மகுடி வித்தைக்காரன்

சரியாக பத்து மணி இருக்கும்.  நிறைய கூட்டத்துடன் வேகமாக நுழைந்த, அந்த தனியார் பேருந்து என்னைக் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டது.
மகுடி வித்தைக்காரன்

சரியாக பத்து மணி இருக்கும்.  நிறைய கூட்டத்துடன் வேகமாக நுழைந்த, அந்த தனியார் பேருந்து என்னைக் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டது. அந்த நகரம் எனக்குப் புதிது. இதற்கு முன்னால் நான் அங்கு சென்றிருக்கவில்லை. தமிழகத்தின் மிகச் சிறந்த வழிப்பாட்டுத்தலங்கள் நிறைய உண்டு என்பதை நான் வரலாற்றுப் புத்தகங்களில் படித்ததோடு சரி. வேறு எதுவும் எனக்குப் பெரிதாக அந்நகரம் பற்றி ஒன்றும் தெரியாது. 
2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி. அந்த தினம் இன்றும் என் மனதில் பசு மரத்து ஆணியாய் நிலைத்து நிற்கிறது. 
பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த தேநீர் கடையில் விசாரித்தேன். 
"ஏங்க அரசு கல்லூரிக்கு எப்படி போகணும்?''
"தம்பி இங்க இங்க ரெண்டு அரசு கல்லூரி இருக்கு. நீங்க எந்த கல்லூரிக்குப் போகணும்?'' எனக்கு ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. நான் யோசிப்பதைப் பார்த்து அவராகவே என்னிடம் கேட்டார்.
"ஆடவர் கல்லூரி, பெண்கள் கல்லூரினு இங்க ரெண்டு இருக்குப்பா. நீ எங்க போகணும்?'' என்றவரிடம். 
நான், சுதாரித்துக் கொண்டு "ஆடவர் கல்லூரி'' என்றேன். 
"இந்த ரோட்டைத் தாண்டி வெளியே போய் நின்னா மினி பஸ் வரும். அதுல பாலக்கரைனு போர்டு போட்ட பஸ்ல போங்க. பாலக்கரையில இறங்கி கிழக்குப் பக்கம் கொஞ்சம் தூரம் நடந்தீங்கனா? கல்லூரி வந்து விடும்'' என்றார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு மினி பஸ் வரும் இடம் நோக்கிச் சென்றேன். 
  கிட்டத்தட்ட கால் மணி நேரம் காத்திருந்தேன் அப்படி எந்த பேருந்தும் அங்கு வரவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் விசாரித்தேன்.
"நிறைய பஸ் வரும் தம்பி. இன்னைக்கு என்னானு தெரியல ஒரு பஸ்ஸýம் வரல. எங்க போகணும்?' என்றார்.  விவரத்தைக் கூறினேன். 
"ஒண்ணு செய்யுங்க இப்படியே வெளில போங்க மீன் மார்க்கட் வரும், அதைத் தாண்டி போனிங்கனா மெயின் ரோடு வரும், அந்த ரோட்ல கொஞ்ச தூரம் நடங்க ரைட் சைடு ஒரு ரோடு பிரியும், அந்த ரோட்ல ஒரு பத்து நிமிசம் நடந்தீங்கனா நீங்க கேட்ட இடம் வந்துடும்'' என்றார். 
அவர் சொன்ன அடையாளங்களை வைத்துக் கொண்டு நான் நடக்கத் தொடங்கினேன். சாலையைக் கடப்பதற்கு முன் அங்கிருந்த அந்த பெரிய மீன் மார்க்கெட்டில் பெரிய பெரிய ஆற்று மீன்கள் விற்பனைக்கு கிடந்தது. 
அப்போது பெரிதாக எந்த கட்டிடங்களும் அங்கு தோன்றியிருக்கவில்லை, சாதாரணமான இடமாகத்தான் இருந்தது. இரு புறத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடக்கத் தொடங்கினேன். வழியில் பரணிகா திரையரங்கமொன்று இருந்தது. அந்த தியேட்டரைத் தாண்டி கொஞ்ச தூரத்தில் அந்தக் கல்லூரி இருந்தது.
கல்லூரி வாசலில் நுழையும் போதே எனக்கு அந்த கல்லூரி மிகவும் பிடித்துப் போனது. நான் பள்ளியில் படிக்கும் போதே "சேது' படம் பார்த்திருக்கிறேன். அந்தப் படத்தில் காட்டப் பட்ட அந்த ஒத்தையடிப் பாலத்தில் நடக்கும் போது என்னுள் ஏதோ மாற்றம் நிகழ்வது  போல உணர்ந்தேன். உ.வே.சா அவர்கள் பேராசிரியராகப் பணிபுரிந்த கல்லூரி, கணித மேதை இராமனுஜர் பயின்ற கல்லூரி, காவிரி நதிக்கரையோரம் அமைந்த கல்லூரி, இன்னும் நிறைய சிறப்புகள் உண்டு அந்த கல்லூரிக்கு. 
கல்லூரியின் வளாகத்தில் சென்று அங்கு நின்ற ஒருவரிடம் விண்ணப்பம் கொடுக்கும் இடத்தை விசாரித்தேன். இளங்கலை முடித்து விட்டு முதுகலைப் படிப்பைத் தொடர விண்ணப்பம் வாங்குவதற்காகத்தான் நான் அங்கு சென்றேன். பழைமையான மரங்களும், பழம் பெரும் கட்டிடங்களும் எனக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. என்னைப் போலவே நிறைய மாணவர்கள் அங்கு விண்ணப்பம் பெறுவதற்காக வந்திருந்தார்கள். அதில் ஒருத்திதான் ஈஸ்வரி. அது ஆடவர் கல்லூரி என்ற பெயரில் இருந்தாலும் அங்கு ஆண் பெண் இருவரும் சேர்ந்து படிக்கும் கல்லூரியாகத்தான் அது இருந்தது. 
விண்ணப்பத்திற்குரிய பணத்தைச் செலுத்தி விட்டு, என் சட்டைப் பையில் இருந்த மீதி பணத்தை எண்ணிப் பார்த்தேன் சரியாக அறுபத்து நான்கு ரூபாய் இருந்தது. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் வரை செல்வதற்கு பேருந்து கட்டணம் பன்னிரண்டு ரூபாய். அங்கிருந்து என் சொந்த ஊருக்குச் செல்வதற்கு நான்கு ரூபாய். அது போக மீதம் என்னிடம் நாற்பத்து ஆறு ரூபாய் இருக்கும். மனதில் கணக்குப் போட்டுக் கொண்டேன். பசி எனக்கு வயிற்றைப் பிசைந்தது. அப்போது மணி ஒன்றைத் தாண்டி இருந்தது. ஏதாவது ஒரு கடையில் மீதி இருக்கும் தொகையில் சாப்பிட்டுச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். 
வந்த வழியாகவே நடக்கத் தொடங்கினேன். எனக்கு முன்னால் விண்ணப்பம் வாங்க வரிசையில் நின்ற ஒரு பெண் என் கண்முன் வந்து போனாள். பெண்கள் இவ்வளவு சகஜமாக பேசுவார்களா? எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவளும் நான் படிக்கப் போகும் பிரிவுக்குத்தான் விண்ணப்பம் வாங்கினாள். நானும் அதே பிரிவிற்கு விண்ணப்பம் பெறவே அவள் தான் என்னிடம் முதலில் கேட்டாள்.  
"நீங்க யூ.ஜி. ல எவ்ளோ பர்சண்டேஜ்?' 
நான் கொஞ்சம் தயக்கத்துடன், "எண்பது''  என்றேன்.
அவள் வியப்புடன், " எண்பதா நான் அறுபத்து எட்டுதான்''என்றாள்.
" யூ.ஜி. எந்த கல்லூரில படிச்சிங்க?''    
" பூண்டி புட்பம் கல்லூரி'' 
அவள் பெயர் ஈஸ்வரி.
மேலும் என்னிடம் அவள் என்னைப் பற்றி நிறையவே கேட்டாள். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. என்னுடைய படிப்பு பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே படித்த பள்ளி மற்றும் கல்லூரியில்தான் அமைந்தது. அதனால் பெண்களிடம் இயல்பாகவே எனக்குப் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் எப்போதும் இருக்கும். ஒரு பெண் இப்படி என்னிடம் முதலில் பேசியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதில் வியப்பொன்றும் இல்லை. 
வரிசையாக சின்னதும் பெரிதுமாக நிறைய கடைகள் இருந்தது. வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடக்கத் தொடங்கினேன். என்னை நோக்கி ஒரு பெரியவர் வந்தார்.  
"தம்பி! எனக்கு ரொம்ப பசிக்குது ஏதாவது உதவி செய்'' என்றார். எனக்கு அவருக்கு காசு கொடுக்க மனமில்லை.
"டீ குடிக்கிறீங்களா?'' என்றேன். நன்றியோடு தலையசைத்தார். அருகில் இருந்த ஒரு டீக்கடையில் ஒரு டீ வாங்கி கொடுத்து விட்டு புறப்பட்டேன். அப்போது  டீ  நான்கு ரூபாய். என்னிடம் மீதம் ஓர் ஐம்பது ரூபாயும், ஒரு பத்து ரூபாய் நோட்டும் இருந்தது. 

மீண்டும் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். ஒரு காம்பவுண்ட் சுவரின் பக்கத்தில் சிறிய கூட்டம் நின்று கொண்டிருந்தது. எதையோ அனைவரும் மகிழ்ச்சியாக வேடிக்கை  பார்த்துக் கொண்டு இருந்தனர். எனக்கும் ஆர்வம் அதிகமாகவே நானும் கூட்டத்தை விலக்கி உள்ளே நுழைந்தேன். அங்கே ஒருவன் மகுடி ஊதிக் கொண்டு பாம்பை வைத்து வேடிக்கை நிகழ்த்திக் கொண்டிருந்தான். தான் விரைவில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப் போவதாகவும் வேடிக்கைப் பார்ப்பவர்களிடம் கூறினான். எனக்கும் அதைப் பார்ப்பதற்கு ஆர்வம் அதிகமாகவே நான் அங்கேயே நின்று கொண்டேன். 
என்னைப் போலவே அங்கு இருபதுக்கும் மேற்பட்ட நபர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அந்த பாம்பாட்டியின் பக்கத்தில் அவனின் மனைவியும் சின்னச் சின்ன உதவிகள் செய்து கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் பாம்பை வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான். கீரியை அவன் வெளியில் எடுக்கவே இல்லை. ஒரு சிறிய கூடைக்குள் அதனை அடைத்து வைத்திருந்தான். சின்ன சின்ன வேடிக்கைகளைச் செய்து கொண்டிருந்தவன் திடீரென்று வேறு எதையோ மந்திரம் போல கூறத் தொடங்கினான். நின்று  கொண்டிருந்த அனைவரையும் சுற்றியும் பெரிய கோடு ஒன்றை வரைந்தான். "நான் சொல்லும் வரை இந்த கோட்டைத் தாண்டி யாரும் வெளியில் செல்லக் கூடாது'' என்று கட்டளையும் பிறப்பித்தான். அப்படிச் சென்றால் ஏதோ ஒரு சாமியின் பெயரைச் சொல்லி அது பலி வாங்கிவிடும் என்று பயமுறுத்தினான். 
என் மனம் அவ்விடத்தை விட்டுப் போய் விடலாம் என்று நினைத்தது. அதற்குள் அவன், ”"ஒருவன் நான் சொல்வதையும் மீறி போகலாம் என்று நினைக்கின்றான். அவன் போனால் இதோ இந்த கோட்டைத்தாண்டி கொஞ்ச தூரம் சென்றவுடன் இரத்தப் பலியாகி இறந்து விடுவான்'' என்று பயமுறுத்தினான். சென்று விடலாம் என்று நினைத்த நான் அங்கயே நின்று கொண்டேன். என்னைப் போலவே நிறையப் பேர் அவ்வாறு நினைத்திருக்கக் கூடும். இருந்தாலும் அது எனக்காக கூறியது போலவே நினைத்துக் கொண்டு நான் அங்கயே நின்று விட்டேன். 
கொஞ்ச நேரம் மந்திரம் போல ஏதேதோ செய்தவன், திடீரென்று ஒரு கத்தியால் தன் கையைக் கீறிக் கொண்டு இரத்தம் முழுவதையும் தரையில் வழிய விட்டான். எல்லாம் தன் வயிற்று பிழைப்புக்காக செய்வதாகவும், உங்களில் சிலர் நிறையப் பாவங்களைச் செய்து கொண்டு இங்கு வந்துள்ளீர்கள்; அதனைப் போக்கவும் தான் இந்த இரத்தப் பலி என்றும் கூறிக் கொண்டு, தன் மனைவியின் கைகளையும் கிழித்து இரத்தத்தை தரையில் விட்டான். 
எனக்கு அதனைப் பார்த்தவுடன் கொஞ்சம் பயம் மனதில் தொற்றிக் கொண்டது.
 நல்ல வெயில் வேறு தாகத்தை அதிகப்
படுத்தியது. என்னைப் போலவே அனைவரும் முகமும் லேசான பயம் கலந்த மனநிலையில் நின்று கொண்டிருந்தனர்.
யாராவது சென்றால் அவர்கள் பின்னால் சென்று விடலாம் என்று நினைத்தேன். யாரும் செல்ல முன் வரவில்லை அவர்களும் என்னைப் போலவே  நினைத்திருக்கலாம். அனைவரின் முகத்திலும் ஒரு விதமான பயம் இருந்ததை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. மீண்டும் அந்த பாம்பாட்டி சில மந்திரங்களைச் சொன்னான். "நான் சொல்வதை அப்படியே திரும்பச் சொல்லுங்கள்' என்றான். அவன் சொன்ன வாசகங்கள் அனைத்தும் என்னை பயமுறுத்தியது. 
 திடீரென்று கையில் சில தாயத்துகளை எடுத்தவன். 
"இந்த தாயத்து இறந்து போன மூத்த குழந்தையொன்றின் எலும்பில் செய்யப்பட்டது. இதை வாங்கி கொள்ளுங்கள், உங்கள் மனதில் தோன்றும் பயம் அனைத்தும் விலகி ஓடும். இதைக் கட்டிக் கொண்டு இரவில் சுடுகாட்டிற்கு கூட செல்லலாம். இந்த தாயத்தைப் பற்றி ஏளனமாக நினைப்பவர்கள். குழந்தை ஆவியின் சாபத்திற்கு ஆட்பட்டு அக்குழந்தையைப் போலவே இறந்து போவார்கள்'' என்று கூறி தாயத்தை விற்க தொடங்கினான். தாயத்தின் விலை பத்து ரூபாய் என்று கூறினான். அனைவரும் அந்த தாயத்தை வாங்கி கட்டிக் கொண்டார்கள். இத்துடன் நம்மை விட்டால் போதுமென்று நானும் ஒன்றை வாங்கி அதனை கையில் கட்டிக் கொண்டேன். 
 இப்போது நம்மை விட்டு விடுவான் என்று நினைத்திருந்த வேளையில் ஒரு கையை மூடிக் கொண்டு அனைவரும் கையை "என் முன்னே நீட்டுங்கள்'' என்று அனைவருக்கும் அவன் கட்டளையிட்டான். அனைவரும் அவ்வாறே செய்த பிறகு, " நான் யாருடைய கையிலெல்லாம் இந்த குச்சியை வைக்கிறேனோ அவர்கள் எல்லாம் திரும்பி பார்க்காமல் சென்று விடலாம்'' என்று கூறி சிலரின் கையில் அந்தக் கோலை வைத்து மந்திரம் போல ஏதோ ஒன்றைக் கூறி, "உங்கள் பாவம் அனைத்தும் போய்விட்டது. திரும்பி பார்க்காமல் செல்லுங்கள்'' என்று  சிலரை அனுப்பி வைத்தான். என் பக்கத்தில் வந்ததும் என்னையும் அனுப்புவான் என்று நினைத்தேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவன் என் அருகில் நின்றவனை அனுப்பினான். இப்போது ஒரு பத்து பேர் மட்டுமே நின்றிருந்தோம். மறுபடியும்  கையில் வைத்திருந்த கறுப்பு நிற மந்திரக் குச்சியால் சிறிய வட்டம் ஒன்றை வரைந்து அதற்குள் அனைவரையும் நிறுத்தினான். மந்திரத்துக்கு கட்டுண்ட பொம்மைப்போல அனைவரும் அந்த சிறிய வட்டத்திற்குள் நின்று கொண்டோம். 
"என் காளியைப் பற்றி இங்கு நிற்பவனில் ஒருவன் நம்பிக்கையற்று இருக்கிறான் அவன் இன்னும் கொஞ்ச நேரத்தில் மூர்ச்சையாகி கீழே விழுவான்''  என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒருவன் திடீரென்று கீழே விழுந்தான். "பார்த்தீர்களா! என் காளியின் மகிமையை. என் காளியை நம்பவில்லை என்றால் உங்களுக்கும் இதே கதிதான்'' அசுர குரலில் அனைவரையும் பயமுறுத்தினான். 
"பரவாயில்லை ஒரு முறை காளி மன்னித்து விடுவாள். இதோ நான் அவனை எழுப்புகிறேன்''” என்று மந்திரம் போல எதையோ சொல்லி கொஞ்சம் தண்ணீரை அவன் முகத்தில் தெளித்தான். கீழே விழுந்தவன் உணர்வு வந்தவனாய் எழுந்து அமர்ந்து எங்களையெல்லாம் ஒரு மாதிரியாக கணகளைச் சுழற்றிச் சுழற்றி  பார்த்தான். 
இப்போது எனக்கு பயம் அதிகமாகியது. அந்த இடத்தை விட்டுப் போகவும் எனக்குப் பயமாக இருந்தது. முன்பு கைகளைக் கிழித்து இரத்தம் வழியச் செய்தவன், தற்போது மார்பை கிழித்து இரத்தம் வரவழைத்து மண்ணில் வடிய விட்டான். "ஓம் காளி, சூளி' என்று இன்ன பிற தெய்வங்களையெல்லாம் வேண்டினான். 
பிறகு எங்கள் முன் வந்து நின்று, " அனைவரும் கண்னை மூடிக் கொண்டு ஒரு கைகளை மட்டும் முன்னோக்கி நீட்டுங்கள்'' என்று கட்டளையிட்டான். அவ்வாறு நாங்கள் நீட்டியதும். எல்லாருடைய கைகளையும் அந்த குச்சியினால், ஏதோ மாந்தீரிகம் செய்பவனைப் போல தொட்டு தொட்டு எடுத்தான். 
சுமார் ஒரு ஐந்தாறு நிமிடங்கள் சென்றிருக்கும். அனைவரும் கண்ணைத் திறக்கலாம் என்று அவன் உத்தரவிட்டான். கண்ணைத் திறந்துப் பார்த்தேன், என்னைச் சுற்றி இப்போது ஐந்து நபர்கள் மட்டுமே நின்றிருந்தனர். எனக்கு மேலும் பயம் அதிகரித்து உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது. 
அந்த பாம்பாட்டி இப்போது மேலும் ஒரு முறை தன் கையை கத்தியால் கிழித்து கொப்பளித்து வரும் இரத்தத்தை கீழே வழிய விட்டான். அனைவருடைய கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டன, யாரிடமும் எந்த பேச்சும் இல்லை, அவன் மேலும் சில தெய்வங்களை துணைக்கு அழைத்துக் கொண்டு அவனுடைய கரகரப்பான குரலில் கண்ணை மூடிக் கொண்டு மந்திரம் போல எதையோ உளறினான். 
நின்று கொண்டிருந்த ஐவரையும் நோக்கி, " இது எல்லாம் என் வயிற்று பிழைப்புக்காகத்தான். அதே சமயம் என் ஜக்கம்மா காளியை யாரவது பகைச்சிக்கிட்டு போனிங்க, இன்று இரவுக்குள் உங்களுக்கு சாவு நிச்சயம்''என்று எங்களை மேலும் பயமுறுத்தினான். கையில் வைத்திருந்த அந்த கறுப்பு நிறக் கோலை மேலும் கீழும் அசைத்தவாறே அனைவரையும் கண்ணை மூடிக் கொள்ளுமாறு கட்டளையிட்டான். அவன் கட்டளைக்குக் கீழ் படிந்து அனைவரும் கண்ணை மூடிக் கொண்டோம். 
அவனுடைய சொற்களும் கட்டளைகளும் எங்களை மேலும் பயமுறுத்தின. இப்பொழுது அவன் எங்களிடம் உள்ள அனைத்துப் பணத்தையும் எடுத்து உள்ளங் கையில் வைத்து மூடிக் கொள்ளச் சொன்னான். அவ்வாறே அனைவரும் தங்களிடம் உள்ள பணத்தையெல்லாம் எடுத்து உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டனர். நானும் அவ்வாறே மூடிக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து ஒரு சின்ன வட்டம் வரைந்தவன், அதில் தன் மனைவியின் கையை கிழித்து இரத்தத்தை அதில் விட்டான். அவனுடைய பார்வையும் பேச்சும் இப்பொழுது அச்சத்தை ஏற்படுத்தியது. கையில் உள்ள பணத்தையெல்லாம் இப்பொழுது அந்த வட்டத்திற்குள் போடச்சொன்னான். தங்களிடம் உள்ள இருநூறு முந்நூறு இன்னும் சில நூறுகளை அனைவரும் அதில் போட்டனர். என்னிடம் உள்ள தாயத்து வாங்கியது போக மீதமுள்ள ஐம்பது ரூபாயையும் நானும் வீசியெறிந்தேன். 
சில நொடிகள் கழித்து, "அனைவரும் திரும்பி பார்க்காமல் சென்று விடுங்கள், அப்படி யாராவது திரும்பி பார்த்தால் உடனே சாவுதான்'' என்று அவன் எச்சரித்தான். என்னோடு நின்றிருந்த அனைவரும் தங்களை விட்டால் போதுமென்று அந்த இடத்தை விட்டு அனைவரும் கிளம்பிச் சென்றனர். 
எனக்கு ஊருக்குச் செல்ல வேண்டும், கையில் ஒரு பைசா இல்லை, இங்கு யாரையும் எனக்குத்  தெரியாது, அவனிடம் கெஞ்சத் தொடங்கினேன்... "தயவு செய்து என் பணத்தைக் கொடுத்திடுங்க, நான் ஊருக்குப் போகணும்'' 
"பணமா? இது இப்போது ஜக்கம்மாவுக்குச் சொந்தம், திரும்பி பார்க்காம போயிடு, இல்லைனா ஜக்கம்மா உன்னை இரத்தம் கக்கி சாக வைப்பா'' அவன் என்னை மீண்டும் பயமுறுத்தினான். எவ்வளவு கெஞ்சியும் அவன் எனக்கு பணம் தருவதாயில்லை, ஆனது ஆகட்டும் என்று வட்டத்திற்குள் கிடந்த என்னுடைய பணம் ஐம்பதையும் எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு விருட்டென்று ஓடத் தொடங்கினேன். 
"என் காளி உன்னை சும்மா விட மாட்டா... இராத்திரிக்குள் நீ இரத்தம் கக்கி செத்து விடுவாய்'' என்று எனக்கு சாபமிட்டுக் கொண்டிருந்தான். நான் எதையும் காதில் வாங்கி கொள்ளவில்லை.  பசி என் கண்களை இருட்டியது, கொஞ்ச தூரம் வந்த பிறகு எதிரில் தென்பட்ட பாண்டியன் ஹோட்டலில் முழு சாப்பாடு ஒன்றை வாங்கி சாப்பிட்டேன். பயந்த மனநிலையோடு பேருந்தில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன். 

துரை.சந்தானம்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com