"அலிகார்' ஆனந்த்

"அலிகார்' ஆனந்த்

பூட்டு சாவிகள் என்றால் அனந்துவுக்கு உயிர். அந்தந்த  பூட்டிற்கு  என்று   அமைந்திருக்கும் சாவியைப்  போட்டால்தான் திறக்கும் என்பதால் அவற்றின் விசுவாசத்தின் மேல் அபார அபிமானம் என்று கூடச் சொல்லலாம்.

பூட்டு சாவிகள் என்றால் அனந்துவுக்கு உயிர். அந்தந்த  பூட்டிற்கு  என்று   அமைந்திருக்கும் சாவியைப்  போட்டால்தான் திறக்கும் என்பதால் அவற்றின் விசுவாசத்தின் மேல் அபார அபிமானம் என்று கூடச் சொல்லலாம். வீட்டில் கண்ணாடி போட்ட ஆளுயர காட்ரெஜ் பீரோ நிறைய வித விதமான அலிகார், திண்டுக்கல் மற்றும் ஏழு லீவர், ஒன்பது லீவர் மார்ட்டிஸ் பூட்டுகளை சாவி சமேதராக  சேகரித்து பாதுகாப்பாக வைத்து அந்த பீரோவையும் பூட்டி அதன் சாவியைக் கண்ணும் கருத்துமாக  பிறர் கண்ணுக்குப் புலப்படாத கறுப்பு நிற அரைஞாண் கயிற்றில் தொங்க விட்டு வைத்திருப்பார். பூட்டுகளின் மாற்றுச்  சாவிகளை எங்கே வைத்திருப்பார் என்பது அவருக்கும் அவர் மனைவி பத்மாவிற்கு மட்டும் தெரிந்த  "உஸ்-உஸ்' ரகசியம். 
 அமெரிக்காவின் புல்லியன் என்று அறியப்
படும் மொத்தத்  தங்கமும் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் ஃபோர்ட் நாக்ஸ், மற்றும் திருப்பதி, திருவனந்தபுரக் கோயில்களின் கருவூலங்கள் கூட இவ்வளவு பாதுகாப்பு, கெடுபிடி இருக்காது என்கிற நண்பர்களின் கேலியை உள்வாங்கி,   "அடப் போங்கையா!'' என்று சொல்லி  அக
மகிழ்ந்திடுவார். 
 பத்மாவுடன் ஊருக்குப் போகக் கிளம்புவது ஒரு பெரிய சடங்கு.  கோட்டை கொத்தளம் போன்ற வீட்டின் பன்னிரண்டு  அறைகளின் கதவுகள், மற்றும் பிரதான வாசல் கதவு, கொல்லைப் புறக் கதவு  என்று ஒன்று விடாமல் பத்மா சாட்சியாகப் பூட்டி, அவற்றை தலா மும்மூன்று  முறை இழுத்துப் பார்த்து, நான்காவது முறையாக அதிலிருந்து தொங்கி தூளி ஆடி, பின்னர் சந்தேகத்துக்கு அவளையும் அவ்வாறே தொங்கச் செய்த பின்னர்தான் அரை மனசுடன் வெளியே கிளம்புவார். சில சமயங்களில் தெருக்கோடி வரை போன பின் தோன்றிய சந்தேகத்தினால்,  "பத்து வாசக் கதவை பூட்டினோம் இல்லையா?''  என்று கலவரத்துடன் மனைவியைக் கேட்டால்,  "ஆமாம்  பூட்டினோமே'' என்று சொல்வாள். "இல்லியே பூட்டலேன்னு நினைக்கிறேன்''னு சொன்னால், "ஆமாம் பூட்டலேன்னு நினைக்கிறேன்''னு ஆமாம் சாமியாக பத்மா ஒத்து ஊதுவாள்.  இவ்வாறு குழம்பி பல தடவைகள் வீடு திரும்பி ரயிலைக் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
  சிறுவனாக இருந்த காலத்தில் அனந்து  தெரிந்துகொண்ட முதல் விடுகதை:  "கருப்பு சட்டைக்காரன். காவலுக்கு கெட்டிக்காரன். அது யார்?'' என்பதே.  விடை பூட்டு என்பது யாவருக்கும் தெரிந்ததே! 
 அனந்துவின் திருமணத்தின் போது தங்கம், வெள்ளி, எவர்சில்வர் பித்தளைப் பாத்திரங்களுடன் விதவிதமான விலை உயர்ந்த பூட்டு சாவிகளையும் சேர்த்து    சிகரம் வைத்த மாதிரி 22 கேரட்டில் செய்த காத்திரமான தங்கச்சாவி ஒன்றையும்   அனந்துவின் மாமனார் கொடுத்து அசத்தினார். அனந்து அவற்றைப்  பெருமையுடன் பிள்ளையார் சிலைகள், பேனாக்கள், கைகடிகாரங்கள், பாக்கு வெட்டிகள், பட்டாம் பூச்சிகளாக சிலர் ஆர்வத்துடன் சேர்த்து பாதுகாப்பது போல,  அனுதினமும் அவற்றைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். ஆர்வத்துடன் 
யாரேனும் பார்க்க விரும்பினால் வாயைத் திறக்காமல் பூட்டு போட்டுக் கொண்டு விடுவார்! அவர் மனைவியும் அவ்வாறே! 
ஒரு பூட்டும் சாவியும்தான்  அனந்துவின் திருமண நாளில் குளறுபடி செய்தது. அவர் பத்மாவின் கைப்பிடித்த திருநாளன்றுதான். அனந்துவின் தாய்-தந்தையரின்  வேண்டுதல்படி
திருநீர்மலையில் திருமணம் முடிந்த பின் இரவு மாப்பிள்ளையும் பெண்ணும் மயிலாப்பூர்  வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். முதலிரவுக்கான ஏற்பாடுகளை தேக்குக் கட்டில், மெத்தை, கண்ணாடி, மல்லிகைப் பூ, வெள்ளிப் பால் சொம்பு, பழம், லட்டு, ஜிலேபி, ஜாங்கிரி, கொசு மற்றும் சுகந்த ஊதுவத்தி போன்ற முதலிரவு ஐட்டங்களைத் தயார்படுத்தி செய்து விட்டு  "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்'  இரவு காட்சிக்காக, "அழகான பொண்ணுதான் அதுக்கேற்ற கண்ணுதான். எங்கிட்டே இருப்பதெல்லாம்' பாட்டை உற்சாகமாகப் பாடிக் கொண்டே கபாலி தியேட்டருக்குக்   கிளம்பிப் போய் விட்டார் பத்மாவின் தாய் மாமனான  ரகுபதி என்று தகவல் கிடைத்தது. ரகுபதிக்கு "பளபள, தொளதொள மழமழ அரேபிய  ஹாரம் ஜம்ப் சூட்டில் வந்து கண்களைக் கரு வண்டாகச்  சுழற்றி பாடி ஆடும்  பானுமதி என்றால் ஒரு  "இது' . முதல் இரவுக்கான சிருங்காரப் பாடல்களை சாத்திய கதவின் வெளியே நின்று நடுங்கும் குரலில் பாட பத்மாவின் சித்தியான  காமேஸ்ரியும் அரதப் பழைய புத்தகத்துடன் சாகித்யங்கள் மறந்து போனால் பார்த்துப் பாட கோழித் தூக்கத்தில் சாமியாடிய நிலையில் இருந்தார்.  
 மாப்பிள்ளையும் பெண்ணும் வலது காலை வைத்து வீட்டில் நுழையத் தயாராக நின்றபோதுதான், "பூட்டு இங்கே. சாவி எங்கே?'' என்கிற கேள்வி கேட்கப்பட்டு, எவராலும் பதில் சொல்ல முடியாமல்  தொக்கி நின்றது. 
சுக்ரீவனின் உத்தரவுப் படி சீதையைத் தேடி வானரங்கள் கிஷ்கிந்தையிலிருந்து எட்டு திக்கில் சென்றது போல சாவியையும் அதைக் கொண்டு போயிருந்த ரகுபதியையும் தேடி காமதேனு தியேட்டருக்கு ஒரு செயற்குழு போனது.  அங்கே மேனேஜருடன் கெஞ்சிக் கூத்தாடி படத்தை நிறுத்தி ஸ்லைடு போட்டு வெளியே வரவழைத்த ரகுபதியை வீட்டின் பெரியவர் மூச்சு விடாமல், சொன்ன வார்த்தையையே மறுபடியும் திருப்பிச் சொல்லாமல்   திட்டிய  "பீப் பீப்'  வார்த்தைகளை கெüரவமான பெண்டிரின் காதுபட சொல்லிவிட முடியாது.  தவிர அதைக் கேட்டவர்களின் காதுகளிலிருந்து ரத்தம் துளிர்த்தது.
அமளிகள் அடங்கி பன்னிரண்டு மணிக்குப் பிறகு முதல் இரவு அறைக்குள் லேட்டாக நுழைந்த உடன் பத்மா அனந்துவைப் பார்த்த பார்வையில் காதலோடு கனிவும், பழச்சாறோடு பாலும் கலந்த ஸ்மூதியாக இருந்தது.
"நீங்கள் முன்கோபி, முசுடு, பொறுமை இல்லாதவர்னு நான் கேள்விப்பட்டதெல்லாம் பொய். அந்நிய நாட்டு தீயசக்திகளின் சதின்னு  நீங்க நிரூபிச்சுட்டீங்க. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கவும் வேணும்னு  சொல்லாமல் சொன்ன உங்களுக்கு இவ்வளவு பொறுமையா? நமக்கு தாற்காலிக வில்லனாகத் தோன்றிய பூட்டையும் சாவியையும் நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்'' என்று சொல்லி நான்கு கண்களும் ப்ர்ஸ்ரீந் ஆனதால், தரையில் வலது  கால் பெருவிரலால் கோலம் போட்டுப்  பால் சொம்பை  நாணம்+பெருமை+ மகிழ்ச்சியின் கலவையுடன் நீட்டினாள்.

( கதாசிரியரின் பின் குறிப்பு: அனந்துவிற்கு இதனால் பூட்டு சாவிகள் மேல் ஏற்பட்ட மோகம் எவ்வாறு 
தொடர்ந்தது என்பதை அறிய இந்த சரித்திரத்தை ஆரம்பத்திலிருந்து மறுபடியும் வாசிக்கவும்.)

ஜே. எஸ். ராகவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com