். உனக்கு அவர்கள் வீட்டுச் சமையல்காரியும், சரிகைப் புடைவையுமே தெரிகின்றன'' என்றாள் லலிதா, சாந்தமாக, ஆனால் திண்மையாக.
"நான் இன்றைக்குப் புதுப் புடைவை உடுத்த மாட்டேன் என்றேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா? "எலும்புதானே முறிந்துவிட்டது, லட்சுமி? அது தானாகவே ஒட்டிக்கொள்ளும். மனம் முறிந்தால்தான் விசனப்பட வேண்டும். நீ புதுப் புடைவையைக் கட்டிக்கொள்ளா விட்டால், என் மனமல்லவா பாதிக்கப்படும்?' என்று கேட்டார். உடனே உடுத்துக்கொண்டேன்'' என்று கூறிவிட்டு லட்சுமி தன் தோழியை நோக்கினாள்.
சுதா வைத்த கண் வாங்காமல் அவர்களையே பார்த்தாள். பிறகு எழுந்து சமையலறைக்குள் சென்று, காபி அடுப்பைப் பற்ற வைக்கலானாள்.
"லட்சுமி, நாங்கள் எல்லாரும் உங்கள் வீட்டுக்கு வருகிறோம். அவருக்குக் கொஞ்சம் தெம்பாக இருக்கும்'' என்று சேகர் கூறினான்.
சுதா வெகு நேரம் வரை சமையலறையிலேயே இருந்துவிட்டாள். பிறகு எல்லாருக்கும் காபி கலந்து கொண்டு கொடுக்கும்போது அவள் மற்றவர்களைப் பார்த்தாள்.
"எல்லாரும் வந்து விசாரித்தால் மட்டும் போதாது. இன்று இரவு அங்கே தான் சாப்பிட வேண்டும். லலிதா, நீயும் உன் குடும்பமுங்கூடத்தான்'' என்றாள் லட்சுமி.
லலிதா கணவன் முகத்தைப்பார்த்தாள். "திருப்தியாகக் கூப்பிட்டால் மறுக்க உரிமை கிடையாது'' என்று அவன் பதில் அளித்தான்.
உடனே இரண்டு குடும்பங்களும் கிளம்பி லட்சுமியின் வீட்டுக்குப் போனார்கள்.

அன்று இரவு போஜனம் முடிந்து திரும்பி வருகையில் சுதா சற்றுப் பின் தங்கினாள். அவளுக்குத் துணையாகச் சற்றுத் தொலைவில் சேகரும் நின்று நடந்தான். மற்றவர்கள் கும்மாளமிட்டுக்கொண்டு பின்னாடி சென்றனர்.
"இதோ பாருங்கள். நான் அப்பொழுது முதல் யோசித்துப் பார்த்தேன். என்னை மன்னித்துவிடுங்கள். எனக்குப் பேசத் தெரியவில்லை'' என்றாள் சுதா. மெதுவாக, அதைச் சொல்லி முடிப்பதற்குள் அவள் உடலெல்லாம் வேர்த்துக் கொட்டியது. அவளுக்கு அவ்வளவு சிரமமாக இருந்தது. தன் ஆணவத்தை மறந்து கீழே இறங்க.
"கிடக்கட்டும், போ. நாம் இரண்டு பேருமே நம் அசட்டுத்தனத்தை மறந்துவிடுவோம்'' என்று தணிவான குரலில் பதில் அளித்தான் சேகர்.
அப்பொழுது அந்தத் தீபாவளி அமாவாசைக் கருக்கலிலும் எங்கோ பூர்ண சந்திரன் எழுந்து வந்ததுபோல அவள் உள்ளத்தில் அமைதியும் வெளிச்சமும் நிறைந்தன.
அதைக் கவனித்த மற்றவர்களும் தெளிவதைக் கண்டு அவள் உள்ளம் வெண்ணிலாவாகப் பளபளத்தது.
(1965)

 அநுத்தமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com